Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

பிழைப்பை எரித்த விறகு வினியோகம்... பெருந்துறை சோகம்!

பெருந்துறை தொழில்பேட்டைக்காக நிலம் பறிகொடுத்த விவசாயிகளின் சோகக்கதையை விஞ்சி நிற்கிறது... அங்கு செயல்பட்ட கம்பெனிகளுக்கு விறகு வினியோகம் செய்து கடன்பட்டு கலங்கி நிற்கும் விவசாயிகளின் சோகம். ‘குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறிக்க ஆரம்பித்து விட்டது குதிரை’ என்கிற கதையாக நிலத்தைப் பிடுங்கியது அரசு, கையிலிருந்த பணத்தையும், நிம்மதியையும் பிடுங்கிக் கொண்டது அங்கு வந்த கம்பெனிகள். தொழிற்சாலைகளை இயக்க நிறைய எரிபொருட்கள் தேவை... அதற்கு ஏன் நிலங்களில் இருந்து விறகு சப்ளை செய்யக் கூடாது? என்று ஒரு கொக்கியைப் போட்டுள்ளார்கள் முதலாளிகள்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘வெளிச்சந்தையில் விற்கும் விலையை விட டன் ஒன்றுக்கு 500 ரூபாய் கூடுதலாகக் கொடுக்கிறோம். தொடர்ந்து விறகு சப்ளை செய்யுங்கள். மூன்று மாதத்துக்்கு ஒரு முறை முழுபணமும் கொடுத்து விடுகிறோம்’ என்று ஆசைவலை விரிக்க... அதில் விழுந்து விட்டில்பூச்சியாக எழ முடியாமல் தவிக்கும் விவசாயிகள் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக, கம்பெனியை நம்பி நில இழப்பீட்டுத் தொகையோடு கடனையும் வாங்கி, விறகு சப்ளை செய்து விட்டு இன்று வீதிக்கு வந்த விவசாயிகளின் சோகக் கதைகள் கல்லுக்கும் கண்ணீர் வரவழைக்கும்.

‘‘எம் பேரு மணிங்க. எனக்கு 17 ஏக்கர் பூமியிருந்தது. எங்க பூமியை அரசு அதிகாரிங்க பிடுங்கிக்கிட்டு ஒம்பது லட்சம் பணம் கொடுத்தாங்க. துணிகளுக்கு சாயம் ஏத்துற சாயப் பட்டறைகள் நூத்துக் கணக்குல வந்து குவிஞ்சது. சாயப் பட்டறை பாய்லர் சூடேத்த எங்களுக்கு விறகு தேவைப்படுது. நீங்க சப்ளை செய்ங்கனு கம்பெனி முதலாளிங்க கேட்டாங்க... வெளிச் சந்தையில கிடைக்கிற விலையை விட, டன்னுக்கு 500 ரூபாய் கூடுதலாகத் தர்றோம்..மூணு மாசத்துக்கு ஒரு தடவை முழுபணத்தையும் ‘செக்’கா கொடுத்துடுறோம்’’னு ஆசைவார்த்தை பேசுனாங்க.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘ஆசை யாரை விட்டது... ஆகா நல்ல தொழில் கிடைச்சிடுச்சுன்’னு நிலத்துக்குக் கிடைச்ச இழப்பீட்டுப் பணத்தோட கடனை வாங்கி, விறகு சப்ளை செஞ்சேன். மூணு மாசத்திலயே கணக்கு கோடியைத் தொட்டுடுச்சு. பணம் கேட்கப் போனா, கேட்டுக்குள்ளேயே விடாம வாட்ச்மேன் தொறத்துறான். போன் போட்டாலும், முதலாளி வெளிநாட்டுல இருக்காருனு பதில் வரும். புலி வால் பிடிச்ச கதையாகிடுச்சு என் பொழப்பு... தொடர்ந்து விறகு சப்ளை செய்யறதா... வேண்டாமா? நிறுத்தினா பழைய பாக்கி வருமானு தெரியாம, விழிபிதுங்கிப் போயிட்டேன். வேறு வழி இல்லாம மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி, மேலும் மேலும் விறகு சப்ளை செய்ய கம்பெனி கணக்குப்பிள்ளை, கொஞ்சம் கொஞ்சமாக காசோலை கொடுக்க... கடனிலும் வட்டியிலும் பொழப்பு ஓடுச்சு. திடீர்னு ஒருநாள் சாயப்பட்டறைய மூடிட்டாங்க. விசாரிச்சப்ப முதலாளிக்கு கோடி கணக்குல நட்டம் வந்துடுச்சு. வெளிநாட்டுக்கு அனுப்புற துணிகளோட தரம் சரி இல்லைனு நிராகரிச்சிட்டாங்க’’னு சொன்னாங்க.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இதயத்தில் இடி இறங்கியது போல ஆகிடுச்சு. 30 லட்சத்துக்கு மேல பாக்கி நிக்குது. சொந்தமா 10 சென்ட் நிலம் கூட இல்லை. குடும்பம் நடத்த வழி தெரியாம, மகனைப் படிக்க வைக்க முடியாம கடன் கொடுத்தவங்க, கழுத்துக்குத் துண்டு போடாததுதான் மிச்சம். வாழ்க்கையே சூன்யமாகிடுச்சு. ஒரு வழியும் புலப்படலை... எழவு விழுந்த வீடு போல ஆகிடுச்சு எம் பொழப்பு. கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திக்கிட்டு தொலைச்ச இடத்திலயே மீண்டும் பொழப்பைத் தேடுனேன்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

