
மண்ணுக்கு மரியாதை! - 03
ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளிஅள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
‘அன்று நஞ்சை இருந்தது சாகுபடி ஆனது.
இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது’

எத்தனை எதார்த்தமான கவிதை. அனைத்துக்கும் அடிப்படையான மண்ணை ஆராதிக்காவிட்டாலும் பரவாயில்லை, படுகொலை அல்லவா செய்துகொண்டு இருக்கிறோம். பயிர் வளர்ச்சிக்கு நாம் கொடுப்பவற்றை மண்ணில்தான் கொடுக்க வேண்டும். மண்தான் பயிர் வளர்ச்சிக்கான ஊடகம். ஆனால், இந்த அடிப்படையை மறந்து, விஷத்தை நேரடியாகப் பயிருக்குக் கொடுக்கிறோம். பலர், அதிகமாக ரசாயனங்களைப் பயன்படுத்துவதால், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நோயாளியாகிக் கிடக்கிறது மண்.
‘இதே மாடுதான் போன மாசம் 50 மூட்டை வரைக்கும் அசால்டா இழுத்துட்டுப் போச்சி. இப்ப 10 மூட்டைக்கே மூச்சு வாங்குது’’ என புலம்புபவர்கள், உடல் வலு இருந்தால்தானே மாடு வண்டி இழுக்கும் என்பதை யோசிக்க மறந்து விடுகிறார்கள்.
இதே கதைதான் மண் விஷயத்திலும் நடக்கிறது. 1950-களில் இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு கிலோ ரசாயன உரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு சராசரியாக 133 கிலோ பயன்படுத்துகிறோம். இப்போது தெரிகிறதா, நாம் செய்த தவறு என்ன என்பது!
அறிவியல் அவசியம் மக்களே!
ஒரு மண்ணின் ரசாயன பண்பு, பௌதீக பண்பு, உயிரியல் பண்பு ஆகிய மூன்றும் சரியாக இருந்தால்தான் அந்த மண் நலமாக இருக்கும். பயிர்களுக்கு உணவு கொடுக்கும் முறையைச் சரியாகச் செய்யாத காரணத்தாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவையும் தாண்டி கொட்டும் ரசாயனங்களாலும் இந்தப் பண்புகளின் சமநிலை சிதைக்கப்படுகின்றது. ‘உரத்தைக் கொட்டியும் பயிர் வளர்ச்சி இல்லையே... அல்லது எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லையே’ என ஆதங்கப்படும் நாம், அதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை ஆராய நினைப்பதே இல்லை. இனியாவது, மண்ணின் தன்மையைத் தெரிந்துகொண்டு சாகுபடியில் இறங்குவோம்.
ரசாயனத் தன்மை!
மண்ணின் ரசாயனத் தன்மையைத்தான் மண்பரிசோதனை நிலையங்களில் ஆய்வு செய்கிறார்கள். ‘மனிதனுக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது’ என சோதனை செய்து பார்க்கிறார்களே அதுபோல மண்ணுக்கான ரத்த அழுத்த சோதனை, அதுதான் கார அமில ஆய்வு(PH). அழுத்தம் கூடினாலும், குறைந்தாலும், சில மாத்திரைகளால் அதை சரிசெய்வதுபோல, கார அமில நிலையின் அளவுக்கு ஏற்ப, மண் ஆய்வு மையத்தில் சில பரிந்துரைகளைச் சொல்கிறார்கள்.
கவனிக்க வேண்டிய கார அமிலம்!
கார அமில நிலையைச் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக ஓர் உதாரணம்.... நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் இருக்கும். சாப்பிடாவிட்டால் வயிற்றில் அமிலம் சுரக்கும். நெஞ்சு எரிச்சல் இருந்தால், காரம்... வயிற்றில் சுரந்தால், அமிலம். இதுதான் கார அமில நிலை. ஒரு மண்ணில் எந்த அளவு காரம், அமிலம் இருக்கிறது என்பது மிக முக்கியம். இந்தப் பண்பைத்தான் மண்ணின் கார அமில நிலை அளவு என்கிறார்கள். கார அமில நிலையின் அளவை வைத்துதான் மண்ணின் தன்மை அறியப்படுகிறது. கார அமில நிலை 7 என்பது மிக நல்ல மண் என்பதற்கான குறியீடு. மிகச்சரியாக 7 என்பதல்ல...
