Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 01

மண்ணுக்கு மரியாதை!
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர் நீ.செல்வம், ஆ.பாலமுருகன், படங்கள்: ஏ.சிதம்பரம்

ண், இயற்கை நமக்கு அளித்திருக்கும் அருட்கொடை. தன்னுள் எது வந்து விழுந்தாலும் அதை மட்க வைக்கும் மண், விதையை மட்டும்தான் முளைக்க வைக்கிறது. கடுகு அளவு விதையையும், மாபெரும் விருட்சமாக மாற்றும் வித்தையை மண்ணைத் தவிர, வேறெதுவும் செய்ய முடியாது!

 மாபெரும் காடுகளாகட்டும், தெருவோர சிறு புல் பூண்டுகளாகட்டும்... அனைத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது, மண்தான். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள்... என அனைத்து உயிர்களுக்கும் மண் ஆற்றும் சேவை மகத்தானது. அதனால்தான் தாய்க்கு நிகராக மண்ணைப் போற்றி வணங்கினர், முன்னோர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மண்ணைப் பற்றிய சரியான புரிதலை நாம் கைகொள்ளாததன் விளைவுதான்... இன்றைக்கு நடக்கும் இத்தனை இயற்கைப் பேரழிவுகள்.

மண்ணுக்கு மரியாதை! - 01

நமது நிலத்தில் இருக்கும் மண்ணின் நிறத்தை மட்டுமே வைத்து இது வளமானது... வளமில்லாதது... என நாமே தரம் பிரித்து தானியங்களை விதைக்கிறோம். விளைந்ததை அறுவடை செய்துகொண்டு, அடுத்த சாகுபடிக்கு ஆயத்தமாகி விடுகிறோம். ஆனால், ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருகிறதே ஏன்?

இதைப் பற்றி என்றைக்காவது யோசித்தது உண்டா?

'மண் வளமாக இருக்கிறதா?’ என வளத்தைப் பற்றியே சிந்தித்த நாம், 'அது நலமாக இருக்கிறதா?’ என யோசிக்காததன் விளைவுதான் இந்த மகசூல் இழப்பு. 'வளமாக இருக்கிறது என்றால், நலமாக இருப்பதாகத்தானே பொருள்... அதிலென்ன வளம், நலம்?’ என்ற கேள்வி அடுத்ததாக உங்களுக்குள் தோன்றும். ஒருவர், செல்வச்செழிப்போடு ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார் என்றால், அவர் வளமாக இருக்கிறார் என்று பொருள். அந்த நபர் உடல் நலன் குன்றி நோய்வாய்பட்டு இருக்கிறார் என்றால், அவர் நலமில்லாமல் இருக்கிறார் என்று பொருள். என்னதான் வளம் இருந்தாலும்... நலம் இல்லாவிட்டால், வளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது.

அலட்சியப்படுத்தப்பட்ட அறிவியல்!

'மண்ணுங்கிறது காலுக்கு கீழே சும்மா கிடக்குற தூசி’ என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. அதைத்தாண்டி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவே இல்லை. 'கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே... முன்தோன்றிய மூத்தக்குடி’ என்று பெருமை பேசித் திரிகிறோம். உவமைக்காகச் சொல்லப்பட்டது, உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், நமக்குப் பிறகு தோன்றியதாகச் சொல்லப்படும் மண்ணைப் பற்றிய அடிப்படையைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை என்பது வேதனையான உண்மை.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று வகைப்படுத்தப்படும் ஆசைகளில் முதல் இடத்தில் இருப்பது மண்ணாசை. வரலாற்றின் அனேகப் பக்கங்கள் ரத்தத்தால் எழுதப்பட்டதற்கு, எழுதப்படுவதற்கு, எழுதப்பட இருப்பதற்கு காரணமே... இந்த மண்ணாசைதான். இப்படி மண்ணை ஆள ஆசைப்பட்ட மன்னர்களும்கூட மண்ணைப் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.

ஓர் அங்குல மண் உருவாக 500 ஆண்டுகள்!

மண்ணின் இயல்பை அறிந்து, ஒவ்வொரு மண்ணிலும் வளரும் தாவரங்களைப் பற்றி தெரிந்து விவசாயம் செய்த தமிழ்க்குடி, மண் வளத்தையும், நலத்தையும் பிரித்துப் பார்த்து நிலத்தை ஐந்து வகைப்படுத்தியது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்; மண் வளம் குன்றிய மணல் நிறைந்த பகுதி பாலை எனவும் நுட்பமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறது தமிழ்க்குடி. நமது நிலம் முழுக்க மண் இருந்தாலும், மேல்பரப்பிலுள்ள ஓர் அங்குல மண்தான் வளமானது. இந்த ஓர் அங்குல மண் உருவாக, '500 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும்’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். மலைப்பாக இருக்கிறதுதானே!

