மற்ற எபிசோடுகள்
Published:Updated:

’ஒரு நாள் விவசாயி!’

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

நஷ்டம் கொடுக்காத இயற்கைப் பண்ணை!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

’ஒரு நாள் விவசாயி!’

ஒரு நாள் விவசாயிகளாக கார்த்திகேயன் தம்பதி, மோகன்ராஜன் தம்பதி, சிங்காரவேலன் தம்பதி, லக்ஷ்மி ரவிகுமார், சங்கீத் ஆகியோரைத் தேர்வு செய்து இயற்கை விவசாயி அனுராதாவின் பண்ணைக்கு அழைத்துச் சென்றோம். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், பெரியபாளையம் சாலையில் வடமதுரை என்ற இடத்திலிருந்து வலதுபுறம் திரும்பி உள்ளே சென்றால் வருகிறது, அனுராதாவின் பண்ணை. இந்தப் பகுதி எர்ணாகுப்பம் கிராமத்துக்கு உட்பட்டது. முதலில் அனுராதாவின் வீட்டில் காலை உணவாக சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன்பிறகு, பண்ணைக்குள் நுழைந்தோம். கோடை வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, அனைவருக்கும் கிணற்று நீரை அருந்தக் கொடுத்தார், அனுராதா. அதைக் குடித்து விட்டு “வித்தியாசமான சுவையா இருக்கே” என்றார், சித்ரா.

“கேன் தண்ணீர், மினரல் வாட்டர்னு குடிச்சுப் பழகிட்டீங்க. அதனாலதான் கிணத்துத் தண்ணி வித்தியாசமா தெரியுது. இதுதான் நிலத்திலிருந்து கிடைக்கும் மண்ணோட அசல் சுவை” என்ற அனுராதா, சுயஅறிமுகம் செய்துகொண்டார்.

“என் கணவர் பாலாஜி சவுதிஅரேபிய நாட்டில் இருந்தார். நான் அங்க டீச்சரா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். பத்து வருஷத்துக்கு முன்னயே இந்த இடத்த வாங்கிப் போட்டுட்டோம். மூணு வருஷத்துக்கு முன்ன, இந்தியா வந்த நான் இங்கேயே தங்கிட்டேன். இங்க ஆறு மாசம் டீச்சர் வேலை செஞ்சேன். பிறகு முழுநேரமா விவசாயத்துல இறங்கினேன். என் கணவர், ‘லாபம் வரலைன்னாலும் பரவாயில்ல. நஷ்டம் வராம பாத்துக்கோ’னு சொன்னார். ஆரம்பக் கட்ட வேலைகளுக்குக் கொஞ்சம் செலவாச்சு. இதப் பாத்துட்டு இந்தப் பண்ணையில வேலை செய்றவரு ‘ஏம்மா... இந்த மண்ணுல வெளையறதுக்கு செய்ற செலவுல, அழகா நீங்க காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டுட்டு போயிடலாமே’னு கேட்டார். ‘பரவாயில்லை அய்யா... அது எவ்ளோ கொடுக்குதோ கொடுத்துட்டு போகட்டும்’னு வைராக்கியமா தொடங்கி இந்தப் பண்ணையை நடத்திக்கிட்டு வர்றேன்.

’ஒரு நாள் விவசாயி!’

மொத்தம் எட்டு ஏக்கர் நிலம். இதைச் சுற்றி கம்பிவேலி அமைச்சிருக்கேன். வேலி ஓரங்கள்ல முன்னாடியே தேக்கு, தென்னையை நட்டு வெச்சிட்டோம். ஆரம்பத்துல எந்த இடுபொருளையும் கொடுக்காமத்தான் வளத்தேன். ‘பசுமை விகடன்’ அறிமுகமான பிறகு இயற்கை விவசாயம் பற்றிய தொழில்நுட்பங்கள தெரிஞ்சுக்கிட்டு, இயற்கை இடுபொருட்களைக் கொடுக்க ஆரம்பிச்சேன். இந்தப் பண்ணையில ரெண்டு வகையான மண்ணு இருக்கு. ஆரம்பத்திலேயே மணல் கலந்த களிமண் பகுதியை மரங்களுக்குனு ஒதுக்கிட்டேன். களிமண் பகுதியை நெல், காய்கறிகளுக்குனு ஒதுக்கி பயிர் செய்றேன். ஒண்ணரை வருஷமா பந்தல் அமைச்சு பீர்க்கன், புடலை, சுரைக்காய், கோவக்காய்னு காய்கறிகளையும் சாகுபடி செய்றேன். இப்போ தர்பூசணி, வெண்டை, வாழை, பெருநெல்லி, மிளகாய் அவரைனு பயிர் பண்ணிக்கிட்டு வர்றேன். மா, வாழைக்கிடையில எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா இருக்கு. விளையறதை இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறேன். எங்க வீட்டிலே வைத்தும் விற்பனை செய்றேன்” என்று மூச்சுவிடாமல் சொன்ன அனுராதாவிடம்...

