Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

இழந்தது, 24 ஏக்கர் நிலம்... கிடைத்தது, வாசல் கூட்டும் வேலை!

திகளவில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த பிரதமர் என்ற கின்னஸ் சாதனைக்காக உலகம் சுற்றுவதால், உள்ளூர் பிரச்னைகள் எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் இருக்கும் மோடி, அவர்களே... “மேக் இந்தியா என்ற கோஷத்துடன் இந்திய உற்பத்திப் பொருட்களுக்கு, உலகச் சந்தையில் துண்டு போட்டு இடம் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என உதார் விடுகிறீர்களே... உங்கள் வார்த்தையில் சொன்னால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள், மேக் இன் இந்தியா இல்லையா?

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

பஞ்சாப் வீதிகளிலும், ரயில்களிலும், சந்தைகளிலும் தேடித்தேடிப் போய் விவசாயிகளைச் சந்தித்து பிரச்னைகள் பற்றி அக்கறையோடு விசாரிக்கும் ராகுல் காந்தி அவர்களே... இன்றைக்கு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைக்கு அடிப்படை காரணமே அரை நூற்றாண்டுகளாக எங்களை ஆண்ட உங்கள் கட்சிதானே. ஆடு நனைகிறதே என ஏன் அழுகிறீர்கள்?

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

கண்ணுக்கு முன்னால், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் தலைநகர் டெல்லியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியைக் காப்பாற்ற வக்கில்லை. ‘நாட்டை மாற்றிக் காட்டுவேன்’ என சவடால் அடிக்கிறார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

ஒட்டுமொத்த அரசியல்வாதிகளே... ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைக்கு இறந்தது கஜேந்திர சிங் என்ற ஒற்றை விவசாயி அல்ல... இந்த தேசத்தின் இறையாண்மை, சகிப்புத்தன்மை அனைத்தும்தான்.

‘நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி, நிலம் இழப்பவர்களுக்கு, உரிய இழப்பீட்டுடன், ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடைக்கும்’ என்று தேன் தடவிய வார்த்தைகளில் வசனம் பேசுகிறார், மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர்.

நிலம் இல்லாவிட்டால், தொழிற்சாலைகள் எப்படி வரும்? தொழில் இல்லை என்றால் வளர்ச்சி எப்படி சாத்தியம்? நாங்கள் கேட்பது ஒரு சதம் நிலம்தானே? மக்கள் சென்றுவர பாதை வேண்டாமா? என்று கேள்விகளை அடுக்குகிறார்கள், மெத்தப் படித்த மேதாவிகள். அய்யா... மேதாவிகளே, மொத்தத்தில் ஒரு சதம்தான். ஆனால், அது சில விவசாயிகளின் ஒட்டுமொத்த நிலம் மற்றும் வாழ்வாதாரம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சிப்

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

பணிகளுக்காக நிலம் இல்லை என்று எந்த விவசாயியும் சொல்லவில்லை. உரிய இழப்பீடு, பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்துவிட்டு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டுக்கு நிலம் கொடுத்துவிட்டு, அவதிப்படும் காசிபில்லாம்பாளையம் விவசாயிகள் படும் வேதனையை பார்த்துவிட்டு பேசுங்கள்.

“என் பேரு கோகிலாம்பாள். தோட்டம் தொரவோட, பத்து பேரை வெச்சு பண்ணையம் பாத்துட்டு இருந்தோம். எப்ப சிப்காட்டுக்கு நிலத்தை எடுத்தாங்களோ... அன்னையோட எங்க பொழப்புல இடி விழுந்துடுச்சு. 24 ஏக்கர் பூமியை எடுத்துகிட்டு, இருபது லட்சம் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்காரரோட பொறந்தவங்க நாலு பேரு, எங்க பங்குக்கு 4 லட்சம் கொடுத்தாங்க. அத வெச்சு ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு, இப்ப வயித்துப்பாட்டுக்கு, ஒரு கம்பெனியில வாசக்கூட்டி பொழப்பு நடத்துறேன். வாழ்ந்த வாழ்வ நெனச்சா துக்கம் தொண்டைய அடைக்குது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

தினமும் நாலு கிலோ மீட்டர் நடந்துதான் வேலைக்குப் போறேன். இங்க, கம்பெனிகள்ல இருந்து கிளம்புற புகையால மூச்சு விட முடியலீங்க... உடம்புக்கு ஒத்து வராததால எங்க வூட்டுக்காரரு சத்தியமங்கலத்துல ஒரு கம்பெனியில வேலை பார்க்கறாரு. ஆளுக்கு ஒரு திக்குல நாய் பொழப்பா ஆயிடுச்சுங்க. அரசாங்கம் மனசு இரங்கி, நிலம் கொடுத்த எங்க மறுவாழ்வுக்கு ஏதாவது ஏற்பாடு செஞ்சா புண்ணியமா போகுமுங்க”

கோகிலாம்பாள் சொல்லச்சொல்ல கண்ணீராய் வழிகிறது, சோகம்.

