பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
ஒரு செடியில் 100 காய்கள் காய்க்கும் காந்திக் கடலை!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்தமுறை நாம் சென்றது, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள கைத்தண்டலம் கிராமத்தில் உள்ள எழில்சோலை மாசிலாமணியின் பண்ணைக்கு... ஊருக்கு வெளியே மாட்டு வண்டியோடு காத்திருந்த மாசிலாமணி, ஒருநாள் விவசாயிகளாக நாம் அழைத்துச் சென்றவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டார். இவர்களோடு, ஊர் சிறுவர்களும் ஏற, வண்டி வேகம் பிடித்தது. ‘‘ச்சோ... பா...பா... ஹை...ஹை..’’ என்று மாடுகளை விரட்ட வேகமெடுத்து சுழன்றன, சக்கரங்கள். மாடுகளின் ஜல்... ஜல்... ஓசைகள் சாலையைத் தாண்டி ஊருக்குள்ளும் எதிரொலித்தது.
ஒரு நாள் விவசாயிகளாக வந்திருந்த அருண்பிரசாத், சிவலிங்கம், பாவாணன் ஆகியோர் உற்சாகத்தோடு தோட்டத்தில் போய் இறங்கினர். இவர்களோடு, உத்திரமேரூர் அருகேயுள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்த வீரமணி, சுகுமார், விக்னேஷ் ஆகிய மாணவர்களும் இணைந்து கொண்டனர். அனைவருக்கும் குதிரைவாலி பிஸ்கெட்டும், சுக்குமல்லி காபியும் வழங்கினர், மாசிலாமணியின் குடும்பத்தினர்.

அறிமுகப் படலம் முடிந்த பிறகு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலக்கடலை வயலுக்கு அழைத்துச் சென்றார், மாசிலாமணி. சுற்றிலும் மூங்கில் வேலியுடன் அமைந்திருந்த நிலத்துக்குள், கடலைச்செடிகள் வளர்ந்து பச்சைப்பசேலென படர்ந்திருந்ததன. ஊடுபயிராக விதைக்கப்பட்ட துவரை, செழிப்புடன் இருந்தது. அறுவடைப் பணியில் இருந்தவர்களுடன், மாசிலாமணியின் புதல்விகளும் இணைந்துகொண்டனர்.
பாவாணன் கடலைச் செடியைப் பிடுங்கப் போக, தடுத்து நிறுத்திய மாசிலாமணி, “இதை நம்ம ஊர் கடலைச் செடியைப் போல பறிக்கக்கூடாது. செடியைச் சுத்தி மண்வெட்டியால் மண்ணை வெட்டி, பக்குவமாகப் பிடுங்கணும். செடியிலிருந்து கடலைக் காய்களைப் பறிச்சு, அன்னக்கூடையில் போடணும்” என்று விளக்க, அதன்படியே அனைவரும் செய்து முடித்தனர்.
“நம்ம ஊர் கடலைக்கும், இந்தக் கடலைக்கும் என்ன வித்தியாசம்?” என்று அருண் பிரசாத் கேட்டார்.

“இது காந்திக் கடலை. 160 நாட்களில் வளரக்கூடியது. நம்முடைய பாரம்பர்ய கொடிக் கடலை வகையைச் சேர்ந்தது. ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதைத்தால், சராசரியா 25 மூட்டை மகசூல் கிடைக்கும். மானாவாரிக்கு ஆடிப் பட்டமும், இறவைக்கு மார்கழிப் பட்டமும் ஏற்றது” என்றார்.
“ஒரு செடிக்கு எத்தனை காய்கள் இருக்கும்?” என்றார், விக்னேஷ்.
ஒரு கடலைச் செடியைப் பறிக்கச் சொன்ன மாசிலாமணி, “நீங்களே எண்ணிப் பாருங்க” என்று சொல்ல, எண்ணிப் பார்த்து ‘`102’’ என்றார்கள். “இதுதான் இந்த ரகத்தின் சிறப்பு’’ என்றார், மாசிலாமணி.
“நீங்க நிலக்கடலைக்கு என்ன இடுபொருட்களைக் கொடுக்கறீங்க?” என்று கேட்டார், சிவலிங்கம்.
“ஏக்கருக்கு 4 மாட்டு வண்டி அளவுக்கு எருவைத் தூவிவிடுவேன். ஒரு களையெடுத்த பிறகு தலா நாலரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியாவை 50 கிலோ தொழுவுரத்தோடு கலந்து தூவிவிட்டு தண்ணி பாய்ச்சுவேன். பிறகு 30 நாளுக்கு மேல் ரெண்டாவது களையும் எடுத்துடுவேன்” என்றவர் ஊடுபயிர்களான எள், துவரை பற்றி பேசிக்கொண்டே, அருகில் நெல் நடவு நடைபெற்றுக்கொண்டிருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

