Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

‘எங்க கோவணத்துல...கோட்டு தைக்காதீங்க!”

‘தொழில் வளர்ச்சி’ என்கிற பெயரில் விவசாயிகளிடம் இருந்து வளைக்கப்பட்ட நிலத்தில் உருவாகி நிற்கும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் புண்ணியத்தால் நிலத்தடிநீர் ரத்தமாக மாறிக்கிடப்பதையும், அது பயிர்களுக்குப் பாய்ச்சப்படுவதையும் பார்த்து நான் பதைபதைத்தை கடந்த இதழில் கோடிட்டிருந்தேன். ‘இதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவோம்’ என்று என்னை அழைத்து உட்கார வைத்த விவசாயி பற்றியும் சொல்லியிருந்தேன்.

இதற்கிடையில், தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு எதிராக ஒன்று திரண்டு டெல்லியைக் குலுங்க வைக்க வேண்டியிருந்ததால், அங்கே ஓடினேன். அந்தக் கதையை முதலில் பகிர்ந்துவிட்டு, பிறகு பெருந்துறை கதைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘விவசாயிகளைப் பாதுகாக்க, விவசாயிகள் வீட்டிலும் செல்வம் பெருக்கெடுத்து ஓடத்தான் நிலங்களை எடுக்கிறேன்’ என்கிறார் பிரதமர் மோடி. இது உண்மை என்றால், விவசாய நிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு விவசாயிகள் அனைவரையும் செல்வச் சீமான்களாக வாழ வைப்பதுதானே நியாயமாக இருக்கும். பிறகு, எதற்கு ஏழை விவசாயிகளின் ஒட்டுக்கோவணத்தைப் பறித்து, கார்ப்பரேட் கணவான்களுக்கு கோட் தைக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார் மோடி என்ற கேள்விக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை. இதனால், ரயில், மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள்!

1894-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அரசு தனக்குத் தேவைப்படும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளும். கொடுக்கும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை இழப்பீடு போதவில்லை என்றால், நீதிமன்றத்துக்குச் சென்று கூடுதல் இழப்பீடு மட்டும் கேட்கலாம். நிலம் பறிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. அது அந்நியன் ஆட்சி. இந்தியருக்கு எதிராக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், இன்று சாதாரண மக்களின் தோழன்... என டீக்கடை ரேஞ்சுக்கு இறங்கி வாக்கு வாங்கி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்த மோடி, அந்நிய சட்டத்தைவிட கொடூரமான சட்டத்தை இயற்றுவது எந்த வகையில் நியாயம்?

100 ஆண்டுகளாகப் போராடி, 120 ஆண்டு கால சர்வாதிகார சட்டத்தை முறியடித்து, 2013-ம் ஆண்டு புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில் சில சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள், விவசாயிகளின் உரிமை பாதுகாப்பனவாக இருந்தன. உதாரணமாக, ‘குறைந்தபட்சம் 70 சதவிகிதம் ஒப்புதல் இல்லாமல் நிலம் எடுக்கக் கூடாது. நகர்ப்புறமாக இருந்தால் அரசு மதிப்பீட்டுக்கு மேல் 2 மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 மடங்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடுத்து, நீதி கேட்கலாம். எடுக்கப்பட்ட நிலங்கள், 5 வருடங்கள் வரை குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வராவிட்டால், மீண்டும் விவசாயிகளிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்களின் சமூக பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பித்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

இது, நாடாளுமன்ற நிலைக்குழுவில், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி-யின் கருத்துக்களையும் கேட்டு, அவர்கள் கூறிய திருத்தங்களையும் இணைத்து, அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடும் விவசாய சங்கப் பிரதிகளின் ஒப்புதலோடும்தான் நிறைவேற்றப்பட்ட சட்டம். அன்று இருந்தது... மக்கள் பி.ஜே.பி. இன்றைக்கு இருப்பது... மோடியின் கார்ப்பரேட் பி.ஜே.பி. இதனால்தான் சட்டத்திலிருந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் காலி செய்து, அவசரமாக புதுச்சட்டம் இயற்றியிருக்கிறார்.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இந்தச் சட்டத்தை அவசர அவசரமாகத் திருத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்விக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன, கார்ப்பரேட்களின் களவானித்தனம். ஆங்கிலேய சட்டத்தில் பாசனப் பகுதிகளை எடுக்க வழிவகை இல்லை. கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றம் போகலாம். ஆனால், மோடியின் சட்டத்தின்படி, நீதிமன்றத்துக்குப் போக முடியாது. கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும். இல்லையேல், உதைத்து விரட்டப்படுவார்கள் என்கிறது.

