நாட்டு நடப்பு
Published:Updated:

450 வயது...‘கன்னி’ தேக்கு..!

450 வயது...‘கன்னி’ தேக்கு..!

ரு நாள் தோட்டத்துப் பக்கம் குழந்தைங்க விளையாடிட்டு இருந்தப்ப... அதிசயமான தானியம் ஒண்ணு அவங்க கைக்குக் கிடைச்சுது. ஏறத்தாழ கோழி முட்டை அளவில இருந்த அந்தத் தானியம், கடைசியா நாட்டோட மன்னர் கைக்கு போய் சேர்ந்துச்சு. ‘இது என்ன தானியம்?’னு அமைச்சர்கள்கிட்ட கேட்டார் மன்னர். யாருக்கும் தெரியல. ‘நம்ம நாட்டுல இருக்கிற வயதான விவசாயி யார்கிட்டயாவது விசாரிங்க’னு கட்டளையிட்டாரு மன்னர்.

வயதான ஒரு விவசாயியைத் தேடிப்பிடிச்சு, அரண்மனைக்கு அழைச்சுக்கிட்டு வந்தாங்க. தள்ளாடியபடியே நடந்து வந்த அந்த விவசாயிக்கு கண்பார்வையும் மங்கலா இருந்துச்சு. அந்த தானியத்தைத் தொட்டுப் பார்த்துட்டு, ‘இதை நான் சாகுபடி செய்யல, எங்க அப்பாவைக் கேட்டா ஒருவேளை பதில் தெரியலாம்’னு சொன்னாரு.

450 வயது...‘கன்னி’ தேக்கு..!

கொஞ்ச நேரத்துல அவங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்தாங்க. அவருக்கு உடல் தள்ளாடல. ஆனா, கால் தாங்கித் தாங்கி நடந்து வந்தாரு. அவரும் அந்த தானியத்தை உத்துப் பார்த்துட்டு, ‘இதைப் பத்தி எங்க அப்பாகிட்ட விசாரிச்சா தெரியும்’னு சொன்னாரு.

அடுத்து, அவங்க அப்பாவையும் வரவழைச்சாங்க. நல்ல திடகாத்திரமா, எந்தக் குறையுமில்லாம, தெளிவான பார்வையோட உறுதியான கைகால்களோட மிடுக்கா நடந்து வந்தவரு, அந்தத் தானியத்தைப் பார்த்துட்டு, ‘இது எங்கள் காலத்தில் விளைந்த கோதுமை’னு சொன்னாரு. அரசருக்கு ஆச்சர்யம் தாங்கல.

‘ஐயா உங்க மகன், பேரன் எல்லாம் உடல் தளர்ந்து, பார்வையிழந்து, நடக்க முடியாதவங்களா இருக்குறப்ப... நீங்க மட்டும் எப்படி உறுதியான உடலோடயும், சந்தோஷமான முகத்தோடயும் இருக்கிறீங்க?’னு கேட்டாரு.

அதுக்கு அந்தப் பெரியவர், ‘எங்க காலத்தில சக மனிதர்களை நேசிச்சோம். போட்டி, பொறாமை இல்ல. இயற்கையோடு இணைஞ்சி வாழ்ந்தோம். இயற்கையும் எங்களுக்கு உதவி செஞ்சுது. கடுமையா உழைச்சோம். வாழ்க்கையைக் கொண்டாடி ரசிச்சு வாழ்ந்தோம். இன்னிக்கு உழைக்குறதல, யாருக்கும் ஆர்வமில்லை. இயற்கையை அழிச்சு, வாழத்தெரியாம வாழறாங்க. அதனாலதான், உலகத்துக்கும், உடம்புக்கும் நோய் வந்து தள்ளாட்டம் போடறாங்க’னு பதில் சொன்னாரு.

இது ஒரு ரஷ்ய கதை. இதை எழுதினவர்... புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். பல வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த அவர் எழுதின இந்தக் கதை, இயற்கையைத் தாறுமாறா அழிச்சுக்கிட்டிருக்கிற இந்தக் காலத்துக்கு அட்சர சுத்தமா பொருந்துது. எதிர்காலத்துல இப்படிப்பட்ட அநியாயமெல்லாம் பெருத்துப்போயிடும்னு உணர்ந்துதான் அப்பவே இப்படி எழுதியிருக்கார் போல டால்ஸ்டாய்!

450 வயது...‘கன்னி’ தேக்கு..!