“இது என்னோட வயல் இல்லை. என் சொந்தக்காரங்களது. நம் உணவில் பிரதானமானது அரிசி. அரிசியைக் கொடுக்கும் நெல்லை எப்படி பயிர் செய்றாங்கங்கிறதை எல்லாரும் தெரிஞ்சுக்கிறது முக்கியம். இங்கே நடவு போட்டுக்கொண்டிருப்பது,ஏ.டி.டீ-38 நெல் ரகம். வழக்கமான நெல் நடவு முறையில பயிர் செய்றாங்க” என்று சொல்லி வரப்பிலிருந்த நாத்துக் கட்டுக்களைத் தூக்கி சேற்றுக் கழனிக்குள் வீசினார்.
ஆளுக்கொரு கட்டுக்களை கையில் எடுத்து நடவு செய்தார்கள். பாவாணன் ஒரு குத்துக்கு 10 நாற்றுகளை வைக்க, அருகில் வேலை செய்துகொண்டிருந்த பாட்டி, கட்டுகளை வாங்கி “ஒரு குத்துக்கு வழக்கமா நாலுல இருந்து ஆறு நாத்துகளைத்தான் நடுவோம். ஒவ்வொரு பயிருக்கும் 5 அங்குலத்துல இருந்து 6 அங்குலம் இடைவெளி இருந்தா போதும்டா பேராண்டி. டவுசர் போட்டுக்கிட்டு சேத்துக் கழனில இறங்கிட்டா போதாது. அததுக்குன்னு முறை இருக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றார்.
நடவு முடித்து, நாற்றுப் பறிக்கும் இடத்துக்கு வந்தார்கள். இரண்டு தாத்தாக்கள் மட்டுமே நாற்றுக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “ஏன் தாத்தா ரெண்டு பேர் மட்டுமே நாத்துப் பறிக்கிறீங்களே?” என்று கேட்டார் இந்துமதி.
“நாங்க ரெண்டு பேரும் பறிக்கிற நாத்துக்களை வெச்சே 10 பேர் நடவு போடலாம்” என்ற பெரியவர், “எப்பவுமே ஆம்பளைங்கதான் நாத்துப் பறிச்சு, நடவு போடுற பொம்பளைங்களுக்குக் கொடுப்போம்’’ என்றவர், நாற்றுப் பறிக்கும் முறையையும் சொன்னார்.
“நாத்து வயலுக்கு அரை அடி உயரத்துக்கு தண்ணி விட்டு, ஒவ்வொண்ணா பறிச்சு ஒரு கைப்பிடி சேர்ந்ததும், அப்படியே தண்ணியில அலசணும். 4 கைப்பிடி சேர்ந்ததும் வாழை நாரை வைத்து, சுத்தி கட்டு கட்டி விடணும்” என்றவர்,
“என்னடா, தம்பி இவ்ளோ மெதுவா பறிக்கிற... இப்படி பறிச்சா நாளைக்குத்தான் நடவு போடணும். சீக்கிரமா பறிச்சிக் கொடு...” என்றார். அவரிடம் நாற்றுக்களைப் பறித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து, சவுக்குத் தோட்டத்துக்குக் களை பறிக்கச் சென்றனர், ஒருநாள் விவசாயிகள்.

