
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!
மகசூலைத் தீர்மானிக்கும் சுண்ணாம்பு!
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

மண்ணின் மூன்று முக்கியமான பண்புகளில், ரசாயனப் பண்பு பற்றி பார்த்து வருகிறோம். கார அமில நிலைக்கு அடுத்ததாக முக்கியமானது, மண்ணில் உள்ள உப்பின் அளவு. பாறைகள் சிதைந்து மண்ணாக மாறும்போது ரசாயன மாற்றம் ஏற்படுவதால், சில உப்புகள் உருவாகும். அதிகமான மழை பொழிவுள்ள பகுதிகளில் அந்த உப்பு, மழைநீரில் கரைந்து மண்ணின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிடும். ஆனால், சுமாரான மழை பெய்யும் பகுதிகளில் இந்த உப்பு, மண்ணின் வேர் மண்டலத்திலேயே தங்கிவிடும். சூரிய வெப்பத்தினால் மண்ணில் உள்ள நீர், ஆவியாகும்போது நீரில் கரைந்திருக்கும் உப்பை மண்ணின் மேல் பகுதியிலேயே விட்டுச் செல்லும். இப்படி சேரும் உப்பு, பயிரின் வேர்பகுதியைச் சூழ்ந்து கொள்வதால், பயிர் சுவாசிக்க முடியாமல் தடுமாறுவதுடன், மற்ற சத்துக்களை எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
உப்பைக் குறைக்கும் இயற்கை உரங்கள்!
நமது பாசன நீர், உப்பாக இருந்தால், அதைப் பாய்ச்சும்போது நீர் ஆவியாகி, அதிலுள்ள உப்புகளும் மண்ணில் படிகின்றன. அடுத்து, கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த நிலங்களில் உப்புக் காற்றினால், உப்பு சிறிது சிறிதாக நிலத்தில் படியும். சில இடங்களில் இயற்கைச் சீற்றங்களால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல்நீர் நிலத்துக்குள் புகுவதாலும் மண்ணில் உப்பு படியலாம். இதுபோன்ற உப்பு மண் நிலங்களைத்தான் ‘உவர் நிலங்கள்’ என்கிறோம்.
உப்பு, மின்சாரத்தைக் கடத்தும் திறனுடையது. ஒரு மண்ணின் மின் கடத்தும் திறனின் அடிப்படையில்தான் மண்ணில் உள்ள உப்பின் அளவு கணக்கிடப்படுகிறது. மண்ணின் மின் கடத்தும் திறன் அதிகமாக அதிகமாக... ‘உப்பின் அளவு அதிகமாக இருக்கிறது’ என்று பொருள். உப்பின் அளவு, ஒரு ‘டெசிசைமன்’ மீட்டருக்கும் கீழே இருந்தால்... நல்ல மண். ஒன்று முதல் மூன்றுக்குள் இருந்தால்... மத்திய தர மண், மூன்றுக்கு மேல் இருந்தால்... உவர் மண். மண்ணில் இருக்கும் உப்பு, நல்ல மழை பெய்தால் கரைந்து வெளியே ஓடிவிடும். அதிக மழை பெய்யும் இடங்களில் மண் உவர் நிலமாக இருப்பதில்லை. மழை குறைந்த பகுதிகளில்தான், உப்பு அதிகமாக இருக்கிறது. நல்ல தண்ணீரை நிலத்தில் தேக்கி வடிகட்டுவதன் மூலமும், இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உப்பைக் குறைக்கலாம்.

