Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

பறிபோன சொந்த நிலம்...

பலன் தராத வந்த நிலம்...

வாட்ச்மேன் வேலை பார்க்கும் முன்னாள் விவசாயிகள்!

சிறப்புப் பொருளாதார மண்டலம் விவசாயிகள் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் கண்டு வருவதற்காக மீண்டும் பெருந்துறை ‘சிப்காட்’ வளாகத்துக்குப் பயணித்தோம். 2,700 ஏக்கர், ஏறக்குறைய 125 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் சிப்காட் வளாகத்துக்கு, நான்கு புறமும் வாசல் என்பதால் இம்முறை வேறு திசையிலிருந்து நுழைந்தோம்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

உச்சிவெயில் மண்டையைப் பிளக்கும் மதியவேளை. ராட்சத ஆலைகள் விடும் பெரும் சுடுமூச்சிலிருந்து கிளம்பும் கரிய புகை மண்டலங்கள் மழை மேகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தன. பாலில் கலப்படம், உயிர் காக்கும் மருந்தில் கலப்படம், உண்ணும் உணவில் கலப்படம்... எனக் கேள்விபட்டிருக்கிறோம். இங்கே காற்றுமண்டலமே கரிய புகைத்தூசுகளால் மாசடைந்து கிடக்கிறது. இந்த அநியாயத்தைப் பார்த்து அரை நிமிடம், சிந்தனை சிறைப்பட்டு விட்டது. அதற்குள் பாதையில் சிதைந்து கிடக்கும் பீங்கான் துண்டுகள் எங்கள் வாகனத்தின் டயரை பதம் பார்த்து விட்டன.

கழிவறைச் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை, உடைந்து போன கழிவுகளை ஆங்காங்கே சிதற விட்டதால் வந்த வினை. சில சமயங்களில் இரவு நேரங்களில் பாதையிலும், சும்மா கிடக்கும் நிலங்களிலும் கழிவுகளை சிதற விடுவதோடு, நெருப்பு வைத்து, மேலும் கூடுதலாக வளிமண்டலத்தை மாசடையச் செய்வதாகச் சொல்கிறார்கள். பலமுறை புகார் கூறியும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வழக்கம் போல கண்டு கொள்வதே இல்லையாம்.

நாங்கள் சென்ற வாகனத்துக்கு என்று தனியாக சாரதி இல்லை என்பதால் நானும் நண்பர் ‘காஞ்சிக்கோவில்’ கணேசமூர்த்தியும், பஞ்சர் ஆன டயரை மாற்றிக் கொண்டிருந்தபோது... வியர்க்க, விறுவிறுக்க ஓடி வந்தார், ஒரு பெரியவர்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘‘யாரு நீங்க? இங்க என்ன பண்றீங்க?’’ கேள்வியில் அதிகாரம் தூள் பறந்தது.

‘‘சொல்றோம்... அதுக்கு முன்ன நீங்க யாருனு சொல்லுங்க?’’ பதிலைக் கேள்வியாக வீசினோம்.

‘‘நான்தான் இந்த தாட்கோ வளாகத்துக்கு வாட்ச்மேன்’’ வார்த்தைகள் கம்பீரமாக வந்து விழுந்தன.

“விவசாயிகளின் நலனுக்காகத்தான் நிலம் எடுக்கிறேன்னு மோடி சொல்றாரு. 20 வருஷத்துக்கு முன்ன விவசாயிககிட்ட நிலத்தை எடுத்துத்தான் இந்த வளாகத்தை உருவாக்கியிருக்காங்க. அப்படி நிலம் கொடுத்த விவசாயிங்க இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சுக்கறதுக்காக வந்திருக்கோம்” சொல்லி முடிக்கும் முன்பே, பெரியவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.

“அந்த சோகத்த எதுக்கு தம்பி இப்போ நினைவுபடுத்துறீங்க” என்றபடியே சிறப்புப் பொருளாதர மண்டலம் தங்கள் வாழ்வாதாரத்தை உருக்குலைத்த கதையை, அந்தப் பெரியவர் சொல்லச் சொல்ல பேரதிர்ச்சி எங்களைத் தாக்கியது.

“நாங்க அண்ணன் தம்பிக மூணு பேர். எங்க குடும்பத்துக்கு கடப்பம் மடை கிராமத்துல 12 ஏக்கர் நிலம் இருந்துச்சு. 24 மணி நேரமும் வத்தாத கிணறு.

