பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம் த.ஜெயகுமார், படங்கள்: கே. ராஜசேகரன், ச.சந்திரமௌலி , ச.ஹர்ஷினி
'இந்தியா ஒரு விவசாய நாடு’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம். எதிர்காலத்தில் விவசாயம் பெருமதிப்புமிக்கதாக இருக்கப் போகிறது என புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

இத்தகையச் சூழலில், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, 'பசுமை விகடன்’.
'ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே நோக்கம்.

ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாக செயல்படும் பண்ணைகளைத் தேர்ந்தெடுத்து, ஆர்வமுள்ளவர்களை அழைத்துச் சென்று பயிற்சியோடு, விவசாய வாழ்க்கை முறையையும் அறியும் வாய்ப்பை வழங்க இருக்கிறோம். இதன் தொடக்கமாக, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழு மாணவமாணவிகளைத் தேர்ந்தெடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புதியஇடையூரில் உள்ள இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் பண்ணைக்கு அழைத்துச் சென்றோம்.
சூரியஒளி கதகதவென்று வெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருந்த காலைவேளையில், ஓங்கி உயர்ந்து காட்சி தந்த தேக்கு, தென்னை மரங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தவாறே மாணவிகள் பிரியதர்ஷினி, திவ்யா, அருள்ஜோதி மற்றும் மாணவர்கள் ரோகேஷ், சபீக், லோகநாதன், மணிவேல் ஆகியோர் பண்ணைக்குள் நுழைந்தனர். அவர்களை பண்ணையின் உரிமையாளர் தெய்வசிகாமணியிடம் அறிமுகப்படுத்தினோம். மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சுப்புவும் அப்போது பண்ணைக்கு வந்திருந்தார்.
முதல் வேலையாக அனைவருக்கும் சுவையான எலுமிச்சைப்பழச்சாறு வழங்கப்பட்டது. பசுமையான சூழலைப் பார்த்த மாணவர்கள் உற்சாகமாகி பண்ணை வேலைகளில் இறங்கத் தயாராகிவிட்டனர். கொட்டகையில் இருந்த மாடுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து தென்னை மரங்களில் கட்டினர். பிரியதர்ஷினி கட்டத் தெரியாமல் தடுமாற... 'பரீட்சைத்தாள், ஆவண ஃபைல்களில் சுருக்கு முடி போடுவது போல முடிச்சு போட்டா, அவிழ்ப்பதற்கு எளிதா இருக்கும்’ என்று சொல்லிக்கொடுத்தார், தெய்வசிகாமணி. மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து வெயிலுக்கு இதமாக மாடுகளைக் குளிப்பாட்டினர்.
அடுத்து, இரும்புக் கலப்பை, நுகத்தடியை மாணவர்கள் எடுத்துக்கொள்ள, ஏர் மாடுகளை மாணவிகள் கயிறு பிடித்து அழைத்துச் சென்றனர். ஏர் ஓட்டும் முறையை விளக்கியதும் ஒவ்வொருவராக ஆர்வமுடன் ஏர் ஓட்டினர்.
'ஹாய்... நான் ஓட்டும்போது ஏர் வேகமாகப் போகுதே' என்று மாணவர் சபீக் குஷி பொங்கச்சொல்ல... 'ஏற்கெனவே ஓட்டின பாதையிலேயே ஓட்டினா வேகமாகத்தான் போகும். அதுக்கு பக்கத்தில இருக்குற மண்ணை கீறி ஓட்டும்போதுதான், ஏற்கெனவே போன பாதையில் மண்ணை நிரப்ப முடியும். முன்பெல்லாம் மரக்கலப்பையில்தான் மண்ணை உழுதோம். அதுதான் மண்ணுக்கும் ஏற்றதா இருந்தச்சு. இப்போ, இரும்புக் கலப்பை வெச்சுதான் அதிகமா உழவு செய்றோம்' என்று பாடம் எடுத்தார், தெய்வசிகாமணி.

