மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு

மரத்தடி மாநாடு: 18 வகை நீரும்... பலா பலன்களும்!ஓவியம்: ஹரன்

ண்ணி.... நாம உயிர் வாழ அவசியமான பொருள். நல்ல தண்ணியில மனுஷனுக்குத் தேவையான, தாது உப்புங்க கலந்திருக்கும். இயற்கையில, கிடைக்கிற தாதுப்பை எடுத்துட்டு, 'மினரல் வாட்டர்’னு பேரு வெச்சு துட்டு பார்க்கிறாங்க. உண்மையான மினரல் வாட்டர், இயற்கையில கிடைக்கிற மழைத் தண்ணிதான். இயற்கை கொடுக்கிற பரிசை சேமிச்சி வைக்காம, கேன் வாட்டருக்கு பணத்தைச் செலவு பண்ணிட்டு இருக்கோம். இந்தத் தண்ணியை 18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’யில தேரையர் சித்தர் தெளிவுபடுத்திச் சொல்லி வெச்சிருக்காருனு சில இதழ்களுக்கு முன்ன சுருக்கமா சொல்லியிருக்கேன். அதைப்படிச்ச பல பேரு, '18 வகையான நீரைப்பத்தி விரிவா சொல்லுங்க’னு கேட்டிருந்தீங்க. அதனால, இந்த 18 வகையான நீரோட குணத்தை, இதை எழுதி வெச்ச தேரையர் சித்தருக்கு மனம் உருகி நன்றி சொல்லிட்டு, இங்க விளக்கிச் சொல்றேன்.

மண்புழு மன்னாரு

1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர், 6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர்,  10.நண்டுக்குழிநீர், 11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர், 16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர்... இதுதான் அவர் வகைப்படுத்தியிருக்கிற தண்ணீர்!

1. மழைநீர்

'சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட

போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு

விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்

சிந்துமழை நீராற் றெளி.’

இந்தப் பாடலோட விளக்கத்தை கார்ப்பரேட் கம்பெனிக்காரன் படிச்சா... 'இயற்கை மழை நீர்’னு பாட்டில்ல அடைச்சு பணம் பண்ணினாலும் ஆச்சர்யப்பட முடியாது. அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு. இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா... அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார்.

2. ஆலங்கட்டிநீர்  

சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட்டி நீரை, சேமிச்சு வெச்சு குடிச்சா... மேகம், பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் எல்லாம் நீங்கும்.

3. பனிநீர்  

அதிகாலை நேரத்துல, வெட்டவெளியில பாத்திரத்தை வெச்சா அதுல நீர் சேகரமாகியிருக் கும். இதுதான் பனிநீர். இதைத் தொடர்ந்து குடிச்சா... சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு (சர்க்கரை நோய்தாங்க), அழல் கிராணி இப்படி பல நோய்ங்க காணாமப் போகும். இந்தப் பனிநீரை உடனே குடிக்கணும். காலம் தாழ்த்தி குடிச்சா, மருந்தா வேலை செய்யாம... பக்கவிளைவு வந்துடும். சர்க்கரை நோய்க்கு ஆயிரக்கணக்குல மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடறவங்க, பைசா செலவில்லாம கிடைக்குற பனிநீரையும் கவனிக்கலாம்.

4. ஆற்றுநீர்

ஆத்துத் தண்ணியில குளிச்சுட்டு வந்தா... உடம்புக்குப் புதுதெம்பு வந்த மாதிரி உணரலாம். அதுக்குக் காரணம், மலைப்பகுதியில இருந்து ஓடி வரும்போது, பல மூலிகைங்க மேல பட்டு அந்தத் தண்ணி ஓடிவரும். 'தம்பி, ஒவ்வொரு ஆத்துத் தண்ணிக்கும், ஒவ்வொரு வித குணம் உண்டுப்பா’னு சொல்லிட்டு, 'தினமும் ஆத்து நீரை குடிச்சா, குளிச்சா... வாதம், அனல், கபம், தாகம்.. நீங்கும். பொதுவா, நோய்க்கு வரவு சொல்லிக் கூப்பிடறது இந்த நாலு விஷயம்தான்’னு சொல்றாரு தேரையர். நம்ம முன்னோருங்க.. நோய் நொடியில்லாம, வாழ்ந்ததுக்கு ஆத்து நீரும்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம்.

5. ஊற்றுநீர்

ஊத்துத் தண்ணியைக் குடிச்சா, பித்தமும் தாகமும் நீங்கும்.

6. பாறைநீர்

இதை... பாறைநீர், சுக்கான்பாறைநீர், கரும்பாறைநீர்னு மூணு வகையா பிரிக்கிறார். இதுல சாதாரண பாறைநீரைக் குடிச்சா... வாதம், கோபம், சுரம் உண்டாகும். சுக்கான் பாறைநீர் குடிச்சா.. நீர்க்கடுப்பு, நெஞ்சில் சீழ்க்கட்டுனு பலபிணிகளும், பித்தமும் வந்து சேரும். கடைசியா இருக்கிற கரும்பாறை நீர்தான் நல்லது. இந்த நீரைத் தொடர்ந்து குடிக்கும்போது வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் எல்லாம் தீரும், உடலும் பளபளப்பாகும்.

