பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
கற்கண்டு இளநீர்... கலக்குது ஜீவாமிர்தம்!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’.
‘ஒருநாள் விவசாயி’ என்ற பெயரில், அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

பசுமை விகடனின் இந்த முயற்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களின் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கில் பதிவு செய்திருப்பவர்களிலிருந்து... பிரேமா, பானுமதி, அரவிந்த்குருசாமி, ஆனந்தராஜ் மற்றும் மணிவேல் ஆகிய ஐந்து பேரையும் இம்முறை தெரிவு செய்தோம்.
இவர்களுக்காக, நாம் தேர்ந்தெடுத்தது... கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் கிராமத்தில் உள்ள ஜெய கவின் இயற்கை வேளாண் பண்ணை. 20 ஏக்கரில் பரந்து கிடக்கும் இந்தப் பண்ணையின் உரிமையாளர் பி. மனோகரன், ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர். நம்மாழ்வாரின் நேரடிக் களப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயிற்சிபெற்றவர். நம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்.
சுற்றிலும் கிளுவை முள் மர உயிர்வேலி அமைக்கப்பட்ட அழகியபண்ணை. சம்பங்கி, நிலக்கடலை, முருங்கை, மா, கொய்யா, தேக்கு, மலைவேம்பு ஆகிய மரப்பயிர்களும் பசுமை காட்டி வரவேற்றன. ஒருநாள் விவசாயிகளை ஆவாரை தேநீர் கொடுத்து வரவேற்றார், மனோகரன்.
ஒருநாள் விவசாயிகள் பாடம் கற்க வரும் தகவலைத் தெரிந்து கொண்டு... நாங்களும் எங்களுக்குத் தெரிந்த சில தொழில்நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம் என்றபடி உரிமையோடு வந்து சேர்ந்துகொண்டவர்கள், முன்னோடி இயற்கை விவசாயிகளான கரூர் தங்கராஜ், சின்னத்தாராபுரம் மணி ஆகியோர்.
‘சொட்டுநீர்ப் பாசனங்கிறது என்ன?’ முதல் சந்தேகத்தைக் கேட்டவர் பிரேமா.
“விவசாயம் செய்றவங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்” என்றபடி சொட்டுநீர்க் கருவிகள் பொறுத்தப்பட்ட இடத்துக்கு அனைவரையும் அழைத்து சென்ற மனோகரன்,“சரியா கிடைக்காத பருவமழை, குறைஞ்சு போன நிலத்தடிநீர் காரணமா, விவசாயம் செய்றதே பெரும்பாடா இருக்கு. அதனால இருக்கற தண்ணியை வெச்சு தோட்டம் முழுக்க பாசனம் செய்ற நீர்மேலாண்மை முறைதான் சொட்டுநீர்ப் பாசனம். இது மூலமா, குறைஞ்ச நீரை வெச்சு நிறைய பயிர்களை சாகுபடி செய்ய முடியும். நேரடிப் பாசனத்துல ஒரு ஏக்கருக்கு பாய்ற தண்ணியை, சொட்டுநீர் மூலம் மூணு ஏக்கருக்குக் கொடுக்கலாம். வாய்க்கால் இல்லாம, நேரடியா செடிகளோட வேர் பகுதிக்கே பாசனம் செய்றதால தண்ணீர் விரயமாகாது. இப்ப, தெளிப்பு நீர்ப் பாசனம், பட்டாம் பூச்சிப் பாசனம், நுண்ணீர்ப் பாசனம், ரெயின்கன்... அப்படீனு தண்ணியை சிக்கனமா பயன்படுத்த பல தொழில்நுட்பங்கள் வந்தாச்சு” என்றார்.
