பசுமைக் குழு, ஓவியம்: ஹரன்
'ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோட்டம், காலையிலேயே களைகட்டி இருந்தது. மனைவியுடன் பளீரென ஆஜராகியிருந்தார் ஏரோட்டி. பட்டு வேட்டி, சட்டை சரசரக்க வந்திருந்தார் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அன்று வியாபாரத்துக்கு விடுமுறை விட்டுவிட்டு புதுச்சேலை அணிந்து வந்திருந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. கொஞ்சநேரத்தில் குலவை சத்தம் கேட்க, பெரும்பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று ஒரே இடத்தில் எல்லா பொங்கலும் கொண்டாடப்பட, சாமி கும்பிட்ட கையோடு வந்திருந்த அனைவருக்கும் பொங்கலை இலையில் வைத்துப் பரிமாறினார் காய்கறி.

பந்தி முடிந்ததும்.... 'கட் கட்’ என்ற சத்தம் ஒலிக்க, அப்போதுதான் மூவருக்குமே நிம்மதி பெருமூச்சுவந்தது.
''அட இந்த டி.வி.க்காரங்க ஒரு வாரத்துக்கு முன்னயே பொங்கல் கொண்டாட வெச்சுட்டாங்களே. எப்படியோ நல்லபடியா நடிச்சு முடிச்சுட்டோம். இதுவும் ஒரு அனுபவம்தான்'' என்று முகம் கொள்ளாத சிரிப்புடன் காய்கறி சொல்ல, ''ம்... நீயும் கூட மேக்கப் போட்டாச்சு. அடுத்த கட்டமா, நாமெல்லாம் டி.வியிலயும் மாநாட்டைக் கூட்டிட வேண்டியதுதான்'' என்று ஏரோட்டி கிண்டலடித்தார்.
மொத்தக் கூட்டமும் களைந்தபிறகு, மூவரும் கல் திட்டில் அமர்ந்து அன்றைய மாநாட்டை ஆரம்பித்தனர்.
முதல் செய்தியைச் சொன்ன வாத்தியார், 'சமீபத்துல திருவண்ணாமலையில வேளாண் பட்டதாரிகள் சங்கத்தின் சார்புல டைரி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அதுல கலந்துகிட்டுப் பேசின வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திரன், 'ஊருக்கெல்லாம் விவசாயத்தைச் சொல்லி கொடுக்குற நீங்க... முதல்ல குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்திலாவது விவசாயம் பாருங்க. நிலம் இல்லாதவங்க. நிலம் வாங்கி விவசாயம் பாருங்க. அப்பதான் விவசாயத்துல தற்சமயம் இருக்குற கஷ்டத்தை உணர முடியும்’னு பேசியிருக்கார். அடுத்துப் பேசின தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தோட துணைவேந்தர் கு.ராமசாமி, 'பசுமைப் புரட்சியால உணவு உற்பத்தி அதிகமானது உண்மைதான். அதேநேரத்துல மண்ணுல இருக்குற அங்ககச் சத்துகளோட அளவு குறைஞ்சு போச்சு’னு எம்.எஸ்.சுவாமிநாதனே சொல்லியிருக்கார். அதனால குறைஞ்ச நிலத்துல அதிக உற்பத்தி செய்யணுங்கிறதுதான் நமக்கு இப்போ சவாலா இருக்கு. கெட்டுப்போயிருக்குற மண்ணை சீர்திருத்தினாத்தான் அதிக விளைச்சலை எடுக்க முடியும்’னு சொல்லிருக்கார்' என்றார்.
'இதைத்தானய்யா கடைசிநாள் வரைக்கும் நம்ம 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் முழங்கிட்டிருந்தார். ம்... இப்ப வாச்சும் அதிகாரிகளும் இயற்கை விவசாயம் பக்கம் கவனத்தைத் திருப்பினாங்களே. இதை வெறும் பேச்சோட நிறுத்திடாம, நடைமுறைக்கும் கொண்டு வந்தாத்தான். விவசாயிகளோட பாதி பிரச்னைகள் தீரும். குறிப்பா இடுபொருள் செலவு குறைஞ்சாலே, லாபம் தன்னால ஏறும்தானே' என்று சொன்ன ஏரோட்டி, அடுத்த செய்திக்குத் தாவினார்.
'திண்டுக்கல் பக்கத்துல இருக்குற சிறுமலை, உசிலம்பட்டிக்குப் பக்கத்துல இருக்குற தொட்டப்பநாயக்கனூர் மலை, நத்தம் பகுதியில இருக்குறகளுவம் மலை இந்த மூணு மலைகளையும் இணைக்கிற மாதிரி வனத்துறை சார்பா காட்டுக்குள்ள ஒரு பாதை அமைக்கப் போறாங்களாம். இயற்கை ஆர்வலர்களை இந்தப்பாதை வழியா 'சூழல் சுற்றுலா’ அழைச்சுட்டுப் போகப்போறாங்களாம். சிறுமலை அடிவாரத்துல இருக்குற குட்லாடம்பட்டி அருவியில் இந்தச் சுற்றுலா தொடங்கும். இந்தப் பாதையில சுற்றுலா அழைச்சுட்டுப் போறதுக்காக மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 16 இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். காட்டுக்குள்ள விலங்குகளோட நடமாட்டத்தை நேரடியா அனுபவிக்கறதுக்காகத்தான் இந்த ஏற்பாடாம்' என்றார்.