300 அடி ஆழத்துல ஊத்துத் தண்ணி. வாழை, சேனை, மிளகாய், மஞ்சள்னு தோட்டத்துல எப்பவும் வெள்ளாமை இருந்துகிட்டே இருக்கும். வறட்சினா என்னன்னு கூட எங்களுக்குத் தெரியாது. 95-ம் வருஷம் திடீர்னு ஒருநாள் எங்க தோட்டத்துக்கு வந்த அரசாங்க அதிகாரிங்க, “உங்க நிலத்த அரசாங்கம் எடுத்துக்கிச்சு (பிடுங்கிக்கிச்சு). உங்க நிலத்துக்கான விலையா 20 லட்ச ரூபாய் பேங்க்ல போட்டிருக்கோம். எதுத்து பேசுனா, அதுவும் கிடைக்காது”னு சொன்னாங்க. இதுமாதிரி எங்க கிராமத்துல ரொம்ப பேரு நிலத்தை எடுத்துக்கிட்டாங்க.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

ஊரே எழவு விழுந்த வூடு கணக்கா ஆகிப்போச்சு. முட்டை ஓட்டுல இடிவிழுந்த கணக்கா எங்க குடும்பமே ஒடிஞ்சு போச்சு. எங்க குடும்பத்துல யாருக்கும் பெரிசா படிப்பறிவு இல்ல. விவசாயத்த தவிர வேற எந்த வேலையும் தெரியாது. திக்குத் தெரியாத வனாந்தரத்துல இறக்கி விட்ட மாதிரி ஆகிப்போச்சு எங்க பொழப்பு. பெறகு கொஞ்சம் கொஞ்சமா மனசைத் தேத்திக்கிட்டு, அந்தப் பணத்தை எங்க அப்பாவுக்கும் சேர்த்து நாலு பங்கா பிரிச்சதுல ஆளுக்கு 5 லட்ச ரூபாய் கிடைச்சது. அந்த பணத்துல கடன், குடும்பச் செலவு போக, பக்கத்துல இருக்கற காசிபிலாம்பாளையத்துல மூணு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செஞ்சேன். 750 அடி ஆழத்துல ஊத்து கிடைச்சுது. அத வெச்சுக்கிட்டு பொழப்புத்தனம் நடந்துச்சு. பட்டகால்லயே படும்... கெட்டக் குடியே கெடும்னு சொல்ற மாதிரி அதுவும் நிலைக்கல. திடீர்னு ஒரு நாள் கிணறு ரத்தம் ரத்தமாக வாந்தி எடுக்க ஆரம்பிச்சது. பக்கத்துலயே போக முடியல... அந்தளவுக்குக் கெட்ட நாத்தம். வேற வழியில்லாம விவசாயத்தை விட்டுட்டேன். இப்ப அதுல மானாவாரியா சோளம் போட்டிருக்கேன். ஆடு, மாடுகள வெச்சு ஜீவனம் நடக்குது” என்று கண்ணீர் வழியச் சொன்ன பழனிச்சாமி என்ற அந்தப் பெரியவர், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி “அவன்கிட்டயும் ஒரு வார்த்தை பேசுங்க” என்று சொல்லிக்கொண்டே இரு சக்கர வாகனத்தில் சிப்காட் வளாகத்துக்குள் நுழைந்த இருவரை விரட்டிக் கொண்டே ஓடினார்.

“எம்பேரு சுப்பிரமணிங்க... அவரு (பழனிச்சாமி) என்னோட அண்ணன்தானுங்க. 20 வருஷதுக்கு முன்ன கரும்பாட்டம் கம்பீரமாக இருந்த என்ற பொழப்பு, இப்ப குதிரைவாலி கணக்கா குறுகிப் போச்சுங்க. எங்க அண்ணன் கொஞ்சம் புத்திசாலித்தனமா, வந்த பணத்துல நிலத்தை வாங்கிப் போட்டுட்டாரு. ஆனா, நான் பேங்க் மேனேஜரு பேச்சைக் கேட்டுப் பணத்தை பேங்க்லயே டெபாசிட் பண்ணிட்டேனுங்க. பொண்ணு கல்லூரியில படிக்குறா. பையன் +2 படிக்கிறான். பேங்க்ல வர்ற வட்டி பிள்ளைக படிப்புச் செலவுக்கே காணல. வயித்துப் பொழப்புக்கு ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு இருக்கேன்” வலியில் தோய்ந்து வருகின்றன வார்த்தைகள்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அன்றைக்கு அரசு எடுத்த இவர்களின் 12 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு, 20 கோடி ரூபாய். நாட்டுக்காக, தொழில் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்த சுப்பிரமணியம் போன்றவர்கள் இங்கே ஏராளம். கம்பீரமான சுயச்சார்பு வாழ்க்கை வாழ்ந்த அந்த கிராமத்து முன்னாள் விவசாயிகள், தற்போது இதயத்தில் சோகத்தைச் சுமந்துக்கொண்டு, கனவுகளில் கலப்பைப் பிடித்துக்கொண்டு, நடைபிணங்களாக வாழ்கிறார்கள். தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி, ஆடு, மாடுகளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின், கைகளை முறுக்கி நிலத்தைப் பறித்து நடுவீதியில் தள்ளியது, வெள்ளையர்களோ, கொள்ளையர்களோ இல்லை. இவர்களிடம், அதிகாரப் பிச்சை வாங்கிய அரசியல்வாதிகள்தான்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருபது ஏக்கருக்கு சொந்தமான விவசாயிகள் இன்று சிப்காட் வளாகத்தில் டீ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கண்ணீர் கதையை அடுத்த இதழில் பார்ப்போம்

 தூரன் நம்பி

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன்