
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!
கார அமிலம் சொல்லும் சங்கதி!
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துக்கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
மண்வாசம் கொடுக்கும் ‘ஆக்டினோமைசிட்ஸ்’!
மண்ணின் மூன்று முக்கியமான பண்புகளில் ரசாயனப் பண்பு பற்றி பார்த்து வருகிறோம். கார அமில நிலை என்பதுதான் ஒரு மண்ணின் குணங்களைத் தீர்மானிக்கும் காரணி என்பதைப் பார்த்தோம். பி.ஹெச். எனப்படும் கார அமில நிலை 6.5 புள்ளி முதல் 8 புள்ளி வரை இருக்கும் மண்தான், ‘போட்டது பொன்னா விளையும்’ எனச் சொல்வார்களே அப்படிப்பட்ட மண். இந்த அளவீட்டில் கார அமில நிலை இருக்கும் மண்ணில் பாக்டீரியாக்களின் பணி அற்புதமாக இருக்கும்.

4.5 புள்ளி முதல் 6.5 புள்ளி வரை உள்ள மண்ணில் பூஞ்சணங்களின் பணி சிறப்பாக இருக்கும். கார அமில நிலை 8 புள்ளி மற்றும் அதற்கு மேல் இருந்தால் ‘ஆக்டினோமைசிட்ஸ்’ அதிகமாகும். மழை பெய்யும்போது, வருமே மண்வாசனை. அந்த வாசனைக்குக் காரணம் இந்த ‘ஆக்டினோமைசிட்ஸ்’தான். எனவேதான், 6.5 முதல் 8 புள்ளிகள் வரை உள்ள மண் நலமான மண்ணாக இருக்கிறது. சராசரியாக 7 புள்ளி என்பது நலமான மண்ணின் பொதுவான குறியீடு.
இப்போது கார அமில நிலை 6.5 அளவுக்குக் கீழே போகும்போது, என்ன விளைவுகள் ஏற்படும்? என்ற சந்தேகம் எழும். மண்ணில் அமிலத்தன்மை அதிகமாகும். அலுமினியம் அதிகரிக்கும். அளவுக்கு அதிகமானால் அமிர்தம் மட்டுமல்ல அலுமினியமும் பயிர்களுக்கு நஞ்சுதான். நச்சு உலோகங்கள் அதிகமாகி பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். நுண்ணுயிர்களின் வழக்கமான செயல்பாடுகள் மாறுதல் அடைந்து, மண்ணில் உள்ள சத்துக்கள் பயிர்களுக்கு கடத்தப்படுவது தடைபடும். அங்ககக் கரிமத்தின் செயல்பாடு குறையும்.
அதிக மழை பெறும் பகுதிகளில் மண்ணின் கார அமில நிலை பெரும்பாலும் 6 புள்ளிக்குக் கீழ்தான் இருக்கும். மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து மட்கி, அங்ககக் கரிமமாக மாறும் பொருட்களை, மழை அடித்துக்கொண்டு போய்விடுவதால், அமில நிலைக்குப் போய்விடுகிறது.
சுண்ணாம்பு கலந்த களி உள்ள மண்ணில் கார அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதாவது 8 புள்ளிக்கும் மேலே போய் விடும். இந்த மண்ணும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது இல்லை. இதை சரிசெய்ய நிலத்தில் அங்ககக் கரிமத்தை அதிகரிக்க வேண்டும்.
பாறையின் குழந்தை, மண்!
அடுத்ததாக, ‘எல்லாம் சரி. மண்ணில் இந்த கார அமில நிலையைத் தீர்மானிப்பது எது?’ என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், மண் எப்படி உருவானது என்ற வரலாறைத் தெரிந்துகொண்டால்தான் முழுமையான புரிதல் கிடைக்கும். சூரியனில் இருந்து தெறித்து விழுந்த எரிமலைக் குழம்புதான் பூமி என்பதை அறிவோம். அந்த எரிமலை, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறான இயற்கைக் காரணிகளால் பாறையாக இறுகியது. அடுத்தடுத்த காலநிலை மாற்றத்தில் அடுக்குப்பாறையாக உருமாறியது. அதன் பிறகு, மழை, காற்று, வெப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உருமாற்றுப் பாறைகளாக மாற்றமடைந்தது. இப்படி வெயிலுக்கு விரிந்து, மழைக்குச் சுருங்கும்போது, பாறையின் சில பகுதிகள் உடையும். அப்படி உடைந்த பகுதிகள் ஒன்று நாலாக, நாலு எட்டாக, எட்டு பதினாறாக... என உடைந்து, உடைந்து உருவானதுதான் மண்.

