புறா பாண்டி, படங்கள்: தி.விஜய், என்.ஜி.மணிகண்டன், ரமேஷ் கந்தசாமி
''தோட்டத்தில் அறுவடை செய்த காய்கறிகள் மற்றும் கீரைகளை நீண்ட தூரம் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?''
-எஸ்.தனலட்சுமி, காங்கேயம்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி பதில் சொல்கிறார்.

''காய்கறி மற்றும் கீரைகளை வெகுதூரம் அனுப்ப சில அடிப்படை நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதாவது, காலை 9 மணிக்குள் அறுவடை செய்துவிடவேண்டும். இதன் பிறகு அறுவடை

செய்யும் காய்கறி மற்றும் கீரைகள் எளிதில் வாடிவிடும். அடுத்து, காய்கறிகளை அட்டைப்பெட்டியில் அனுப்புவதாக இருந்தால், ஓட்டைப் போட வேண்டும். சாக்கு மூலம் சிப்பம் போட்டு அனுப்பவதாக இருந்தால், வலைச்சாக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாக்கில் காய்கறிகளைக் கொட்டக் கூடாது. அடுக்கித்தான் வைக்க வேண்டும். குளுமையான வேப்பந்தழை, புங்கன் இலைகளை சாக்கின் மேல்புறத்தில் வைத்துத் தைத்து அனுப்பலாம். கீரை என்றால், வலைச் சாக்குளை நனைத்து, கீரைகளை நன்றாக அடுக்கி வைத்து அனுப்பலாம். நான் இந்த முறைகளைப் பின்பற்றித்தான், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு காய்களை அனுப்பி வருகிறேன்.

இங்கு ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் கீரைகள், நீண்ட தூரப் பயணங்கள் என்றாலும், எளிதில் வாடுவதில்லை. ஆனால், ரசாயன முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை நன்றாக அறுவடை செய்து, சரியாக சிப்பம் கட்டி அனுப்பி வைத்தாலும்கூட எளிதில் வாடிவிடும்.''
தொடர்புக்கு, செல்போன்: 9943979791
''கொட்டில் முறையில் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறோம். ஆடுகள் பருவத்துக்கு வருவதை எப்படி அறிவது? பண்ணையில் சிறுநீர் வாடை அடிக்கிறது. இதைத் தவிர்க்க வழி சொல்லுங்கள்?''
சி.கந்தசாமி, வேலூர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறையின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் பி. விஜயன் பதில் சொல்கிறார்.

''கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு லாபகரமான தொழிலாக வளர்ந்து வருகிறது. நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால், அடிப்படையான சில நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். நன்றாக குட்டி ஈனும் திறனும், அதிக பால் கொடுக்கும் தன்மையும் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்து வளர்க்க வேண்டும். என்னுடைய அனுபவத்தில் தலைச்சேரி ரகம் இந்தச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. பிறந்த குட்டிகளை
3 நாட்களில் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். மெலிந்த குட்டிகளுக்கு முட்டை கலந்த பால் கொடுத்தால், அதன் எடையைக் கூட்ட உதவும். நல்ல பராமரிப்பில் ஆடுகள் 6 மாதத்தில் 35 கிலோ எடையை அடையும். குட்டிகள் ஒரு நாளில் 100 முதல் 150 கிராம் எடை கூட வேண்டும். ஒரு வாரத்தில் சுமார் 1 கிலோ எடை கூட வேண்டும்.