இவரின் பக்கத்து வீட்டுக்காரர் நிர்மலாதேவி. இவரது குடும்பம் இழந்தது 6 ஏக்கர். கிடைத்தது, 4 லட்சம். அதை வைத்து பெருந்துறையில் ஒரு வீட்டைக் கட்டி விட்டார்கள். இரண்டு ஆண் பிள்ளைகள், அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமே... என்ன செய்வது என யோசித்த தம்பதி, ஆளுக்கொரு டி.வி.எஸ்-50 யில் கேன் கட்டி டீ விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘காலையில நாலு மணிக்கு எழுந்து வடை, போண்டா போட்டு எடுத்துக்கிட்டு, தெருத்தெருவா, கம்பெனி கம்பெனியாக சுற்றி விற்போம். கிடைச்ச வருமானத்தை வெச்சு பசங்களைப் படிக்க வெச்சோம். ஆனா, இப்ப அவங்களும் வேலையில்லாம இருக்காங்க’’ என வேதனைப்படுகிறார், நிர்மலா தேவி.

‘‘எம்பேரு அருள்முருகன், எம்.இ. எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் 72 சதவிகித மார்க் வாங்கி தேர்வானேன். படிச்சு முடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு. இன்னமும் வேலை கிடைக்கலை. இங்கிருக்கும் கம்பெனிகளுக்கு விண்ணப்பம் போட்டா கூடுதல் தகுதினு சொல்லி வேலை தர்றதில்லை. டிப்ளமோ படிச்சவங்களகூட கூடுதல் தகுதினு சொல்லி தட்டிக் கழிச்சிடுறாங்க. விசாரிச்சுப் பார்த்தா நிர்வாக வேலைக்கு உள்ளூர்க்காரங்க யாரையும் வேலைக்கு வெச்சுக்கக் கூடாதுனு ரகசியமா ஒரு தீர்மானமே போட்டு இருக்காங்களாம், கம்பெனி முதலாளிக. இதுதான், நிலம் கொடுத்த விவசாயிகள்ல வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்குற லட்சணம்’’ அருள்முருகனின் வார்த்தையில் விரக்தி அலையடிக்கிறது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

காசிபில்லாம்பாளையத்தில் நிலம் இழந்த விவசாயிகளில் பெரும்பாலானோர், தேநீர் விற்றுதான் இன்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ‘‘நாங்கள் இழந்த பூமி இன்றைக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை விற்கிறது. ஆனால், காசிபில்லாம்பாளையும் இன்று ‘காசு இல்லா பாளையமாக’ கவலைபட்டுக் கிடக்கிறது.

உலக அளவில் ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மாசுபட்ட, விஷம் கக்கும் தொழிற்சாலைகள்தான் இங்கு இயங்குகின்றன. தடை செய்யப்பட்ட, உயிர் குடிக்கும் ரசாயனங்கள் இங்கு தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பூமி இங்கு நிரந்தரமாக மாசுபட்டு விட்டது. தண்ணீர் எதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டு விட்டது. காற்றை சுவாசிக்க இயலவில்லை. மூக்கு

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

எரிச்சல் அடைகிறது. நுரையீரல், இதயப் புற்றுநோய்கள் குடியேறும் கூடாரங்களாகி விட்டன. ஆனால், எல்லாமே எங்களுக்குப் பழகி விட்டது. புதிதாக வரும் உறவினர்கள், நண்பர்கள், மூக்கு, கண்கள் எரிச்சல் காண்பதால் ஒரு நாள் கூட தங்க விரும்புவதில்லை. எரிமலைப் பிரதேசத்தில் வாழ்கிற உணர்வு. எங்களுக்கு வேலை இல்லாட்டியும் பரவாயில்லை. விஷம் கக்கும் இந்த தொழிற்சாலைகளை இங்கிருந்து அகற்றாவிட்டால், உயிருக்கும் உத்தரவாதம் இல்லை” என்பதுதான் இந்த கிராம மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

நிலத்தைப் பறித்த கம்பெனிகள், ஆசை வார்த்தை காட்டி, ‘விறகு வியாபாரம் செய்யுங்கள்... டன்னுக்கு கூடுதலாக 500 ரூபாய் கூட்டிக் கொடுக்கிறோம்’ என வஞ்சக வலை வீசியது, 2 கோடி வரை பல விவசாயிகளிடம் கடனாக விறகு வாங்கிக் கொண்டு, கம்பெனியை இழுத்து மூடிவிட்டு ஓடிப்போய் விட்டதால் இடிந்து கிடக்கும் விவசாயிகளின் சோகம்... சொல்லி மாளாது.

-தொடரும்

தூரன் நம்பி

படங்கள்: க.தனசேகரன்