Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 06

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

சாகுபடிக்கு உதவும் சத்துக்கள்!

ரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

மண்ணுக்கு மரியாதை! - 06

விதையை மட்டும் போட்டால் விளைச்சல் கிடைக்காது!

ஒரு குழந்தை வளர்வதற்கு ஊட்டச்சத்துக்கள் எத்தனை அவசியமோ, அப்படித்தான் பயிர்களும். ஒரு பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை சத்துக்கள். ‘பதினாறும் (செல்வங்கள்) பெற்று பெருவாழ்வு வாழ்’ என மனிதர்களை வாழ்த்துவதைப் போல... 16 வகையான சத்துக்கள் இருந்தால்தான் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும். பயிரின் வாழ்க்கைச் சுழற்சி முழுமையடைய இந்த 16 சத்துக்களும் அவசியம். இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும், பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் குறையும். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்’ மேம்போக்கு மனநிலை விவசாயத்துக்கு சரிப்பட்டு வராது. நாம் என்ன கொடுக்கிறோமோ... அதைப் பொருத்துதான் பயிர்களும் மகசூல் கொடுக்கும். விதையை மட்டும் போட்டு விட்டால் விளைச்சல் கிடைத்து விடாது. வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டத்தையும் கொடுக்க வேண்டும்.

தனித்தனி சத்துக்கள்!

மனிதர்களுக்கு பல், எலும்பு வலுவாக கால்சியம்; உடல் உறுதியாக இரும்புச் சத்து... என ஒவ்வொன்றின் ஆரோக்கியத்துக்கும் பின்புலமாக சில சத்துக்கள் இருப்பது போலத்தான் பயிர்களுக்கும். வேர், இலை, தண்டு, காய், கனி என ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சில சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆனால், நாம் அவற்றைப் பற்றிய புரிதல் இல்லாமல், என்.பி.கே என்ற தழை, மணி, சாம்பல் சத்துகொண்ட கலவையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இந்தச் சத்துக்களை மட்டும் இதுவரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதன் விளைவு, மண்ணில் இருந்த நுண்ணூட்டச் சத்துக்கள் காணாமல் போய் விட்டன.

இயற்கை கொடுத்த இலவச சத்துக்கள்!

நாம், பணம் செலவழித்து மண்ணில் உரம் இடுகிறோம். ஆனால், சில இலவச உரங்களை இயற்கையே மண்ணில் உண்டாக்கியிருக்கிறது. கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவைதான் அந்தச் சத்துக்கள். இவற்றை ‘முதன்மைச் சத்துக்கள்’ என்கிறது, மண்ணியல். காற்றில் இருந்து கார்பனும், நீரில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை பயிர் தானாக எடுத்துக்கொள்ளும். இதற்கு அடுத்த நிலையில் உள்ளவை ‘பேரூட்டச் சத்துக்கள்’. இதில் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரண்டு வகைகள் உள்ளன.

என்.பி.கே எனப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ்... அதாவது தழை, மணி, சாம்பல் சத்துக்கள் ‘முதல்நிலைச் சத்துக்கள்’ எனவும்; கால்சியம், மெக்னீசியம், சல்பர் (கந்தகம்) ஆகியவை ‘இரண்டாம் நிலைச் சத்துக்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை... இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், போரான், குளோரின், மாலிப்டினம் என்ற நுண்ணூட்டச் சத்துக்கள்.

பலதும் சேர்ந்ததுதான் பயிர்ச் சத்து!

பயிருக்கு அதிகளவில் தேவைப்படும் சத்துக்களை ‘பேரூட்டச் சத்துக்கள்’ எனவும், குறைவாகத் தேவைப்படும் சத்துக்களை ‘நுண்ணூட்டச் சத்துக்கள்’ எனவும் அழைக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் நாம் உண்ணும் சாதம், குழம்பு, ரசம் போன்றவை பேரூட்டச் சத்துக்கள். அவற்றின் சுவையை அதிகப்படுத்தும், உப்பு, ஊறுகாய் போன்றவை நுண்ணூட்ட சத்துக்கள். பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்கள் கலந்த கலவைக்கு ‘பயிர்ச் சத்துக்கள்’ என்று பெயர். இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்தால்தான், பயிர் சிறப்பாக வளரும். இதில் ஏதாவது ஒன்று குறையும்போது, அந்தப் பற்றாக்குறையை ஏதாவது ஒரு வகையில் பயிர் வெளியே காட்டும்.