“ஓ... இவ்வளவு சமாச்சாரம் இருக்கா” என்றபடியே களை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் பக்கம் நகர்ந்தார்கள், அனைவரும். பிரேமாவும், பானுமதியும் ஆளுக்கொரு களைக்கொத்தை எடுத்துக்கொண்டு குனிய, “அம்மா தாயுங்களா... கொய்யாவும் அதுல ஊடுபயிரா முருங்கையும் போட்டிருக்கேன். பயிருக்கு பங்கமில்லாமல் அருகு, கோரைப் புல்லை மட்டும் பார்த்து வெட்டுங்கம்மா” என்று மனோகரன் சொல்ல, மண்ணை நன்கு கொத்தியவர்கள் நிமிர்ந்து, “வெயில்ல மண்டை காயுது” என்றபடி நிழல் தேடினார்கள்.

“அதெல்லாம் முடியாது ஒரு பாத்தியாவது வெட்டி காட்டிட்டுத்தான் நகரணும்” என்று மற்றவர்கள் குரல் எழுப்ப... “வெயில்தானே உங்களுக்குப் பிரச்னை... அதுக்கு தீர்வு நான் சொல்றேன்” என்றபடி வந்தார், விவசாயி மணி.
அருகில் நின்ற களை எடுக்கும் பெண்களைக் காட்டி, “இவங்க மாதிரி முந்தானையில தலைக்கட்டு கட்டிக்கிட்டா வெயில் சூடு மண்டையில ஏறாது” என்று சொல்ல... களை எடுக்கும் பெண்களில் இருவர் வந்து பிரேமாவுக்கும், பானுமதிக்கும் முந்தானையில் தலைக்கட்டு கட்டி விட்டனர். “இனி பத்து பாத்தியிலகூட களை எடுக்க நாங்க ரெடி” என்று இருவரும் கோரஸாக குரல் கொடுக்க, இடம் கலகலப்பானது.
சிறிய தொட்டி ஒன்றில் பாசனநீர் விழுந்து வழிந்து வாய்க்கால் வழி ஓடிகொண்டிருந்தது. “சம்பங்கித் தோட்டத்துக்கு மாதம் இரண்டு தடவை வாய்க்கால் வழியிலதான் ஜீவாமிர்தம் கொடுத்துக்கிட்டு வர்றேன்” என்ற மனோகரிடம்,
“ஜீவாமிர்தம்னா என்ன?” என்று கேட்டார், ஆனந்தராஜ். அதைத் தொடர்ந்து ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை பயன்பாடு ஆகியவை குறித்து விரிவாக வகுப்பெடுத்தனர், மனோகர், தங்கராஜ் மற்றும் மணி ஆகியோர்.
“அடுத்து எங்கே போகிறோம்?” என்று மணிவேல் கேட்கவும், “மாந்தோப்புக்கு போறோம்” என்றபடி அழைத்துச் சென்றார், மனோகர். “எல்லோருக்கும் சுவையான இளநீர் தயாரா இருக்கு” என்று மனோகரன் அழைக்க... “மாங்காய் தோப்பில் தேங்காய் தண்ணீ” என்று திரைப்பட பாணியில், ‘குத்து வசனம்’ அடித்தார் பானுமதி. சீவிக்கொடுத்த இளநீரை அனைவரும் உறிஞ்சத் தொடங்கினார்கள். “இளநீர் கற்கண்டா இனிக்குது” என பிரேமா ஆச்சர்யம் காட்ட, “இருக்காதா பின்னே... இது ஜீவாமிர்தத்தோட மகிமை” என்றார், தங்கராஜ். “கண்ணா... இன்னொரு இளநீ குடிக்க ஆசையா?” என்று அரவிந்தைப் பார்த்து ஆனந்தராஜ் டயலாக் அடிக்க சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடியே இளநீரைப் பருகி முடித்தனர்.
மாந்தோப்பு கொடுத்த குளுகுளு நிழல், குதூகலம் கொடுத்தது போலும். ஓடிப்போய் மாமரக்கிளையில் பிரேமாவும் பானுமதியும் ஏறி உட்கார்ந்துகொள்ள, மற்ற மூவரும் பின்னால் நின்றனர். “மா மரங்கள் வருஷம் எத்தனை போகம் காய்க்கும்?’’ என்றார் மணிவேல்.