‘‘எட்டு ஏக்கருக்கும் தண்ணீர் தேவையை எப்படி சமாளிக்கிறீங்க?” என்று கேட்டார், சங்கீத்.
“பண்ணையில ஒரு கிணறு, போர்வெல் மூலமா கிடைக்கிற தண்ணிதான் முக்கிய ஆதாரம். அதனால மண்ணுக்கும், தண்ணிக்கும் தகுந்த பயிர்களைத் தேர்வு செஞ்சி பயிர் பண்ணிட்டு வர்றேன். ஓரளவு மழைத் தண்ணிக்கே வளரும் திறனுள்ள கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மா, பெருெநல்லியைத்தான் நடவு செஞ்சிருக்கோம். பந்தல் காய்கறிகளைத் தவிர வாழை, மிளகாய், தர்பூசணி, வெண்டை, கீரையெல்லாம் 20 சென்ட்ல இருந்து 40 சென்ட் அளவுக்குள்ளதான் பயிரிடுவேன். அதிக பரப்பளவுல பயிர் வெச்சி, தண்ணி இல்லாம பயிர்களை காயவிடுறத விட, இருக்கிற தண்ணிக்கேத்த அளவுல பயிரிடுறது முக்கியம் இல்லையா?” என்றவர், தொழுவுரம் தயாரிக்கும் முறை பற்றி விளக்கினார்.

“மாட்டுக் கொட்டகைக்குப் பக்கத்திலே புதுசா நாலு சிமெண்ட் தொட்டிகளை அமைச்சிருக்கேன். பெரிய தொட்டியை தொழுவுரத்துக்கும், மற்ற 3 தொட்டிகளை ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி தயாரிக்கிறதுக்கும் ஒதுக்கியிருக்கேன். மாட்டுக்கொட்டகைக்குப் பக்கத்திலே அமைக்கிறதால சாணம், சிறுநீரை உடனடியா உரமாக்குற வேலைகளைச் செய்ய முடியுது. மாடுக கழிக்கிற தீவனத்தையும் குழியில போட்டு உரமாக்கிடுறோம்’’ என்றார்.

’ஒரு நாள் விவசாயி!’

‘’தொழுவுரத்தை எப்படி தயார் பண்றீங்க?’’ என்று கேட்டார், மோகன்ராஜன்.

“தென்னை மட்டைகளை அடியில போட்டு, அதுமேல சாணம், வீணான தீவனங்கள், இலைகள் எல்லாத்தையும் போட்டுட்டு வருவோம். இதுமேல தினமும் தண்ணி தெளிச்சி விடுவோம். இதுதான் தொழுவுரம். ஒரு மாசத்துல தொட்டி நிரம்பியதும் தொழுவுரத்தைக் கொண்டு போய் நிலத்துல கொட்டிடுவோம்” என்றார்.

தொடர்ந்து கத்திரிக்காய் தோட்டத்தில் களையெடுக்க எடுக்க ஆரம்பித்தனர், ஒரு நாள் விவசாயிகள். மோகன்ராஜனின் மகன், “இவ்ளோ பெரிய கத்திரிக்காயா? இதுக்கு என்ன கொடுத்தீங்க?” என்று கேட்க, “நடவு போடும்போது தொழுவுரம் இட்டு, முறையா தண்ணீர் விட்டு களையெடுப்போம். 15 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் கொடுப்போம். பூச்சித்தாக்குதலுக்கு பயோ-பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவோம்” என்றார் அனுராதா.

