ஓவியம்: ஹரன்
வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, மரத்தடி கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி கண்ணாடியைத் துடைத்துத் துடைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. காலையிலேயே காய்கள் எல்லாம் விற்றுத்தீர்ந்துவிட, காலிக்கூடைகளுடன் ஆஜராகி அமர்ந்திருந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. கொஞ்ச நேரத்திலேயே வயல் வேலைகளை முடித்துவிட்டு 'ஏரோட்டி’ ஏகாம்பரம் கரையேறிவர, அன்றைய மாநாடு ஆரம்பமானது!
'கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில, டெல்டா மாவட்ட விவசாயத்தை காலி பண்ற மாதிரி மீத்தேன் திட்டத்தை ஆரம்பிச்சாங்க. பலமான எதிர்ப்பு கிளம்பினதால வேலைகள் சுறுசுறுப்பில்லாம இருந்துச்சு. ஆனா, புதுசா வந்திருக்கிற பி.ஜே.பி அரசு, இந்த வேலைகள்ல சுறுசுறுப்பாக கவனத்தைத் திருப்பிட்டிருக்குதாம். இதேமாதிரி போன ஆட்சியில தேனி மாவட்டம், போடி பகுதியிலயும் விவசாயத்தை அழிக்க பிள்ளையார் சுழி போட்டாங்க. இதையும் தீவிரமா கையில எடுத்துக்கிட்டு சுழல ஆரம்பிச்சிருக்கு பி.ஜே.பி அரசு. அங்க இருக்குற அம்மரப்பர் மலைப்பகுதியில நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப் போறாங்க. இதுக்காக 1,500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்குறதா பிரதமர் மோடி அறிவிச்சிருக்கார்'' என்று முதல் தகவலை வாத்தியார் ஆரம்பிக்க... குறுக்கிட்ட காய்கறி, ''அம்மரப்பர் மலைப்பகுதியில என்னாத்த கண்டுபிடிக்கப் போறாங்க வாத்தியாரய்யா?'' என்று கேட்டார்.

''அதுவா... இந்த உலகம் எப்படி உருவாச்சுங்கிறதுல ஆரம்பிச்சு பலதையும் கண்டுபிடிப்பாங்களாம். இதன் மூலமா மனிதகுலத்துக்குத் தேவையான பல நன்மைகளும் கிடைக்குமாம்?'' என்றார் வாத்தியார்.
''எனக்கென்னவோ... இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்பட்ட கதைதான் நினைவுக்கு வருது. நமக்குச் சோறு போடற நிலங்களையெல்லாம் அழிச்சிட்டு, இப்படியெல்லாம் கண்டுபிடிச்சு என்ன ஆகப்போகுதோ?!'' என்று நொந்துகொண்டார் காய்கறி.
''இதைத்தான் கண்ணம்மா பலரும் கேக்கிறாங்க. 'இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, கனடானு பல நாடுகள்ல இந்த சோதனை நடக்குது. எங்கயும் இதுவரை உருப்படியான எதையும் கண்டுபிடிக்கல. ஆனா, சோத்துக்கே வழியில்லாம பல கோடி மக்கள் இருக்குற நம்ம நாட்டுல இந்த ஆராய்ச்சி தேவையா?னு கேள்வி எழுப்புறாங்க. ஆனா, மத்திய அரசு யார் பேச்சையும் காதுல வாங்கல. பூமிக்கு கீழ ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்குக் குடைஞ்சுதான் இந்த ஆராய்ச்சிய செய்யப்போறாங்க. இதனால, கிட்டத்தட்ட 34 ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் காலியாகப்போகுது. அந்தப்பகுதி மக்களுக்கு ஆடு, மாடு மேய்க்கிறதுதான் தொழிலே. பாவம் அவங்க' என்று வருத்தக்குரலில் சொன்னார் வாத்தியார்.
