மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள் விவசாயி

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, 'பசுமை விகடன்’. 'ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இப்பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயி

இந்த முறை நாம் சென்றது, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதண்டி மண்டபம் கிராமத்தில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி முகுந்தனின் பண்ணைக்கு. 35 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, தீவனப்பயிர்கள், காய்கறிகள் என்று பரந்து விரிந்து கிடந்தது, பண்ணை. தார்பார்க்கர், காங்கிரேஜ் என நாட்டு மாடுகள் பண்ணையின் நுழைவாயிலிலேயே  தீவனத்தை அசைபோட்டவாறு நம்மை வரவேற்றன. பண்ணை உரிமையாளர் முகுந்தனிடம் ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த தினேஷ் பிரசாத், கர்ணன், ரகுபதி, ஸ்ரீவித்யா, சிவரஞ்சனி ஆகியோரை அறிமுகப்படுத்தினோம்.

வாங்க பழகலாம்!

உற்சாகமான முகுந்தன், 'என்னைப் பொறுத்தவரை விவசாயத்துல அனுப வமெல்லாம் பெரிய விஷயமே இல்ல. ஆர்வம் இருந்தா போதும்... சாதிச்சுக் காட்டலாம். எங்க தாத்தா விவசாயம் செஞ்சிட்டு இருந்தாரு. நான் டெல்லியில வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல வேலை வேணாம்னு விவசாயத்துக்கு வந்துட்டேன். விவசாயத்தைச் செய்யத் தொடங்கின பிறகு படிப்படியா ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். எதையும் நீங்களே செஞ்சு பழகினா, எல்லா விஷயமும் புரியும். முதல்ல தப்பு நடந்தாலும், அடுத்து சரியாகிடும்' என்று நம்பிக்கை ஊட்டியவர், பண்ணையில் இருந்த நாட்டுமாடுகளைக் காண்பித்தார்.

'இந்த மாடுகளோட சிறப்பு என்ன?' முதல் கேள்வியை வீசினார், கர்ணன்.

'இந்த தார்பார்க்கர், காங்கிரேஜ்... மாடுகள் தரமான, சத்து மிகுந்த பால் கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாட்டிலிருந்து 8 லிட்டர் பால் வரைக்கும் கறந்துக்கிட்டிருக்கேன். ஒரு லிட்டர் 50 ரூபாய் விலைக்குக் கடைகளுக்கு அனுப்புறேன்' என்ற முகுந்தனிடம் ''இதுகளுக்கு தீவனமெல்லாம் எப்படி கொடுக்குறீங்க?' என்றார், தினேஷ் பிரசாத்.

ஒரு நாள் விவசாயி

'ஒரு நாளைக்கு பால் கறக்கும் மாடுகளுக்கு ரெண்டு முறையும், மத்த மாடுகளுக்கு ஒரு முறையும் அடர்தீவனம் கொடுப்பேன். அடர்தீவனத்துக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளத்தை ரவை மாதிரி அரைச்சு, புழுங்கல் அரிசி தவிடு, கடலைப் பிண்ணாக்கு, கோதுமை மாவு, உளுந்து மாவு கலந்து கொடுப்பேன். பசுந்தீவனத்துக்கு ஆப்பிரிக்கன் நெட்டை, குதிரைமசால், தினைப் பயிர்கள், கேழ்வரகுத் தாள், ராஜீக்கி பஜ்ஜி (குஜராத் கம்பு ரகம்), சீத்தம்மா சொர்க்கம் (14 அடி உயரம் வளரும் ஆந்திரா சோள வகை) கொடுத்துக்கிட்டு வர்றேன்' என்று  சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாடுகள் மேய்ச்சலுக்குக் கிளம்பின.

களைப்பறிக்கக் கத்துக்கலாம்!

அனைவரையும் காய்கறித் தோட்டத்தில் களைப்பறிக்க அழைத்துச் சென்றார், முகுந்தன்.

கத்திரிக்காய், கீரை வயல்களில் பார்த்தீனியம் செடிகள் அப்பிக் கிடந்தன. காலையில் தண்ணீர் பாய்ச்சிய வயலில், 'பொதக்... பொதக்...’ சத்தத்துடன் சேற்றில் காலைத் தூக்கி வைத்துக்கொண்டு களைகளைப் பறிக்கத் தொடங்கினர், ஒரு நாள் விவசாயிகள். பகல் பன்னிரண்டரை மணி உச்சிவெயில் தலைக்கு மேலே தாண்டவமாட இளைப்பாற சற்று நேரம் ஒதுக்கினோம். அந்தநேரத்தில் பேசிய முகுந்தன், 'இன்னைக்கிருக்கிற சூழ்நிலையில 50 சென்ட் இடத்துல கீரை, காய்கறிப் பயிர்களையும், சமாளிக்கிற அளவுக்கு நாட்டு மாடுகளையும் வெச்சுக்கிட்டா, வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சாதாரணமா சம்பாதிச்சுடலாம்' என்றார்.