முதல் நிலை பேரூட்டச் சத்துக்களும் அதன் பயன்களும்!

தழைச்சத்து!

தரைக்கு மேல் உள்ள தாவரப்பகுதிகளான தண்டு, இலை, பூ, காய், கனி ஆகியவற்றின் அளவைப் பெரிதாக்குவதுடன், இலையைப் பசுமையாக வைத்துக் கொள்ள தழைச்சத்து உதவுகிறது. பயிரின் வளர்ச்சிக்கு இந்தச்சத்து இன்றியமையாதது. பயிரானது தழைத்து வளர உதவுவதால்தான் ‘தழைச்சத்து’ என்கிறார்கள்.

மண்ணுக்கு மரியாதை! - 06

மணிச்சத்து!

தரைக்குக் கீழே உள்ள வேர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது, மணிச்சத்து. இனப்பெருக்க உறுப்புகளான பூக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

சாம்பல் சத்து!

காய், கனி, கிழங்கு மற்றும் பயிர்களின் திரட்சி மூலம் தரத்தை மேம்படுத்த உதவுவதுடன், பயிர்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது, சாம்பல் சத்து.

இரண்டாம் நிலை சத்துக்கள்!

கால்சியம் (சுண்ணாம்பு)!

ஒரு தாவரத்தில் முதுகெலும்பாக இருக்கக்கூடியவை செல்கள்தான். அந்த செல் உருவாவதில் கால்சியத்தின் பங்கு இன்றியமையாதது. ஒரு செடி சீரான வளர்ச்சி இல்லாமல், ஏதாவது ஒரு பகுதி குட்டையாகவும், மற்றொரு பகுதி வளர்ந்தும் ஒழுங்கற்ற வளர்ச்சியில் இருந்தால்... ‘கால்சியம் குறைபாடு உள்ளது’ எனப் பொருள்.

மெக்னீசியம்!

தாவரத்தின் இலைப்பகுதிதான் உணவு தயாரிக்கும் இடம். இலைகளில் பச்சையத்தை உருவாக்கும் குளோரோபிள் உருவாவதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. ஒரு பயிருக்கு போதுமான அளவில் இந்தச்சத்து கிடைக்காவிட்டால், பயிரில் ஒளிச்சேர்க்கை நடக்காது. அதாவது பயிரை சமைத்து, சாப்பிட முடியாது. எனவே வளர்ச்சி பாதிக்கப்படும்.

கந்தகம்!

தாவரங்களில் புரதச்சத்தை அதிகப்படுத்த கந்தகம் தேவைப்படுகிறது. எண்ணெய் தாவரங்கள் அனைத்துக்கும் கந்தகம் இட்டால் எண்ணெயில் புரதச்சத்து அதிகமாகும். வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துவதுடன் பயிர்களில் வேர் முடிச்சுகளை உருவாக்கவும் கந்தகம் அவசியம்.

சத்துக்கள் ஆய்வு!

ஒரு செடியைப் பிடுங்கி, அதைக்காய வைத்து காய்ந்த பகுதியை ஆய்வு செய்து பார்த்தால், அதில் 90 சதவிகிதம் நீர்தான் இருக்கும். அதாவது பிடுங்கப்பட்ட செடியின் எடை, காய்ந்த பிறகு 90 சதவிகிதம் குறைந்திருக்கும். மீதமுள்ள 10 சதவிகிதத்தில் கார்பன் 44%, ஹைட்ரஜன் 6%, ஆக்சிஜன் 42%, நைட்ரஜன் 2%, பாஸ்பரஸ் 1%, கந்தகம் 0.5%, பொட்டாஷ் 2%, கால்சியம் 1.5%, மெக்னீசியம் 0.5%, நுண்ணுயிரிகள் 0.5% இருக்கும். இதில் எது கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறதோ, அதை வைத்துதான் பயிரின் தேவையைக் கணிக்க வேண்டும்.

கரிசல் மண்தான் அதிகம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை... கரிசல்மண்தான் அதிகப் பரப்பில் இருக்கிறது. இரண்டாவது செம்மண், அடுத்து வண்டல் மண். குறைந்தளவில்தான் களர் மண் நிலங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை செம்மண் அதிக பரப்பில் இருக்கின்றது.

 நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

 படம்: ர.அருண் பாண்டியன்