'கோட் சூட் போட்டுக்கிட்டு ஏ.சி ரூம்ல உக்காந்து முடிவெடுக்குற மெத்தப்படிச்ச மேதாவிங்களுக்கு, சம்சாரிகளோட கஷ்டம் எங்க புரியப்போகுது?' என்று ஆதங்கப்பட்ட ஏரோட்டி, 'இந்த விஷயத்துக்காக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பக்கத்துல இருக்குற சிநேகவல்லிபுரம் கிராமத்து மக்கள் 'எலி பொங்கல் விழா’ கொண்டாடியிருக்காங்க. 'மலைகளைக் குடைஞ்சு பூமியில் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருது. அதனால, மேய்ச்சல் நிலம் பாதிக்கப்பட்டு மாடுகள் அழியலாம். அதேமாதிரி ஜல்லிக்கட்டுக்கும் தடை விதிக்கிறதால மாடு வளர்ப்பே இல்லாம போகலாம். அதனால இனி, எலிகளுக்கு பொங்கல் வைக்கிறோம்’னு சொல்லி மாட்டுப்பொங்கல் அன்னிக்கு எலிகளுக்குப் பொங்கல் வெச்சிருக்காங்க, இவங்க' என்றார்.
'ஆமாய்யா... இதே மாதிரி வந்தவாசிக்குப் பக்கத்துல இருக்குற நல்லூர் கிராமத்துல ஜல்லிக்கட்டு தடையைக் கண்டிச்சு முயல் விடுற விழா நடத்தியிருக்காங்க. டி.வியில பாத்தேன்' என்றார், காய்கறி.
'பாருடா... உனக்குக்கூட நாட்டு நடப்பு தெரிஞ்சிருக்கு' என்று ஏரோட்டி கிண்டலாகச் சொல்ல, 'இன்னொரு சேதியும் என்கிட்ட இருக்கு...' என்று தெம்பு கூட்டிக்கொண்ட காய்கறி, அடுத்தச் செய்தியைச் சொன்னார்.
'தேனி மாவட்டம், கம்பம் பக்கத்துல ராயப்பன்பட்டினு ஒரு ஊர் இருக்கு. இந்த ஊர்ல கென்னடிங்கிறவர் காட்டுப்பகுதியில் தொழுவம் அமைச்சு மலை மாடுகளை வளர்த்துட்டு வர்றார். அதுல ஒரு மலைமாடு, ஒரே பிரசவத்துல மூணு கன்னுகளைப் போட்டிருக்கு. மூணு கன்னுங்களும் நல்ல ஆரோக்கியமா இருக்குதாம். எல்லாரும் இதை ஆச்சர்யமா பாக்குறாங்களாம்' என்ற காய்கறி, ''திராட்சை சீஸன் ஆரம்பிச்சாச்சு. ஆனா, விலைதான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. பேசி விற்பனை செய்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுது'' என்றபடியே தான் கொண்டு வந்திருந்த சீட்லெஸ் திராட்சையை ஆளுக்கு கொஞ்சமாகக் கொடுத்தார்.
''ஓ... மிச்சப்பட்டுப் போனதையெல்லாம் தள்ளிவிடறியோ...?!'' என்று ஏரோட்டி நக்கலடிக்க...''ம்க்கும்... மொத்தக் கூடையும் காலையிலயே காலி. போனாபோகுதுனு தனியா எடுத்துவெச்சு கொண்டு வந்து கொடுத்தா... உனக்கு நக்கலா?!'' என்று காய்கறி கடுகடுக்க...
