மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

‘‘தக்காளி, விளைச்சல் அதிகமாக இருக்கும்போது, விலை கிடைக்காமல் வீணாகின்றது. இதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடியுமா? மேலும்,  சிறுதானியங்கள் மூலம் என்ன வகையான பொருட்களை மதிப்புக்கூட்டித் தயாரிக்கலாம் என்றும் சொல்லுங்கள்?’’

கே.தனபால், கிருஷ்ணகிரி.

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.வரதராஜு பதில் சொல்கிறார்.

‘‘தக்காளி மூலம் சாஸ், ஜாம், ஊறுகாய்... போன்றவற்றைத் தயாரிக்க முடியும். தக்காளியை உலர் தக்காளியாகவும், அதாவது வத்தலாகவும் கூட மாற்ற முடியும். உலர் தக்காளியாக மாற்ற எந்த ரசாயனமும் பயன்படுத்தத் தேவையில்லை. இயற்கை முறையிலேயே, உலர் தக்காளியாக மாற்றலாம்.

தக்காளி மட்டுமல்லாமல், பழ வகைகள், சிறுதானியங்களையும் மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். குறிப்பாக சிறுதானியங்கள் பற்றி விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கப்படி சிறுதானியங்களைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம், புட்டு... என பாரம்பர்ய உணவுகள், பிரட் போன்ற அடுமனை உணவுகள் மற்றும் உடனடியாகத் தயாரித்து சாப்பிடும் ‘ரெடி டூ ஈட்’ உணவு வகைகள் தயாரிக்கவும், பயிற்சி கொடுத்து வருகிறோம். கட்டண அடிப்படையில், வழங்கப்படும் இப்பயிற்சிகளுக்கு முன்பதிவு முக்கியம்.

பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றால், ‘ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ஸ் அத்தார்ட்டி ஆஃப் இந்தியா’ (Food Safety and Standards Authority of India) என்ற அமைப்பிடம் அனுமதியும், சான்றும் பெற வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் இந்தத் துறையின் அலுவலகங்கள் உள்ளன. (அண்மையில் மேகி நூடுல்ஸை, இந்த அமைப்பு அதிகாரிகள்தான், ஆய்வு செய்து தடை செய்ய நடவடிக்கை எடுத்தார்கள்). இந்த அமைப்பிடம் இருந்து எப்படிச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்கும் முறையாக வழிகாட்டுகிறோம்.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3.

தொலைபேசி: 0422-6611340/6611268.

‘‘ஆமணக்குப் பயிரில், சின்ன வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யலாமா?’’

கு.சாந்தா, நாமக்கல்.

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.செ.மாணிக்கம் பதில் சொல்கிறார்.

‘‘நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் மட்டுமே ஆமணக்குடன், சின்ன வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இப்படி சாகுபடி செய்வதால், இரண்டு பயிர்களிலும், பூச்சி-நோய்த் தாக்குதல் குறைவாகவே இருக்கும்.

ஆமணக்கு மற்றும் சின்ன வெங்காய விதைகளை 1:2 என்ற விகதத்தில், அதாவது, ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு வரிசை வெங்காயம் என வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். ஆமணக்கு விதைகளை விதைக்கும் முன்பு, 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். ஆமணக்கு அறுவடைக்கு வர ஆறு மாதம் பிடிக்கும். மூன்று மாதத்தில் சின்ன வெங்காயம் மகசூல் கொடுத்துவிடும். ஆக, ஒரே நிலத்தில் இரண்டு பயிர்கள் மூலம் வருமானம் பெறலாம்.

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

ஆமணக்குடன், சின்ன வெங்காயத்தை விதைக்க, ஜூன், -ஜூலை மாதங்கள் ஏற்றவை. வீரிய ஒட்டு ஆமணக்கு விதை தற்சமயம் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு உள்ளது. ஆமணக்கு விதை தேவைப்படும் விவசாயிகள் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாம். சின்ன வெங்காய விதை, தோட்டக்கலைத் துறை மூலம் விற்பனை செய்கிறார்கள். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் விதை கிடைக்கும். ஆமணக்கு சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காயம் மகசூலாக 2,000 கிலோ வரும். ஆமணக்கு மற்றும் சின்ன வெங்காயத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு நிகர லாபமாக 50,000 ரூபாய் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் அஞ்சல், ஆத்தூர் வட்டம், சேலம்-636119.

தொலைபேசி: 04282-293526.

‘‘நாட்டுக்கோழி வளர்க்க விரும்புகிறோம். இதற்கு எங்கள் பகுதியில் பயிற்சிக் கொடுக்கும் அமைப்புகள் பற்றி சொல்லுங்கள்?’’

பிரியா, ஈரோடு.

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

கோயம்புத்தூரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் கே.சிவக்குமார் பதில் சொல்கிறார். ‘‘நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தொடர்ந்து பயிற்சிகள் நடந்து வருகின்றன. ஈரோட்டில் செயல்பட்டு வரும் கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் நாட்டுக்கோழி வளர்ப்புக்கான பயிற்சிகள் கொடுக்கிறார்கள். கோயம்புத்தூரில் உள்ள எங்கள் மையத்தில் ஜூலை 28, -29 தேதிகளில், நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி ரகங்களின் சிறப்பு, கொட்டகை அமைப்பு, தீவனம், நோய் மேலாண்மை... போன்றவை பற்றி விளக்கமாகப் பயிற்சிக் கொடுக்கவுள்ளோம். இதில் நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள பிரச்னைகளை, எளிதாகத் தீர்க்கும் நுட்பங்களைக் கற்று தருகிறோம்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் நாட்டுக் கோழிப் பண்ணையைத் தொடங்கிவிட்டு, கோழிகளை விற்பனை செய்ய முடியாமலும், லாபகரமாக பண்ணையை நடத்த முடியாமலும் தவிப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?

கோயம்புத்தூர் அருகில் உள்ள சுப்பிரமணியம்பாளையம் கிராமத்தில் உள்ள சுய உதவிக்குழு பெண்கள், எங்களிடம் பயிற்சிப் பெற்று நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு கிலோ உயிர் எடை ரூ.160-க்கும்தான் விற்பனை செய்து வந்தனர். இந்தத் தொகை  கட்டுப்படியாகவில்லை. ஆகையால், பண்ணைக்கு வெளியில் நாட்டுக்கோழி இறைச்சிக் கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இறைச்சியாக கிலோ ரூ.400 வரை விற்பனை செய்கிறார்கள். முன்பதிவு செய்பவர்களுக்கு டோர் டெலிவரி மூலமும் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்கள். எங்கள் மையத்தில் நடக்கும் பயிற்சியில் பேராசிரியர்கள் மட்டும் பாடம் எடுப்பதில்லை. முன்னோடிப் பண்ணையாளர்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியம். கட்டணம் கிடையாது.’’

தொடர்புக்கு, உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம், ஈரோடு. தொலைபேசி: 0424-2291482.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.

தொலைபேசி: 0422-2669965.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.

புறா பாண்டி

படங்கள்: கே.குணசீலன்