வேலை செய்துகொண்டிருக்கும்போதே உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, வயலிலிருந்து தர்பூசணியைப் பறித்து ஆளுக்கொரு துண்டு போட்டு கொடுத்தார், பண்ணையில் வேலை செய்து வரும் சீனிவாசன். சாப்பிட்டுக்கொண்டே ‘மா’ மரத்தின் அடியில் இளைப்பாறினார்கள். அப்போது ஒருவருக்கொருவர் தங்களின் விவசாய ஆர்வம் பற்றியும், வீடுகளில் பின்பற்றி வரும் இயற்கையான பழக்கவழக்கங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரவிச்சந்திரன், பாரம்பர்ய நெல் பற்றிய சிறப்புகளையும், அதை எப்படி பயிர் செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் வகுப்பெடுத்தார். பிறகு சூடான, சுவையான மதிய உணவு வர அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

’ஒரு நாள் விவசாயி!’

முதலில் பரிமாறிய வாழைப்பூ சூப்பைக் குடித்தவுடன், பசி அதிகமாகியது. வாழை இலையில் குதிரைவாலி பிரியாணி வந்து குதிக்க, வாசம் மூக்கைத் துளைத்தது. தொடர்ந்து வரகு சாம்பார் சாதம், சாமைத் தயிர் சாதம், மாப்பிள்ளைச் சம்பா அவலில் செய்த சத்துமாவு லட்டு, வெங்காயப் பச்சடி, கத்திரிக்காய்க் கூட்டு, ஊறுகாய், வாழைப்பழம் என்று இலையை நிரப்பி விட்டனர்.

சாப்பிடும்போதே சிறுதானிய உணவால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றிச் சொன்னார், உணவைத் தயாரித்த ரமேஷ். மதிய விருந்து முடிந்தவுடன், உழவு ஓட்டுவதற்காக களை எடுக்கும் வீடரை வயலில் நிறுத்தியிருந்தார், அனுராதாவின் மகன் ஆதித்யா. முதலில் சங்கீத்துக்கு, ‘எப்படி ஓட்ட வேண்டும்’ என்பதை அவர் விளக்க, பிறகு அனைவரும் களை எடுக்கும் வீடரை ஓட்டினர். லக்ஷ்மி ரவிகுமார், சித்ரா ஆகியோர் கொஞ்சம் திணற அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த பிறகு சரியாக ஓட்டினர். அதன்பிறகு மோகன்ராஜன், கார்த்திகேயன் தம்பதி, சிங்காரவேலன் தம்பதி என அனைவரும் தனித்தனியாக ஓட்டினார்கள். “இந்த வீடரை வெண்டை, கத்திரி, மிளகாய், பந்தல் காய்கறிகள்ல களையெடுக்க பெரும்பாலும் பயன்படுத்துவோம். கீரை, கொத்தமல்லிக்கு உழவு ஓட்டவும் பயன்படுத்திக்குவோம்“ என்றார், அனுராதா.

’ஒரு நாள் விவசாயி!’

இயற்கை விவசாயி ரவிச்சந்திரன், மேட்டுப்பாத்தி அமைக்கும் விதத்தை விளக்க... அதன்படியே செய்து முடித்தனர், ஒருநாள் விவசாயிகள். “மேட்டுப்பாத்தியை மூன்றரை அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் அமைக்கலாம். நிலத்தோட அளவுக்கு ஏத்த மாதிரி நீளத்தைக் கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம்“ என்றார், ரவிச்சந்திரன்.

பாத்தியை அமைத்த பிறகு கொத்தமல்லி விதையை பரவலாகத் தூவினர். “இதென்ன இந்த விதையில சிவப்பு சாயம் பூசியிருக்கு?” என்று சங்கீத் கேட்க... “கடைகள்ல வாங்குற விதைககள்ல பூச்சிகள் அரிக்காம இருக்கிறதுக்காக இந்த மாதிரி நிறத்துல வருது’’ என்று பதிலளித்தார் அனுராதா.

பட்டுச் சேலையின் மீது முத்துக்கள் பதித்தது போல, நீளமான மேட்டுப்பாத்தியின் மீது கொத்தமல்லி விதைகள் பரவியிருந்தன. பிறகு பாத்தியின் ஓரத்தில் கொத்தவரங்காய் விதைகளை அரை அடிக்கு ஒரு விதை என்ற கணக்கில், இரண்டு அங்குல ஆழத்தில் வைத்து மண்ணை மூடினர்.

