நாட்டு நடப்பு
Published:Updated:

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

வாட்ஸ்அப் வில்லங்கம்... உண்மை என்ன?

‘தர்பூசணியைச் சாப்பிடாதீங்க... அதுல ஊசி மூலமா சிவப்பு நிற ரசாயனத்தை ஏத்தி விக்கிறாங்க. இது உடம்புக்கு ஆபத்தானது... ஜி-9, பெங்களூர் வாழைப்பழம்னு பல பெயர்கள்ல அழைக்கப்படுற வாழைப் பழங்களைச் சாப்பிடாதீங்க. அது மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம். உங்க பரம்பரைக்கே ஆபத்து’

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

-இப்படியெல்லாம் அதிர வைக்கும் தகவல்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக படங்கள், வீடியோக்களாகப் பரவி, பரபரப்பையும் பயத்தையும் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த சீஸனில் தர்பூசணி என்ற வார்த்தையை உச்சரிக்கவே தயங்குகிறார்கள் பலரும்! இதே நிலைதான் பெங்களூர் வாழைக்கும்!

இதன் காரணமாக இவற்றின் விற்பனை மெள்ள குறைய ஆரம்பித்திருப்பது விவசாயிகளையும், வியாபாரி களையும் வெகுவாக பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக துறை சார்ந்த நிபுணர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்தோம்.

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

முஸ்தபா, இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி:

“முன்பெல்லாம் வெளிநாடு போய் வருபவர்கள், பளபளப்பான வாழைப்பழத்தைக் கொண்டு வருவதைப் பார்த்திருப்போம். அந்த வாழைப்பழத்தைத்தான் இப்போது இங்கேயே விளைவித்துக் கொண்டிருக்கிறோம். புதிய தொழில்நுட்பத்தில், தரமான வாழைப்பழ ரகம்தான் இந்த ஜி-9. முன்பு பச்சை வாழை, ரொபாஸ்டா ரகங்கள் வர்த்தக ரீதியாக இருந்தன. இப்போ ஜி-9 இருக்கிறது. வாழைப்பழ சாகுபடியில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூச்சி, நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத ரகங்களைத் தேர்ந்தெடுத்து, திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்கிறார்கள். முறையான பராமரிப்பில், வாழைத்தாரை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் சுற்றி பாதுகாத்து பிறகு அறுவடை செய்யப்படுகிறது.

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

அறுவடை செய்த தார்கள், அருகிலுள்ள குளிர்பதன நிலையங்களில் சேமிக்கப்பட்டு எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தமுறையில் வரும் பழங்கள் எந்தவித புள்ளிகளோ, கீறல்களோ, அழுகலோ இல்லாமல், பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அறுவடைக்குப் பிறகு உரிய பராமரிப்புடன், பேக்கிங் செய்து அனுப்பப்படுவதால், இந்தப் பழங்களை 5 நாட்கள் வரை வைத்து விற்பனை செய்யலாம். 5 நாட்களுக்குப் பிறகு, பழத்தில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறும்போது பழத்தின் மீது கரும்புள்ளிகள் தோன்றும். இப்படி சர்க்கரை அதிகமாக அதிகமாக பழத்தின் இனிப்புச் சுவை அதிகமாகும். அதனால்தான் நன்றாக பழுத்த பழம் இனிப்பாக இருக்கிறது. கடைகளில் விற்கும் ஜி-9 பழங்களை வாங்கி, இரண்டு நாள் வீட்டில் வைத்தால் கரும்புள்ளிகள் தோன்றி, பிறகு அழுகி விடும். இதுதான் உண்மை.

இந்த வாழைப்பழத்தை மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் என்று சொல்வது தவறு. இதுவரை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழங்கள் பயிர் செய்யப்படவில்லை. அதற்கான பரிசோதனை முயற்சிகள்கூட நடைபெறவில்லை. எனவே, இந்த ஜி-9 வாழைப்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம்’’

வெங்கட், வாழைப்பழ வியாபாரி, கோயம்பேடு சந்தை:

“இங்க 15 ரகங்களுக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் வந்திக்கிட்டிருக்கு. தேனி, ஆந்திரானு பல பகுதிகள்ல இருந்து வாழைப்பழம் வந்துட்டு இருக்கு. அறுவடை செஞ்சு 72 மணி நேரம் குளிர்பதன நிலையங்கள்ல வைத்து பழுக்க வைக்கப்பட்டு இங்கே வரும். இங்கிருந்து சிறு வியாபாரிகள் மூலம் ஒரு நாளுக்குள்ள வாழைப்பழங்கள் கடைகளுக்குப் போயிடும். இந்த ரகத்தை ‘மோரீஸ்’னு சொல்வோம். இந்த ரகத்தைத்தான் சென்னைவாசிகள் விரும்பி சாப்பிடுறாங்க. இதை மரபணு மாற்றப்பட்ட பழம்னு சொல்றது தப்பு. அப்படியொரு இடைச்செருகல் வியாபாரமோ, வியாபாரிகளோ இங்கே கிடையாது.”