களை பறித்துக்கொண்டிருந்த வேலையாட்களிடம், ஆளுக்கொரு களைவெட்டியை வாங்கிக்கொண்டு நிலத்தோடு படர்ந்து கிடந்த களைகளைக் கொத்தி எடுத்துக்கொண்டிருந்தனர், ஒருநாள் விவசாயிகள்.
“இது என்ன ரகம், ஏன் சவுக்கு போட்டிருக்கீங்க?” என்று கேட்டார், அருண் பிரசாத்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த மாசிலாமணியின் தம்பி வேலு, “இது ஜுங்குலியானா ரக சவுக்கு. சவுக்கு, மர வகையில இந்த ரகம், வர்த்தக ரீதியாக நல்லா போய்க்கிட்டிருக்கு. பொதுவா விவசாயம் செய்ய முடியாத நிலங்கள்ல சவுக்கு போட்டு விடுவோம். 4, 5 வருஷத்துல அறுவடை செஞ்சு, திரும்பவும் பயிர் செய்ய ஆரம்பிச்சிடுவோம்” என்றார்.
“ஏக்கருக்கு எத்தனை மரங்கள் வளர்க்க முடியும்?” என்று கேட்டார், சிவலிங்கம். “ஏக்கருக்கு 4 ஆயிரம் கன்னுகள நடவு போடலாம். மூன்றரை அடி இடைவெளியில, அரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்து கன்னுகள நடுவோம்” என்றார். களையெடுத்து முடித்த பிறகு பலவகையான மரங்களை வளர்த்து வரும் தோப்புக்கு அழைத்துச் சென்றார், மாசிலாமணி.
அங்கே மதிய உணவு வர... அனைவருக்கும் பாக்குமட்டைத் தட்டில் சூடான, சுவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்த உணவைப் பரிமாறினர், மாசிலாமணியின் குடும்பத்தினர். மதிய உணவுக்குப் பிறகு, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த உத்திரமேரூரைச் சேர்ந்த இளம் விவசாயி பரத், தன்னுடைய விவசாய அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்.
பிறகு தன்னுடைய தோட்டத்தில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மரங்களை பற்றிப் பேசினார். இந்த அரியவகையான மரங்களை பற்றியும், அதன் பயன்பாடுகள் குறித்தும் வகுப்பெடுத்தார், மாசிலாமணி. தோட்டத்துக்கு அருகே புதிதாக வெட்டப்பட்ட கிணறு, செம்மறியாடு மேய்த்துக் கொண்டிருந்தவரின் அனுபவங்கள்... என்று பேசிவிட்டு, மாலையில் சூடான சுக்குமல்லி காபியுடன் நன்றி தெரிவித்து விடைபெற்றனர், ஒரு நாள் விவசாயிகள்.
வழக்கத்துக்கு மாறாக காலையிலிருந்து மேக மூட்டத்துடன் இருந்த வானம், மாலையில் பளிச்சென்று வெயில் அடித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பியது.
விதைத் தேர்வில் கவனம்...
நிலக்கடலை குறித்து திண்டிவனம், எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வைத்தியநாதனிடம் பேசினோம். “வெளிமாநிலங்களிலிருந்து பல நிலக்கடலை ரகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பாரம்பர்ய நிலக்கடலை ரகங்கள், 125 நாட்கள் 135 நாட்கள் கொண்ட கொடி, அடர்கொடி வகைகளைச் சேர்ந்தவை. தற்சமயம் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக,105 நாட்களில் வளரக்கூடிய கொத்து, அடர்கொடி ஆராய்ச்சி ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் கோ-6, கோ-7, டி.எம்.வி-13 (சிவப்பு நிற விதை), வி.ஆர்.ஐ-7 ஆகிய ரகங்கள் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ரகங்கள். மானாவாரி, இறவை இரண்டிலும் பயிர் செய்யக்கூடியவை. மானாவாரிக்கு ஆனி மாத கடைசியிலும், இறவைக்கு கார்த்திகை மாதத்துக்குள்ளும் விதைக்க வேண்டும்.
மானாவாரியில் 800 கிலோவும், இறவையில் 1,000 கிலோ முதல் 1,500 கிலோ வரையிலும் காய்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் கவனமாக, விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.
கால் ஏக்கரில் மாதம் 12,500 ரூபாய்!

“எனக்கு 2 ஏக்கர் நிலம் இருக்குது. கீரை, அவரை, வெண்டை, கத்திரினு 25 சென்ட் அளவுல சுழற்சி முறையில விவசாயம் செய்றேன். 25 சென்ட் நிலத்துல 40 மேட்டுப்பாத்திகள் அமைச்சு கீரை விதைச்சா, ஒரு மாசத்துக்கு 2 ஆயிரத்து 500 கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு 5 ரூபாய்னு வித்தால்கூட 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை கீரையிலேயே சம்பாதிக்க முடியும். ஒரு லிட்டர் இளநீரை 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சா காய்கறிப் பயிர்களின் வளர்ச்சி நல்லா இருக்கும்.
நெல்லில் கதிர் விடுற பருவத்தில் தெளிச்சா கதிர் வராத பயிர்களும், கதிர் விடும். அரை லிட்டர் மாட்டுச் சிறுநீர், 25 கிராம் மஞ்சள்தூளை, 10 லிட்டர் தண்ணீரோடு கலந்து காய்கறிப் பயிர்கள்ல தெளிச்சா பூச்சித் தாக்குதலைக் குறைக்கலாம். சாணத்தில் ‘ஆக்சின்’ என்ற மூலப்பொருள் இருக்குது. அதனால முருங்கை நடும்போது, கொம்புகள் மீது சாணத்தை வைக்கிறாங்க” என்றார், உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாயி பரத்.
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
த.ஜெயகுமார்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்