தாயைப் போல பிள்ளை!
‘மண் என்றாலே மணல், களி, வண்டல் மட்டும்தான் என்று சொல்கிறீர்கள். ஆனால், விவசாயிகள் செம்மண், கரிசல்மண், சரளை மண் என சொல்கிறார்களே?’ என்ற சந்தேகம் வரலாம்.
ஒரு மண் எந்தப் பாறையில் இருந்து உடைகிறதோ... அதை வைத்து மண்ணை வகைப்படுத்துகிறார்கள். பாறைதான் தாய். அதிலிருந்து உருவான பிள்ளைதான் மண். ‘தாயைப் போல பிள்ளை... நூலைப் போலச் சேலை’ எனச் சொல்வார்களே... அதுபோல, பாறையின் ரசாயனத் தன்மையைப் பொறுத்துத்தான் மண்ணின் சத்துக்கள் தீர்மானிக்கப்படுகிறது.
மண்ணுக்குள் உள்ள ரசாயனப் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் நிறம் மாறுகிறது. உதாரணமாக, இரும்பு, அலுமினியம் அதிகமாக இருந்தால் அந்த மண் சிவப்பாக இருக்கும். அதை செம்மண் என்கிறார்கள். இப்படித்தான் கல் அதிகமாக இருந்தால் சரளை எனப் பார்வைக்குத் தோன்றும் குறியீடுகளை வைத்து அழைக்கிறார்கள்.
உப்பு, மண்ணில் ஏற்படுத்தும் விளைவுகள், பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்...
மண் ஜாதகம் சொல்லும் மூன்றடி குழி!
பாறைகள் உடைந்து முதலில் உருவானது மணல்தான். அதற்கு அடுத்த நிலையில் வண்டலாகவும், கடைசியில் களி என மண் மூன்று விதமாக உருமாறியது. இப்படி உருவான மண்ணை இரண்டு விதங்களாகப் பிரிக்கிறார்கள். பாறை இருந்த இடத்திலேயே உருவான மண்ணை பிறப்பிடத்து மண் என்றும், மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு வேறொரு இடத்தில் சேர்ந்தால், ‘கடத்தப்பட்ட மண்’ என்றும் வகைப்படுத்துகிறார்கள். நிலத்தில் மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து அங்குள்ள மண்ணை சோதனை செய்து பார்த்தால்... அதன் ஜாதகமே தெரிந்துவிடும். சில இடங்களில் ஒன்றரை அடியில் பாறை இருக்கும். சில இடங்களில் ஏழு அடிக்கு கீழும் கூட மண் இருக்கும். இது, அந்த மண் எத்தனை ஆண்டுகளாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. இரண்டரை சென்டி மீட்டர் உயரத்துக்கு மண் உருவாக, 500 ஆண்டுகளுக்கு மேலாகும். அதிக ஆண்டுகள் ஆன பாறை, மண்ணாக மாறிக் கிடக்கும்.

சாயில் பில்டர்!
நாம் தேவையில்லாத ஒன்று என கருதும் கரையானை, மண் கட்டமைப்பாளர் (சாயில் பில்டர்) எனக் கொண்டாடுகிறார்கள், மேலைநாட்டினர். நாம் ‘பாம்புப் புற்று’ என்று கருதுவதெல்லாம், உண்மையில் கரையான் புற்றுகள். இன்றைக்கு அதிநவீன அறிவியலின் துணை கொண்டு, வீடுகளில் குளிர்சாதன வசதி செய்து கொள்கிறோம். ஆனால், பன்னெடுங்காலத்துக்கு முன்பே, குடியிருப்புக்குள் குளிர் தன்மையை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டு விட்டன, கரையான்கள். ஒரு மண்ணின் கட்டுமானத்தைத் தெரிந்து கொண்டு, காற்று, நீர் எந்த அளவில் உள்ளே வரும் என்பதை உத்தேசித்து, அதற்கேற்ப புற்றுகளைக் கட்டுவதால்தான், உள்பகுதி குளிர்சாதன வசதி செய்யப்பட்டது போல குளிர்ச்சியாக இருக்கிறது.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்