மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்

அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்

காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் மரத்தடியில் அமர்ந்து, பீகார் அரசியல் நிலவரத்தைக் கடுமையாக விவாதித்துக் கொண்டிருந்தனர். இதைக் காதில் வாங்கியபடியே வந்து சேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா... ''சலூன் கடையில 'இங்கே அரசியல் பேசாதே’னு போர்டு போட்டிருப்பாங்க. அதுமாதிரி ஒரு போர்டை இந்த மரத்தடியில தொங்கவிட்டாத்தான் நீங்க சரிப்பட்டு வருவீங்க போல...'' என்று சொல்லி சிரிக்க,

''சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குங்கற கதையா, அரசியல் இல்லாத சங்கதி எங்க இருக்கு. சாவுலயும் அரசியல், நோவுலயும் அரசியல். இவ்வளவு ஏன், தலையில சுமந்து நீ விக்கிறியே காய்கறிகளை, அதோட விதையிலயும் அரசியல்...' என்று ஏரோட்டி நீட்டி முழக்க...

''ஐயா, சாமி ஆளைவிடு, தெரியாத்தனமா சொல்லிப்புட்டேன்'' என்று காய்கறி சரணாகதி அடைந்தார்.

அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்

''சரி, சரி, நம்ம கதைக்கு வருவோம்' என்று திசைதிருப்பிய வாத்தியார், 'கடலூர் மாவட்டத்துல இருக்குற நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை நிர்வாகம், பதிவு செய்யப்படாத கரும்புகளை வாங்கி அரைச்சிக்கிட்டு இருக்கு. இப்படிப்பட்ட கரும்புகளை ஏத்திக்கிட்டு வந்த வாகனத்தை மறிச்சு... தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவங்க போராடியிருக்காங்க. அதிகாரிகள் ஓடோடி வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிச்சு வைச்சாங்களாம். போன வருஷம், அரைச்ச கரும்புக்கு, டன் ஒண்ணுக்கு

300 ரூபாய் பாக்கி வைச்சிருக்குதாம் ஆலை. இந்த நிலையில பதிவு செஞ்ச கரும்பை வெட்டாம, பதிவு இல்லாத கரும்புக்கு அதிக பணம் கொடுத்து வாங்குறதாலதான் இந்தப் பிரச்னை' என்றார்.

'இந்த தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் இப்படி விவசாயிகளோட வயித்துல, அடிக்கிறதாலதான், பல இடங்கள்ல கரும்பு விவசாயத்தைக் கைவிட்டுட்டு இருக்காங்க விவசாயிங்க. இப்படியே போனா, வெளிநாட்டுல இருந்துதான் சர்க்கரையை இறக்குமதி பண்ண வேண்டியிருக்கும்'' என்று கவலைப்பட்ட ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

'கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி விவசாயிகள் பீட்ரூட், கேரட், கொத்தமல்லி, புதினானு காய்கறி உற்பத்தி செஞ்சு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிறாங்க. இந்தப்பகுதியில 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி 'சிப்காட் தொழிற்பேட்டை’ அமைக்கிற முயற்சியில இறங்கியிருக்கு. முதல் கட்டமா, சூளகிரி ஓன்றியத்துல இருக்கிற அட்டக்குறுக்கி, தோரிப்பள்ளி, நல்லகான கொத்தப்பள்ளி பஞ்சாயத்துகள்ல இருக்கிற 834 ஏக்கர் விளைநிலத்தைக் கையகப்படுத்த வருவாய்த்துறை உத்தரவு பிறப்பிச்சு... விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு. நோட்டீஸ் வாங்கின விவசாயிங்க, 'இருக்கிற ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் பிடுங்கிட்டா நடுத்தெருவுலதான் நிக்கணும்’னுபுலம்பிக்கிட்டு இருக்கிறாங்க. பாவம்'' என்றார்.

'ஆமாய்யா... எனக்கும் இந்தத் தகவல் கிடைச்சது. 'பசுமை விகடன்’ நிருபர்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லி 'பிரச்னையை வெளி உலகத்துக்குக் கொண்டு வாங்க’னு சொல்லியிருக்கேன்' என்றார், வாத்தியார்.

கூடையில் இருந்த சிகப்புக் கொய்யா பழங்களை ஆளுக்கு இரண்டாக எடுத்துக் கொடுத்த காய்கறி, ஒரு செய்தியை எடுத்து விட்டார். 'செந்தூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சானு சுவையான மாம்பழங்களுக்கு பேர் போன மாவட்டம், கிருஷ்ணகிரி. ஆனா, இந்த வருஷம் போதுமான அளவுக்கு மழை இல்லாததால, காசுக்கு தண்ணீர் வாங்கி ஊத்தித்தான் மாமரங்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்களாம். அதிக பனிப்பொழிவு, வெயில்னு தட்ப வெப்ப நிலை தாறுமாறா இருக்கிறதால மாம்பூக்கள் எல்லாம் கருகி விழுந்துடுதாம். விளைச்சல் சொல்லிக்கிற அளவுக்கு இருக்காதாம். மா விவசாயிகள் எல்லாம் கவலையில இருக்கிறாங்கனு மார்க்கெட்ல பேசிக்கிட்டாங்க' என்றார்.

'ம்... மார்க்கெட் நிலவரம்' என்று காய்கறியைக் கலாய்த்த ஏரோட்டி, அடுத்த செய்திக்குத் தாவினார்.

'ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறதால, அலங்காநல்லூர், பாலமேடு, நத்தம் பகுதிகள்ல ஜல்லிக்கட்டுக் காளைகளை ஆசையா வளர்த்தவங்க எல்லாம் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தாங்க. இந்த நிலையில, கோயம்புத்தூர் நரசிங்கபுரத்துல இருக்கிற வெள்ளியங்கிரி கோசாலை நிர்வாகமும், கோயம்புத்தூர் 'கேட்டில் கேர்’ அமைப்பும் சேர்ந்து, மதுரை பகுதியில விற்பனைக்குத் தயாரா இருந்த

180 ஜல்லிக்கட்டுக் காளைகளை வாங்கிட்டாங்க. அந்தக் காளைகளை தகுந்த பாதுகாப்போட, 27 வாகனங்கள்ல ஏத்தி கோசாலைக்கு கொண்டு வந்தாங்க. வர்ற வழியில நிறைய கிராமங்கள்ல விவசாயிகள், காளைகளுக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்தாங்களாம்' என்றார், ஏரோட்டி.

அந்த நேரத்தில் ஓடிக்கொண்டிருந்த கிணற்று மோட்டாரில் இருந்து வினோத சத்தம் வரவும்... 'தண்ணியில்லாம வெறும் மோட்டார் ஓடுது' என்று சொல்லி ஏரோட்டி எழுந்தோட, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்