நாட்டு நடப்பு
Published:Updated:

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

‘இளைச்சவனுக்கு எள்ளு... கொளுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது பழமொழி. கொள்ளு தன்னை சாப்பிடுபவர்களின் உடலை இளைக்க வைத்தாலும்... தன்னை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளை வருமானத்தால் என்றைக்கும் செழிப்பாகவே வைத்திருக்கிறது. இதை ‘உண்மை’ என ஆமோதிக்கிறார், விழுப்புரம் மாவட்டம், துளுக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்.

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

அறுவடை செய்த கொள்ளுச் செடிகளில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்ரமணியனைச் சந்தித்தோம். “கிராமத்துல நாங்க கொஞ்சம் வசதியான குடும்பம். எங்க வீட்டுக்கு நான் ஒரே ஆண்பிள்ளை. பி.காம் படிக்கும்போது அப்பா இறந்துட்டார். அதனால படிப்பை பாதியிலே விட்டுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். அப்பா இருக்கும்போது ஏரிப் பாசனம் மூலமா பாதி நிலத்துல ஒரு போகம் நெல் சாகுபடி செய்வோம். மற்ற நிலங்கள்ல மானாவாரியா நிலக்கடலை, கம்பு, காராமணி மாதிரியான பயிர்களை விதைச்சு விடுவோம். அப்பா இறக்கறதுக்கு முன்ன, கிணறு வெட்டினார். அதோட நானும் ஒரு போர்வெல் போட்டு... பாதி நிலத்துல இறவையிலும், மீதி நிலத்துல மானாவாரியிலும் விவசாயம் பார்க்குறேன். எனக்கு மொத்தம் 30 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 12 ஏக்கர்ல எண்ணெய் பனை மரம் இருக்கு. 2 ஏக்கர்ல காய்கறி, ஒரு ஏக்கர்ல நெல், 15 ஏக்கர்ல மானாவாரியில உளுந்து, கம்பு, காராமணி மாதிரியான பயிர்களோட இந்த வருஷம் 40 சென்ட் நிலத்துல கறுப்புக் கொள்ளையும் சாகுபடி செய்திருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த பாலசுப்ரமணியன், தொடர்ந்தார்.

கொல்லிமலை விதை!

“ஆரம்பத்துல கரும்பு, நெல், காய்கறி மாதிரியான பயிர்களோட மானாவாரியில கம்பு, உளுந்து மாதிரியான பயிர்களை சாகுபடி செய்தேன். சித்த மருத்துவ நண்பர்களோட தூண்டுதல்ல மூலிகை பயிர்களான துளசி, சிண்ட்ரெல்லா மாதிரியான பயிர்களை சாகுபடி செய்தேன். விளைச்சல்ல பிரச்னை இல்லாம இருந்தாலும், வியாபாரிகள் விலையில கடுமையா ஏமாற்றினாங்க. அதனால அதை விட்டுட்டேன். பொதுவாக கறுப்பா இருக்குற பொருட்களுக்கு மூலிகை குணம் அதிகம்னு சித்த மருத்துவர் சொன்னதால கொல்லிமலையில இருந்து பூனைக்காலி விதை, கறுப்பு மொச்சை, கறுப்புக் கொள்ளு விதைகளை வாங்கிட்டு வந்து சாகுபடி செய்தேன். போதுமான அளவுக்கு விளைச்சலோட நல்ல வருமானமும் கிடைச்சது. குறிப்பா, கறுப்புக் கொள்ளு மானாவாரியில நல்ல விளைச்சலைக் கொடுத்தது.

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

கிழவருக்கும் பலம் கூட்டும் கொள்ளு!