உழவுப் பயிற்சி முடிந்தவுடன் சோலார் மூலம் இயங்கக்கூடிய பம்ப்செட்டுக்கு அழைத்துச் சென்ற தெய்வசிகாமணி, 'இது 5 ஹெச்.பி. மோட்டாரை இயக்கும் சோலார் செட். அரசு மானியத்தில் அமைச்சிருக்கேன். சூரியஒளி எந்த பக்கம் இருக்கோ, அந்தப் பக்கம் பேனல் ஆட்டோமேட்டிக்கா திரும்பி சூரிய ஆற்றலை இழுத்து, மோட்டாரை ஓட்டும்'' என்றார்.
'அப்படியா...' என ஆச்சரியத்தில் விழிகள் விரித்த மாணவர்கள் அனைவரும் கிணற்றில் குளிக்க எத்தனிக்க, புதிதாகத் தோண்டிய கிணறு, இன்னும் படிக்கட்டுகள் அமைக்கவில்லை'' என்று சொன்னதும் கிணற்றை ஏக்கத்துடன் பார்த்தபடி சுற்றிச் சுற்றி வந்தனர். சிறிது நேரத்தில் நெல் வயலுக்குள் இறங்கி களையெடுக்கும் வேலையைச் செய்யத்தொடங்கினார்கள். பிறகு, மாம்பழத் தோட்டத்தில் ஊடுபயிராகப் பயிர் செய்யப்பட்டிருந்த நிலக்கடலையில் களையெடுக்கும் பணியில் இறங்கினார்கள். களைகளைப் பற்றியும், களையெடுப்பதால் பயிருக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் களையெடுத்தபடியே வகுப்பெடுத்தார் தெய்வசிகாமணி.
தொடர்ந்து பண்ணையைச் சுற்றிக்காட்டியபடி வந்தவர், ஓர் இடத்தில் மாணவர்களை நிறுத்தி, நம்மாழ்வாரின் இருமடிப்பாத்தி அமைக்கும் முறைகள் குறித்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்க... ஆர்வமான மாணவர்கள், 'மண்வெட்டியா... நானா?’ என்ற எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் அழகாக பாத்திகளை அமைத்து முடித்தனர்.
காலை முதல் விவசாயப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, நாட்டுக்கோழி, மீன் குழம்பு, வாழைக்காய் பொரியல், தயிர்பச்சடி, சாம்பார், ரசம் என்று அமர்க்களப்படுத்தி விருந்து வைத்தனர் தெய்வசிகாமணி குடும்பத்தினர். சாப்பிட்டு முடித்த பிறகு, மாணவர்களிடம் பேசிய இயற்கை விவசாயி சுப்பு, இயற்கை விவசாயம் குறித்தும், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்தும், அதனால் பயிர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கமாகப் பாடம் நடத்தினார்.

பிறகு, அங்கிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிபடி கொய்யாவைப் பறித்துச் சாப்பிட்டனர். மதிய வெயில் குறையவும், சப்போட்டா அறுவடையில் இறங்கினர். அறுவடை முடிந்ததும், 'செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு, மா, எலுமிச்சை, கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரங்களைப் பார்வையிட்டபடியே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மீன்குளத்தையும் சுற்றி வந்தனர்.
சரியாகக் கற்றுக்கொடுத்தால் யாவரும் கற்றுக்கொள்ள முடியும்... அதுவும் விவசாய வேலைகள் செய்யச் செய்ய இயற்கையில் மனம் லயித்துப் போகும் என்பதை இந்த ஒரு நாள் பயணம் கற்றுக் கொடுத்தது.
நிறைவாகப் பேசிய தெய்வசிகாமணி, 'சில நாடுகள்ல கட்டாய ராணுவப் பயிற்சி இருக்கிற மாதிரி, இந்தியாவிலும் கட்டாய விவசாயப் பயிற்சியை மாணவர்களுக்குக் கொடுக்கணும். இந்த மாணவர்கள் மாதிரி நம்ம நாட்டு இளைஞர்கள் விவசாயத்துல ஆர்வம் காட்டினா, வேலையில்லா திண்டாட்டம் அறவே இருக்காது. இன்னும் மூணு உலகுத்துக்கு சோறு போடற அளவுக்கு உணவு உற்பத்தியும் பெருகும்' என்று நெகிழ்ச்சியடைந்தவர்,
'எப்போ வேணும்னாலும் இந்தப் பண்ணைக்கு வந்து இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிந்து கொள்ளலாம்'' என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பயணம் தொடரும்
பயிற்சி அனுபவம் பற்றி சிலாகித்துப் பேசத் தொடங்கினார்கள் மாணவர்கள்.
அருள்ஜோதி, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், முதலாமாண்டு.

