பாபநாசத்தில் பசுமைத் திருவிழா!
கடந்த மார்ச் 15-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் ‘வீட்டுத்தோட்டத்தில் மெடிக்கல் ஷாப்’ என்ற தலைப்பில், மூலிகை அறிதல் மற்றும் மூலிகைப் பயன்பாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘பசுமை விகடன்’, ‘அவள் விகடன்’ மற்றும் ‘உலகத் தமிழ் மருத்துவக் கழகம்’ இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 750 பேர் கலந்து கொண்டனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவி மனோன்மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

மூலிகைகள்தான் தாத்தா பாட்டிகள்!
உலகத் தமிழ் மருத்துவக்கழக நிறுவனத் தலைவர் மைக்கேல் செயராசு பேசும்போது, “எப்படி தற்சார்பு வேளாண்மை உடைக்கப்பட்டு, நாம் செயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறோமோ...
அதேபோல் தற்சார்பு மருத்துவமும் உடைக்கப்பட்டு, நாம் அலோபதி மருந்துகளை நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மூலிகைகள் வளர்க்க பெரிய ஏற்பாடுகள் ஒன்றும் அவசியம் இல்லை. நமது வீடுகளிலேயே தொட்டிகளில் மூலிகைகளை வளர்க்கலாம். முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் குறைந்தது ஐந்து மூலிகைகளையாவது நட்டு வளர்ப்பார்கள். ஆனால், கூட்டுக்குடும்பம் உடைந்து போன நிலையில், மூலிகை வளர்ப்பும் மறைந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து மூலிகைகளையாவது வளர்க்க வேண்டும். அவைதான் நம் தாத்தா- பாட்டிகள்” என்று விஷயத்தை அழகாக பதியம் போட்டார்.
நோய்களை விரட்டும் எண்ணெய் குளியல்!
பசுமை வழி நலவாழ்வு என்னும் முதல் அமர்வில் பேசிய சென்னை, தேசிய சித்த மருத்துவ நிறுவனத் துணைத்தலைவர் பேராசிரியர் முருகேசன், “வாரம் இருமுறை காலையில் நல்லெண்ணெய் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளித்தால் உஷ்ணம் சீராக இருக்கும். அன்றைய தினம் பகல் தூக்கம், குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தால் முழுப்பலன் கிடைக்கும். சர்க்கரை வியாதி, பல தரப்பட்ட தோல் வியாதிகள், உயர் ரத்த அழுத்தம் எனப் பல நோய்களுக்கு காரணியான உஷ்ணத்துக்குச் சிறந்த நிவாரணி, இந்த எண்ணெய்க் குளியல்தான்” என்றார்.

தொடர்ந்து வீட்டுத்தோட்ட மூலிகைகள் பற்றி பேசிய மருத்துவர் அருண், மஞ்சள் கரிசாலை, துளசி, தூதுவளை, கறிவேப்பிலை, எலுமிச்சைத் துளசி... என வீட்டில் வளர்க்க வேண்டிய 20 வகையான மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி விளக்கினார்.
சத்து டானிக்குகளை குடிப்பதில் பயனில்லை!
‘வயல்வெளி மூலிகைகள்’ எனும் தலைப்பில் பேசிய, மூத்த சித்த ஆய்வாளர் நடராசன், “மூலிகைகளைத் தேடி நீங்கள் அமேசான் காடுகளுக்கெல்லாம் போக வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள வயல்வெளியைத் திரும்பிப் பார்த்தாலே ஏராளமான மூலிகைகளைக் கண்டெடுக்கலாம். கீரைகளில் இருக்கும் சத்துக்களை விட்டுவிட்டு, சத்து டானிக்குகளைக் குடிப்பதில் ஒரு பயனும் இல்லை” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னவர், 15 வகையான வயல்வெளி மூலிகைகள் பற்றி விளக்கினார்.

பண்ணைத்தோட்ட மூலிகைகள் பற்றி சேலம் சிவராஜ் சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்; நாட்டுப் பசுவின் முக்கியத்துவம் பற்றி நடேசன்; நோனி வளர்ப்பு குறித்து ‘காளாம்பட்டி’ ஸ்ரீனிவாசன்; நோனிக் கரைசல், ஊறுகாய் தயாரிப்பு குறித்து ‘சங்கரன் கோவில்’ மகாலிங்கம் ஆகியோர் விளக்கினார்கள்.
பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விஷ நாராயணி, பூனைமீசை மற்றும் மஞ்சள் கரிசாலை ஆகிய மூலிகைக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
களைகளும் மூலிகைகள்தான்!
யுஸ்டுஸ், ஜெர்மனி:
“தமிழ் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிக்காக, பொதிகை மலையிலுள்ள மூலிகைகள் குறித்து குறிப்பெடுக்க இங்கு வந்தேன். அப்போதுதான் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டேன். இந்தப் பயிற்சியில் நான் கற்றுக்கொண்டவற்றையும் எனது ஆய்வில் இணைக்க உள்ளேன்.”

ஈஸ்வரி, சித்த மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை:
“மூலிகைகள் குறித்த வாய்மொழி கருத்துரை மட்டும் இல்லாமல், படங்களைக் காண்பித்து அதன் தாவரவியல் பெயர் மற்றும் பயன்பாடுகளையும் விளக்கியது சிறப்பாக இருந்தது.”
ஆனந்தராஜ், விவசாயி, ஸ்ரீவைகுண்டம்:
“இதுதான் கீழாநெல்லி, அம்மான் பச்சரி, நாயுருவினு தெரியாமலே களைனு இத்தனை நாளும் பிடுங்கிப் போட்டதை நினைச்சும், இத்தனை நாள் ‘பசுமை விகடன்’ சார்பில் நடத்துன பயிற்சியில கலந்துக்காததை நினைச்சும் வருத்தப்படுறேன். இனி அடுத்தடுத்த பயிற்சிகளில் நிச்சயமா கலந்துக்குவேன்.”
இ.கார்த்திகேயன், பா.சிதம்பரபிரியா
படங்கள்: மீ.நிவேதன்