Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 07

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

பழ வெடிப்பை ஏற்படுத்தும் போரான்!

ரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என நம் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

மண்ணின் ரசாயனப் பண்புகளில் பயிர்சத்துக்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதன்மை சத்து, இரண்டாம் சத்துக்களைத் தொடர்ந்து நுண்ணூட்டச் சத்துக்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மண்ணுக்கு மரியாதை! - 07

பொதுவாக, ‘உரம் போட்டுவிட்டால் போதும், பயிர் வளர்ந்து விடும்’ என நினைக்கும் விவசாயிகள்தான் அதிகம். உரம் போட்டு விட்டால் மட்டும் பயிர் வளர்ந்து விடாது. பயிருக்கு எந்தச் சத்து பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை அறிந்து உரமிட வேண்டும். அதிலும் குறிப்பாக நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறையை சரிசெய்யாவிட்டால் மகசூல் இழப்பு ஏற்படும். ‘மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே... அது நூறு சதவிகிதம் நுண்ணூட்டச் சத்துக்களுக்குப் பொருந்தும். துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, போரான், மாலிப்ட்டினம் ஆகியவை பயிர்களுக்கு மிகவும் குறைந்த அளவு தேவைப்படுவதால், இவைகளை நுண்ணூட்டங்கள் என அழைக்கிறோம். மண்ணில் இரும்பைத் தவிர மற்ற நுண்ணூட்டச் சத்துக்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. நுண்ணூட்டங்களில் ஏழு சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் இன்றியமையாதவை.

இரும்பு!

தாவர செல்கள் சுவாசிப்பதற்கும், பச்சையத்தை உண்டாக்குவதற்கும் இரும்புச் சத்து உதவுகிறது. தாவரங்களின் இலைகள் வெளிறியோ, மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால், இரும்புச்சத்துக் குறைபாடு என பொருள்.

துத்தநாகம்!

இலைகள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசிக்கவும், பச்சையம் தயாரிக்கவும் உதவியாக இருக்கிறது, துத்தநாகச் சத்து. ஒரு பயிருக்குத் தேவையான மணிச்சத்தில் நூறில் ஒரு பங்கு துத்தநாகமாக இருக்க வேண்டும். அதேபோல அளவுக்கு அதிகமான இயற்கை எரு இடப்படும் வயல்களில் பயிருக்குத் தேவையான துத்தநாகம் கிடைக்காது. இது, மாவுச்சத்து உருவாக முக்கிய பங்காற்றுகிறது. பூ பூக்கவும், காய் காய்க்கவும், அது உதிராமல் பாதுகாக்கவும் துணை செய்கிறது. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை பயிர்வளர்ச்சி ஊக்கியான, ‘இன்டோல் அசிட்டிக் ஆசிட்’ மண்ணில் உற்பத்தியாக துத்தநாகச் சத்து துணைபுரிகிறது.

மண்ணுக்கு மரியாதை! - 07

மாங்கனீசு!

தழைச்சத்துப் பயன்பாட்டை அதிகப்படுத்தும் மாங்கனீசு, பச்சையம் உற்பத்திக்கும் அவசியமாகிறது. இரும்புச் சத்தை பயிர்கள் பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. கார்போ-ஹைட்ரேட்டை கார்பன்-டை-ஆக்சைட் ஆகவும், தண்ணீராகவும் சிதைக்க உதவியாக இருக்கிறது. பயிர்கள் சுவாசிக்கவும் இது உறுதுணையாக இருக்கிறது.

போரான்!

தோட்டக்கலைப் பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது, போரான் சத்து. தோட்டக்கலைப் பயிர்களில் பூக்கள், காய்கள், கனிகள் உருவாக போரான் சத்து அத்தியாவசியமானது. புதிய செல்கள் உருவாகப் பயன்படுகிறது. மகரந்தத்தூள், விதைகள் உருவாகப் பயன்படுகிறது.

போரான் சத்து குறைந்தால், பழங்கள் வெடிக்கும். மாதுளை, தக்காளி உள்ளிட்ட பழங்களில் போரான் குறைபாட்டால்தான், வெடிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. பப்பாளிப்பழம் சுருங்கிப் போவதற்கும் போரான் குறைபாடுதான் காரணம். மண்ணில் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகுவதில் இது பெரும் பங்காற்றுகிறது. சுண்ணாம்புச் சத்தை பயிர் எடுத்துக் கொள்வதற்கும், சாம்பல் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதற்கும் இது தேவை. எருக்குச் செடியானது, போரான் சத்துக்களை முழுக்க இழுத்து செழிப்பாக வளரும். எனவே எங்கெங்கு எருக்கு அதிகமாக இருக்கிறதோ... அங்கு போரான் பற்றாக்குறை இருக்கும். முள்ளை முள்ளால் எடுப்பதுப் போல, போரான் குறைபாட்டை நிவர்த்தி செய்ய, எருக்கை வெட்டி செடிகளுக்குப் போடலாம்.

