பூக்களைப் பறிப்பது எப்படி?
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’.
‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்வு செய்யப்பட்ட பிரேமா, பானுமதி, அரவிந்த் குருசாமி, மணிவேல் மற்றும் ஆனந்தராஜ் ஆகிய ஐந்து பேரும்... கரூர் மாவட்டம், வேட்டையார்பாளையம் கிராமத்தில் உள்ள, ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் பி.மனோகரனின் பண்ணையில் பயிற்சிகளை எடுத்துக் கொண்டது கடந்த இதழில் இடம்பிடித்தது. இவர்களுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு, சொட்டு நீர்ப்பாசனம், கவாத்து, மூடாக்கு, பயிர் பராமரிப்பு போன்றவற்றை பண்ணை உரிமையாளர் மனோகரன், முன்னோடி இயற்கை விவசாயிகள் தங்கராஜ், மணி ஆகியோர் சொல்லிக் கொடுத்தனர். ஒருநாள் விவசாயிகளின் அனுபவம் இந்த இதழிலும் தொடர்கிறது.
ஜீவாமிர்தம் கலந்த பாசன நீர், திறந்தவெளி வாய்க்கால் வழியே சம்பங்கி வயலுக்குச் சென்று கொண்டிருந்தது. வயல் வரப்பில் வரிசை கட்டி நின்ற ஐந்து பேரும் தங்களுக்கு எழும்