'சரிசரி விடு கண்ணம்மா. நம்ம ஊர் திராட்சை விவசாயிகளே கடுகடுனுதான் இருக்காங்க. சர்வதேச அளவில் திராட்சையோட பயன்பாடு அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. இந்தியாவில் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர்ல திராட்சை சாகுபடி நடக்குதுனு கணக்கு சொல்றாங்க. ஆனா, தமிழ்நாட்டுல திராட்சை சாகுபடி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டே இருக்கு. காரணம், வர்த்தக ரீதியா நல்ல விளைச்சல் தரக்கூடிய விதைக் குச்சிகள் நடவுக்குக் கிடைக்கிறதில்லையாம். குறிப்பா, மாணிக் சாமன், ரெட்குளோப், சரத் சீட்லெஸ், கிருஷ்ணா சீட்லெஸ், மெடிக்கா, ஏ 183 மாதிரியான ரகங்களைத்தான் விவசாயிகள் விரும்புறாங்க. இதெல்லாம் கிடைக்கிறதில்லையாம். அதனால, தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டியில இருக்குற திராட்சை ஆராய்ச்சி நிலையத்துல 2 ஏக்கர் பரப்பில் நர்சரி அமைச்சு... இந்த ரகங்களை 'குளோனிங்’ முறையில் உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுக்கப் போறாங்களாம்' என்றார்.
அந்த நேரத்தில் கடலைக்காட்டுக்குள், பக்கத்து வயல்காரரின் ஆடுகள் புகுந்துவிட... சத்தம் கொடுத்துக்கொண்டே எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
மாம்பழ ஏற்றுமதிக்குத் தடையில்லை!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில், பூச்சித் தாக்குதல் இருப்பதாகக் கூறி, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மாம்பழ இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதனால், மாம்பழம், பாகற்காய், கத்திரிக்காய், புடலங்காய் போன்றவற்றை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 50 சதவிகித அளவு ஐரோப்பிய யூனியனுக்குத்தான் செல்கிறது. அதனால், இந்தத் தடை காரணமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கையால் இந்திய மாம்பழங்களில், தற்போது சுகாதாரக் கட்டுப்பாடுகள், தரச்சான்றிதழ் முறைகள் மேம்பட்டுள்ளதாகக் கூறி, ஐரோப்பிய யூனியன் மாம்பழத்துக்கான தடையை விலக்கிக் கொண்டுள்ளது. 'தேவையான ஆதாரங்களைத் திரட்டி, பரிசீலனை மேற்கொண்ட பிறகே, மற்ற பழங்கள், காய்கறிகளுக்கான தடையை நீக்குவோம்’ என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
புறக்கடை மீன் வளர்ப்பு!
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்பு செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவ இனப்பெண்கள் ஆகியோருக்கு 50 சதவிகித மானியமும்; எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த ஆண், பெண்களுக்கு 30 சதவிகித மானியமும்; மற்ற பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு 25 சதவிகித மானியமும் கிடைக்கும். சொந்த வீட்டை ஒட்டி தண்ணீர் வசதியுள்ள 250 சதுர அடி காலி இடம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சொந்த வீடு இல்லாதவர்கள், இதே வசதியுடன் உள்ள வீட்டை ஏழு ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்தும் விண்ணப்பிக்க முடியும்.
நானும் பசுமைவிகடனும்!

மாணவ விவசாயி!
''சென்னையில இருக்கும் ஒரு தனியார் பள்ளியில ஐந்தாவது படிக்கிறேன். என்னோட படிப்பு முழுக்க, இங்கிலீஸ்ல இருக்குறதால தமிழ் சரளமா படிக்க வராது. அப்பா வாங்குற பசுமை விகடன் புத்தகத்தை எழுத்துக்கூட்டி படிச்சு பழகுறேன். பசுமை விகடன் புத்தகத்தை படிச்சிட்டு, சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளை அப்பா சொல்லிக் கொடுப்பார். இதோட வீட்டுல முள்ளங்கி, வெண்டை, அவரைக்காய்னு பலவிதமான காய்கறிகளை நட்டு இயற்கை முறையில வளர்க்கச் சொல்லிக் கொடுத்திருக்கார். எதிர்காலத்தைப் பத்தி எனக்கு இருக்குற பலவிதமான கனவுகள்ல, விவசாயம் செய்யணுங்குறதும் ஒண்ணு' என்கிறார் ஆர்யா, மகிழ்ச்சித் ததும்ப!