'சூழல் சுற்றுலானு காட்டுக்குள்ள போய் தண்ணி அடிச்சு சிகரெட் பிடிச்சு சூழலைக் கெடுக்காம இருந்தா சரிதான்' என்று முக்கிய மான எச்சரிக்கையை போகிறப் போக்கில் தட்டிவிட்ட வாத்தியார், 'ஒரு சினிமா படத்துல சிரிப்பு நடிகர் வடிவேலு, கிணத்தைக் காணோம்னு போலீஸ்ல புகார் கொடுப்பாருல்ல. அது ரொம்ப பிரபலமான காமெடி. அதேமாதிரி வேலூர் மாவட்டம், வன்னிவேடு கிராம மக்கள் '48 கிணறுகளைக் காணோம். அதைக் கண்டுபிடிச்சு கொடுங்க’னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. அந்தக் கிராமத்துக்கு பக்கத்துல பாலாறு ஓடுது. அந்தப்பகுதியில குடிமல்லூர் கிராமத்துல அரசுக்கு சொந்தமான மணல் குவாரி இருக்கு. அங்க மணல் தீர்ந்து போயிட்டதால வன்னிவேடு கிராமத்துல இருக்குற பாலாற்றுல மணல் குவாரி அமைக்குறதுக்கான முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. அதுக்காக அந்தக் கிராமத்துல பாலாற்றுப் படுகையில இருக்குற 48 கிணறுகளை மறைச்சு ஆவணம் தயார் செஞ்சிருக்காங்க அதிகாரிகள். கிணறுகள் இருக்கறதைக் காட்டினா, குவாரி அமைக்க முடியாதுங்கறதாலதான் இந்த அநியாயம். இதைக் கண்டுபிடிச்சிட்ட மக்கள், பொங்கி எழுந்து கிணத்தைக் காணோம்னு புகார் கொடுத்திருக்காங்களாம்' என்றார்.
'இவனுங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டானுங்க...' என்று காய்கறி ஒரேயடியாக கோபத்தைக் காட்ட...
'ம்... இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது. ஜனநாயக நாட்டுல இதெல்லாம் சாதாரணமான விஷயம். அப்பறம் தேர்தலுக்காக செலவழிச்ச பணத்தை அரசியல்வாதிங்க எப்படி சம்பாதிப் பாங்களாம்?' என்று சொல்லி சிரித்த வாத்தியார்,
'பொங்கலுக்கு பேரப்பிள்ளைங்கள்லாம் வந்திருக்காங்க. அவங்களோட கொஞ்ச நேரம் பேசணும். நான் கிளம்பறேன்' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்ப, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.
அழிந்து வரும் தவளை... பெருகும் கொசுக்கள்!
பல்லுயிர்ச்சுழற்சி மூலமாக கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய பிராணிகளில் ஒன்று தவளை. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் தவளைகளின் செயல்பாடு, வாழுமிடம் குறித்து ஐந்து மாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார், டேராடூனில் உள்ள வன உயிரின ஆராய்ச்சி மையத்தின் மாணவி பிரீத்தி.

ஒரு மாத ஆராய்ச்சியின் முடிவில் அறிக்கை அளித்துள்ள பிரீத்தி, ''கொசுக்களால் ஏராளமான நோய்கள் உருவாகின்றன. கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தவளைகள் அவசியம். உலக அளவில் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமான தவளை இனங்கள் உள்ளன. அவற்றில், இந்தியாவில் 700 வகையான தவளை இனங்கள் உள்ளன. வட மாநிலங்களில் குளிர்காலத்தில் தவளைகள் வெளியில் வராது. ஆனால், இங்கு வடகிழக்குப் பருவமழை பெய்துள்ள நிலையில் தவளைகள் அதிகமாக வெளியில் வந்து வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சூழ்நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாத ஆராய்ச்சி காலத்தில் 8 வகையான தவளை இனங்களைக் கண்டறிந்தோம். கிருஷ்ணன்கோவிலிலிருந்து, கலசலிங்கம் பல்கலைக்கழகம் வரை உள்ள ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் சராசரியாக 30 தவளைகள் வாகனங்களில் அடிபட்டு பலியாவதைக் கண்கூடாகப் பார்த்தோம். இப்படி அழிந்து வருவதால் பல்லுயிர்ச்சூழல் தடைபட்டு கொசுக்கள் பெருக வாய்ப்புகளுண்டு' என்று சொல்லியிருக்கிறார்.
ஜி.பிரபு