12 மாத வயது முதல் பெட்டை ஆடு இனச்சேர்க்கை செய்யலாம். ஆடுகள் வாழ்நாளில் 10 முறை குட்டிகள் ஈனும். ஆடுகளின் சினைக் காலம் 145 முதல் 153 நாட்கள். குட்டி ஈன்ற ஒரு மாத காலத்தில் ஆடுகள் இனச்சேர்க்கைக்குத் தகுதி அடையும். 18 முதல் 22 நாட்களுக்கு ஒருமுறை ஆடுகள் பருவத்துக்கு வரும். பருவகாலம் 24 மணி முதல் 48 மணிநேரம் நீடிக்கும். வெள்ளாடுகளில் பருவகாலம் கண்டறிவது கடினம். ஆகையால், கிடாக்களை ஆடுகள் உள்ள இடத்தில் அனுமதித்தால் பருவத்தில் உள்ள ஆடுகளைக் கண்டறியலாம். இனச் சேர்க்கை, கிடா உள்ள அறையில் நடைபெற வேண்டும். 40 ஆடுகளுக்கு ஒரு கிடா போதுமானது.
குட்டிகள் பிறக்கும்போது, 2 கிலோ எடை இருக்க வேண்டும். ஒரு ஈற்றில் 2 குட்டிகள் ஈனும்போது இது சாத்தியம். வெள்ளாடு, செம்மறி ஆட்டைக் காட்டிலும் உறுதியானது. வெள்ளாட்டினை நோய் தாக்குவது குறைவாகவே இருக்கும். இதன் சாணம் அதிகப்படியான நைட்ரஜன் சக்தி கொண்டது. ஓர் ஆடு, நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் கழிக்கும். இதனால் தரைப்பகுதி அதிக ஈரமாகும். சிறுநீர் மூலம் அமோனியா என்ற நச்சு வாயு கொட்டகையில் பரவும். இதனைப் போக்க தரைப்பகுதி காற்றோட்டம் உள்ள வகையில் கொட்டகை அமைப்பது அவசியம். அதனால், க்ராஸ் வெண்டிலேஷன் (Cross Ventilation) கிடைப்பதற்கு வசதியாக 10 அடி அகல கொட்டகை அமைக்க வேண்டும்.''
தொடர்புக்கு, செல்போன்: 9965524030.
''சோலார் பம்ப்செட் அமைக்க, நபார்டு வங்கி மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டேன். இதைப்பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?''
ஆர்.சதீஷ், கோயம்புத்தூர்.
சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.கண்ணன் பதில் சொல்கிறார்.

''சோலார் பம்ப்செட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 201415ம் நிதியாண்டில் இந்தியா முழுவதும் 30 ஆயிரம் சோலார் பம்ப்செட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தமிழ்நாட்டுக்கு 2,400 சோலார் பம்ப்செட்டுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நபார்டு மானியம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகள், மாநில, மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளிலிருந்து கடன் பெற்று சோலார் பம்ப்செட் அமைத்திருந்தால் நபார்டு மூலம் மானியம் கிடைக்கும். இந்த மானியம் மத்திய அரசின் 'புத்துப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம்’ தேர்வு செய்துள்ள பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். தகுதியுள்ள விவசாயிகள் சோலார் பம்ப்செட் அமைக்க, வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அலுவலர்கள் விவசாய நிலத்தை நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்த பிறகு கடன் வழங்குவார்கள். கடன் வழங்கிய பின் குறிப்பிட்ட வங்கி, நபார்டுக்கு மானிய விண்ணப்பத்தை அனுப்பும். பிறகு நபார்டு விண்ணப்பங்களின் தகுதிக்கேற்பவும், மத்திய அரசின் மானியத்தொகை கையிருப்புக்குத் தகுந்தவாறும், மானியத் தொகையை வங்கிக்கு அளிக்கும்.

இரண்டு குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு 54 ஆயிரம் ரூபாய் மானியம், அதிகபட்சம் 5 குதிரைத்திறன் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை, சம்பந்தப்பட்ட விவசாயி சோலார் பம்ப்செட் வாங்கிய நிறுவனத்துக்கு வழங்கப்படும். விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் கடன்தொகை பெற்றால், மானியம் பெறும் நடைமுறைகளை வங்கிகளே செய்துவிடும். இதனால், மானியம் பெறுவதற்கு விவசாயிகள் சிரமப்படதேவையில்லை.

மானியத்தொகை போக மீதியுள்ள கடன் தொகையை விவசாயிகள் திரும்பச் செலுத்த வேண்டும். அதிகபட்சம் 10 ஆண்டுக்குள் கடன் தொகையை செலுத்திவிட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற விவசாயிகள் கடன் தொகையைச் செலுத்தாமல், காலம் தாழ்த்தினால் மானியம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் சோலார் பம்ப்செட்டுகள் அமைக்க முடியும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04428304614