Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 02

மண்ணுக்கு மரியாதை!
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

ரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளிஅள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிகிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், 'காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். 'மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கப்போகிறது, இந்தத் தொடர்.

மண்ணின் தன்மையைப் பொறுத்தே நீர்ச்சேகரிப்பு!

மண், பயிர் வளர்வதற்கான ஊடகம் மட்டுமல்ல. அதையும் தாண்டி மனிதவாழ்வில் அது நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் அநேகம். மழை ஒன்றுதான் நமக்கான நீராதாரம் என்பது உண்மைதான். ஆனால், அந்த மழைநீரை மனிதகுலம் முழுமையாகப் பயன்படுத்த, மண் மனது வைக்கவேண்டும். ஒரு பகுதி, வறட்சியாக மாறுவதற்கும், வெள்ளத்தில் சிக்கி சீரழிவதற்கும் மண்ணும் ஒரு காரணம். பெய்யும் மழைநீரை, மண் பிடித்து வைத்துக் கொண்டால், வெள்ளத்துக்கு வேலை இல்லை. மாறாக, வான்மழை அனைத்தையும், 'போப்போ மழையே’ என வடிய விட்டு விட்டால், வெள்ளம் தடுக்க முடியாத ஒன்றாகி விடும். அதேபோல பெய்யும் நீரைப்  பிடித்து வைத்துக்கொள்ளாமல் வடிய விட்டு விட்டால் வறட்சிக்கு வரவேற்பு வளையம் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மண்ணின் தன்மையைப் பொறுத்தே நீர்ச்சேகரிப்பு சாத்தியமாகிறது.

மண்ணுக்கு மரியாதை! - 02

பயிருக்கு பார்சல்!

பயிர் வளர்வதற்குத் தேவையான ஊடகமாக இருப்பதும், காற்று மற்றும் நிலத்தில் இருந்து பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களைப் பயிர்களுக்கு பார்சல் செய்வதும் மண்ணின் முக்கியப்பணி. மண்ணுக்கு வெளியே இருக்கும் உயிர்களைவிட, உள்ளே இருக்கும் உயிரிகளின் எண்ணிக்கை அதிகம். பூமிக்கு மேலே காற்றுச் சுழற்சி இருப்பது போலவே, மண்ணுக்குள்ளும் காற்று 'உள்ளே வெளியே’ சுற்றிக் கொண்டுதான் இருக்கும். மனித வாழ்வுக்கு அடிப்படையான இருப்பிடத்தை அமைத்துக் கொள்வதில் மண்ணின் பங்கு மகத்தானது. மண் இல்லை என்றால், குடிசைகள் மட்டுமல்ல... மாட மாளிகைகளும் இல்லை.

நாம் பயிருக்குக் கொடுக்கும் செயற்கை உரங்களை, நேரடியாகப் பயிர் எடுத்துக் கொள்வதில்லை. அதைப் பயிருக்குக் கடத்துவது மண்தான். இதைத்தான் இதுவரை 'மண் வளம்’ எனச் சொல்லிக் கொண்டிருந்தோம். மண் நலம் நன்றாக இருந்தால், 'மண் வளம்’ நன்றாக இருக்கும். மண் வளம் என்பது உரங்களை எடுத்து, பயிருக்குக் கடத்துவதையும், மண் நலம் என்பது அதன் பௌதீக, ரசாயன, உயிரியல் பண்புகளையும் குறிக்கும்.

முக்கியமான மூன்று பண்புகள்!

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என ஔவைப் பாட்டி பாடினாரே... அதுபோல, மண்ணில் உள்ள குறைநிறைகளைத் தெரிவிப்பது பௌதீகப் பண்பு. ஊனமற்ற உடல் மட்டும் இருந்தால் போதுமா, உள் உறுப்புகள் சரியாகச் செயல்பட வேண்டாமா?. அப்படி மண்ணுக்குள் இருக்கும் இயங்குப் பொருட்களை பற்றி அறிவிப்பது அதன் ரசாயன பண்புகள். சரி, உடலும் நலமாக இருக்கிறது. உள் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. இது மட்டும் போதுமா? மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?. அப்படி மண் மகிழ்ச்சியாக, மகசூல் கொடுக்கத் தகுந்ததாக ஆக்குவதுதான் உயிரியல் பண்புகள். ஆக, இந்த மூன்று பண்புகளும் சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் மண் நலம் சாத்தியமாகும்.  

மணல், களி, வண்டல் = மண்!