ஓய்வுக்குப் பிறகு, உழவு ஓட்டும் இடத்துக்குச் சென்றோம். டிராக்டரில் ரோட்டோவேட்டர் கலப்பை இணைக்கப்பட்டிருந்தது.

'இதை எதுக்கு இணைச்சிருக்கீங்க?' என்று சிவரஞ்சனி கேட்க...

'உழவு ஓட்டி வெச்ச நிலத்துல, இந்தக் கலப்பையை ஓட்டும்போது மண் கட்டிகள் உடைஞ்சு மண் பொலபொலப்பாகும்' என்றார், டிராக்டர் ஓட்டுநர் செல்வம். பிறகு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் இரண்டு சுற்று டிராக்டரை ஓட்டினார்கள். ஓட்டி முடித்த நிலத்தில் சதுரப் பாத்திகளை அமைக்க பயிற்சி கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் விவசாயி

மதிய உணவுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய சுயஅறிமுகம் செய்துகொண்டனர். பிறகு கரும்பு வயலுக்கு எரு கொட்டுவதற்கு அழைத்துச் சென்றார், முகுந்தன்.

கோழி எரு போடுவோமே!

அங்கே போனதும், 'இது கோழியோட எரு, இதை எப்படிப் பயிருக்குக் கொடுக்கிறீங்க?' என்று கேட்டார், ரகுபதி.

'கோழி எரு ரொம்ப சூடு. அது பயிர்கள அழிச்சுடும்னு நிறைய பேரு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை யூரியா போடுறவங்க, அதுக்கு பதிலா இதப் போடலாம். அந்தளவுக்கு பயிர் வளர்ச்சிக்கு உடனடியா பலன் கிடைக்குது. இத நிலத்துல கொட்டி வெச்சு ஆறப்போட்டு, தண்ணி விடுவோம். அதனால, சூடு குறைஞ்சுடும். அதுக்குப் பிறகு அதோட சத்துக்கள் மட்டும்தான் பயிர்களுக்குக் கிடைக்கும். இத என்னோட அனுபவத்துல பாத்திருக்கேன்' என்று சொல்லி முடித்தவுடன், அனைவரும் கோழி எருவைக் கூடையில் போட்டு எடுத்துக்கொண்டு போய் நீண்ட நேரம் இறைத்தார்கள்.

கரும்பு வெட்டலாம் வாங்க!

அடுத்ததாக, கரும்பிலிருந்து விதைப்பருவை எப்படி வெட்டி எடுக்க வேண்டும் என்பதைச்் செய்துகாட்டினார், முகுந்தன். உடனே, 'எனக்குக் கொஞ்சம் கரும்பை எடுத்துக்கிறேன். வீட்டில் இருக்கிற காலி இடங்கள்ல நடவு போடுறேன்' என்று விதைக்கரும்பை எடுத்துக் கொண்டார், கர்ணன்.

தோட்டத்தில் வளர்ந்து நிற்கும் கரும்பை அறுவடை செய்து காட்டினார், பண்ணையில் வேலை செய்து வரும் குணசேகர். 'நிலத்திலிருந்து 4 அங்குல உயரம் விட்டு கரும்பை வெட்டணும். தோகைகளைக் கழிக்கணும். ஒரு நிமிஷத்துல கரும்பை வெட்டி தோகையைக் கழிச்சு எடுத்திடுவோம். ஒரு ஆள் கிட்டத்தட்ட 8 மணி நேரத்துல ஒரு டன் கரும்பை வெட்டி எடுத்திட முடியும்' என்றதும், 'அப்படியா’ என்றபடி விழிகளை விரித்தனர்.

சூரியன் மெள்ள மேற்கே சாய... மாடுகள் கரம்பு மேட்டிலிருந்து பண்ணையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. கன்றுக்குட்டிகள் மாடுகளைப் பார்த்து 'மா...வ்...’ என்று அழைக்க... கறவை மாடுகள் இன்னும் வேகமாக பண்ணையை வந்தடைந்தன. பண்ணையில் 'போர்வெல்’ பாசனம் என்பதால், கிணறு இல்லை. தொட்டி நீரில் கை, கால்களைக் கழுவிக் கொண்டு பண்ணையாளருக்கும், பண்ணையில் வேலை செய்பவர்களுக்கும் நன்றி சொல்லியபடியே நடையைக் கட்டினார்கள், ஒரு நாள் விவசாயிகள்.