நகர்ந்துகொண்டே இருக்கும் மண்!

நம் நிலத்திலுள்ள இந்த வளமான மேல் மண்ணும், நமக்குச் சொந்தமில்லை. காற்று, மழை மூலமாக மண் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சென்டி மீட்டர் மண் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. மண் என்பது புதுப்பிக்க முடியாத வளம். நிலத்தில் 20 செ.மீ. ஆழம்  வரை உள்ள மண்தான் மேல் மண். ஒரு ஹெக்டேர் நிலத்திலுள்ள மேல் மண்ணில் 17 வகையான பூச்சிகள், 600 வகையான புழுக்கள், 1,500 வகையான பாக்டீரியாக்கள், 3,500 வகையான பூஞ்சணங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஒரு கைப்பிடி மண்ணில் உலக மக்கள் தொகையைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிர்ப் பொருட்கள் அடங்கி இருக்கின்றன.

இதுவரை 'காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, 'மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கப் போகிறது, இந்தத் தொடர். மண் தோன்றிய விதம், மண்ணின் வகைகள், மண் வளத்துக்கும், நலத்துக்கும் உள்ள வித்தியாசம், மண்ணைப் பயன்படுத்தும் முறைகள், மண்ணை மேம்படுத்தும் வழிமுறைகள், உவர் மண்ணைப் பயனுள்ள மண்ணாக மாற்றும் தொழில்நுட்பங்கள், மண்ணில் உரம் வேலை செய்யும் விதம், பருவநிலை மாற்றத்தைக் குறைக்கும் விதம், மண்ணில் உள்ள சத்துக்களைத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் விதம்... இப்படி மண்ணைப் பற்றிய பல தெளிவான புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்தத்தொடரின் நோக்கம்.

நமது நிலத்திலுள்ள மண்ணைப் பற்றிய முழுமையான தெளிவுபெற்று 'மண்ணுக்கும் உயிருண்டு’ என்ற அறிவியலை உணர்ந்து கொண்டு, மண்ணில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளைக் களையும் வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு, மண்ணுக்கு மரியாதை செலுத்தினால்...

இனி, மண் என்பது, என்றென்றும் மகசூலை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபிதான்.

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

இவர்களைப் பற்றி...

நீ.செல்வம்...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரியான இவர், தற்போது, தமிழக வேளாண் துறையில், வேளாண்மை அலுவலராக இருக்கிறார். உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகத்தால் நடத்தப்பட்ட 'பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம்’ என்ற தலைப்பின் கீழ் 6 மாத வயல்வெளிப் பயிற்சி பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில வேளாண்மை அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தவர். தமிழக அரசின் அனுமதியுடன் சிறந்த பருத்தி உற்பத்தித் திட்டத்தின் கீழ் சீனா, தஜிகிஸ்தான், மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளின் விவசாய அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தவர். மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்தவர். சில ஆண்டுகளுக்கு முன், பசுமை விகடனில் தொடராக வெளிவந்த 'பூச்சிகளும் நம் நண்பர்களே’ தொடரின் ஆசிரியர். தற்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், தமிழக அரசின் நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

மண்ணுக்கு மரியாதை! - 01

 ஆ.பாலமுருகன்...

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள மேலவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மண்ணியல் மற்றும் வேளாண்மை வேதியியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மண்பரிசோதனை குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொண்டவர். உப்பினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏற்ற புதிய நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியவர். வாழையில் நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்க, புதிய நுண்ணூட்டத்தை அறிமுகம் செய்தவர். ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் மண் நலம் குறித்த 200க்கும் மேற்பட்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு நடத்தியவர். கடந்த 9 ஆண்டுகளாக மண்வளம் மற்றும் மண்பரிசோதனைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சர்வதேச மண் ஆண்டு! அக்கறை காட்டும் ஐ.நா!

மண்ணை நலமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, நடப்பு ஆண்டை (2015) 'சர்வதேச மண் ஆண்டு’ என அறிவித்திருக்கிறது. 'மண் இல்லாவிட்டால் மனிதன் இல்லை’, 'உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மண்ணைப் பாதுகாக்க வேண்டும்', 'நீடித்த நிலையான மண்வள மேலாண்மை’, 'மண்வளமே... மக்கள் வளம்’ போன்றவற்றை மண் ஆண்டின் நோக்கங்களாகவும் அறிவித்துள்ளது ஐ.நா. சபை. 'மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்பதைத்தான், 2007-ம் ஆண்டிலிருந்தே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது 'பசுமை விகடன்’ என்பது குறிப்பிடத்தக்கது.