ஒரு 35 சென்ட் நிலத்தை,15 லட்சத்துக்கு சிப்காட் நிர்வாகத்துக்கிட்ட குத்தகைக்கு எடுத்து, அதுல ஒரு எடைமேடை போட்டிருக்கேன். அதுல வர்ற வருமானத்துல பொழப்பு நடக்குது. நாலு லட்ச ரூபாய் கல்விக் கடன் வாங்கி மகனை ஏரோநாட்டிகல் இஞ்சினீயரா ஆக்கியிருக்கேன். இனி, அவன் வேலைக்குப் போனாதான் நான் பட்ட கடனை அடைக்க முடியும். இப்ப, பூர்வீக கிராமத்தை விட்டு பெருந்துறையில வாடகை வீட்டுல குடியிருக்கேன். நான் மட்டுமில்லீங்க... என்னைப் போல பணத்தை கம்பெனிக்காரங்க கிட்ட இழந்துட்டு, தலைமறைவா வாழறவங்க நிறைய பேர் இருக்காங்க’’ என்றவர், அவரைப் போல பாதிக்கப்பட்ட இன்னும் சில பேரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

‘‘என் பேரு திருமூர்த்தி... எனக்கு ரெண்டு கோடி ரூபாய் பாக்கி இருக்குது. என்ன செய்யப் போறேன்னே தெரியல. 22 ஏக்கர் நிலம் சிப்காட்டுக்கு போச்சுங்க. எங்க தோப்பு ஊரிலேயே பேரு பெற்றது. வாழை, தென்னைனு விவசாயம் கொழிச்ச பூமி. அவ்வளவு நிலத்தையும் எடுத்துக்கிட்டு 22 லட்சம் கொடுத்தாங்க. மத்தவங்கள பாத்து நானும் விறகு வியாபாரத்துல இறங்கினேன்...திடீர்னு கம்பெனியை மூடிட்டாங்க.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

எனக்கு வரவேண்டிய பாக்கி ரெண்டு கோடி ரூபாயை யார்கிட்ட கேக்கறதுனு தெரியல. எங்க தாத்தா குதிரைவண்டி வைச்சு இருந்தவரு. நான் கடன்காரங்களுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். அரசுதான் நடவடிக்கை எடுத்து, எங்க பிரச்னைக்குத் தீர்வு வாங்கி தரணும். இல்லைன்னா குடும்பத்தோட தற்கொலை செய்றதைத் தவிர வேறு வழி இல்லை...’’ வெடித்து அழுதுகொண்டே அவர் சொல்லச் சொல்ல, நம் இதயம் கனத்தது. இப்படியுமா முதலாளிகள் கொள்ளை அடிப்பார்கள். இவர்களுக்காகவா மோடி விவசாயிகளின் கையை முறுக்கி, நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்க துடிக்கிறார். இதயம் அழுகிறது. என்ன செய்ய?

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க... அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம். சிறிய ஓட்டலுக்கான அறிகுறி தெரிந்தது. வீட்டுக்கு முன்னால் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கொஞ்சம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, ‘‘நீங்க சிப்காட்டுல சிக்காம தப்பிச்சுட்டிங்களா...’’ கேள்வி முடியும் முன்பாக, பொங்கி தீர்த்து விட்டர் ஆட்டுக்கார பூங்கொடி. ‘‘அந்த அநியாயத்த ஏன் கேக்கறீங்க... பதினோரு ஏக்கர் பூமிய பிடுங்கிக்கிட்டு பதினோரு லட்சம் கொடுத்தாங்க... எங்க வீட்டுக்காரர் ‘வேண்டாம், வேண்டாம’னு சொல்லியும் கேட்காம, விறகு வியாபாரத்துல இறங்கி 50 லட்சம் ரூபாய் கடனாளியாகிட்டேன். காலையில இட்லி கடை நடத்துறேன்..பிறகு பதினோரு மணிக்கு மேல ஆடு மேச்சு, அதுல வர்ற வருமானத்துல பிழைப்பு நடக்குது.‘‘ என்றார் வேதனையுடன்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

பெருந்துறை சிப்காட்டில் நிலம் இழந்தவர்களில் 90 சதவிகிதம் பேரின் கதி இப்படித்தான் இருக்கிறது. இங்கு எடுத்த 2,700 ஏக்கரில் இன்னும் 1,000 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. உள்ளூர் முதலாளிகளே இப்படி மனசாட்சி இல்லாமல், கொள்ளை அடிக்கும்போது உலக முதலாளிகளைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார் மோடி.

முதலில் உள்ளூரில் விழுந்த ஓட்டையை அடைக்கப் பாருங்கள். பிறகு வளர்ச்சி, ‘மேக் இன் இண்டியா’ கதையைப் பார்க்கலாம்.

-தொடரும்

 தூரன் நம்பி

 படங்கள்: க.தனசேகரன், த. ஸ்ரீநிவாசன்