சந்தேகங்களை மனோகரனிடம் கேட்க, சலிப்பில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘‘சரி.. பூப்பறிக்கப் போலாமா?’’ என்று மணி குரல் கொடுக்க, ‘‘வயலில் ஈரம் இருக்கு. சேறு அப்பிக்கும்’’ என்று பிரேமா தயங்கினார். ‘‘விவசாயிங்க சேத்துல கால் வெச்சாத்தான் மத்தவங்க சோத்துல கை வைக்கமுடியும்” பானுமதி பன்ச் அடிக்க, “அதுவும் சரிதான்” என்றபடி அனைவரும் வயலில் இறங்கி பூ பறிக்கத் தயாராகினர். அப்போது, ‘‘கொஞ்சம் நில்லுங்க” என்ற தங்கராஜ், ‘‘பூ மென்மையான பயிர். செடியில் இருக்கிற பூக்களை, ‘வெடுக்...வெடுக்’னு பறிக்கக் கூடாது. அப்படி அவசரமாக பறிச்சா காம்பு ஒடிஞ்சு, பூ சேதாரம் ஆயிடும். பூ பறிக்கிறது ஒரு கலை” என்றபடியே லாகவமாக அவர் பூக்களைப் பறித்துக்காட்ட, பிரேமாவும் பானுமதியும் அப்படியே பறித்து அசத்தினர். ‘‘சபாஷ் இப்படித்தான் பறிக்கணும்’’ என்று பாராட்டினார், தங்கராஜ்.
ஜடை ஜடையாக தொங்கிக் கொண்டிருக்கும் முருங்கை மரங்களைச் சுற்றிலும் ஒரு நாள் விவசாயிகள் ஐவரும் நிற்க, வகுப்பைத் தொடர்ந்தார், மனோகரன். ‘‘சரி...முருங்கைக்காய் பறிக்கப் பழகுவோம்’’ என்ற அரவிந்த், வேட்டியை மடித்துக் கட்டி மரம் ஏறத் தயாரானார். அதைப் பார்த்த மணி. ‘‘தம்பி, கொஞ்சம் இரு அவசரப்படாதே. தென்னை, மா, புளிய மரம் ஏறுறது போல இதுல ஏற முடியாது. இதுல ஏறினா, பாரம் தாங்காம கிளை ஒடிஞ்சு விழுந்திடும். முருங்கை மரத்துல காய்பறிக்கறதுக்கு கொக்கிகளைத்தான் பயன்படுத்தணும். கொக்கிப் போட்டு இழுக்கும்போது கவனமா இருக்கணும். இழுக்குற வேகத்துல கீழ் நோக்கி ராக்கெட் மாதிரி பாய்ஞ்சு வர்ற நீளமான காய்களோட முனை உடைஞ்சிடும்’’ என்று விளக்கினார்.
நமக்குத் தேவை நாட்டு மாடு!
தென்னை மர நிழல்ல அனைத்து அங்க லட்சணங்களும் கொண்ட இரண்டு அழகிய நாட்டு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. ‘‘பசுமாடுகளை யாராவது பிடிங்க பார்ப்போம்’’ என்று மனோகரன் அழைக்க, ‘‘ஐயோ... முட்டவந்தால் என்ன செய்ய?” என்று ஐவரும் பதுங்கினர். இந்த நாட்டுமாடுகள் ரொம்ப சாதுவானவை. குழந்தைகள்கூட அதுக்கு பக்கத்துல போயி நின்னு நீவிக்கொடுக்கலாம். தைரியமாகப் போங்க’’ என்று ஊக்கப்படுத்தினார், மனோகரன்.
முதலில் சென்றவர் பானுமதி. தயங்கித் தயங்கி அதன் அருகில் சென்று கொம்பில் ஒன்றை பிடிக்க, ‘‘என்னம்மா இப்படி பண்றீங்களே” என்ற மனோகரன், ‘‘இது தப்பும்மா... எந்த மாட்டைப் பிடிச்சாலும் முதல்ல பக்கத்துல போய் நின்னு, ஓவ்..ஓவ்.ஒவ்வ்னு வாயைக் குவிச்சு ஒலி எழுப்பினபடி முதுகை நீவிக்கொடுக்கணும். அப்படியே மூக்கணாங்கயித்தைப் பிடிச்சிடணும். அதுவும் திருப்பி நாக்கால நம்ம கையை நீவிக்கொடுக்கும்’’ என்று சொல்ல, தைரியமாக பானுமதி மாட்டை நீவிக்கொடுக்க அது சாதுவானது.
‘‘ஒரு விஷயம்... இப்ப நான் சொன்னது இந்த நாட்டுப் பசுமாடுகள பிடிக்கறதுக்கான டெக்னிக் மட்டும்தான். ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயக் காளைகளை போய் யாரும் பிடிச்சு உதைபட்டா, அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை’’ என நகைச்சுவையாகச் சொன்னார், மனோகரன்.
தொடர்ந்து கத்திரி, மிளகாய், சுரைக்காய் என்று காய்கறி விவசாயம் தெரிந்து கொண்டவர்கள், கடைசியில் நிலக்கடலை வயலில் நுழைந்து வேரோடு பிடுங்க... ‘‘இப்பத்தான் பிஞ்சு வெச்சிருக்கு.... இன்னும் ஒரு மாசம் போகட்டும். அப்ப வாங்க அறுவடை செய்யலாம்’’ என்றார், மனோகரன். அந்த நேரத்தில், ‘‘சாப்பாடு ரெடி” என்று சமையல்காரர் குரல் கொடுக்க... அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி நகர்ந்தனர். சுவையான மதிய உணவுக்குப் பிறகு, மாலை வரை பண்ணையில் பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
தொடர்புக்கு,
பி. மனோகரன்
செல்போன்: 94430-08689.
ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!
பிரேமா, இல்லத்தரசி. சேலம்:
‘‘வயலில் கால்கூட வைக்காத நான். பயிர், சாகுபடி, பாசனம், உழைப்பு என்று எல்லா தகவல்களையும் இந்த ஒரு நாளில் ஓரளவு தெரிந்து கொண்டேன்.
100 சதவிகிதம் பயனுள்ள பண்ணைப் பயணம்.’’