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

சரி தர்பூசணியின் கதை என்ன?                                                                                                         

பரணி, தர்பூசணி விவசாயி, காஞ்சிபுரம் மாவட்டம்:

“பழங்களை வெளியூர் அனுப்புறதுக்காக 90 சதவிகித முதிர்ச்சியில் அறுவடை செய்றோம். உள்ளூர் விற்பனைக்கு 100 சதவிகித முதிர்ச்சி வந்தபிறகுதான் அறுவடை செய்றோம். அறுவடைக்குப் பிறகு, 15 நாட்கள் வரை வெச்சி விக்கலாம். ஒட்டுமொத்தமா வியாபாரிகளுக்கு விக்கும்போது, முதிர்ச்சியடைந்த காய்களோடு முற்றாத காய்களும் கொஞ்சம் கலந்துவரும். மத்தபடி ஊசி மூலமா சாயத்தை ஏத்துற வேலையெல்லாம் எங்ககிட்ட இல்ல.”

ராஜா, தர்பூசணி வியாபாரி, கோயம்பேடு சந்தை:

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

“தர்பூசணியில சின்ன குண்டூசி குத்தினாலே அடுத்தநாள்ல அந்த இடம் அழுகத் தொடங்கிடும். அப்படி இருக்கும்போது தர்பூசணியில ஊசி போட்டு ரசாயன சாயத்தை ஏத்துறாங்கனு சொல்றது பொய்யான தகவல். வட மாநிலத்துல இப்படி நடந்ததா ஒரு பேச்சிருக்கு. இதை வெச்சுக்கிட்டு தமிழ்நாட்டுலயும் இப்படி நடக்குதுனு யாரோ தப்பா தகவலைப் பரப்பிட்டாங்க. இன்னொன்னு முன்கூட்டியே அறுவடை செஞ்சாலும் பழங்கள் பழுத்திடுது. அப்படியிருக்கும்போது மருந்து செலுத்த வேண்டிய அவசியமே இல்லை.’’

சரஸ்வதி, பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிகள் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்: ‘‘சிவப்பு நிறமாக இருக்கும் பழங்களையே நுகர்வோர் வாங்க விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே இப்படி சாயமேற்றும் வேலை நடக்கிறது. கூடவே, இப்படி ரசாயனத்தைச் செலுத்தினால், பழம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தர்பூசணியில் செலுத்தப்படுவதாகச் சொல்லப்படும் ‘எரித்ரோமைசின்’ ரசாயன நிறமியை, தர்பூசணியில் செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

முதலில் இதைப் பழத்தில் செலுத்தியபோது, அதன் நிறம் மாறவில்லை. அடுத்த கட்டமாகவும் சோதனை நடத்தி வருகிறோம்.

தர்பூசணியில் சில பழங்கள் சிவப்பு நிறமாகவும் சில பழங்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதில் இளஞ்சிவப்பு நிற பழங்களுக்குத்தான் ரசாயனம் செலுத்தப்படுவதாக தகவல் வருகின்றன. அப்படியே செலுத்தினாலும் ஒருநாளுக்கு மேல் வைத்து விற்க முடியாது. விரைவில் அழுகி விடும். தமிழகப் பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வை வைத்துப் பார்க்கும்போது, இப்படி ஊசிமூலம் ரசாயனத்தைச் செலுத்தும் வேலை இங்கே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் சிலவற்றில்தான் இந்தப்பழக்கம் துவங்கியிருக்கிறது. அறுவடைக்குப் பிறகே இதுபோன்ற விஷயங்கள் நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ‘எரித்ரோமைசின்’ தொண்டை வலிக்குக் கொடுக்கப்படும் ஒருவித மருந்து. சிவப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய பல ரசாயன நிறமிகள் இருந்தாலும், இதுவே தர்பூசணி பழத்தில் எளிதில் கலக்கக்கூடியதாக இருக்கிறது. இது தர்பூசணியில் கலந்திருந்தாலும் கண்டுபிடிப்பது சிரமம். இது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பது உண்மை.”

ஏன் இந்த பெயர்?

மரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பழங்கள், பெங்களூருக்கு அருகே ‘ஒய்ட் ஃபீல்டு’ எனுமிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள குளிர்பதன நிலையங்களில் பதப்படுத்தப்பட்டு, பிறகு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன. இதனாலேயே ‘பெங்களூர் வாழைப்பழம்’ என்று பெயர் வந்தது. தற்போது தமிழ்நாட்டிலேயே குளிர்பதன நிலையங்கள் அமைக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.

மரபணு வாழை அல்ல..!

இந்த வாழைப்பழம் குறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்.

“ஜி-9 என்று சொல்லப்படுற இந்த வாழை ரக கன்றுகள், திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இந்த தோற்றம் பெறுகிறது. இதன் காரணமாக, இது மரபணு மாற்றப்பட்ட வாழை ரகமாக இருக்கும் என்று மக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். உண்மையில் இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழை அல்ல” என்றார்.

 த.ஜெயகுமார்

 படங்கள்: பா.அருண்