காப்பர் (செம்பு)!

பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது, காப்பர் சத்து. தாவரத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது. பழம் மற்றும் காய்கறிகளில் நிறம், சுவை, மணம் உருவாக முக்கியப் பங்காற்றுகிறது. இது, இனப்பெருக்கத்துக்குத் தேவையான சத்து. வளரும் பயிரின் நுனிப்பகுதி காய்வதைத் தடுக்கிறது. பயிர் சுவாசிக்கவும், இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளவும் இது அவசியம் தேவை.

மண்ணுக்கு மரியாதை! - 07

மாலிப்ட்டினம்!

காப்பர், மாங்கனீசு, துத்தநாகம் ஆகியவை மண்ணில் அதிகமாக இருந்தால், அதனால் ஏற்படும் தீங்கை மாலிப்ட்டினம் சரி செய்கிறது. வேர்முடிச்சுகளில் இருக்கக்கூடிய ரைசோபியம், காற்றிலுள்ள நைட்ரஜனை இழுத்து தழைச்சத்தைச் சேகரிக்கும் பணியைச் செய்யும். அதற்கு, மாலிப்ட்டினம் உதவியாக இருக்கிறது. பருப்பு வகைகளில் புரதச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதற்கு மாலிப்ட்டினம் பயன்படுகிறது. இது குறைந்தால், புரதச்சத்து உற்பத்தி பாதிக்கப்படும். மாலிப்ட்டினம் பற்றாக்குறை இருந்தால் தழைச்சத்து பற்றாக்குறையும் நிலவும்.

குளோரின்!

தாவரங்கள் பச்சையத்தை உருவாக்குவதற்கும், மாவுப்பொருட்கள் தயாரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறது, குளோரின். தாவரங்கள், செல்களில் தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது. தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளிவிடும் என்பது நமக்குத் தெரியும். அந்த ஆக்சிஜனை தாவரங்கள் வெளியே தள்ளுவதற்கு உதவியாக இருப்பது குளோரின். இது பெரும்பாலும் மழை நீர் மூலமாகவே பயிர்களுக்குக் கிடைத்து விடுகிறது.

மேலே பார்த்த ஏழு சத்துக்கள் தவிர மேலும் இரண்டு சத்துக்கள் தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவதாக தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை. சிலிக்கான் மற்றும் சோடியம் ஆகும்.

சிலிக்கான்!

தாவரங்கள் நலமாகவும், உறுதியாகவும் வறட்சியைத் தாங்கி வளரவும் பயன்படுகிறது, சிலிக்கான். மக்காசோளம், சோளம், நெல் உள்ளிட்ட பெரும்பான்மையான பயிர்களில் இலையின் ஓரங்களில் சுனை இருக்கும். இப்படி சுனை இருக்கும் இலைகளில் பூச்சிகள் அமராது. அதனால், பூச்சித்தாக்குதல் குறையும். இது தாவரங்களுக்கு இயற்கையே ஏற்பாடு செய்திருக்கும் இயற்கைப் பூச்சிக்கட்டுப்பாடு. இந்த சுனை அதிகளவில் உருவாக சிலிக்கான் உதவியாக இருக்கிறது.

சோடியம்!

வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது, சோடியம். குறிப்பாக ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது, கார்பன்-டை-ஆக்சைடை குளுகோஸ் ஆக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. கேரட் பயிரில் சுக்ரோஸ் அளவை அதிகப்படுத்த சோடியம் தேவைப்படுகிறது.
ஆக... பயிர்களின் சமச்சீரான வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிப்பதிலும், மண்ணில் ஊட்டசத்துக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், மண் வளத்தைப் பாதுகாத்து நீடித்த நிலைத்த வேளாண்மை செய்யவும், தாவர ஊட்டசத்துக்கள் மிக இன்றியமையாததாக விளங்குகின்றன.

இனி, பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துக்களை அளிப்பது மட்டுமன்றி, நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பதிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே உரிய மகசூலை எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

 நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

 ஓவியம்: ஹரன்