Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

மோடியின் இதயம் கரையாதா..?

த்திய அரசின் மக்கள் விரோதப் போக்கால், நாடே அலறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அரசு நிலத்தைப் பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதால், கதறிக் கொண்டு இருக்கிறார்கள், விவசாயிகள். தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டு... அரசியல் கட்சிகளிடம் அபயம் தேடி அலைகிறார்கள், விவசாயிகள். நாடாளுமன்றத்துக்குள்ளும் நடந்த உக்கிரமான போராட்டங்களைத் தொடர்ந்து...  பகீரதப்பிரயத்தனம் செய்தும், இரண்டுமுறை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. தற்போது, மூன்றாவது முறையாக அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார், ஜனாதிபதி.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

தமிழ்நாட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சியினரே... உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெருந்துறை சிப்காட்டுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, இன்று அனாதைகளாக, உள் நாட்டு அகதிகளாக நடமாடும் விவசாயிகளின் சோகங்களை பிரதமர் ‘மோடி ஜி’க்கு எடுத்துச் சொல்லுங்கள். சட்டத்தில் நல்ல திருத்தங்கள் கொண்டு வர முயற்சி எடுங்கள். நாட்டின் வளர்ச்சிக்காக, தன் உயிரை விட மேலாக மதிக்கும் நிலத்தைக் கொடுக்கும் விவசாயிகளின் வாழ்வுக்கான உத்தரவாதத்தை உறுதி செய்யுங்கள்.

பெருந்துறையில் நிலம் இழந்த விவசாயிகள் படும் துயரங்களை ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேட்டால், பாறாங்கல்லும் கரைந்து விடும். மோடியின் இதயம் கரையாதா என்ன?

சித்திரை மாத கத்தரி வெயில், பாம்பு, பல்லிகள் கூட நிழலைத்தேடி ஒதுங்கும் உச்சிப்பொழுது... ஒரு கம்பெனியின் சுற்றுச்சுவர் அருகே, ஆடுகளுக்கு கழுநீர் கலந்த பிண்ணாக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார் வயதான பெண்மணி. அதைப் பார்த்த எங்களுக்கு தலை கிறுகிறுத்து விட்டது. ஒரு பார்வையில் எங்களை அளந்துவிட்டு, மீண்டும் கடமையில் கண்ணாகினார்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

‘‘கொட்டாய்களில்தானே, ஆடுகளுக்கு தாழி வெப்பாங்க... நீங்க என்ன நடுரோட்டுல இப்படி உச்சி வெயில்ல கஷ்டப்படுறீங்க” என்றேன்.

‘‘என்ன செய்ய வயித்துப் பொழப்புக்கு வழி வேணுமே... வயசான காலத்துல வூட்ல உக்காந்து சாப்பிடுற மாதிரியா இருக்கு எம்பொழப்பு. ‘பொண்ணு சோறு போடலனாலும், இந்த மண்ணு சோறு போடும்’னு சொல்லுவாங்க. அப்படிபட்ட நிலத்தை என்னிக்கு புடுங்குனாங்களோ அன்னிக்கே போச்சு எம்பொழப்பு’’ அந்தப் பெண்மணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கன்னங்களில் இறங்குகிறது, கண்ணீர் ஆறு.

‘‘நாலு ஏக்கர் பூமிங்க... இன்னிக்கு இருந்தா நாலு கோடிக்குப் போகும். ஆனா, அந்த நாசமத்த நாயிங்க, 40 ஆயிரத்த லஞ்சமா எடுத்துக்கிட்டு என்ற வூட்டுக்காரர்கிட்ட வெறும் 2 லட்சம் கொடுத்து அனுப்பினாங்க. அந்த அதிர்ச்சியிலேயே வூட்டுக்காரரு போயி சேந்துட்டாரு. குழந்தைகளை வெச்சுக்கிட்டு, அங்கோடி, இங்கோடி பாடுபட்டு, ஒரு வழியா கல்யாணம் செஞ்சு கரையேத்திட்டுப் பார்த்தா... வயசும் கூடிப்போச்சு. பணமும் காலியாகிடுச்சு. பிள்ளைங்க இப்ப மில்லு வேலைக்குப் போயி அதுக பொழப்பைப் பாத்துக்கிதுக. அவங்க பொழப்பே இழுத்துக்கோ, பறிச்சுக்கோனு இருக்கும்போது, நான் அவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல. அதான் ஆடுகளோட ஓடுது எம் பொழப்பு. ஆட்டுக்கு நான் ஆதரவு, எனக்கு ஆதரவு ஆடுனு ஆகிப் போச்சு’’ விரக்தியையும், வேதனையையும் அழுகையோடு அள்ளி வைத்தார் ஜெயம்மா என்ற அந்தப் பெண்மணி.

கண்ணீரில் மூழ்கிபோன கண்களை மீட்டெடுத்து, அருகில் இருந்த வேப்பமர நிழலில் அடைக்கலமானோம். பழுதடைந்த கட்டடங்கள் வரிசையில் நிற்க... சாலைகளின் இருமருங்கிலும், ஓங்கி வளர்ந்த வேப்பமரங்கள் வணக்கம் சொல்லி நம்மை வரவேற்றன. நம்மைப் போலவே, நிழலுக்கு ஒதுங்கிய ஒருவரின் காதைக் கடித்தோம்.