இந்தத் துறையில சாதனை செய்தாரு... அந்தத் துறையில சாதனை செய்தாருனு பலருக்கும் விருது கொடுத்து பாராட்டுற சங்கதிகள கேட்டிருப்போம். இவங்களுக்கு நடுவுல, ஒரு மரத்துக்கு சாதனையாளர் விருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்க. கேரள-தமிழக எல்லையில, பரம்பிக்குளத்தை ஒட்டி புலிகள் காப்பகம் இருக்கு. கேரளாவுக்கு உட்பட்ட இந்தப் பகுதிக்கு வர்ற சுற்றுலா பயணிங்க அத்தனை பேருமே தவறாம பார்க்க விரும்புற மரம் ஒண்ணும் இந்தக் காட்டுக்குள்ள இருக்கு. அதுக்கு பேரு ‘கன்னி’ தேக்கு மரம்.  இந்த மரத்தோட வயசு சுமார் 450 வருஷம் இருக்கலாம்னு ஆய்வாளர்கள் கணிச்சிருக்காங்க.

சுமார் 7 மீட்டர் சுற்றளவும், 50 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மரம், உலகத்துல இருக்கிற மிகப்பழமையான மரத்துல ஒண்ணுனு சொல்றாங்க. சுற்றுலாப் பயணிங்க குஷியோட கைகளைக் கோத்து மரத்தோட சுற்றளவை அளக்கிறதும், மரத்துக்குக் கீழ நின்னு புகைப்படம் எடுத்துக்கிறதும்... கலக்கலான காட்சி. சுமார் 400 வருஷத்துக்கு முன்ன இந்தப் பகுதியில வசிச்சு வந்த மலைவாழ் மக்கள், இந்த மரத்தை தெய்வம் போல கும்பிட்டாங்களாம். அவங்கதான் ‘கன்னிசாமினு பேரும் வெச்சாங்களாம். இந்தச் சிறப்புத் தன்மைக்காக இருபது வருஷத்துக்கு முன்னாடியே இந்த மரத்துக்கு ‘மகாவிருக்ஷா புரஸ்கார்’ங்கிற விருதைக் கொடுத்து கௌரவுப்படுத்தியிருக்கு மத்திய அரசு.

அடுத்து சொல்லப்போறதும் மரத்தை பத்தின தகவல்தான்.

தென்மாவட்டங்கள்ல எட்டி மரத்தை ‘காஞ்சிரம்’னு சொல்வாங்க. இது, பெரும்பாலும் மலைபிரதேசத்துலயும், காட்டுப்பகுதியிலயும் இயற்கையா வளர்ந்து நிற்கும். வேர் தொடங்கி, நுனி வரையிலும் கசப்போ, கசப்பு. எட்டி மர இலைகளை வெச்சு நாட்டு மருந்து தயாரிக்கறதுண்டு. அட மருந்துக்கு உதவுற இலைதானேனு நினைச்சு, இந்த இலைகள சாப்பிட்டா... ஆளையே கொல்லும் விஷமா மாறிடும். கடுமையான நோய் பாதிப்பு உள்ளவங்கள, எட்டி மர கட்டில்ல படுக்க போட்டா, நோய் குணமாகும்னு நம்பிக்கை இருக்கு.

450 வயது...‘கன்னி’ தேக்கு..!

இந்த மரத்தோட முக்கியமான பயன், எந்தக் காலத்துலயும், கரையான் அரிக்காது. இதனால மண் சுவர் பூசும் போது, அடிக்கட்டையா, இதை பயன்படுத்துறதுண்டு. எவ்வளவு நாள் மண்ணுக்குள்ள இருந்தாலும், இரும்பு மாதிரி உலுத்துப் போகாம கிடக்கும். அதனாலதான், அந்தக் காலத்துல வீடு கட்டும்போது, எட்டி மரத்தைக் கட்டாயம் பயன்படுத்துற பழக்கம் இருந்துச்சு. என்னதான், வலுவான இரும்பா இருந்தாலும் ரொம்ப நாள் மண்ணுல போட்டா துருப்பிடிச்சு வீணாபோயிடும். ஆனா, இயற்கையோட பரிசான எட்டி மரத்துக்கு எந்தவிதமான பாதிப்பு வராதுங்கிறது கவனிக்க வேண்டிய விஷயம்.

 மண்புழு மன்னாரு

 படங்கள்: ஹரன்