தற்போது ரசாயனப் பண்புகளுக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது, மற்ற பண்புகளை பலியாக்கி விடுகிறது. அதனால்தான் நாம் கொடுக்கும் உரங்கள் அனைத்தும் வீணாகப் போகின்றன. மண்பரிசோதனை செய்யும் நிலையங்களில் ரசாயனப் பண்புகளை ஆராய்ந்துதான் மண் வளம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். மண் என்பது மணல், களி, வண்டல் மூன்றும் கலந்த கலவை. மணலின் சதவிகிதம் அதிகமானால், அது மணல்சாரி மண். களி அதிகமாக இருந்தால், அது களிமண். வண்டல் அதிகமானால், அது வண்டல் மண். இவை மூன்றும் எந்தெந்த விகிதங்களில் இருக்கின்றன என்பதை வைத்துத்தான் மண்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடியும். நாம் வாழ்வதற்கு வீடு என்ற கட்டடம் எப்படி முக்கியமோ, அப்படி மண்ணுக்கு முக்கியமானது அதன் கட்டமைப்பு. இதுதான் ஒரு மண்ணில் என்னென்ன பயிர்கள் விளையும் என்பதைத் தீர்மானிக்கிறது.

பாதை அமைத்துக் கொடுக்கும் கட்டுமானம்!

சிமென்ட், மணல் இரண்டையும் எந்த விகிதத்தில் சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ஒரு கட்டடத்தின் பலம் தீர்மானிக்கப்படுகிறது. அதுபோலத்தான் மண்ணிலும். இந்த மூன்று கலவைகளும் எந்த விகிதத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே மண்ணின் கட்டுமானம் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்ணிலும் இவை அமைந்திருக்கும் இடைவெளியைப் பொறுத்துத்தான் காற்றும், நீரும் உள்ளே சென்று தங்கும். முட்களும், புதர்களும் நிறைந்த காட்டுப்பாதையில், பயணம் செய்வதற்கும், நான்கு வழிச்சாலையில் பயணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுபோலத்தான், மணல், களி, வண்டல் ஆகிய மூன்றும் ஒரு மண்ணில் அமைந்திருக்கும் நெருக்கத்தை, விகிதாசாரத்தைப் பொறுத்துதான் அந்த மண்ணுக்குள் நீரும், காற்றும் செல்லும் பாதை அமைகிறது.

கட்டியாகும் மண் கல்லறைக்கு சமம்!

மனிதர்கள் செய்யும் பல காரியங்களால் மண்ணின் கட்டுமானம் சிதைக்கப்படுகிறது. மாடுகள் மூலமாக ஏர் உழவு செய்யும்போது, மேலே இருந்த மூன்றடி மண்ணை மட்டும்தான் கிளறிக் கொண்டிருந்தோம். டிராக்டர் உழவு வந்த பிறகு கிட்டத்தட்ட ஆறடி மண் வரைக்கும் தோண்டுகிறோம். அதிக ஆழம் தோண்டுவது மட்டுமல்லாமல் அதன் மீது எடை அதிகமான டிராக்டரை இயக்குவதால் மண் கட்டுமானம் உடைகிறது. இதனால் அதன் இயல்பான பண்பு பாதிக்கப்பட்டு, மண் கட்டியாகி விடுகிறது. அதனுள் காற்றும், நீரும் உள்புக முடிவதில்லை. இதனால், மண்ணின் உள்ளே உள்ள நுண்ணுயிர்கள் போன்ற இயங்கு பொருட்கள் பாதிக்கப்பட்டு மண் நலம் இழந்து விடுகிறது.

ஒரு அலுமினிய பாத்திரத்தின் மீது நாம் ஏறி நின்றால் என்னவாகும்?  ஒடுங்கிக்கொண்டு விடுமல்லவா. மண்ணும் அதுபோலத்தான். பொலபொலப்பான மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கையால் அழுத்தினாலே அது கட்டியாகி விடும்போது, டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை ஏற்றினால் கட்டுமானம் உடையத்தானே செய்யும். இன்றைக்கு இருக்கக்கூடிய வேளாண் பொருளாதாரச் சூழலில் டிராக்டர் தவிர்க்க முடியாததுதான் என்றாலும், மண் கட்டுமானம் சிதைய அதுவும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்படி நலமிழந்த மண்ணை கரிமப்(மட்கிய இலை, தழை....)பொருட்களைக் கொண்டு சரிசெய்ய முடியும் என்பது ஆறுதலான செய்தி.

-வாசம் வீசும்

மண்ணில் இருக்கும் பொருட்கள்!

தாதுக்கள் 45 %

காற்று 25 %

தண்ணீர் 25 %

அங்ககப் பொருட்கள் 5 %

-தொகுப்பு: ஆர்.குமரேசன்

 நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

படம்: வீ.சிவக்குமார்