உடனே, மா ரகங்கள், அதன் சாகுபடி முறை, கவாத்து செய்ய வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து வகுப்பு எடுத்தார் தங்கராஜ். “மாமரங்களுக்கு வருஷம் ஒரு தடவை கவாத்து செய்யவேண்டும். அப்போதுதான் மரம் நேராகச் சென்று படர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும்.
மாமரங்கள் மட்டுமல்ல... கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற எல்லா பயிர்களுக்கும் கவாத்து அவசியம். என்னோட தோட்டத்துல இருக்கிற கத்திரிச் செடிகளுக்கு கூட நான் கவாத்து செய்றேன்” என்றவரைப் பார்த்து எல்லோரும் வியக்க,
“ஆமாங்க, மரப்பயிர்களுக்குத்தான் கவாத்து செய்யணும்னு இல்ல... செடிகளுக்கும் பண்ணலாம். சில செடிகளுக்கு மட்டும் கவாத்து செய்து பார்த்தேன். மத்த செடிகளைவிட அதுல கூடுதல் மகசூல் கிடைச்சது. இனி எல்லா செடிகளுக்கும் கவாத்து செய்யப் போறேன்’’ என்றவரைப் பார்த்து, “இதெல்லாம் யார்கிட்ட கத்துக்கிட்டீங்க?” என்றார், பானுமதி
“எல்லாம் ஐயா நம்மாழ்வார் சொல்லி தந்த பாடம்தான். ‘விவசாயிங்க எல்லாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை எதிர்பார்க்கத் தேவையில்லை. நாமதான் விஞ்ஞானியா மாறி புது யுக்திகளைச் செய்து பார்க்கணும்’னு அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சுத்தான் புது புது யுக்திகளை விவசாயத்துல கையாண்டு வர்றேன். அதுல ஒண்ணுதான் இந்த கவாத்து” என்றார் தங்கராஜ்.
“மாந்தோப்புக்குள்ள பாருங்க இலைகள் சருகு விழுந்து கிடக்கு தீ வெச்சு இதையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டியதுதானே?” பிரேமா ஆலோசனை சொல்ல...
“இயற்கை விவசாயத்தின் முதல் எதிரி, தீ வைப்பதுதான். நிலத்தை சுத்தம் பண்றோம்ங்கிற பேர்ல கரும்புத்தோகை, தென்னை ஓலை இவைகளுக்கெல்லாம் சில பேர் தீ வைக்கிறாங்க அது தப்பு. அப்படி செய்யறதால நிலத்துல இருக்கிற நுண்ணுயிரிகள் எல்லாம் அழிஞ்சு போயிடும்.
நான் மாந்தோப்புல விழுகுற சருகுகளை குவிச்சு, மரங்களைச் சுத்தி மூடாக்கா போட்டுடுவேன். இதனால, பாசனநீர் சீக்கிரம் ஆவியாகாது. மூடாக்கா போட்ட சருகுகளும் காலப்போக்குல மட்கி மண்ணாகி செடிக்கு உரமாகிடும். இவ்வுளவு நன்மை செய்ற இலை தழைகளுக்கு தீ வைக்கலாமா?” என்று மனோகரன் கேட்க,
“வேண்டவே வேண்டாம்” என்றனர் அனைவரும் ஒரே குரலில்.
நம்மாழ்வாரின் சமையல்காரர் தந்த கிராமிய விருந்து, சலிப்பில்லாத வருமானம் கொடுக்கும் சம்பங்கி, நிறைவான நிலக்கடலை, நல்லதோர் நாட்டு மாடு, ஒரு நாள் விவசாயிகள் பற்றிய குறிப்புகள், அவர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடுத்த இதழில்...
-பயணம் தொடரும்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே
044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: க.தனசேகரன்