‘‘இந்தக் கட்டடங்கள் எப்ப கட்டுனது? சிதிலமடைஞ்சு கிடக்குது. வேலை நடக்குறதுக்கான தடயமே இல்லையே?’’ என்று கேட்டோம்.

‘‘நான் பக்கத்து ஊரு விவசாயி. என் பெயரையோ, போட்டோவையோ போடமாட்டோம்னு உத்தரவாதம் கொடுத்தா உண்மையைச் சொல்லுறேன்’’ என்ற கண்டிஷனோடு ஆரம்பித்தார்.

‘‘இந்த கட்டடங்கதான் இந்த சிப்காட் வளாகத்துல மொதல்ல கட்டுனது. 160 ஏக்கர்ல 200 கொட்டகைகள். தாட்கோ நிறுவனம் மூலம் தாழ்த்தப்பட்டவங்களுக்கு கட்டுனது. கட்டியதோட சரி... 20 வருஷமாச்சு. ஒரு பய கம்பெனி ஆரம்பிச்சபாடில்ல. கதவை கரையான் கரைக்குது. கட்டடங்களை பாம்பு பல்லிகள் எடுத்துக்கிச்சு. ஒதுக்குப்புறமா இருக்கறதால வேப்ப மர நிழல கள்ளக் காதலர்கள் எடுத்துக்கிட்டாங்க. அப்பப்ப டாஸ்மாக் பாட்டில் சத்தமும் கேக்கும். பொன்னு விளைஞ்ச பூமிய பிடுங்கி இப்படி இத்துப்போக வெச்சுட்டாங்க. அதை நினைச்சாலே நெஞ்சு வலிக்குது’’ என்றார்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

தாட்கோ கட்டடங்கள் மட்டுமல்ல... இங்கு, பாதி கட்டடங்கள், கம்பெனிகள் இப்போதும் சும்மாதான் கிடக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், ஆட்சியாளர்களிடம் ஒரு தெளிவு இல்லை. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 53 % சும்மா கிடப்பதாக, இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி  கூறுகிறார். பெருந்துறை சிப்காட்டில், மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகள், காலியாகக் கிடக்கும் நிலங்கள். காலியாகக் கிடக்கும் தாட்கோ கட்டடங்களைப் பார்க்கும் போது, அவரின் கூற்று சரி என்றே தோன்றுகிறது.

‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்-2013’ உருவாக்கப்படும் போதே, தனியாக, ஒரு ‘நிலம் தணிக்கைக் கணக்குக் குழு’ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். அன்றைய அரசும் கேட்கவில்லை... இன்றைய மோடி அரசும் ஏற்பதாக இல்லை. நிலமும் நீரும் மிகவும் அரிதான பொருள். மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், யாரிடமும் இல்லை. எல்லா தேசங்களிலும் நிராகரிக்கப்பட்ட தோல், சாயப்பட்டறை, பீங்கான் தொழிற்சாலைகள் பழைய டயர் உருக்கும் தொழில்களே பெருந்துறையில் குடியேறின.

தினமும் 500 டன் அளவுக்கு மேல், வேலிக்காத்தான் முள் மரம் எரிக்கப்படுவதால், காற்று விஷமாகி விட்டது. விஷக்காற்றை சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய்கள் பரவலாகக் காணப்படுகின்றன. விஷ சாம்பல், சாயப்பட்டறைக் கழிவு நீரில் கலந்து பூமியில் புகுவதால் நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது. மக்கள் ஊரை காலி செய்துகொண்டே இருக்கின்றனர்.

‘‘குடிக்க தண்ணி இல்லை... காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமா கிடைக்குற ரெண்டு குடம் தண்ணியை வெச்சுதான் பொழப்பு நடக்குது. ஆடு, மாடுகளுக்கு ஒரு வண்டி ஆயிரத்து ஐநூறு ரூபாய்னு தண்ணி வாங்கி ஊத்துறோம். எங்க ஊரோட கலாசார அடையாளங்கள் ஒவ்வொண்ணா காணாமப் போய்கிட்டே இருக்கு. இனியும் இந்த ஊரில், நாங்கள் குடியிருக்க முடியாது போல தெரிகிறது” என்கிறார்கள், ஊர் மக்கள்.

குட்டபாளையம், செல்குளம், எழுதிங்கள்பட்டி, கூத்தம்பாளையம், பாலிக்காட்டுப்புதூர், காசிபில்லாம் பாளையம், பெரிய வேட்டுவம்பாளையம், சின்ன வேட்டுவம்பாளையம், கடப்பம் மடை போன்ற கிராமங்களில் உள்ளூர்வாசிகள் 30 சதவிகிதம் என்றால், இங்கு வடமாநிலத்தினர் 70 சதவிகிதமாகப் பெருகி விட்டனர்.

‘‘வீடு இழந்து, கட்டு இழந்து, நிலம் இழந்து, வாழ்வு இழந்து, பண்பாடு இழந்து, கலாசார அடையாளங்கள் இழந்து, மொழி இழந்து... நாங்கள் அனாதையாகி விட்டோம். எங்கள் அத்தனை அவலங்களுக்கும் காரணம் எங்கள் நிலம் பறிக்கப்பட்டதுதான்’’ என ஒட்டுமொத்தமாக கண்ணீர் வடிக்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள்.

இத்தனை அவலத்துக்கும் முதல் விதை போட்டவர் யார் தெரியுமா?

-தொடரும்

தூரன் நம்பி

படங்கள்: க.தனசேகரன், த.ஸ்ரீநிவாசன்