7. அருவிநீர்

மேகம், ரத்தபித்தத்தையெல்லாம் நீக்கி, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

8. அடவிநீர்

காட்டுப்பகுதியில் தேங்கிக் கிடக்குற இந்த நீரைக் குடிச்சா, ஜலதோஷம், உடல் கனப்பு, இளைப்பு, தலைபாரம், சுரம் உண்டாகும்.

9. வயல்நீர்

மேகம், தாகம், வெட்டை, சுரம், கோபத்தை போக்கும். அத்தோட உடலுக்குக் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

10. நண்டுக்குழிநீர்

வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிச்சல் உள்ளவங்க, நண்டுக் குழிநீரைத் தேடித்தேடி குடிங்கனு தேரையர் சொல்றாரு.

11. குளத்துநீர்

குளத்துல வாழுற நீர்த் தாவரங்களைப் பொறுத்து, அந்த நீரோட குண இயல்புகள் மாறுபடும். தாமரை அதிகமா வளர்ந்திருக்கும் குளத்து நீரைக் குடிக்கிறவங்களுக்கு வாதம், பித்தம், வெக்கைநோய், தாகம் ஆகியவை உணடாகும். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீர்... அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு உண்டாகும்.

12. ஏரிநீர்

இந்த நீர், வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்கும்.

13. சுனைநீர்

கல்லுங்க நிறைஞ்ச சுனைநீர், வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்கும். ஆனா, இந்த சுனைநீரை ஒருநாள் வெச்சிருந்து குடிச்சா, எந்தக் கெடுதலும் செய்யாது.

14. ஓடைநீர்

இதையும் சுவை அடிப்படையில ரெண்டு வகையா பிரிச்சிருக்காரு. ஒண்ணு துவர்ப்புச் சுவைநீர், ரெண்டாவது, இனிப்புநீர். இந்த இருவகையில் எதைக் குடிச்சாலும், தாகம் ஏற்படும். அதே நேரத்துல உடம்புக்கு பலமும் உண்டாகும்.

15. கிணற்றுநீர்

நிலவளத்தைப் பொறுத்து கிணற்றுநீரை ரெண்டு வகையா, பிரிக்கலாம். உவர்நீர் கிணறு, நன்னீர் கிணறு. இதுல ரெண்டு வகை நீரைக் குடிச்சாலும் தாகம், சூலை, சூடு நீங்கி, உடம்புக்கு வலு உண்டாகும். இத்தோட சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தமும் நீங்கும்.

16. உப்புநீர்

இதைக் குடிச்சா, குடல்வாதம் மறையும். அதேசமயம், நெஞ்செரிச்சல், பித்தம் உண்டாகும்.

17. சமுத்திரநீர்

கடல் நீரைக் காய்ச்சி குடிச்சா, தொழு நோய், உடல் கடுப்பு, குஷ்டம், நடுக்கு வாதம்,  பல்லிடுக்கு ரத்தம் கசிதல் நீங்கும்.

18. இளநீர்

இதைக் குடிச்சா... வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி, நீரடைப்பு நீங்கும். இத்தோட, மனதில் புத்துணர்ச்சி, பார்வையில தெளிவும், உடம்புக்குக் குளிர்ச்சியும் உருவாகும். எக்காரணம் கொண்டும், வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கக்கூடாது. குடிச்சா, வயிறு புண்ணாகிடும்.

நானும் பசுமைவிகடனும்!

அரசியல்வாதி விவசாயி!

மண்புழு மன்னாரு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவர் விடுதலை வேந்தன். இவர், 'பசுமை விகடன்’ இதழின் தீவிர வாசகர்.

''தேர்தல் நேரங்கள்ல பரபரப்பா இருந்தாலும்கூட பசுமை விகடனைப் படிக்காம இருந்ததில்லை. வெளியூர்கள்ல நடக்குற கட்சிக் கூட்டங்களுக்குப் போறப்ப, பசுமை விகடன் போஸ்டர்களைப் பார்த்தாலே மனசு சந்தோஷமாயிடும். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பூந்துருத்திதான் எனக்கு சொந்த ஊர். எங்க தாத்தா விவசாயம் செஞ்சுட்டு இருந்தார். ஆனா, எங்க அப்பா தஞ்சாவூர்ல ஒரு கல்லூரியைத் தொடங்கி, அதை கவனிக்குறதுலதான் ஆர்வமா இருந்தார். நான் பி.இ படிச்சுட்டு மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்குப் போயிட்டேன்.

சின்ன வயசுலயே அரசியல் ஆர்வமும் வந்துட்டதால, விவசாயத்துக்கு சம்பந்தமே இல்லாம போயிடுச்சு. அப்படி இருந்தும், நண்பர்கள் மூலமா அறிமுக மான பசுமை விகடன், என் மனசுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திடுச்சு. பல வருஷங்களா காட்டுக்கருவை மண்டிக்கிடந்த எங்களோட நிலத்துல 2011-ம் ஆண்டுல இருந்து இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில ஏழரை ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். அதுல இயற்கை முறையில காய்கறி சாகுபடி செய்யப் போறேன். 'விவசாயம்’ என்கிற வார்த்தையையே வேதம் போல மாத்திடுச்சு பசுமை விகடன்'' என நெகிழ்கிறார், விடுதலை வேந்தன்.