கரும்பைத் தாக்கும் கம்பளிப்பூச்சி... அலைக்கழிக்கும் ஆராய்ச்சி மையம்!
மாடுகளுக்காக பக்கத்து ஊரில் இருந்து வாங்கி வந்த வைக்கோலை ‘போர்’ கட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். கட்டிலில் அமர்ந்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார், `வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வைக்கோல் போரை ஏரோட்டி கட்டி முடிப்பதற்கும், ‘காய்கறி’ கண்ணம்மா வருவதற்கும் சரியாக இருந்தது.
கூடையை இறக்கி வைத்த காய்கறி, “ஸ்ஸ் அப்பா... என்ன வெயில்” என்றபடி தான் கொண்டு வந்திருந்த மோரை டம்ளர்களில் ஊற்றி இருவருக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடிக்க ஆரம்பித்தார்.

மோரை சுவைத்தபடியே பேசிய வாத்தியார், “அந்தக் காலத்துல எல்லாம் பெரிய பெரிய விவசாயிங்க, தொழுவத்துல நாப்பது, அம்பது நாட்டு மாடுகளை வெச்சிருந்தாலும்... ‘பாலை, பணத்துக்கு விக்கக்கூடாது’னு கொள்கை வெச்சிருப்பாங்க. தினமும் கன்னுக்குட்டிகளுக்குப் போக மீதம் கிடைக்கிற பாலை வீட்டுத்தேவைக்கு வெச்சிக்குவாங்க. தோட்டத்துல வேலை செய்றவங்களோட குழந்தைகளுக்கு எல்லாம் இலவசமாவே கொடுப்பாங்க. மோராக்கி... இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை எல்லாத்தையும் போட்டு வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள், வேலைக்காரர்கள் எல்லாத்துக்கும் செம்புல ஊத்திக் கொடுப்பாங்க. வழிப்போக்கருக்கெல்லாம் கூட கொடுப்பாங்க. இப்போ அப்படியா இருக்கு. எல்லாரும் பணத்துக்குப் பின்னாடி ஓட ஆரம்பிச்சதுல... சாணியைக்கூட காசுக்குத்தான் விக்கிறோம்” என்று கவலைப்பட்டார்.
“இன்னிக்கு பொழப்பு அப்படி ஆகிப்போச்சு... ரொட்டி வாங்கிப் போடாட்டி வீட்டுல இருக்குற நாய்கூட நம்மளை மதிக்காது. அதுக்காகவாவது சம்பாதிச்சு ஆகணும்” என்று வக்கனையாகச் சொன்ன ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
“தமிழ்நாட்டுல போன வருஷ பட்ஜெட்ல சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் அறிவிச்சாங்க. ஆனா, அதுக்கான அரசாணையை இந்த வருஷம் ஜனவரி மாசம்தான் வெளியிட்டாங்க. அதுவும் அரசாணை வெளியிட்ட 20 நாள்ல மொத்த வேலையையும் முடிக்கச் சொல்லி உத்தரவு போட்டுட்டாங்களாம். அதுல நிறைய குளறுபடியாம். முன்னாடியே மனு கொடுத்துக் காத்திருந்த நிறைய விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கலையாம். அதிகாரிகள் படுத்துன அவசரத்துல... கம்பெனிகாரங்களைப் பிடிச்சு சொட்டுநீர் அமைக்குறதுக்குள்ள விவசாயிகளுக்கு தாவு தீந்துடுச்சாம்” என்றார், ஏரோட்டி.
``நானொரு சங்கதி சொல்லப்போறேன்’’ என்று பீடிகை போட்ட வாத்தியார்,
“இப்போ அரியானா மாநிலத்திலயும் மாடுகளைக் கொல்றதுக்குத் தடை விதிச்சுட்டாங்க. அப்படி யாராவது மாட்டைக் கொன்னா... அவங்க ஜெயிலுக்கு போக வேண்டியதுதானாம். அந்த மாநிலத்தில நாட்டுமாடுகளைக் காப்பாத்தறதுக்காக ஆதார் அட்டை மாதிரி ஒரு அட்டை கொடுக்கப் போறாங்களாம். அதுல மாடோட போட்டோ ஒட்டி மாடு பத்தின அத்தனை தகவலையும் பதிவு பண்ணணுமாம். ஏதாவது காரணத்தால மாடு இறந்துட்டா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிட்டுத்தான் புதைக்கணுமாம். இல்லாட்டி மாட்டைக் கொன்னதா சொல்லி ஜெயில்ல போட்டுடுவாங்களாம்” என்றார்.
“அடப்பாவிகளா... இன்னும் இங்க மனுஷங்களுக்கே ஆதார் அட்டை கொடுத்து முடிக்கலையே” என்ற ஏரோட்டி,
“திருச்செங்கோடு பகுதியில கரும்புப் பயிர்ல ‘வெண் கம்பளிப் பூச்சி’ அதிக அளவுல தாக்கிட்டு இருக்காம். மழை இல்லாம வெயில் அதிகமா அடிக்கிறதுதான் இந்தப் பூச்சிகள் தாக்கக் காரணமாம். இதைக் கட்டுப்படுத்துறதுக்கு எதிர் உயிரியான ஒட்டுண்ணி அட்டைகளைத்தான் பயன்படுத்தணும். ஆனா, மத்திய கரும்பு ஆராய்ச்சி மையத்துல இந்த அட்டைகள் போதுமான அளவுக்கு இல்லையாம். அதனால விவசாயிகள், ஆராய்ச்சி மையத்துக்கு அலையா அலைஞ்சுக்கிட்டு இருக்குறாங்க. இப்போதைக்கு, தண்ணியில காதி சோப் கலந்து தெளிக்கச் சொல்லி கரும்பு ஆராய்ச்சி மையம் பரிந்துரை பண்ணியிருக்குதாம்” என்று ஒரு தகவலைத் தட்டிவிட்டார்.
“ஆமாய்யா... எனக்குக் கூட தகவல் கிடைச்சது. அந்த ஆராய்ச்சி மையத்துல இந்த பூச்சியைத் தடுக்கறதுக்காக ஆலோசனை கேக்குற விவசாயிகளை கண்டபடி திட்டுறாங்களாம். ஒரு விவசாயி போன்ல ஆலோசனை கேட்டதுக்கு... ‘சும்மா சும்மா எதுக்கு போன் பண்றீங்க’னு ஒரு பெண் அதிகாரி கன்னாபின்னானு திட்டியிருக்காங்க. அதை அந்த விவசாயி ரெக்கார்ட் பண்ணி வாட்ஸ் அப்ல போட்டு விட்டுட்டார். எனக்கு கூட வாட்ஸ் அப்ல வந்துச்சு” என்ற வாத்தியார், தனது செல்போனில் அந்த உரையாடலை இருவருக்கும் போட்டுக் காட்டினார்.
அந்த நேரத்தில் மாடுகள் தண்ணீருக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்க... “இதோ வந்துட்டேன்’’ என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து நடையைக் கட்ட... மாநாடும் முடிவுக்கு வந்தது.
அதிர்ச்சியில் மோடி அரசு!

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் இருந்தும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியிலிருக்கும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு 19-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பி.ஜே.பி செல்வாக்கோடு திகழும் உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது மத்திய அரசு. சாலையிலே உண்டு, உறங்கிப் போராடும் விவசாயிகள், அவசரச் சட்டத்தைத் திரும்ப பெறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில், தமிழகத்திலிருந்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையிலும் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வழுக்குப்பாறை பாலு மற்றும் கந்தசாமி ஆகியோர் தலைமையிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
ஓவியம்: ஹரன்