அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்
முதலீடு 1 தரம்...
முதலீடு 2 தரம்...
முதலீடு 3 தரம்....
-இதுதான் மோடி அரசின் ஒட்டுமொத்த தாரக மந்திரம்.
‘‘தொழில் என்ற சொல் ஒன்றும் கெட்ட சொல் இல்லைதானே! தொழிற்சாலைகளை நிலத்தில் உருவாக்காமல், வானத்திலா உருவாக்க முடியும்? முதலாளிகளுக்கு முகச்சுளிப்பு வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். கேட்கும் நிலத்தை உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முதலீடு வேறு நாட்டுக்குத் திரும்பிவிடும். இதற்குப் பழைய சட்டம், அதாவது நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடி அமர்வு மறுவாழ்வுச் சட்டம்-2013 (land acquisition resettlement and rehabilitation act-2013) தடையாக இருக்கிறது. அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து, புதிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். ஒன்றைப் பெற வேண்டுமானால், ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும்.

எனினும் நிலம் பறிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்’’
-மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, புதிய நிலம் கையக்கப்படுத்துதல் சட்டத்தை அறிமுகம் செய்து, நாடாளுமன்றத்தில் அள்ளி வீசிய அருளுரையின் ஒரு பகுதிதான் இது.
அரசியல்வாதிகளுக்கு இது ஒன்றும் புதிது அல்ல... ‘‘விவசாயம் கட்டுப்படியாகவில்லை என்றால் எதற்கு விவசாயம் செய்கிறீர்கள்? விவசாயம் செய்யச் சொல்லி உங்களை யார் தடி எடுத்து அடித்தார்கள்? கட்டுப்படியாகவில்லை என்றால் விவசாயத்தை விட்டு ஓட வேண்டியது தானே?’’ என்று அம்பானியின் தோழர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று சொன்னதைத்தான், வேறு மொழியில் இன்று சொல்கிறார் அதானியின் தோழர், இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
மன்மோகன் சிங்கின் அடியொற்றி நடைபோடும் மோடி அரசே... ஒரு சந்தேகம். விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம் நிலம் மட்டுமே. அந்த நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு விவசாயிகளைச் சுகமாக வாழவைப்பது எப்படி? நலன் காப்பது எப்படி? உடல் இருப்பதால்தானே நோய் வருகிறது. உடலிலிருந்து உயிரைப் பறித்துக்கொண்டால் நோய் இல்லை... மருத்துவச் செலவு இல்லை. அதுபோல, நிலம் இருப்பதால்தானே விவசாயிகளுக்குக் கடன் வருகிறது. ‘கடனைத் தள்ளுபடி செய், வட்டியைத் தள்ளுபடி செய்’ என்று போராட்டம் நடத்துகிறார்கள். நிலத்தைப் பிடுங்கிக்கொண்டால், விவசாயி நடைப்பிணமாகி விடுவான். போராட்டம் இருக்காது... தற்கொலை இருக்காது... அரசுக்கு அவப்பெயர் இருக்காது... இதுதானே உங்கள் திட்டம்.

எந்த அரசு வந்தாலும் விவசாயிகளை வாழ வைப்பது இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது மட்டும் நிதர்சனம். இங்கே அரசியல் கட்சிகள் இரண்டு அணியாக செயல்படுகின்றன. ஒன்று ஆளும் அணி. மற்றொன்று எதிர்அணி. எதிர் அணியாக இருக்கும்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், ஆட்சியில் அமர்ந்ததும் விவசாயிகளை எட்டி உதைப்பதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், விவசாயிகள்தான் அதைப் புரிந்துகொள்வதேயில்லை. நேற்று வரை விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி, இப்பொழுது புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகளின் குரல்வளையை நெருக்குகிறது.
100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி பெற்ற சட்டத்தை, மோடி அரசு ஒரே அவசர சட்டத்தின் மூலம் காலி செய்ய முனைகிறது. மோடியின் புதிய சட்டம் அப்படியே நிறைவேறினால், இனி உங்கள் நிலம் உங்களுடையது இல்லை... போகிறப் போக்கில், உங்கள் நிலம் ஒரு முதலாளி கண்ணில் பட்டுவிட்டால் உடனே அபகரிக்கப்படும். பாடசாலை என்றோ சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றோ ஏதாவது ஒரு பெயரில் அது பறிக்கப்படும்.
புதிய சட்டத்தின் முகத்திரையைக் கிழித்து, நிஜமுகத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்ற துடிப்பில்தான் ‘இனி, உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!’ என்று அழுத்தமாக எழுத முனைந்திருக்கிறேன். அதற்கு முன்பாக, ‘அரசாங்கத்துக்கு நிலம் கொடுத்தால் விவசாயி வீணாகப் போய்விட மாட்டான்... அவன் நன்றாகவே வாழ்வான். அவனுடைய வாழ்வாதாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று வாய் கிழிய பேசும் அரசாங்கத்தை நம்பி, 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்கள் சொர்க்கத்தில் மிதக்கிறார்களா... நரகத்தில் புழுக்களைப் போல நெளிகிறார்களா? என்று ஒரு பார்வை பார்த்து வரலாம் என பயணப்பட்டேன்.

