நாட்டு நடப்பு
Published:Updated:

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

நெல் வயல்களில் அறுவடை செய்த பிறகு கிடைக்கும் வைக்கோலைப் படப்பாக அடைத்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தி வரும் பழக்கம் விவசாயிகள் மத்தியில் உண்டு. ஆனால், வைக்கோல் படப்பு குவியலாக இருப்பதால் அதில், பாம்பு, பல்லி, கரையான் தொல்லைகள் இருக்கும். விவசாயிகளின் இந்த நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வாக வைக்கோலைக் கட்டாகக் கட்டும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார்.

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

தென்காசியில் இருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெடுவயல் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் உதயகுமாரைச் சந்தித்தோம். காய்ந்த நிலக்கடலைச் செடிகளை இயந்திரம் மூலம் கட்டாகக் கட்டி கொண்டிருந்தவர், நம்மிடம் உற்சாகமாகப் பேசத்தொடங்கினார்.

“நான் பி.இ கம்யூட்டர் இன்ஜினீயரிங், எம்.டெக் அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு, இப்ப பி.ஹெச்.டி பண்ணிக்கிட்டு இருக்கேன். சாப்ட்வேர் டிசைனராக சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். கைநிறைய சம்பளம்னாலும் வேலைபளு அதிகம். ஏ.சி ரூமுக்குள்ள கம்ப்யூட்டர் முன்னாடியே முடங்கிக் கிடக்குற இக்கட்டான நிலைமை. சாயங்காலம் வீட்டுக்கு வந்தாலும், ‘சர்வர் பிரச்னை, சிஸ்டம் சரியா வொர்க் ஆகலை’னு நடுராத்திரிலயில கூட ஆபீசுக்கு கூப்புடுவாங்க. வெளி உலகம் தெரியாத, சராசரி மனிதர்கள் கூட பழக முடியாத நிலைமை, தனிமைனு நிறைய பிரச்னைகளில் இருந்து விடுபட, வேலையை உதறிட்டு தென்காசிக்கே வந்துட்டேன்.

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

மாடுகளின் தீவனத்துக்காக வைக்கோல் வாங்கி, படப்பு அடைச்சு வைப்போம். இதற்கு கூலிக்குதான் ஆட்களைக் கூப்பிடணும். கூலி கொடுத்தாலும் ஆட்கள் கிடைக்கல. முன்னயெல்லாம் படப்பு அடைச்சா... அடைமழை பெய்ஞ்சாக்கூட ஒரு சொட்டு இறங்காது. இப்போ அந்தளவுக்கு வேலை செய்ய ஆட்களும் கிடையாது. அதனாலதான், மனிதசக்தியால இயக்குற மாதிரியான வைக்கோல் கட்டும் இயந்திரத்தை உருவாக்கினேன்’’ என்று பெருமையோடு சொன்னார் உதயகுமார்.

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

இவர் உருவாக்கியிருக்கும் வைக்கோல் கட்டும் இயந்திரம் செவ்வக வடிவிலானது. இரண்டு அங்குலம் இடைவெளி விடப்பட்ட ஒரு கதவு, அழுத்தும் கைப்பிடி, சணல் அல்லது கயிறு மாட்டும் கம்பி, இரண்டு சக்கரங்கள் உடைய இதன் எடை 95 கிலோ. முதலில் இரண்டு சணலை எடுத்து, அதன் ஒரு பக்க முனைகளை சணல்கட்டும் கம்பியில் இரண்டு பக்கங்களிலும் கட்டிவிட்டு, மறுமுனைகளை கதவு இடைவெளி மூலம் வெளியில் தெரியுமாறு விட்டுவிட்டு, கதவை மூடி விட வேண்டும். செவ்வக வடிவ பெட்டி அறைக்குள் முகப்பு நிரம்பும் வரை வைக்கோலை நிரப்ப வேண்டும். பிறகு, கையால் அழுத்தி விட்டு அழுத்தும் கைபிடியை அழுத்தி, கைப்பிடியைக் கொக்கியில் மாட்டி விட வேண்டும். மீண்டும் ஒருமுறை கையால் சமமாக அமுக்கிவிட்டு கதவைத் திறந்துப் பார்த்தால் செவ்வக வடிவ கட்டுக் கட்டாக இருக்கும். ஏற்கெனவே கதவு இடைவெளியில் தொங்கவிடப்பட்ட சணலையும் மேலே கட்டப்பட்டுள்ள சணலையும் இணைத்து இறுக்கமாகக் கட்டிவிட்டு, வைக்கோல் கட்டினை வெளியே எடுத்து விடலாம்.

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

இரண்டு கட்டு கட்டுவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஒரு ஏக்கருக்கு 96 கட்டுகள் வரை கட்டலாம். ஒரு கட்டின் எடை சராசரியாக 16 கிலோ இருக்கும். இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். வைக்கோல் கட்டுகளைக் கையாள்வதும் எளிது. வைக்கோல் போர் அமைக்க அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்டாக எடுத்து மாடுகளின் தீவனத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். கடலைச்செடி, உளுந்துச்செடி, தேங்காய் நார் ஆகியவற்றையும் கட்டாகக் கட்டலாம். இவ்வாறு கட்டாகக் கட்டுவதால், வைக்கோல் கழிவு ஆகாது. வைக்கோல் படப்பு அமைக்க ஏக்கருக்கு 6 ஆட்கள் என்றால், இதில் அள்ளிப்போட ஒரு ஆள் மற்றும் அழுத்திக் கட்டு கட்ட ஒரு ஆள் என இரண்டு பேர் போதும். இவர்கள் கட்டுகட்டுவதோடு அடுக்கியும் வைத்து விடலாம்.

வைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு!

நிறைவாக, “95 கிலோ எடை கொண்ட இந்த இயந்திரத்தை, நண்பர் ‘வெல்டர்’ செல்வம் ஒத்துழைப்போட வடிவமைச்சேன். 17 ஆயிரம் ரூபாய் வரை செலவாச்சு. இதை இன்னமும் குறைக்கலாம். ஒரு முறை இந்த இயந்திரத்தை செய்தா, நமது பயன்பாடு போக மற்ற வயல்கள்ல கட்டுகட்டுவதற்கும் வாடகைக்கு விடலாம். அடுத்ததாக தென்னை மட்டை, பருத்திச்செடி, ஆமணக்குச் செடி ஆகியவற்றின் மூலம் உயிர் எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்தைக் குறைஞ்ச செலவில் வடிவமைக்கிற முயற்சியில் இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார் உதயகுமார்.

தொடர்புக்கு,
உதயகுமார்,
செல்போன்: 90438-48598

 இ.கார்த்திகேயன்

 படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்