மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!

‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!

தேநீர்க் கடை பெஞ்சில் அமர்ந்திருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி... அந்த வழியாக மண்வெட்டியும் கையுமாக நடந்து வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தைப் பார்த்தவுடன், அவரோடு தோட்டத்துக்குக் கிளம்பினார். இடையில், இணைந்துகொண்ட ‘காய்கறி’ கண்ணம்மா...

“என்னங்கய்யா... திடீர்னு வேளாண்மைத்துறை அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி பதவியைப் பறிச்சிட்டாங்க” என்று கேட்டு அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

“திருநெல்வேலி மாவட்டத்துல முத்துக்குமாரசாமிங்கிறவர் வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரா இருந்தார். அந்தத் துறையில 7 டிரைவர் பணியிடத்தை நிரப்புறதுல அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடி. அதாவது, வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சிருந்தவங்களைப் பதிவு மூப்பு அடிப்படையில நேர்காணல் நடத்தி, டிரைவர்களைப் புதுசா வேலைக்கு எடுத்திருக்கார். ஆனா, ஆளுங்கட்சித் தரப்புல இருந்து ஏகப்பட்ட பிரஷர் கொடுத்தும் அவர் கண்டுக்கல. இதனால ஏற்பட்ட தகராறுலதான் ரயில்ல பாய்ஞ்சு தற்கொலை செஞ்சுக்கிட்டாராம் முத்துக்குமாரசாமி.

‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!

இதைப் பத்தி ஜூனியர் விகடன்ல அட்டைப் படக் கட்டுரையே எழுதியிருந்தாங்க. இந்த நிலையிலதான், அமைச்சர் பதவியையும் கட்சிப்் பதவியையும் பறிச்சிருக்காங்க. ‘அதிகாரிகள் டிரான்ஸ்பர் மாதிரியான விஷயங்கள்ல ஏகப்பட்ட பணம் விளையாடியிருக்கு. வேளாண் துறைக்கு ஒதுக்குன பணத்துலயும் நிறைய முறைகேடு நடந்திருக்கு’னு ஒவ்வொரு விஷயமா வெளிவர ஆரம்பிச்சிருக்கு’ என்று விளக்கம் சொன்னார் வாத்தியார்.

‘‘என்ன நடந்தாலும், முத்துக்குமாரசாமியோட உயிருக்கு என்ன பதில்?’’ என்று சூடாகக் கேட்டார் ஏரோட்டி!

‘‘அவரு போய்ச் சேர்ந்துட்டார்... இப்ப அவரோட மனைவிக்கும் ஏக நெருக்கடி. ‘குடும்பப் பிரச்னை காரணமாத்தான் தற்கொலை செய்துகிட்டார், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’னு பேட்டி கொடுக்கச் சொல்லி அந்தம்மாவை சிலர் வற்புறுத்திக்கிட்டிருக்காங்களாம். இத்தனைக்கும், தமிழகத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், இந்த முத்துக்குமாரசாமியோட மனைவிக்கு ஒண்ணுவிட்ட அண்ணனாம். இப்படி பெரிய பதவியில இருக்கிற ஒரு குடும்பத்துக்கே இந்த கதி” என்று வாத்தியார் சொல்லி முடிப்பதற்குள், தோட்டத்துக்கே வந்துவிட்டனர்.

மரத்தடியில் மூவரும் அமர, கூடையில் இருந்து ஆளுக்கு சில கொய்யாப்பழங்களை எடுத்துக் கொடுத்தார், காய்கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டே பேசிய ஏரோட்டி, “போன வெள்ளாமைக்கு பேங்குல விவசாயக் கடன் வாங்கியிருந்தேன். புதுசா ஆட்சிக்கு வந்திருக்கிற மத்திய அரசாங்கம் கடனைத் தள்ளுபடி செஞ்சுடும்னு எதிர்பார்த்திருந்தேன். ஆனா, தள்ளுபடி செய்யற திட்டமே கிடையாதுனு சொல்லிட்டாங்க’’ என்று வருத்தப்பட்டார்.

“தேர்தல் நேரத்துலதான்யா கடன் தள்ளுபடியெல்லாம். இப்ப அறிவிக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சுருக்கு?” என்று கேட்ட வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

“மகாராஷ்டிரா மாநிலத்தில மாட்டுக் கறியை விற்பனை செய்றதுக்குத் தடை விதிச்சு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இனி, அந்த மாநிலத்துல மாட்டுக்கறியை யாராவது வித்தா 5 வருஷம் ஜெயில் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பாங்களாம். ஏற்கெனவே அந்த மாநிலத்துல பசுவைக் கொல்றதுக்குத் தடை இருக்கு. இப்போ, புதுச் சட்டப்படி, காளைமாடு, காளைகள்னு எதையுமே கறிக்காக விற்பனை செய்ய முடியாது’’ என்றார்.

“அடப்பாவிகளா... ஏழைபாழைங்க மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கும் தடை போட்டா, அவங்க என்ன பண்ணுவாங்க. ஆட்டுக்கறி விக்கிற விலையில அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியுமா?” என்று வருத்தப்பட்டார், காய்கறி.

“ஒண்ணும் வருத்தப்படாத... தமிழ்நாட்டுக்கு இன்னும் அந்தச் சட்டம் வரல. அப்படியே வந்தாலும், இங்க அதைப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. உனக்கு கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டுதான் இருக்கும். இங்க சட்டத்தை மதிக்கிற ஆளுங்களும் கிடையாது. மதிக்காத ஆளுங்களைப் பிடிக்கிற அதிகாரிகளும் கிடையாது” என்று சொல்லி நக்கலாகச் சிரித்த ஏரோட்டி,

“மூணு பேஸ் கரன்ட் வந்துருச்சானு பாத்துட்டு மோட்டாரைப் போடப்போறேன்” என்று எழுந்து ஓட, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

மாடித்தோட்டத்துக்கு மானியம்!

‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!

மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைக்க அரசு மானிய உதவி வழங்கி வருகிறது. ஒரு யூனிட் அமைக்க, 2 ஆயிரத்து 750 ரூபாய் செலவாகும். இதில் 50 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் தொழில்நுட்பக் கையேடு ஆகியவற்றை இத்திட்டம் மூலமாகப் பெறலாம்.

ஒருவர் அதிகபட்சமாக ஐந்து யூனிட்களுக்கு மானியம் பெறலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

 ஓவியம்: ஹரன்