அரவிந்த் குருசாமி, பொறியாளர், கரூர்:
‘‘இதுவரை வெளிநாட்டில் வேலை பார்த்தேன். இனி சொந்த ஊர்ல விவசாயம் பார்க்கப் போறேன். இந்த நாள், அதற்கான சரியான வழியைக் காட்டியிருக்கு’’ எனும் அரவிந்த் தன்னுடைய மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில், ‘விவசாயி’ என்று எழுதியுள்ளார். அதைப் பற்றி கேட்டால், ‘‘விவசாயம் ஒரு கௌரவமான தொழில்’’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்திடவே இதைச் செய்துள்ளேன்” என்கிறார், பெருமையாக.
பானுமதி, கரூர்.
உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்:
‘‘என்னுடைய விவசாயக் கனவை இந்த ஒருநாள் விவசாயிப் பயிற்சி ஒரளவு நிறைவேற்றி விட்டது. சுவையான உணவை நமக்குக் கொடுக்க விவசாயிகள் எப்படி வியர்வை சிந்தி உழைக்கிறார்கள் என்பதை வயலில் இறங்கி வேலை செய்த இந்த ஒரு நாளில் தெரிந்துகொண்டேன். இனி... ஒவ்வொரு முறை உணவு உண்ணும் முன்பும் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நன்றி சொல்வேன்... இது பசுமை விகடன் கொடுத்த தெளிவு.’’

ஆனந்தராஜ், புகைப்படக்காரர்:
‘‘நெல், கரும்பு, மஞ்சள், வாழைனு பச்சை பசேல் வயல்களை எனது கேமரா பல முறை படம் பிடித்துள்ளது. அப்போதெல்லாம் அதன் அழகு மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரியும். ஆனால், ஒரு நாள் விவசாயியாக இப்போது வாய்க்கால் வரப்பு, வயல் என்று அலைந்ததில் நான் தெரிந்து கொண்ட விஷயம்... நான் பார்த்து படம் பிடித்த இயற்கை அழகு சும்மா வந்தது அல்ல. அது விவசாயிகளின் அர்ப்பணிப்பில் உருவானது. இனி.. நான் வயல்வெளிகளை போட்டோ பிடிக்கும்போது அந்த அழகு மட்டுமல்ல, அவர்களின் உழைப்பும் நினைவுக்கு வரும்’’

மணிவேல், அச்சக உரிமையாளர், சின்னதாராபுரம்:
‘‘நாட்டுமாடு பத்தி விவரமா தெரிஞ்சிக்கிட்டேன். அதன் சிறுநீர், சாணத்தைப் பயன்படுத்தி இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகளையும் கத்துக்கிட்டேன். சீக்கிரமா நாட்டு மாடு வாங்கி வீட்டுத்தோட்டமும் அமைக்கப்போறேன். அதற்கான தைரியத்தைக் கொடுத்திருக்கு இந்தப் பயிற்சி.’’

நம்மாழ்வாரின் நளன்!
தன்னுடைய பண்ணைக்கு வரும் ஒரு நாள் விவசாயிகளுக்கு உணவு அளிக்காமல் அனுப்பக்கூடாது என்கிற எண்ணத்தில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார், மனோகரன். சாம்பார் சாதம், வரகுப் பொங்கல், தயிர்சாதம், பாசிப்பயறு பாயசம், வாழைப்பழம், தாம்பூலம் என்று கொடுத்து அசத்தினார். இந்த விருந்தை சமைத்தவர், அங்கப்ப பிள்ளை. இவர், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் உருவாக்கிய வானகத்தில் சமையல் செய்து வருகிறார் இவரின் கைவண்ணத்தில் சமைக்கப்பட்ட வரகுப் பொங்கல் அனைவரையும் ஈர்த்தது. அவரோடு பேசியபோது, “நம்மாழ்வார், அதிகம் விரும்பி சாப்பிடும் பானம்... தேங்காய்ப் பால். வானகத்தில் அய்யா இருந்தால், தேங்காய்ப்பால் அவசியம் இருக்கும்’’ என்றார்.
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள். மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
-பயணம் தொடரும்
ஜி.பழனிச்சாமி
படங்கள்: க.தனசேகரன்