2,700 ஏக்கரில் பரந்துவிரிந்து கிடக்கிறது ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொழிற்பேட்டை (சிப்காட்). வண்ணவண்ணக் கனவுகளோடு புறப்பட்ட பயணம், ஓர் இடத்தில் தடைப்பட்டது. பிணவாடை மூக்கை முற்றுகையிட்டது. என்ன இது துர்வாடை என்ற எனது வினா முற்றுப்பெறும் முன்பே, ‘‘இதுதானுங்க இந்தத் தொழிற்பேட்டை. வாழை, தென்னை, மஞ்சள்னு ஒரு காலத்தில் விளைஞ்ச பூமி. மரம், செடி, கொடி, மனுஷன்னு தென்றல் உரசிப் போய்கிட்டிருந்த பூமி. இன்னிக்கு துர்நாற்றம் குடலைப் புடுங்குது. காற்று மண்டலத்தை தினமும் கலக்கிக்கிட்டிருக்கிற இந்த சுகந்த வாசனைக்கு, எங்க மூக்கு பழகிப் போச்சு... என்ன செய்ய, எங்க விதி’’ என்றார் எதிர்ப்பட்ட விவசாயி ஒருவர்.
மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கார் கதவுகளை நன்றாக மூடிக் கொண்டு... மெதுவாக தொழிற்பேட்டையின் கோட்டைச் சுவர்களை நெருங்கினேன்.
அங்கு நான் கண்ட காட்சி, ரத்தத்தையே உறைய வைத்துவிட்டது. ஆயிரம் ஆடுகளை அறுத்து வாய்க்காலில் விட்டதுபோல, ரத்தத் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டு இருந்தார் ஒருவர்.

‘‘என்னய்யா இது... வயலுக்கு ரத்தத்தைப் பாய்ச்சுகிட்டு இருக்கீங்க?’’ அதிர்ச்சி விலகாமல் கேட்டேன்.
‘‘அதை ஏன் கேக்கறீங்க... அதோ தெரியுது பாருங்க பெரிய தொழிற்சாலை. அந்தத் தொழிற்சாலை எடுக்கிற வாந்தியாலதான் என்னோட கிணத்துத் தண்ணி இப்படி கலர் மாறிக் கெடக்கு. இன்னிக்கு சிவப்பா இருக்கு... இன்னும் எட்டு நாள் கழிச்சு வந்தா கருப்பா இருக்கும். வயலோட சேர்ந்து வாழ்க்கையையும் தொலைச்சுட்டோம். எங்க கலாச்சாரம் போச்சு... பண்பாடு போச்சு... கொஞ்சம் கொஞ்சமாக மொழியும் செத்துக்கிட்டு வருது. இப்ப பாதிக்கும் மேல இந்திக்காரங்கதான் வேலை செய்றாங்க. ஊருபட்ட கதை இருக்கு... உட்காருங்க பேசலாம்’’ என்று விழிகளில் நீர் கசிய... நேற்று வாழ்ந்த கதை, இன்று வதைபடும் கதையை எல்லாம் அவர் பேசப் பேச, அதிர்ச்சியில் விக்கித்துப் போனேன்.
-தொடரும்
தூரன் நம்பி
படங்கள்: ஸ்ரீநிவாசன்