நாட்டு நடப்பு
Published:Updated:

மாநிலங்களவையில் அல்வா...டெல்டாவில் லட்டு! நீடிக்கும் மீத்தேன் அபாயம்!

மாநிலங்களவையில் அல்வா...டெல்டாவில் லட்டு! நீடிக்கும் மீத்தேன் அபாயம்!

“ஒப்பந்தத்தின்படி சமர்பிக்கப்பட வேண்டிய பல்வேறு ஆவணங்களை ‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனம் இதுவரையிலும் சமர்பிக்கவில்லை. மீத்தேன் எடுப்பதறகான ஆரம்பக்கட்ட வேலைகளையும் அந்நிறுவனம் தொடங்கவில்லை. அதனால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை பெட்ரோலிய அமைச்சகம் தொடங்கியுள்ளது” என மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 20-ம் தேதி இத்தகவல் வெளியானதும்... மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகக் கூறி, இனிப்புக் கொடுத்து கொண்டாடித் தீர்த்தனர், டெல்டா மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர். இன்னும் பல தரப்பில் இருந்தும் இது போன்ற தகவல்கள் வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. 

மாநிலங்களவையில் அல்வா...டெல்டாவில் லட்டு! நீடிக்கும் மீத்தேன் அபாயம்!

இந்நிலையில் இது பற்றி நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், “மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின்  தற்போதைய அறிவிப்பைக் கேட்டு, விவசாயிகளும் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்களும் மயங்கி விடக்கூடாது. இன்னமும் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும்தான், பொய்யான தகவல்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகின்றன.

‘ஆவணங்களைச் சமர்பிக்காததாலும், பணிகளைத் தொடங்காததாலும்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’ என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். ‘மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது’ என அமைச்சர் சொல்லவில்லை. எனவே, இதே நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இல்லையென்றால், வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். பெட்ரோலியத்துறை அமைச்சரின் அறிவிப்பில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு நிலக்கரி, மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். இதில் மறைந்திருக்கும் சூசகமான உண்மையை பொதுமக்கள் உணர வேண்டும்.

மாநிலங்களவையில் அல்வா...டெல்டாவில் லட்டு! நீடிக்கும் மீத்தேன் அபாயம்!

வண்டல் மண் பாறைப் பகுதிகளில் கிடைக்கும் ‘ஷேல் மீத்தேன்’ எனும் மீத்தேனை எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆறாயிரம் முதல் பத்தாயிரம் அடி ஆழத்துக்கு மேல் பூமியைத் தோண்டி ஷேல் மீத்தேன் எடுப்பார்கள். இதையும் ஆபத்தான தொழில்நுட்பமான ‘ஹைட்ராலிக் பிராக்சரிங்’ முறையில்தான்  எடுப்பார்கள். எனவே, மீத்தேன் எமன் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து, ஒரு அடி தூரம் கூட வெளியேறவில்லை” என்ற பாரதிச்செல்வன் நிறைவாக,

 “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்கு விரோதமான திருத்தங்கள் கொண்டு வருவதற்கும், மீத்தேன் திட்டத்துக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. ஆகவே மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

 கு.ராமகிருஷ்ணன்

 படம்: க.சதீஸ்குமார்