பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
வாடகைக்கு வரும் ஆடு, மாடுகள்!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

கல்லூரி மாணவர் விஷ்ணு, பெயின்டர் ராஜசிவமணி, பொதுப்பணித்துறை ஊழியர் ராமநாததுரை, காவல்துறையில் பணியாற்றும் அவருடைய மனைவி சித்ராதேவி, பாதாம் பால் தயாரிப்பாளரான சியாமளா, டாஸ்மாக் ஊழியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர் அருள் ஆகியோரை ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுத்து... திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் அருகில் உள்ள செட்டியப்பட்டி கிராமம், சிறுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் முன்னோடி இயற்கை விவசாயி ஜானகிராமன் பண்ணைக்கு அழைத்துச் சென்றோம். இப்பயணத்தில் ராமநாததுரையின் குழந்தைகள் இருவரும் ஒருநாள் விவசாயிகளாகப் பங்கேற்றது, கூடுதல் சிறப்பு!
காலை 10 மணிக்கு ஜானகிராமனின் பண்ணைக்குள் நுழைந்தோம். முதல்நாள் வரை வாட்டி எடுத்த கோடை வெயில், அன்று மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டது. சிறுமலை மீது மேகங்கள் தவழ்ந்து, மழை வருவதற்கான அறிகுறியுடன் ரம்மியமாகக் காட்சியளித்தது, பண்ணை. சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்ற ஜானகிராமன், உடனடியாகப் பயிற்சியைத் துவக்கினார்.
“முதல்ல கிடைமாடுகளைப் பாத்துட்டு வந்துடலாம். அதுக மேய்ச்சலுக்கு போற நேரம்’’ என்றபடி பண்ணையின் கிழக்கு மூலையில் மலையடிவாரத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் மேய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. ‘‘இயற்கை விவசாயப் பண்ணைக்கு அடிப்படை, மாடுகள். அதிலும் நாட்டு மாடுகள் அவசியம். இதெல்லாம் என்னோட மாடுகள் இல்லை. இவரோட மாடுகள்” என்று இளங்கன் என்பவரை அறிமுகப்படுத்தினார்.
“பகல்ல மலைப்பகுதியில மேய்ச்சலுக்கு விட்டு, ராத்திரியில இங்க அடைச்சிடுவாரு. இதோட சாணம், கோமியத்தை நாங்க பயன்படுத்திக்கிறோம். மொத்தம் 60 மாடுகள் இருக்கு, ஒரு மாட்டுக்கு தினமும் 2 ரூபாய் கொடுத்திடுவேன். தினமும் சாணத்தை எடுத்து ஓரமாப் போட்டு, அது மேல, இலைதழைகளை வெட்டி போட்டுடுவாரு. இதுக்காக தினமும் 20 ரூபாய் கொடுத்திடுவேன். இப்படி ஒரடுக்கு சாணம், ஓரடுக்கு இலைதழைனு போட்டு, அதுக நல்லா மட்கியதும் எடுத்து பயிர்களுக்கு உரமா கொடுக்குறோம்” என்று சொன்னார் ஜானகிராமன்.
“நாட்டு மாட்டுக்கும், கலப்பின மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?” முதல் கேள்வியை வீசினார், விஷ்ணு. அவருக்கு பதிலளிக்கும் விதமாக நாட்டு மாடுகளின் பெருமைகளைச் சொன்ன ஜானகிராமன், மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு, ஆட்டுப் பட்டி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

“இங்க மொத்தம் 70 ஆடுகள் இருக்கு. இதுகளும் என்னோடது இல்லை. என் பண்ணை ஊழியரான கருப்பையாவோடது. பகல்ல வெளிய மேய்ச்சலுக்குப் போயிட்டு, இரவுல வயல்ல கிடை அடைச்சிடுவாங்க. ஆட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்துடுவேன். ஆடுகள் சுழற்சி முறையில தோட்டம் முழுக்க நிக்கிறதால, மண்ணுக்கு நல்ல ஊட்டம் கிடைச்சிடுது. இது என்னோட பண்ணையா இருந்தாலும், எல்லாத்தையும் நானே செய்து, லாபத்தை எடுத்துக்கணும்னு நினைக்கல. பண்ணையில இருக்கவங்கதான் ஆடு, மாடு, கோழி எல்லாம் வளக்குறாங்க. அதுக குடிக்கத் தேவையான தண்ணி, தங்க இடம் எல்லாம் நான் கொடுத்துடுறேன். அதுகளோட கழிவுக, நிலத்துக்கு உரமாகிடுது, மத்தபடி அதுக மூலமா வர்ற வருமானம் முழுக்க அவங்களுக்குத்தான்” என்றார், விவசாயத்தில் புதுமையைப் புகுத்திய பெருமையோடு.
