
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!
காற்றோட்டம் என்னும் மந்திரம்!
ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

தாதுப்பொருட்கள், கரிமப்பொருட்கள், மண்ணில் உள்ள நீர், மண்ணிலுள்ள காற்று, மண்ணிலுள்ள உயிரினங்கள் இவை ஐந்தும்தான் மண்ணின் பௌதீக, ரசாயன, உயிரியல் தன்மைகளைத் தீர்மானிக்கும் காரணிகள். குறிப்பாக, பௌதீகத் தன்மையைத் தீர்மானிப்பது இந்த ஐந்து பொருட்கள்தான். மண்ணின் பௌதீகத் தன்மையில் உள்ள சில சிறப்பு குணங்களைப் பற்றி பார்க்கலாம்.
மண் நயம்!
மண்ணின் பல்வேறு துகள்களின் விகிதாச்சார அளவை வைத்துதான் ‘மண் நயம்’ என்கிறோம். மண் என்பது மணல், களி, வண்டல் ஆகிய மூன்றும் கலந்த கலவை என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மண்ணில் மணலின் ஆதிக்கம் அதிகம் இருந்தால் மண் பொலபொலப்பாகவும், சீரான காற்றோட்டத்துடனும், சரியான வடிகால் வசதியோடும் இருக்கும். அதே நேரம் தேவைக்கும் அதிகமான அளவு (45 சதவிகிதத்துக்கு மேல்) மணல் இருந்தால், நீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திறன் குறைந்து விடும். வண்டல் பகுதிப் பொருட்கள் அதிகமாக இருந்தால், பாசன வசதிக்கு பயன்படாமல் இருக்கும். களி அதிகமாக இருந்தால், நீர்பிடிப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.

மண் கட்டுமானம்..!
மண்துகள்கள் அல்லது பகுதிப் பொருட்களின் முறையான அமைப்பை மண் கட்டுமானம் என்கிறோம். மண்ணில் உள்ள காற்றும், தண்ணீரும் தேவையான அளவு கட்டுமானத்துக்குத் துணை புரிகின்றன. ஒரு மண்ணில் கரிமப்பொருட்கள், நீர், மணல் மற்றும் களிமண் ஆகியவை இணைந்துதான் கட்டமைப்பு உருவாகிறது. கரிமப்பொருட்கள் மண்ணுக்கு நீடித்த நிலைத்த ஆயுளைக் கொடுக்கின்றன. இந்தக் கட்டமைப்பு மூன்று விதமாக இருக்கிறது. மண்துகள்களின் அமைப்பு கன சதுரமாக இருந்தால், அதற்கு பெயர் ‘பிளாக்கி (Blocky)’. தட்டையாக இருந்தால், பிளாட்டி (Platy). மண் துகள்கள் கன செவ்வக வடிவத்தில் இருந்தால், அதை ‘பிரிஸ்மேட்டிக் (Prismatic)’ எனவும், சிலவகை மண்ணில் துகள்கள் உருளை வடிவத்தில் இருக்கும். இதற்கு ‘காலம்நார்’ என்றும் பெயர். மண்ணில் காற்றோட்ட அமைப்பை உருவாக்குவதில் இந்தக் கட்டமைப்பு பெரும் பங்காற்றுகிறது.
பரும அடர்த்தி!
மண்ணின் நெருக்கமான நிலையைக் குறிப்பிடுவது, ‘பரும அடர்த்தி’. அதாவது ‘மண் எந்த அளவு இறுகி அல்லது கெட்டிப்பட்டு இருக்கிறது’ என்பதைத்தான் ‘பரும அடர்த்தி’ என்கிறோம். பொலபொலப்பான மண்ணில் ‘டிராக்டர்’ போன்ற கனரக வாகனங்களைப் பயன்படுத்தும்போது, மண்துகள்களுக்கு இடையில் உள்ள காற்றோட்ட இடைவெளி நசுக்கப்பட்டு, மண்துகள்களின் கட்டுமானம் சிதைந்து விடுகின்றது. அதனால், மண்ணுக்குள் காற்று நுழைந்து வெளியேறுவது குறைந்து, மண் இறுக்கமாகிறது. இப்படி கெட்டியாகிப்போன மண்ணில் நடவு செய்யும்போது, பயிரின் வேர் மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக முடியாது. அதனால், பயிரின் வளர்ச்சி தடைபடும். மண் கெட்டிப்படும்போது, இடைவெளி குறைந்து காற்றோட்டம் இல்லாமல், மண்ணின் பரும அடர்த்தி அதிகமாகிறது. பரும அடர்த்தி மண்ணில் 1.5 கிராம்/சிசி முதல் 1.7 கிராம்/சிசி இருக்க வேண்டும். பொதுவாக, மணல் பாங்கான இடத்தில் பரும அடர்த்தி 1.7 கிராம்/சி.சி என்ற அளவிலும் அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் 0.5 கிராம்/சி.சி என்ற அளவிலும் இருக்கும்.