சத்துக்களைக் கடத்தும் அயனிப் பரிமாற்றம்!
ரசாயனப் பண்புகளில் அடுத்தது, நேர்மின் அயனிப் பரிமாற்றம். இதைச் சுருக்கமாக, CEC (Cation Exchance Capacity) என்பார்கள். ஒரு பயிர், மண்ணில் உள்ள சத்துக்களை எடுப்பதற்கு இந்த அயனிப் பரிமாற்றம்தான் முக்கியக் காரணி. கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் இவைதான் முக்கியமான அயனிகள். இவை, இயற்கையாகவே மண்ணில் இருக்கும். நாம் பயிருக்கு சத்துக்களைக் கொடுக்கும்போது, இந்த அயனிகள் மண்ணில் இருந்து சத்துக்களுக்கும், சத்துக்களில் இருந்து மண்ணுக்கும் மாறி மாறி ஓடிக்கொண்டே இருக்கும். இதைத்தான் அயனிப் பரிமாற்றம் என்கிறோம். மண் நீர்க்கலவையின் மூலம் , பயிர், சத்துக்கள் என இவை இடம் மாறிக்கொண்டே இருப்பதால், சத்துக்கள் பயிருக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு மண்ணில் அயனிப் பரிமாற்றம் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ... அந்த மண்ணில் பயிர், சத்துக்களை எடுத்து சிறப்பாக வளரும். களிமண்ணில் இந்தப் பண்பு அதிகம் இருக்கும். அங்ககப் பொருட்களில் இந்த அயனிப் பரிமாற்றம் அதிகம் இருப்பதால், நிலத்தில் இயற்கை உரங்களை அதிகப்படுத்தினால் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
சுண்ணாம்பைச் சரி செய்யும் தழைச்சத்து!
மண்ணின் மகசூலைத் தீர்மானிப்பதில் சுண்ணாம்புக்கு முக்கிய பங்குண்டு. மண்ணில் சுண்ணாம்புச்சத்து அவசியம் இருக்க வேண்டும். அதேநேரத்தில் அளவாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு சுண்ணாம்பு எப்படியோ... அப்படித்தான் மண்ணுக்கும். வெற்றிலையில் சுண்ணாம்பு அதிகமானால் நாக்கு புண்ணாகிப் போவது போலத்தான், மண்ணில் சுண்ணாம்பு அதிகமானால் மண் புரையோடி, பயிர்களின் வளர்ச்சி தடைப்படும். . ‘கால்சியம்-கார்பனேட்’ எனப்படும் இந்த சுண்ணாம்புச் சத்து மண்ணில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஓர் எளிய சோதனை இருக்கிறது.
நிலத்து மண்ணை கொஞ்சம் போல் எடுத்துக் கொண்டு, 10 சதவிகிதம் ஹைட்ரோ-குளோரிக் அமிலத்தை அதில் ஊற்ற வேண்டும். மண் நுரைத்துக் கொண்டு வந்தால், மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கிறது எனவும், சுமாராக நுரைத்தால் மத்திய தரத்தில் இருக்கிறது எனவும் பொருள். சுண்ணாம்பு அதிகம் இருக்கும் மண்ணில், கார அமில நிலை அதிகமாகும். பயிரானது சத்துக்களை எடுக்க இது இடையூறாக இருக்கும்.
சரியான அளவில் இருந்தால் மண் பொலபொலப்பாக இருப்பதுடன் சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கும் நிலங்களில் காரத்தன்மை உண்டாக்காத உரங்களை இட வேண்டும். இதற்கு தழைச்சத்து அதிகமுள்ள உரங்களே சிறந்தவை. தழைச்சத்து என்றதும் யூரியாவைப் போடக்கூடாது. அங்ககக் கரிமம் அதிகமுள்ள இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம்.
மண்... மணல் வித்தியாசம்!
மணலில் மண்துகள்களின் இடைவெளி அதிகமாக இருக்கும். தண்ணீரை வேகமாக உறிஞ்சும். ஆனால், பிடித்து வைத்துக்கொள்ளும் திறன் இருக்காது. இதேபோலத்தான் சத்துக்களையும் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனும் இருக்காது. இதனால்தான் மணலை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதில்லை. துகள்களின் அளவை வைத்து மணலை வகைப்படுத்துகிறார்கள். 0.05 மில்லி மீட்டரில் இருந்து 2 மில்லி மீட்டர் அளவில் துகள்கள் இருந்தால், அதற்கு பெயர் மணல். 0.002 முதல் 0.05 வரைக்கும் இருந்தால் அதற்குப் பெயர் வண்டல். 0.002 மில்லி மீட்டரை விடக் கீழே இருந்தால் அது களிமண் என தரம் பிரிக்கிறார்கள்.

களிமண் அதிகத் தண்ணீரையும், சத்துக்களையும் பிடித்து வைக்கும் திறன் வாய்ந்தது. பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றாது. இதனால் நிலத்தில் தண்ணீர் தேங்கும். சில நேரங்களில் பயிர்கள் அழுகும் வாய்ப்பும் உள்ளது. மணல்சாரி நிலங்களில் தண்ணீர் தேங்காது. களியும் மணலும் சேர்ந்தது வண்டல் அல்லது இரும்பொறை மண். உண்மையில் இந்த மண்தான் விவசாயத்துக்கு ஏற்றது. ‘நதிக்கரை நாகரிகம்’ செழித்து வளர காரணம்... அங்கு மணலும், களியும் சரி விகிதத்தில் கலந்த இரும்பொறை மண் இருந்ததுதான். இதற்குத் தண்ணீரையும், சத்துக்களையும் பிடித்து வைக்கும் ஆற்றலும் உண்டு. வெளியேற்றும் திறனும் உண்டு.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்