‘கொள்ளை விதைச்சு விட்டுட்டு வந்தா, அறுவடைக்குப் போனா போதும்’னு பெரியவங்க சொல்வாங்க. மானாவாரியில கம்பு விதைச்சா விளைச்சலுக்கும், விலைக்கும் உத்தரவாதம் கிடையாது. ஆனா, கொள்ளு விதைச்சா... விளைச்சலுக்கும், விலைக்கும் உத்தரவாதம் இருக்கு. அதிலும், கறுப்பு கொள்ளுக்கு நல்ல தேவை இருக்கு. வழக்கமான கொள்ளு விதைகளைப் பயன்படுத்துற முறையில கறுப்புக் கொள்ளு விதைகளையும் சாம்பார், ரசம், துவையல்னு பயன்படுத்தலாம். ‘கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியைக் குடிச்சுட்டு வந்தா... அதிக பசி எடுக்கும். எள்ளைக் கையால் கசக்கி பிழியுற அளவுக்கு பலம் கிடைக்கும். வயசானவங்களுக்கும் ஆண்மைப் பெருக்கை உண்டாக்கும்’ என தேரையர் வெண்பா சொல்லுது” என்று கறுப்புக் கொள்ளுக்குக் கட்டியம் கூறிய பாலசுப்ரமணியன், அதை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

சத்துக் குறைவான மண்ணிலும் வளரும்!

‘கறுப்புக் கொள்ளு சாகுபடி காலம் 120 நாட்கள். கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வளம் குறைவான மண்ணிலும், நிழலான இடங்களிலும் கூட சாகுபடி செய்யலாம். நிலத்தில் களைச்செடிகள் இல்லாத அளவுக்கு இரண்டு முதல் மூன்று சால் உழவு செய்து, கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ விதைகளைப் பரவலாக விதைத்துவிட வேண்டும் (40 சென்ட் நிலத்துக்கு இவர் 3 கிலோ விதைகளைப் பயன்படுத்தியுள்ளார்).

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!

மண்ணிலும், காற்றிலும் இருக்கும் ஈரப்பதத்தில் விதைகள் 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும். 20 முதல் 25 நாட்களில் ஒருமுறை மட்டும் களை எடுக்க வேண்டும். அதற்குமேல், செடிகள் வளர்ந்து கொடிகளாகப் படர ஆரம்பிக்கும். ஆகையால் மீண்டும் களை எடுக்கத் தேவையில்லை. மானாவாரி என்பதால் கிடைக்கும் மழைத் தண்ணீரை வைத்தே வளர்ந்துவிடும். மழை இல்லாத பட்சத்தில் வழக்கமாகக் கிடைக்கும் மகசூலில் பாதி அளவுக்காவது கிடைத்துவிடும். இதில் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.

120 நாளில் அறுவடை!

80-ம் நாளில் பூவெடுத்து, 90-ம் நாளில் காயாக மாறி, 120-ம் நாளில் காய்கள் முற்றி அறுவடைக்கு வந்துவிடும். கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்து, இரண்டு நாட்கள் காயவைத்து கம்பு கொண்டு தட்டினால்... விதையும் தூசியுமாகக் கிடைக்கும். புடைத்துச் சுத்தப்படுத்தினால் கறுப்புக் கொள்ளு விதைகள் தனியாக வந்துவிடும்.’

மானாவாரியிலும் மகத்தான மகசூல்! கறுப்புக் கொள்ளு!

40 சென்ட்டில் ரூ13 ஆயிரம்!

“40 சென்ட் நிலத்துல சராசரியா 200 கிலோ கறுப்புக் கொள்ளு மகசூலாகும். ஒரு கிலோ 65 ரூபாய்னு விற்பனை செய்றது மூலம் 13 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் விதை, உழவு, அறுவடை, சுத்தம் செய்ற செலவுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். மீதி 10 ஆயிரம் ரூபாய் லாபம். மானாவாரியில இது நல்ல லாபம்தான். விற்பனையிலயும்கூட பிரச்னை இல்ல. சித்த மருத்துவம் செய்றவங்களும், இயற்கை அங்காடி நடத்துறவங்களும் முன்கூட்டியே, சொல்லி வெச்சி வாங்கிட்டு போறாங்க” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார், பாலசுப்ரமணியன்.

தொடர்புக்கு,
பாலசுப்ரமணியன்,
செல்போன்: 98434-88990

 காசி.வேம்பையன்

 படங்கள்: தே.சிலம்பரசன்