நீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்?
''கிராமப்பிரியா, வனராஜா கோழிகளின் சிறப்புத்தன்மை என்ன... இவை எங்கு கிடைக்கும்?''
-எம்.சுந்தரவல்லி, உடுமலைப்பேட்டை
கோயம்புத்தூரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் சிவக்குமார்
''கிராமப்புற மக்களின் புரதச்சத்துக் குறைபாட்டைத் தீர்க்கும் வகையில் ஐதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குநரகம், 'கிராமப்பிரியா’ (முட்டை ரகம்), 'வனராஜா’ (முட்டை மற்றும் இறைச்சி ரகம்) ஆகிய கோழி ரகங்களை உருவாக்கி உள்ளது. இவை பார்ப்பதற்கு நாட்டுக்கோழிகளைப் போல இருக்கும். ஆனால், நாட்டுக்கோழிகளைவிட அதிக எண்ணிக்கையில் முட்டையிடக் கூடியவை.

முதலில் இந்தக் குஞ்சுகள், தடுப்பூசிகள் மற்றும் உரிய தீவனங்களுடன், அடைக்காப்பானில் ஆறு வார காலம் தொடர் செயற்கை வெப்பத்தில் பராமரிக்கப்படும். பிறகுதான் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதனால், இவை தங்களுக்கான உணவுத் தேவையை, எளிதில் பூர்த்தி செய்து கொள்கின்றன. இதன் மூலம், அதிக எடையையும், அதிக முட்டையிடும் திறனையும் கோழிகள் பெறுகின்றன. அதாவது,1.5 ஆண்டில், 'கிராமப்பிரியா’ ரகக் கோழி, 200 முதல், 230 முட்டைகளும், 'வனராஜா’ ரகக் கோழி, 100 முதல் 110 முட்டைகளும் கொடுக்கின்றன. கோழிகளின் எடையும் 2.2 கிலோ வரை இருக்கிறது.

இந்த இரண்டு கோழி இனங்களையும், கோழி விதைத் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த விதைத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த இரண்டு ரகங்களும் புறக்கடையில் வளர்க்கவே வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எங்கள் கால்நடைப் பயிற்சி மையத்தில், இதற்கான முன்பதிவைச் செய்து கொள்ளலாம். மேலும் பத்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலும் இந்தக் கோழிக்குஞ்சுகளுக்கான முன்பதிவைச் செய்து, பெற்றுக் கொள்ளலாம்.''
தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-2669965.
''சென்னையில் கற்றாழைச் சாறு எடுக்கும் தொழிற்சாலை அமைக்கலாமா... இதற்கு மானியம் உண்டா?''
-திருக்குமரன், சென்னை.
மதுரையில் செயல்பட்டு வரும் 'தமிழ்நாடு கவுன்சில் ஃபார் எண்டர்பிரைசஸ் டெவலப்மென்ட்’ அமைப்பைச் சேர்ந்த எம். ஜெயகுமார் பதில் சொல்கிறார்.
''கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்குக் கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால், இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக் காயங்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், கற்றாழையின் தேவை அதிகரித்து வருகிறது.

வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையிலிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் சாகுபடி செய்யலாம். நடவிலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் கிடைக்கும். தரிசு மண், மணற்பாங்கான நிலம், செம்பொறை மண்... போன்றவை ஏற்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது. ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். தற்சமயம் கற்றாழை மடல் கிலோ ரூ-4-க்கு விற்பனையாகிறது.
கற்றாழையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிடும். இதனால், அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும். அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த மூன்று மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்திவிட வேண்டும். கற்றாழை சாகுபடியைப் பொறுத்தவரை, நிலமும், ஜெல் எடுக்கும் தொழிற்சாலையும் அருகில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 ஏக்கர் நிலத்தில் கற்றாழை சாகுபடி செய்தால்தான், சுழற்சி முறையில் அறுவடை செய்து, ஜெல் எடுக்க முடியும். குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதலீட்டில் ஜெல் தொழிற்கூடத்தை உருவாக்க முடியும். இதற்கு மத்திய அரசு 25% மானியம் வழங்குகிறது. கற்றாழை சாகுபடி செய்து நஷ்டம் அடைந்தவர்கள் நிறைய பேர் உண்டு. எனவே, தெளிவாகத் திட்டமிட்டு செயல்படவும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04522627989, செல்போன்: 9443159345
''வயலில் பூச்சிகளின் நடமாட்டத்தைக் குறைக்க எளிய வழி சொல்லுங்கள்?''
-ஆர்.சிவசாமி, வேலூர்.
தர்மபுரி மாவட்ட வேளாண்துறை உதவி இயக்குநர் என்.மதுபாலன் பதில் சொல்கிறார்.
''பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலம் ஏற்கெனவே வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். இந்த விஷயத்தை விவசாயிகள் மத்தியில் வேகமாக வேளாண்மைத் துறை பரப்பி வருகிறது. அதாவது, மஞ்சள் நிறத்தில் பூப்பூக்கக் கூடிய செண்டுமல்லிப்பூ (துலுக்கன் சாமந்திப் பூ) செடி, மக்காச்சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சியினங்களை நம் வயல்களை நோக்கி வரும்படி கவரலாம்.

வரப்புகளில் ஊடுபயிராக தட்டைப்பயறு சாகுபடி செய்யலாம். தட்டைப்பயறு செடியில் இருக்கும் அசுவிணிப் பூச்சியைச் சாப்பிட ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களை நோக்கி படையெடுத்து வரும். அசுவிணியைத் தின்று முடித்த பின்னர் நம் வயல்களில் உள்ள பயிர்களில் மறைந்துகொண்டிருக்கும் தீமை செய்யும் பூச்சிகளையும் தேடிப் பிடித்துத் தின்னும். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.

ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்காமல் தடுக்க முடியும். ஆமணக்கு போன்ற செடிகளில்தான் தீமை செய்யும் பூச்சிகள் முதலில் உட்காரும். ஆகவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். பருத்தி சாகுபடி செய்யும்போது, சுற்றிலும், துவரையை விதைத்துவிடலாம். பருத்தியைத் தாக்கும், காய்ப்புழுக்கள் முதலில் துவரையைத் தாக்கும். இதன் மூலம் காய்ப்புழுக்களின் நடமாட்டத்தை அறிந்து, அதைக் கட்டுப்படுத்தலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல், இயற்கைப் பூச்சிவிரட்டிக் கரைசல் போன்றவற்றை பயிர்களில் தெளிப்பதன் மூலம் பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்புச் சுவையுள்ள இலைகளைச் சாப்பிடாமல், தீமை செய்யும் பூச்சிகள் தவிர்த்துவிடும்.
இத்தகைய இயற்கைத் தொழில்நுட்பங்கள் மூலமாக பூச்சிகளின் நடமாட்டத்தைக் குறைப்பதோடு, கூடுதல் வருமானத்தையும் பெறலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை ஐதராபாத்தில் உள்ள தேசிய பயிர் நல மேலாண்மை நிறுவனத்தில் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.''
தொடர்புக்கு, செல்போன்: 9751506521.
வனராஜா, கிராமப்பிரியா கோழிகுஞ்சுகள் பெறுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்:
1. ஓசூர, 0434-4689005
2. திருநெல்வேலி, 0462-2336345
3. மதுரை, 0452-2483903
4. கோயம்புத்தூர், 0422-2669965
5. நாமக்கல், 04286-266345
6. விழுப்புரம் ,04146-225244
7. திருவாரூர், 04366-226263
8. திருச்சிராப்பள்ளி , 0431-2770715
9. வேலூர், 0416-2253022
10. காட்டுப்பாக்கம், 044-27452224
11. புதுக்கோட்டை, 04322-271443
-புறா பாண்டி
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.