மற்ற எபிசோடுகள்
Published:Updated:

’ஒரு நாள் விவசாயி!’

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

பூச்சி, நோய் தாக்காத மா மரங்கள்!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

’ஒரு நாள் விவசாயி!’

கல்லூரி மாணவர் விஷ்ணு, பெயிண்டர் ராஜசிவமணி, பொதுப்பணித் துறை ஊழியர் ராமநாததுரை, காவல்துறையில் பணியாற்றும் அவருடைய மனைவி சித்ராதேவி, பாதாம்பால் தயாரிப்பாளரான சியாமளா, டாஸ்மாக் ஊழியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர் அருள் ஆகிய ஒருநாள் விவசாயிகள்...  திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி, ஜானகிராமனின் பண்ணையில் பயிற்சி பெற வந்தது பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

’ஒரு நாள் விவசாயி!’

வாழைக்கு இடையில் தண்ணீர் கட்டிய ஈரப் பாத்திகளில் வெங்காய நடவு செய்த ஒரு நாள் விவசாயிகளை அழைத்துக்கொண்டு மாந்தோப்புக்கு சென்றார், ஜானகிராமன். போகும் வழியில், வயலில் முளைத்துக்  கிடந்த முட்டைக்கோஸ் செடிகள் அருகே நின்று, இயற்கை முறையில் முட்டைகோஸ் விளைவிக்கும் முறையைப் பற்றிச் சொன்னவர், கோஸை செடியில் இருந்து பறித்து, அதன் இதழ்களை உரித்து, ‘‘ம்...சாப்பிடுங்க... நல்லா இருக்கும். இது இயற்கை முறையில விளைஞ்சது. அப்படியே பச்சையாவே சாப்பிடலாம்” என்றபடியே வாயில் போட்டு மெல்லத் தொடங்கினார். ஆளாளுக்கு ஒரு இதழை வாங்கி மென்றுகொண்டே மாந்தோப்புக்குள் நுழைந்தனர்.

“இதுல, கல்லாமை (கல்லாமணி), காசா, செந்தூரம் ரகங்கள் இருக்கு. மா வைப் பொருத்தவரைக்கும் சரியான நேரத்துக்கு கவாத்து அடிச்சு, ஊட்டம் கொடுத்தா போதும். வேற பராமரிப்புத் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இல்லை. அப்படியே இருந்தாலும் நாங்க பூச்சிக்கொல்லி தெளிக்கறதில்ல. அது தானாவே சரியாகிடும். இப்ப, புதுசா ஒரு ஏக்கர்ல அடர்நடவு முறையில மா போட்டிருக்கேன். இந்த முறையில செய்யும்போது குறைஞ்ச இடத்துல அதிகமான செடிகளை வெக்க முடியுது” என்ற ஜானகிராமன், வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்தார்.

‘‘இதென்ன வாழைக்கு இடையில குப்பையும் கூழமுமா இருக்கு” மணிகண்டனின் கேள்விக்கு, சிரித்துக்கொண்டே பதில் சொன்ன ஜானகிராமன், ‘‘வாழைக்கு இடையில இருக்கற காலி இடங்கள்ல இலைதழைகளை மூடாக்கா போட்டிருக்கேன். செடிகளுக்கு மூடாக்கு போடுறதால, களைகள் வராது. தண்ணி ஆவியாகுறதும் குறையும். மண் எப்பவும் ஈரப்பதத்தோடயே இருக்கும்” என்று சொன்னார். அனைவருக்கும் பசிக்க ஆரம்பிக்க... மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினர்.

’ஒரு நாள் விவசாயி!’

மானாவாரி நிலங்களால் பூமி சூடாகிறது!

ஒருநாள் விவசாயிகள் இந்தப் பண்ணைக்கு வந்திருக்கும் தகவலைத் தெரிந்துகொண்ட ‘பசுமை விகடன்’ வாசகி சித்ரா நாகராஜன், சில செடிகளைக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்ததுடன் தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் முனைவர் ரங்கநாதன், ‘‘ஒருகைப்பிடி மண்ணுல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் இருக்கு. ஒரு இயற்கை விவசாயப் பண்ணையில நிச்சயம் மாடும், மரங்களும் இருக்கணும். செயற்கை உரங்களை அளவுக்கு அதிகமா நிலத்துல கொட்டக் கொட்ட நிலம் மலட்டுத்தன்மை அடையுது. அப்படிப்பட்ட நிலத்தையும் பலதானிய விதைப்பு மூலமா சரிசெய்யலாம்.

