அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்தியாவிலுள்ள பல மாநில விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் இணைந்து 'அகில இந்திய விவசாயிகள் விடுதலைப் பயணம்' என்ற பெயரில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டப் பயணமாக ஜூலை 6-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் தொடங்கியது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம். மேலும், உற்பத்திச் செலவுடன், வாழ்க்கைச் செலவிற்காக 50% என விலை நிர்ணயம் எனும் தேசிய விவசாயிகள் கமிஷனின் பரிந்துரையைச் சட்டபூர்வமான உரிமையாக்க வேண்டும். அதுவும் அனைத்துப் பயிர்களுக்கும் நீடிக்க வேண்டும். ஜெய் கிசான் அந்தோலன் அமைப்பின் தலைவர் வி.எம்.சிங், யோகேந்திர யாதவ் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்களின் தலைமையில் இப்பயணம் நடைபெறுகிறது.
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா எனத் தொடர்ந்த அவர்களது பயணம் இன்று (19-09-2017) காலை சென்னையை வந்தடைந்தது. இன்றும், நாளையும் இக்குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்கிறது. இன்று சென்னை, அண்ணா நகரிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் இக்குழு செய்தியாளர்களையும், விவசாயிகளையும் சந்தித்தது. இவ்விழாவில், இயற்கை விவசாயியும், நடிகருமான பிரகாஷ்ராஜ், பாதுகாப்பான உணவு குறித்த தேசிய இயக்கத் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவிதா குர்கந்தி, ரீஸ்டோர் அனந்து, தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன், வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் உள்ளிட்ட சில விவசாய சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "பூமியோட மதிப்பு அதிகமாயிடுச்சு. விவசாயியுடைய மதிப்பு குறைஞ்சு போச்சு. இந்த விலை மதிப்புங்குறது கட்டடத்துக்குத்தான், விவசாயிகளுக்கு இல்லை போல. விவசாயிக்குத் தண்ணி இங்க பிரச்னை இல்ல, தன்மானம்தான் பிரச்னை. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமா நடக்குது. விவசாயி இங்க பிச்சைக்காரன் கிடையாது. அவன் கேக்குறது என் பொருளுக்குச் சரியான விலை கொடுங்க. எலக்ஷன் டைம்ல மட்டும் விவசாயிகளுடைய கஷ்டம் புரியுற அரசியல்வாதிகள் அதுக்கு அப்புறம் விவசாயிகளையே மறந்துடுவாங்க. ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் நடத்துனா கலைச்சிடுறாங்க. அதனால இந்தக் குழு மூலமா ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளும் ஒண்ணா போராடணும். விவசாயிகள் அரசாங்கத்துக்கிட்ட பிச்சை கேட்கலை, உரிமையைக் கேட்க வந்துருக்கோம். நமக்குத் தெரிய வேண்டியது, புரிஞ்சுக்க வேண்டியது, போராட வேண்டியதற்கான காரணம் இப்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதுதான்.
எந்த ஆட்சியும், எந்த அரசாங்கமும் விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளோட சத்தம் டெல்லியில் இருக்குறவங்களுக்கு மட்டுமல்ல, பக்கத்துல இருக்குறவங்களுக்கே கேட்கிறதில்லை. இன்னைக்கு இருக்குற சந்ததிகளுக்கு 5 காய்கறிகளுடைய பேரு கூட தெரியாது. விவசாயம்ங்குறது வியாபாரம் இல்லை, அது ஒரு வாழ்க்கை. இன்னைக்கு மண்ணோடவே இருக்குற மனுஷன் விவசாயி மட்டும்தான். ஒரு விவசாயி சோறு மட்டும் போடலை. பூமியோட சேர்ந்து எப்படி வாழணும்னு கத்துக் கொடுக்கிறான். விவசாயிகளை மாநிலவாரியா பிரிக்கக் கூடாது, விவசாயின்னா ஒருத்தர்தான், ஒரே கூட்டம்தான். அப்போதுதான் விவசாயிகளுக்குக் கேட்டது கிடைக்கும். இந்த அரசாங்கம் விவசாயிகளைக் கண்டு பயப்பட ஆரம்பிச்சிடுச்சு. இது ஒரு பெரிய பலமான கூட்டம்னு அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. இங்க கொள்ளையடிக்க நாங்க வரலை. எங்க உரிமையைக் கேட்க வந்துருக்கோம். கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கனு சொல்றோம். கொள்ளையடித்ததைத்தான் திரும்பக் கேட்கிறோம்" என்றார்.
இக்குழுவின் நோக்கங்களில் நிலமுள்ள விவசாயிகள், நிலமில்லாத குத்தகை விவசாயிகள், பெண் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி விவசாயிகள், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் அனைத்துத் தரப்பினருக்கும் இழந்த கெளரவத்தை மீட்டுக் கொடுப்பதும் ஒன்று. பயணத்தின் இறுதியில் 2017 நவம்பர் 20-ம் தேதி பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் ஆரம்பிக்கும் நாள் அன்று டில்லி ராம்லீலா மைதானத்தில் லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.