‘‘கொத்தவரங்காய் விதைகளை ஓரத்தில் எதற்கு விதைக்க வேண்டும்?’’ என்று சிங்காரவேலன் கேட்க, “ மேட்டுப்பாத்தியில குறுகிய காலப் பயிர் உள்புறமும், நீண்ட கால பயிர்கள ஓரத்துலையும் விதைக்கணும். அதாவது, கொத்தமல்லி 25 நாள்ல அறுவடைக்கு வந்து பறிச்சிடுவோம். அதன்பிறகு கொத்தவரங்காய் வளர்ந்து அதிலிருந்தும் மகசூல் எடுப்போம்“ என்று சொன்னார், அனுராதா. பிறகு பந்தல் காய்கறிகள், வாழையில் ஊடுபயிராக வளரும் எலுமிச்சை, பெருநெல்லி மரங்களைப் பற்றி விளக்கிக்கொண்டே இருக்க, கருமேகத்துக்குள் கதிரவன் மறைந்தது. தலைக்கு மேலே வந்து மேகம் நின்று, எப்போது தூறல் போடலாம் என்று கேட்பது போல் இருந்தது. மெள்ள இருள் சூழ்ந்திட அனைவரும் நன்றி சொல்லி கிளம்பினார்கள்.   

-பயணம் தொடரும்

நரம்பை வலுவாக்கும் அவல் லட்டு!

’ஒரு நாள் விவசாயி!’

சிறுதானிய உணவு தயாரித்த திருக்கோவிலூரைச் சேர்ந்த குடந்தை ரமேஷ், தன்னுடைய தயாரிப்புகள் சிலவற்றைப் பற்றி பேசும்போது, “மாப்பிள்ளைச் சம்பா அவலிலிருந்து தயார் செய்யப்பட்ட லட்டு நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உடலுக்கு நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய வலுவைக் கொடுக்கும்.

100 கிராம் ஊறவைத்த அவலோடு, தலா நாலு பேரீச்சம்பழம், முந்திரிப்பருப்பு, 2 ஏலக்காய், தலா 25 கிராம் நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றைக் கலந்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதோடு 150 கிராம் கருப்பட்டியைப் பாகாகக் காய்ச்சி கலந்து, உருண்டைப் பிடித்தால் 3 லட்டு கிடைக்கும்.

வாழைப் பூவிலிருந்து இளம் பூக்களைப் பறித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைக் கலந்து வேகவைத்துத் தயாரிக்கும் சூப், உடல்சூட்டைக் குறைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சாப்பிட மிகவும் ஏற்றது’’ என்று அழகாக எடுத்து வைத்தார்.

இலைப்பேனை விரட்டும் வழி!

ஒருநாள் விவசாயிகளிடம் இயற்கை விவசாயி ரவிச்சந்திரன் பேசியதிலிருந்து... 

“நெல் வயலில் தண்ணீரைத் தேக்கி வைத்தால், இலைப்பேன் நோய் வர வாய்ப்புள்ளது. நோய்

’ஒரு நாள் விவசாயி!’

கண்டவுடன் வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றிவிட வேண்டும். பிறகு வேம்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும். நெல்லுக்குக் காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சி வந்தால், இலைப்பேன் நோய் வராது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘குதிரைவால் சிறுமணி’ என்ற பாரம்பர்ய நெல் ரகம் இருந்தது. நெல்லின் ஒரு முனையில் சிறு கம்பி போல் நீண்டிருக்கும். 120 நாட்களில் வளரக்கூடிய இந்த ரகம், நான்கு அடி உயரம் வரை வளரும். இது எளிதில் செரிமானமாகும். மருத்துவத் தன்மையும் கொண்டது. இப்போது மிக அரிதான ரகமாக இருக்கிறது.

மேட்டுப்பாத்தியில் கத்திரி, தக்காளி, வெண்டைக்காய், பாகல், புடல், கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை விதைக்கலாம். செம்மண், மணற்பாங்கான நிலங்களுக்கு மேட்டுப்பாத்தியின் உயரம் ஒன்றரை அடி இருப்பது நல்லது. களிமண்ணுக்கு முக்கால் அடி உயரம் இருந்தால் போதுமானது’’

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.

 த.ஜெயகுமார்

 படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், அ.பார்த்திபன்