-பயணம் தொடரும்

ஒரு நாள் விவசாயிகளின் பயிற்சி குறித்த அனுபவங்கள் இங்கே...

 'ஒருநாள் விவசாயி ஆனது பெருமை!’

தினேஷ் பிரசாத், பயிற்றுநர், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி: ''விவசாயத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனா, விவசாயம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஒரு நாள் விவசாயி ஆனதே என்னோட வருங்காலத் திட்டத்துக்கு அடித்தளமா நினைக்கிறேன்.''

ஒரு நாள் விவசாயி

ஸ்ரீவித்யா, தனியார் நிறுவன ஊழியர்: ''இயற்கை விவசாயம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. களத்துல இறங்கி களை எடுத்தது, எரு கொட்டினது, டிராக்டர் ஓட்டினது எல்லாமே நல்ல அனுபவம். மனசுக்கும் உடலுக்கும் நிம்மதியான வேலைனா அது விவசாயம்தான்.''

ஒரு நாள் விவசாயி

சிவரஞ்சனி, முட நீக்கியல் நிபுணர்: ''இயற்கை முறை விவசாயத்தைத் தெரிஞ்சுக்கணும்னு வந்தேன். இன்னிக்கு களப்பணி செஞ்சது ரொம்ப சந்தோஷம். சில வருஷங்கள்ல சொந்த கிராமத்துக்கே போய் விவசாயம் பண்ணனும். அதுக்கான ஆரம்பமா ஒரு நாள் விவசாயியா மாறுனது பெருமையா இருக்கு.''

ஒரு நாள் விவசாயி

ரகுபதி, விற்பனைத்துறை: ''பண்ணை உரிமையாளரோட அனுபவங்கள் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. சொல்லப் போனா, எனக்கு ஒரு நல்ல ஆரம்பம் கிடைச்சிருக்கு. விவசாயிகளோட தினசரி வேலைகள் எப்படி இருக்கும்னு அனுபவப்பூர்வமா கத்துக்கிட்டது சந்தோஷமா இருக்கு.''

ஒரு நாள் விவசாயி

கர்ணன், ஓட்டுநர்: ''டெம்போ ஓட்டுறதோடு, சைடு பிஸினஸ் மாதிரி வீட்டிலேயே 10 ஆடுகள், 10 கோழிகள் வாங்கி வளர்க்கிறேன். இதோட 10 சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் ஏனோதானோனுதான் விவசாயம் செய்றேன். இன்னிக்கு இங்க கத்துக்கிட்டதை வெச்சு, என்னோட நிலத்துல செஞ்சுப் பாக்க போறேன்.''

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

'விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.

200 நாட்களில் தயார்!

ஒருநாள் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு இயற்கை விவசாயி முகுந்தன் அளித்த பதில்களும்...

'ரசாயன நிலத்தை, இயற்கை விவசாய நிலமாக மாற்றுவது எப்படி?'

'முதல் பயிராக கேழ்வரகைப் பயிரிட்டு நன்றாக வளர்ந்ததும் மடக்கி உழ வேண்டும். அடுத்து கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயிரிட்டு, நன்றாக வளர்ந்ததும் மடக்கி உழவு செய்ய வேண்டும். மூன்றாவதாக சணப்பு, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி ஆகியவற்றைப் பயிரிட்டு, வளர்ந்ததும் மடக்கி உழ வேண்டும். இதுமாதிரி செய்து வந்தால் 200 நாட்களுக்குள் இயற்கை விவசாயத்துக்கு நிலம் தயாராகி விடும்.'

'காய்கறிகளில் களைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?'

'செடிகளுக்கிடையில் வைக்கோல் அல்லது இலை தழைகளை அரை அடியிலிருந்து முக்கால் அடி உயரத்துக்குப் பரப்பி விட வேண்டும். அதன் மீது சாணம், வெல்லம் கலந்த கரைசலைத் தெளித்து வர வேண்டும். இப்படிச் செய்யும்போது களைகள் கட்டுப்படுவதுடன், மண்ணுக்கும் ஊட்டம் கிடைக்கும். செடிகளின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும்.'

 த.ஜெயகுமார், ந.ஆஷிகா

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், அ.பார்த்திபன்