’ஒரு நாள் விவசாயி!’

புவி வெப்பமாகுறதுக்கு மானாவாரி நிலங்கள் அதிகரிப்பதும் ஒரு காரணம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு வருஷமும் சராசரி மழையளவு கிடைச்சிடுது. ஆனா, அதை நாம முறையா சேமிச்சு பயன்படுத்ததாதலதான் வறட்சியில அவதிப்படுறோம். ஒவ்வொரு விவசாயி தோட்டத்துலயும் நிச்சயம் பண்ணைக் குட்டை அமைக்கணும்’’ என்றவர், தொடர்ந்து ஒருநாள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

வாகாகய் அமைத்த வட்டப்பாத்தி!

சூரியன் இறங்கத்துவங்கவே, லேசான சாரல் மழை எட்டிப் பார்த்தது. அந்த இதமான சூழலில் மனதைப் பறிகொடுத்தவர்களை அழைத்துக்கொண்டு வட்டப்பாத்தி அமைக்கச் சொன்னோம். சாரலில் நனைந்தபடியே ஆளாளுக்கு மண்வெட்டியும் கையுமாக உற்சாகமாகக் களத்தில் குதித்தனர். பண்ணைப் பணியாளர்கள் சொல்லிக் கொடுக்க அதன்படியே வட்டப்பாத்தி அமைத்தவர்கள், “பாத்தியில் கீரை, துவரை, கொத்தமல்லி, வெங்காயம் உள்ளிட்டவற்றை நடவு செய்தனர். நடவுக்கு முன்பாக, விதைகளை பீஜாமிர்தத்தில் நனைத்து விதைநேர்த்தி செய்யும் முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பாத்தி அமைத்து நடவு செய்து முடித்தவுடன், திராட்சைத் தோட்டத்துக்குள் புகுந்தனர்.

’ஒரு நாள் விவசாயி!’

நீங்களும் முன்னோடி விவசாயிகள்தான்!

ஜானகிராமன், தனது தோட்டத்தில் பயிர்களுக்காக இனிமையான சித்தர் பாடல்களை ஒலித்துக்கொண்டே இருக்கும்படி நிரந்தரமான ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த இசை இதயத்தை வருட, மெய்மறந்து திராட்சைத் தோட்டத்தில் நின்ற ஒருநாள் விவசாயிகளிடம் பேசிய ஜானகிராமன், ‘‘திராட்சையை இயற்கை முறையில சாகுபடி செய்யவே முடியாதுனு சொன்னாங்க. நான் விடாம முயற்சி செஞ்சதோட பலன்... முழுக்க முழுக்க இயற்கை முறையில இப்ப விளைவிக்கிறேன்.

’ஒரு நாள் விவசாயி!’

திராட்சைக்கு கீழே வல்லாரைக் கீரையை சாகுபடி செஞ்சிருக்கேன். ஆர்வத்தை மட்டும் வெச்சுக்கிட்டு விவசாயத்துல இறங்குன நான், இன்னிக்கு முன்னோடி இயற்கை விவசாயியா மாறுனதுக்கு காரணம் பசுமை விகடனும், என்னை வழிநடத்துன பல முன்னோடி விவசாயிகளும்தான். அதனால, முழு நம்பிக்கையோட இதுல இறங்குனா... நீங்களும் நாளைக்கு முன்னோடி விவசாயிங்கதான். நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம். உங்களுக்கு ஆலோசனை கொடுக்கத் தயாரா இருக்கேன்” என்றபடி அனைவருக்கும் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய், காய்கறிகள் அடங்கிய பைகளைக் கொடுக்க... நெகிழ்ச்சியுடன் விடைபெற்றனர், ஒருநாள் விவசாயிகள்.

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.

 ஆர்.குமரேசன்

 படங்கள்: வீ.சிவக்குமார்