அடுத்ததாக, கத்திரி பயிரிட்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். ‘‘இதுல கொடி காய்கறியான பாகல், புடல் சாகுபடி செஞ்சிருந்தோம். இப்ப ஓய்ஞ்சுடுச்சு. பந்தலுக்கு கீழ் பகுதியில கொஞ்சம் கத்திரி, தக்காளி, கீரைகளை சாகுபடி செஞ்சிருக்கேன். உங்களுக்காகத்தான் கத்திரிக்காயை அறுவடை செய்யாம விட்டிருக்கேன். எல்லோரும் காயைப் பறிங்க” என்றார்.
கத்திரிக்காயைக் கண்டுபிடிங்க..!
‘‘இது என்ன செடியில வெறும் இலை மட்டும்தான் இருக்கு... காயே இல்லை” கவலையோடு கேட்டார், சித்ராதேவி.
‘‘அம்மா... கத்திரிச் செடியை ஒரு பக்கமா சாய்ச்சு பாருங்க” என்றதும், ஒரு செடியை சாய்க்கவும், தொங்கிக் கொண்டிருந்தன ஏழெட்டு காய்கள். தொடர்ந்து ஆர்வமாகி அறுவடையில் இறங்கினர், ஒருநாள் விவசாயிகள். குழந்தைகளும் ஆர்வமுடன் செடிகளுக்குக் கீழே கத்திரிக்காயைத் தேட ஆரம்பித்தனர். ஒருவழியாக அறுவடை முடித்தவர்களுக்கு பட்டை அவரை, தக்காளி, பொன்னாங்கன்னி, பருப்புக்கீரை, மணத்தக்காளிக் கீரை என ஒவ்வொன்றாக காட்டி, அதன் சாகுபடி முறைகள் குறித்துச் சொல்லிக்கொடுத்த ஜானகிராமன், ஒருநாள் விவசாயிகளுக்கு எழுந்த சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.
அதற்குள் மணி 12 ஆனதும், ‘‘வாங்க, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிட்டு, செய்முறைப் பயிற்சிக்குள்ள போகலாம் என்று, அனைவரையும் குடிலுக்கு அழைத்து வந்து, கம்பங்கூழ், பப்பாளி, தேங்காய் சில்லு, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தார். ரசித்து ருசித்தவர்கள், கொஞ்சம் ஓய்வெடுத்தனர்.
இப்படித்தான் நடணும் வெங்காயம்!
ஓய்வுக்குக் பிறகு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைத் தயாரிக்கும் முறைகள் செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அடுத்து, வாழையில் ஊடுபயிராக சின்னவெங்காயம் நடவு வேலை ஆரம்பமானது. இரண்டு மாத வயதுடைய வாழைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து நடவுக்குத் தயாராக இருந்தது. “இந்தக் கரையில, வெங்காயத்தை வெச்சு, மெதுவா ஒரு அழுத்து அழுத்துங்க” என பண்ணை ஊழியர்கள் கற்றுக்கொடுக்க... முதல் ஆளாக களத்தில் குதித்தார், சியாமளா. அவரைத் தொடர்ந்து குழாய்ச்சட்டையை மடித்துக் கொண்டு, அனைவரும் வரிசையில் நின்று நடவு செய்ய ஆரம்பித்தனர். ‘‘வெங்காயம் நடவு செய்யும்போது, உருண்டையான பக்கம் கீழயும், கூம்பு மாதிரி இருக்கிற பகுதி மேலயும் வெச்சு நடணும், காயை ரொம்ப ஆழமா நடக்கூடாது” என வகுப்பெடுத்தார் ஜானகிராமன். சேற்றில் கால் பதித்து, தங்கள் கையால் நடவு செய்த அந்தத் தருணத்தில் அத்தனை முகங்களிலும் தெரிந்தது ஆயிரம் சூரியன் ஜொலிப்பு.
வட்டப்பாத்தி, அடர் நடவு மா சாகுபடி, மூடாக்கு வாழை, இயற்கை திராட்சை, வல்லாரை சாகுபடியுடன், சிறப்பு விருந்தினரின் கலந்துரையாடல் ஆகியவை அடுத்த இதழில்.
-பயணம் தொடரும்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்