''திருவாரூர் மாவட்டம், காட்டூர்தான் எனக்கு சொந்த ஊரு. 8ம் வகுப்பு படிக்கும்போதே எங்க வீட்டுல விவசாயத்தை நிறுத்திட்டாங்க. எதுக்கோ கூப்பிடுறாங்கனு நினைச்சுக்கிட்டு வந்தேன். இயற்கை விவசாயத்தை பத்திப் பேச்சுக்குக்கூட கேள்விப்பட்டதில்ல. அத பத்தி நாள் முழுக்கவே சொல்லி கொடுத்திருக்காங்க. இதோட மரம் வளர்ப்பு, ஏர் ஓட்டுறது, சப்போட்டா அறுவடைனு நிறைய வேலைகளை ஃபீல் பண்ணி செஞ்சேன்.'
பிரியதர்ஷினி, பி.இ. ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், முதலாமாண்டு.
''இந்த காத்தையே புதுசா சுவாசிக்கிறேன். இன்றைய நாளை ரொம்பப் பயனுள்ளதா

கழிச்சிருக்கேன். உண்மையான தாய், இயற்கைதான்னு இன்னிக்குப் புரிய வெச்சிருக்கு. இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட கொய்யாவைப் பறிச்சி சாப்பிட்ட ருசியை, இதுக்கு முன்ன அனுபவிச்சதில்ல. இங்க பாத்த பிறகுதான் விவசாயத்தைக்கூட எப்படி திட்டமிட்டு செய்றாங்கங்கிறத தெரிஞ்சிக்கிட்டேன். எனக்கும் நிலத்த வாங்கி இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆர்வம் வந்துடுச்சி.'
ரோகேஷ், எம்.எஸ்.ஸி. எலக்ட்ரானிக் மீடியா, இரண்டாமாண்டு.

''சென்னைக்கு வந்து 20 வருஷம் ஆகுது. அப்பா, ஆட்டோ ஓட்டுறார். விவசாய வேலைகளை இப்படித்தான் செய்யறாங்கனு தெரியும். அத, இன்னிக்குத்தான் நேர்ல செஞ்சு பாத்திருக்கேன். ரசாயன உரங்களைப் போடாமலேயே விவசாயம் செய்ய முடியுங்குறத, இந்தப் பண்ணையை பாத்த பிறகு தெரிஞ்சுக்கிட்டேன். எதிர்காலத்துல வாய்ப்பிருந்தா நானே இயற்கை விவசாயம் செய்வேன்.''
பயிற்சி அனுபவம் பற்றி மாணவர்கள்...
லோகநாதன், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், மூன்றாம் ஆண்டு.

'திண்டுக்கல் மாவட்டம்தான் எனக்குச் சொந்த ஊரு. அப்பா பால் வியாபாரம் செய்றாரு. சொந்தமான நிலம் எதுவும் இல்லாததால, விவசாயம் செய்ற வாய்ப்பு கிடைக்கல. இன்னிக்கு அத அனுபவிச்சி செஞ்சிருக்கேன். எதிர்காலத்துல நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்னு திட்டம் இருக்கு. நீண்ட நாளைக்கு அப்புறம் மாடுகளைத் தேய்ச்சிக் குளிப்பாட்டினது, எங்க ஊருக்கே வந்து செஞ்ச மாதிரி இருந்துச்சு.''
மணிவேல், பி.இ. மைனிங் இன்ஜினீயரிங், மூன்றாமாண்டு.
''அப்பா குவைத்ல டிரைவரா இருக்காரு. எங்க நிலத்தை 5 வருஷமா குத்தகைக்கு விட்டிருக்கோம்.

விவசாயத்துல லாபம் இல்லைனு சொல்றாங்க. இந்தப் பண்ணையில இயற்கை இடுபொருட்களை வெச்சே லாபம் சம்பாதிக்க முடியுங்கறதைப் பாக்கும்போது ஆச்சர்யமா இருக்கு. கூடிய சீக்கிரம் எங்களோட நிலத்தையும் இயற்கைக்கு மாத்தப் போறேன்.''
சபீக், பி.இ. சிவில் இன்ஜினீயரிங், நான்காமாண்டு.

''நம்மாழ்வார் பத்தி டி.வியில பாத்திருக்கேன். பசுமை விகடன் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இங்கே இந்த விவசாயி வார்த்தைக்கு வார்த்தை நம்மாழ்வார் பற்றியும், பசுமை விகடனைப் பற்றியும் சொல்லும்போது, அதுமேல மதிப்பு அதிகமாயிடுச்சு. ஜீவாமிர்தம்னு சொல்லப்படுற இத வெச்சியே தோட்டத்துல 15 ஆயிரத்துக்கு மேல மரங்கள வளர்த்துட்டு வர்றது பெரிய விஷயம். இன்னிக்கு கிடைச்ச அனுபவங்கள வெச்சு வீட்டைச் சுத்தி ஒரு தோட்டம் போடணுங்கற ஆர்வத்தை இந்தப் பயணம் உருவாக்கியிருக்கு.''
திவ்யா, பி.டெக். பயோ மெடிக்கல், முதலாமாண்டு.

‘‘விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம்தான் சொந்த ஊரு. அப்பா கடை நடத்திக்கிட்டு வர்றாரு. எந்த ஐடியாவும் இல்லாமதான் இங்க வந்தேன். திரும்பிப் போகும்போது விவசாய அறிவியல் பத்தி இவ்ளோ விஷயம் தெரிஞ்சுக்கிட்டு போறேன்னு சந்தோஷமா இருக்கு. இனி, எங்க ஊர்ல போய் இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லப்போறேன்.’’
சதாசிவம் –ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர், ராஜபாளையம்:
''கல்லூரியில் வேல செஞ்சிக்கிட்டு இருக்கும்போதே விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். அது முடியாமப்போச்சு. ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்தேன். ஆனா

எதை சாகுபடி செய்யறது, எப்படி செய்யறதுனு தெரியாம இருந்தேன். அப்போதான் பசுமை விகடன் புத்தகத்தைக் கடையில பார்த்து, வாங்கி படிச்சேன். படிச்சது மூலமா இயற்கை விவசாயம் சம்பந்தமா அடிப்படை அறிவு கிடைச்சது. அதே புத்தகத்துல சத்தியமங்கலம் சுந்தர்ராஜன் பண்ணையில் இயற்கை விவசாயப் பயிற்சி நடக்கறதா அறிவிப்பு போட்டிருந்தது. உடனே பயிற்சியில கலந்துக்கிட்டேன்.
இயற்கை விவசாயம் சம்பந்தமா என்னோட தேடலுக்கும் கேள்விகளுக்கும், அந்த பயிற்சி முகாமில் பதில் கிடைத்தது. 4 ஏக்கர்ல பருத்தி போட்டு, நல்ல விளைச்சல் எடுத்து, தொடர்ந்து விவசாயம் செஞ்சிக்கிட்டு வர்றேன். இதுக்கு பாதை காட்டியது பசுமை விகடன்தான். பசுமையின் பாதையிலதான் பயணிச்சுட்டு வர்றேன். என் நண்பர்களுக்கும், பரிந்துரைப்பது பசுமை விகடனைத்தான்'' என்று நெகிழ்ந்தபடி சொன்னார்.
நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?
'விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 04466802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு/செய்யும் தொழில் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.