இயற்கைப் பாதையில் தமிழக அரசு!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை மாதிரி கிராமத் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை, தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார். -தமிழகத்தின் 150 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
தமிழக அரசு, இயற்கை விவசாயப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான ஒரு முன்னோட்டமே இந்தத் திட்டம் என்பது, இயற்கை விவசாயத்துக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் கொண்டாட வேண்டிய நல்ல செய்தி!
ஆம், ‘ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, விஷமில்லாத உணவு உற்பத்தி ஊக்குவிக்கப்படும், சாகுபடிச் செலவு குறைக்கப்படும்’ என்றெல்லாம் இத்திட்டத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டிருக்கிறது அரசு.
இருகரம் கூப்பி இத்திட்டத்தை வரவேற்கும் அதேசமயம், இது வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்கிற கவலையும் ஒட்டிக் கொள்கிறது. காரணம்... முந்தைய காலங்களில் இப்படித் துவக்கப்பட்ட திட்டங்கள் பலவும், விவசாயிகளை முழுமையாகச் சென்றடையாமல், பாதியிலேயே காணாமல் போனதுதான்.
இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவில், உலக அளவில் பெயர் பெற்ற விவசாயிகள் வாழும் மாநிலம் நம் தமிழ்நாடு. இந்தியாவின் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள், உலக அளவில் கியூபா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் எல்லாம், தமிழக இயற்கை விவசாயிகளின் தொழில்நுட்ப அறிவைக் கேட்டுப் பெற்று பயன்படுத்தி வருகின்றன!
இத்தகையச் சூழலில், தமிழகத்திலிருக்கும் முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ அறிவும், தமிழக வேளாண் அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவும் இணையும்போது... இந்தத் திட்டம் 100% வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
வெற்றிதான் இலக்கு என்றால், இந்த விஷயத்தையும் கனிவோடு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்!
-ஆசிரியர்