மண்ணின் பகுதிப்பொருட்களின் அளவு; தாதுப்பொருட்களின் வகை; மண்ணில் சிலிக்கா உண்டாகும் அளவு; கனரக வாகனங்களைப் பயன்படுத்துதல்; இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்களின் அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மண் இறுக்கம் உண்டாகிறது. மண்ணில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உண்டாகும் அழுத்தத்தின் காரணமாகவும் கன அளவு குறைக்கப்பட்டு, வெற்றிடங்கள் நிரப்பப்படுவதால் இறுக்கம் கூடி மண்ணின் கட்டமைப்பு உடைகிறது.
மண்ணில் உள்ள காற்றுத் துளைகள்!
மண்வகைகளில் நுண்ணிய களிமண் பகுதிப்பொருட்கள் அதிகமாக இருந்தால், காற்றுத் துளைகள் அதிகமாக இருக்கும். ஆனால் பெரும்பகுதி, காற்றிடம் நுண்துளைகளாக இருக்கும். நீர் பாய்ச்சும்போது காற்றுத் துளைகளுக்கு நடுவில் நீர் சேகரமாவதாலும், மழை பொழியும் பொழுது நீர் உள்ளே சேகரமாவதாலும் காற்றோட்டம் பாதிக்கப்படுகிறது. காற்றுத் துளைகளுக்குள் காற்று மட்டும்தான் செல்ல வேண்டும். மாறாக அந்த இடத்தில் நீர் நுழைந்து காற்றை வெளியேற்றி விடுவதால் வேர்ப்பகுதிக்கு காற்று கிடைக்காமல் செடி வாடத் தொடங்கும். பொதுவாக செடிகளுக்கு வாய்க்கால் பாசனம் செய்த பிறகு செடிகள் லேசாக வாடியது போல காணப்படும். சற்றுநேரம் கழித்து, தண்ணீர் வடிந்து, காற்று கிடைத்த பிறகுதான் ‘அப்பாடா’ என செடி நிமிர்ந்து அமரும். விதைகள் முளைப்பதற்கு பிராண வாயு தேவைப்படுகிறது. இது, மண்ணில் எப்போதும் சாதகமான அளவுக்கும் குறைவாகவே இருக்கும்.
மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இடை உழவு முறைகள், களை வெட்டுதல் போன்ற செயல்கள் கைகொடுக்கின்றன. ஏர் உழவு செய்யும்போது மண்கட்டிகள் சிறுசிறு பகுதிகளாக உடைக்கப்படுவதால், மண்ணில் இடைவெளி உண்டாகும். காற்று சுலபமாக உள்ளே நுழைந்து வெளியேற வழி கிடைக்கும். நன்கு உழவு செய்யப்பட்ட மண்ணில் நுண்ணுயிரிகள் சிறப்பாக வேலை செய்யும்.

காற்றோட்டம் அதிகமாகவும் வெப்பநிலை உயர்ந்தும் இருந்தால், இலை மட்கு, சாணம் போன்ற அங்ககப் பொருட்கள் துரிதமாக கிரகிக்கப்பட்டு தாவர வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. காற்றோட்டம் சரியாக இருந்தால், பயிருக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தேவையான வடிவில் எடுத்துத் தரும் பணியை நுண்ணுயிர்கள் சிறப்பாகச் செயல்படுத்தும். மாறாக, காற்றோட்டம் குறையும்போது, வேறு சில நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி, மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைட், அம்மோனியா போன்ற வேதிப்பொருட்கள் தோன்றுகின்றன. காற்றோட்டம் சரியாக இருந்தால் அம்மோனியா, ஆக்ஸிஜன் ஏற்றமடைந்து நைட்ரேட் ஆக மாறும். இந்த நைட்ரேட்தான் பயிருக்குத் தேவையான யூரியாவைக் கொடுக்கிறது.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
உள்ளே... வெளியே!
மண்ணின் உட்புறத்தில் இருக்கும் காற்று, மேல்புறத்தில் நாம் சுவாசிக்கும் காற்று இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மண்ணின் உட்புறம் உள்ள காற்றில் ஆக்ஸிஜன் 20%, கார்பன்-டை-ஆக்சைடு 0.50 %, நைட்ரஜன் 78.60%, ஆர்கன் 0.90% என்ற அளவில் இருக்கும். வெளியில் இருக்கும் காற்றில், ஆக்ஸிஜன் 21%, கார்பன்- டை-ஆக்சைடு 0.03%, நைட்ரஜன் 78.03% ஆர்கன் 0.94% என்ற அளவில் இருக்கும். வெளிப்பகுதியில் இருப்பதை விட மண்ணுக்குள் பிராண வாயுவான ஆக்ஸிஜன் அளவு குறைவாகவே இருக்கும்.
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்