6 முதல் 8.5 வரை சாகுபடிக்கு ஏற்ற மண் என வைத்துக்கொள்ளலாம். 6-க்குக் கீழே போனால், அந்த மண்ணில் அமிலம் அதிகம். 8.5-க்கு மேலே போனால், காரம் அதிகம் என்று பொருள். ஆக, ஒரு மண்ணின் கார அமில நிலை தெரிந்தால்தான் சரிவர சாகுபடி செய்ய முடியும். 6-க்கு கீழே போனால், சுண்ணாம்பையும், 8.5-க்கு மேலே போனால் ஜிப்சத்தையும் போட்டு கார அமில நிலைக்கச் சமன்படுத்த வேண்டும்.
உப்பைச் சரிசெய்யும் அங்கக உரம்!
மண்ணின் ரசாயன குணங்களில் கார அமில தன்மைக்கு அடுத்து, நாம் கவனிக்க வேண்டியது உப்பு. மண்ணில் எந்த அளவு உப்பு இருக்கிறது என்பது முக்கியம். சாதம் வடிக்கும்போது, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு கையளவு உப்புப் போட்டால்தான் அது சாப்பிடக்கூடிய சாதமாக இருக்கும். மாறாக, அதிகமாக உப்பைப் போட்டால், அதை வாயில்கூட வைக்க முடியாது. அதுதான் மண்ணிலும் நடக்கிறது.
மண்ணில் கலந்துள்ள உப்பு எவ்வளவு மின் ஆற்றலைக் கடத்துகிறது என்பதன் அடிப்படையில் அதன் அளவைத் தீர்மானிக்கிறார்கள். உப்பின் மின்கடத்தும் அளவு ஒரு டெசிசைமன்/மீட்டரை விடக் குறைவாக இருந்தால் அந்த மண் நல்ல மண். ஒன்று முதல் 3 வரை இருந்தால், ‘ஏதோ பரவாயில்லை..’ என்ற ரகம். 3 க்கு மேல் இருந்தால், அந்த நிலத்தில் சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது. இதை சரிசெய்ய அங்கக உரம் எனப்படும் இயற்கை இடுபொருட்களால் மட்டுமே முடியும்.
அதிக உப்பு உள்ள நிலத்தில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது, அங்கக உரங்களில் இருந்து வெளியேறும் அங்கக அமிலங்கள், மண்ணில் உப்புகளின் அளவைக் குறைத்து மண்ணின் தன்மையை மேம்படுத்தும் என்கிறது மண் அறிவியல். ஆக, அதிக உப்பு உள்ள மண்ணில், யூரியா போன்ற ரசாயன உரங்களைக் கொட்டும்போது, உப்பின் அளவு கூடத்தான் செய்யுமே தவிர எந்த வகையிலும் குறையாது.
மூன்றாவது முக்கியமான ரசாயன பண்பு அங்ககக் கரிமம். ஒரு மண்ணில் அங்ககக் கரிமத்தின் அளவு குறைந்தபட்சம் 2.5 சதவிகிதம் இருந்தால்தான் அது நல்ல மண். ஆனால், இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அப்படிபட்ட மண்ணே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு சில இயற்கை வழி விவசாயப் பண்ணைகளில் இந்த அளவு இருக்கலாம். ஆனால், சராசரியாக தமிழக மண்ணின் அங்ககச் சத்துக்களின் அளவு 0.5 என்பதற்கும் கீழே இருக்கிறது.
உண்மையான பொறியாளர்
‘உழவனின் நண்பன்’ என அழைக்கும் மண்புழுவை ஆங்கிலத்தில் ‘ரியல் சாயில் இன்ஜினீயர்’ (உண்மையான மண் பொறியாளர்) என அழைக்கிறார்கள்.
இது மண்ணில் கீழே, மேலே ஏறி இறங்கும்போது மண் கட்டுமானம் மாற்றுருவாக்கம் செய்யப்படுகிறது. இடையில் உள்ள துளைகள் அதிகப்படுத்தப்பட்டு, காற்றும், நீரும் மண்ணுக்குள் சுலபமாக நுழைய வழி ஏற்படுகிறது. இதனால் கடினமான மண்ணும் பொலபொலப்பாக மாறுகிறது. அதனால்தான் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்கள் இயற்கை வேளாண் அறிஞர்கள்.
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்
படம்: வீ. சிவக்குமார்