Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 09

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

மணற்பாங்கான மண்... வளமாக்கும் சூத்திரம்!

ரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ‘காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

பயிர் விளைச்சலில் முக்கிய பங்காற்றுவது மண்ணில் உள்ள பௌதிகத் தன்மை. இதனால் மண்ணில் நிகழும் மாற்றங்களால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

மண்ணுக்கு மரியாதை! - 09

அடிமண் இறுக்கம்!

‘உணவு உற்பத்தியைப் பெருக்க உயர் விளைச்சல் ரகங்கள் தேவை. அளவறிந்து உரமிட வேண்டும். பயிர் பாதுகாப்பு முறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்’ என்பதும், ‘பயிர் உற்பத்தியாகும் நிலம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வளமான மண்ணாக இருக்க வேண்டும்’ என்பதும் உங்களுக்குத் தெரியும்.

வளமான மண் என்பதற்கான உண்மையான பொருள்?

மிகச்சுமாரான விளைதிறன் கொண்ட பயிரை... ரசாயனத்தன்மை மற்றும் சிறந்த பௌதிகத்தன்மையுள்ள மண்ணில் சாகுபடி செய்யும்போது, அந்தப்பயிர் தன் முழு விளைதிறனையும் கொடுக்கும். 

மிகச்சிறந்த விளைதிறன் உள்ள பயிரை, பயிரூட்டச் சத்துக்கள் கொண்ட ஆனால், பௌதிகக் குணங்கள் குறைந்து காணப்படும் நிலத்தில் பயிர் செய்யும்போது, முழுப்பயனையும் கொடுக்காது.

‘‘நல்ல பயிரூட்டச் சத்துக்கள் நிறைந்த, நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் நல்ல உயர் ரக பயிரை விதைத்தும், எனக்கு மகசூல் குறைவாக இருக்கிறது” என சில விவசாயிகள் புலம்புவதைக் கேட்கலாம். இதற்குக் காரணம் மண்ணில் உள்ள பௌதிகத்தன்மை குறைபாடுதான்.

எப்போதும் மேல்மண் இறுக்கமாக இருந்தால், அது நம் கண்ணுக்குத் தெரியும். ஆனால், அடிமண்ணின் இறுக்கம் தெரியாது. அந்த இறுக்கம், வேர் பரவக்கூடிய மண் பரப்புக்கும் கீழே இருந்தால், வேர் வளர்ந்து பரவும் திறன் குறைகிறது. அதனால், பயிரூட்டச் சத்துக்களை பயிர்கள் வேண்டிய அளவு எடுக்கமுடியாது. அடிமண் இறுக்கமாவதால் மண்ணில் காற்று ஊடுருவிச் செல்லும் வெற்றிடங்கள் அதாவது மண் துளைகள் குறைந்து விடும். அதனால் பயிர்களின் தேவைக்கேற்ப காற்றோட்டம் கிடைக்காமல் நச்சுதன்மை வாய்ந்த கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் மிகுந்திருக்கும்.

இதனால் பயிரூட்டச் சத்துக்கள் பாதிக்கப்படுவதுடன், மண்ணில் வாழும் நன்மை தரும் நுண்ணுயிர்களின் அளவும் குறைகிறது. அங்ககப் பொருட்கள் மாற்றம் பெற்று அனங்ககப் பொருட்களாக மாறும் வேகம் குறைகிறது. வெற்றிடங்களின் அளவைப் பொறுத்து நீர் ஊடுருவும் தன்மை மாறுபடும். மண்ணில் நீர்பிடிப்புத் திறன் குறையும். அதனால் மழை நீர் அல்லது பாசன நீர் மண்ணில் நீண்ட நேரம் நிலைத்து நின்று, பயிருக்கு உபயோகப்படாமல் மேல்மட்டத்திலேயே வடிந்தோடி விடும். இதன் காரணமாக மேல்மண் அரிப்பு ஏற்படும்.

‘அடிமண் இறுக்கத்தை எப்படி சரிசெய்வது?’

அடிமண் இறுக்கமாக உள்ள நிலங்களில் தொழுவுரம், சர்க்கரை ஆலைக்கழிவுகள் ஆகியவற்றை இட்டு சரி செய்யலாம். உளிக்கலப்பை கொண்டு அரையடி ஆழத்தில் இரண்டடி இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக உழவு செய்தால் மண் இறுக்கம் குறையும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உளிக்கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.

மேல்மண் இறுக்கம்!

பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளால் மேல்மண் இறுக்கம் உண்டாகிறது. குறிப்பாக மேல் மண்ணில் விழும் மழைத்துளிகளின் தாக்கத்தினாலும், அதைத் தொடர்ந்து ஏற்படும் வறட்சியினாலும் மேல் மண் இறுக்கம் ஏற்படுகிறது. மண்துகள்களின் வலுவில்லாத கட்டமைப்பை, மழைத்துளிகள் தாக்கும்போது சிதைவடைவதாலும் மேல்மண் இறுக்கமாகிறது.