இந்தக் கொடூர சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க, பி.ஜே.பி தவிர, அனைத்து அரசியல்கட்சிகளும் போராடின. ஆனால், கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை மோடி. உச்சக்கட்டமாக, மார்ச்-18 அன்று இந்தியா முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து நாடாளுமன்ற முற்றுகைப் போர் நடத்தினர். 4 நாட்கள், தெருவிலேயே படுத்து, சமைத்து, உண்டு, உறங்கி நங்கூரம் போட்டதுபோல அசையாமல் கிடந்தனர். அனைத்துக் கட்சிகள் போராட்டத்தை அசால்டாக எடுத்துக்கொண்ட மோடி அரசை, உலுக்கி எடுக்கத்தான் செய்தது விவசாயிகளின் போர்முழக்கம்.

‘பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் அழைக்கிறேன்’ என நான்கு நாட்கள் போக்குக் காட்டிவிட்டு, கடைசியில் விவசாயிகளை நேரடியாக சந்திக்கத் திராணியில்லாமல், ரேடியோவில் ‘மன் இ பாத்’ (மனதோடு உரையாடல்) என்று உலக மகாபொய்யை உருக்கமாக வாசித்தார் மோடி.

‘‘டெல்லிப் போராட்டத்தை ஒவ்வொரு மாநிலத்தின் தெருக்களுக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்ற உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்துவின் ஆலோசனையை ஏற்று, நான்கு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. 5-ம் நாள் 5 பேர் கொண்ட குழு, ஜனாதிபதியைச் சந்தித்து ‘விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை மேலும் நீடித்து கையெழுத்து இட வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற முடியாமல் போய், ஏப்ரல் 5-ம் தேதியுடன் காலாவாதியாக இருந்த அந்த அவசரச் சட்ட அரக்கனுக்கு, தன்னுடைய கையெழுத்து மூலமாக இப்போது மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் ஜனாதிபதி.
அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் ஆதரவாக நின்றுகொண்டு, அப்பாவி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதில் இந்திய அரசியல்வாதிகள் யாரும் விதிவிலக்கில்லை.

காறித்துப்பும் வாட்ஸ்அப்!

• ‘‘அண்ணே! இந்த நிலம் கையகப்படுத்தல்’னு சொல்றாங்களே, அப்படினா என்னண்ணே?’’

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

• ‘‘அடேய்! உன் நிலத்தை உன்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.’’

• ‘‘அண்ணே! கேக்காம எடுத்தா அதுக்குப் பேரு திருட்டுண்ணே.’’

• ‘‘அடே டங்காமாரி! நீயோ நானோ எடுத்தாத்தான் அது திருட்டு. அரசாங்கம் எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சித் திட்டம்டா.’’

• ‘‘நிலத்தை எடுத்து என்னண்ணே பண்ணுவாங்க.?’’

• ‘‘அம்பானி, அதானி மாதிரி பெரிய பெரிய முதலாளிங்க கம்பெனி ஆரம்பிக்கக் கொடுப்பாங்க. அவங்க கோடி கோடியா சம்பாதிப்பாங்க.

• ‘‘விவசாயம் செஞ்சு பொழச்ச பூமியை விட்டுட்டு நாம என்னண்ணே பண்றது?’’

• ‘‘நிலத்தை எடுத்துக்கிற கம்பெனியில வாட்ச்மேன் வேலைக்குச் சேர்ந்துட வேண்டியதுதான்.’’

• ‘‘இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளைக்காரன்கூட நிலத்துக்கு வரி மட்டும்தான் கேட்டான். இவங்க, நிலத்தையே கேட்குறாங்களே...’’

• ‘‘ம்ம்... உனக்கு தெரியுது... மோடிக்குத் தெரியலையே...’’

• கவுண்டமணி-செந்தில் பேசிக்கொள்வது போன்ற இந்த உரையாடல், அலைபேசி மூலமாக ‘வாட்ஸ்அப்’ மற்றும் இணையதளங்களில் கலக்கலாக வலம் வருகிறது.

 தூரன் நம்பி