பெரும்பாலும் மணற்பாங்கான அல்லது களி அதிகமில்லாத நிலங்களில்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். மேல்மண் இறுக்கமாக உள்ள நிலங்களில் விதைக்கப்படும் விதைகள் முளைத்து வெளியே வரும்போது, ஒருவிதமான அழுத்தம் ஏற்பட்டு, முளைப்பதில் தடை ஏற்படுகிறது. இதனால் விதை முளைப்புத்திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அதேபோல மழை நீர் நிலத்தில் உட்புகுவதற்கும் தடையாக இருக்கிறது.

‘மேல்மண் இறுக்கத்தை எப்படி சரிசெய்வது?’

இலைதழைகள், தட்டை அல்லது வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு நிலத்தின் மேல் பரப்பில் மூடாக்காக பரப்பி விட்டால், நிலத்தில் இருந்து நீர் ஆவியாவது தடுக்கப்படும். அதோடு மழை நீர் தாக்கும் வேகத்தையும் தடுக்கும். இதனால், மண்துகள்களின் கட்டமைப்பு சிதையாமல் காக்கலாம்.

நிலத்தை அதிகமான ஈரப்பதத்தில் உழவு செய்வது, நுண்ணுயிர்கள் அதிகமாகி மண்துகள்கள் அல்லது கட்டமைப்பு சிதையாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும். மேல் மண் இறுக்கத்தைக் குறைக்க, ஒரு ஹெக்டேருக்கு 2 டன் நீர்த்த சுண்ணாம்பைத் தெளித்து உழவு செய்யலாம்.

2 டன் தொழுவுரம் அல்லது பன்னிரண்டரை டன் தென்னைநார்க்கழிவு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இட்டு உழவு செய்வதன் மூலமாகவும் மேல் மண் இறுக்கத்தைக் குறைக்க முடியும். தட்டைப்பயறு போன்ற விதை பெரிதாக உள்ள பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலமும் இதை சரி செய்ய முடியும்.

மணற்பாங்கான மண்ணும் விளைதிறனும்!

மண்ணின் பௌதிகக் குறைபாட்டில் முக்கியமானது, மணற்பாங்கான நிலங்கள். மண்துகள்களில் பெருமணல் மற்றும் குறுமணல் அதிகமாகவும் (70 சதவிகிதத்துக்கு மேல்), வண்டல் மற்றும் களி குறைந்தும் காணப்படுவதுதான் மணற்பாங்கான மண். இந்த வகை மண்ணுக்கு நீர் உறிஞ்சும் மற்றும் கடத்தும் திறன் அதிகம். நீரைத் தேக்கி வைக்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். மண்ணுக்கு இடையே உள்ள துளைகளில் காற்று இடைவெளிகள் அதிகமாகவும், வடிகால் திறன் அதிகமாகவும் மண் வளம் குறைந்தும் காணப்படும். அங்ககப் பொருட்களின் அளவும் குறைந்து காணப்படும். இதனால் பெய்யும் மழை நீரால் பயிருக்குப் பெரிதாக பலன் இருக்காது. மண் விரைவில் உலர்ந்து பயிர் வாடத் தொடங்கி விடும். அத்துடன் நீர், மண்ணில் தங்காமல் விரைவாக வடிந்து விடுவதுடன், மண்ணில் இடும் உரங்களையும் கரைத்துக் கொண்டு ஓடிவிடும் அபாயம் இருக்கிறது.

தமிழகத்தில் இப்படிப்பட்ட மணற்பாங்கான நிலங்கள் பல லட்சம் ஹெக்டேர்கள் இருக்கின்றன. இத்தகைய நிலங்களில் மணலின் அளவைக் குறைக்க ஆறு அல்லது குளத்தில் இருக்கும் வண்டல் மண்ணையோ அல்லது களிமண்ணையோ கொண்டு வந்து நிலத்தில் கொட்டிக் கலக்க வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு 100 அல்லது 120 டன் களி அல்லது வண்டல் மண் கலந்து விடுவதால், மணலின் அளவு குறைந்து, மண்ணின் கட்டுமானம் வலுவடையும். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், மட்கிய தேங்காய் நார்க்கழிவுகள், குப்பை எரு, தொழுவுரம் ஆகியவற்றை ஹெக்டேருக்கு 25 டன் அளவுக்குப் பயன்படுத்தி உழவு செய்தால், மணலின் அளவைக் குறைக்கலாம்.

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

மண்ணுக்கு மரியாதை! - 09