மற்ற எபிசோடுகள்
Published:Updated:

’ஒரு நாள் விவசாயி!’

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்

வறண்ட நிலத்திலும் வளமான விவசாயம்...

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

’ஒரு நாள் விவசாயி!’

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியிலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமியின் தோட்டத்துக்கு இந்த முறை சென்றோம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ராமசாமி, சக்திராஜன், சிவசுப்பிரமணியன், வாவாமுகைதீன், தங்கராஜ், லதா மற்றும் சண்முகப்பிரியா ஆகிய ஏழு பேரும் ஒரு நாள் விவசாயிகளாக வந்திருந்தனர். அவர்களோடு முன்னோடி இயற்கை விவசாயி ‘புளியங்குடி’ கோமதிநாயகமும் இணைந்துகொண்டார்.காலை உணவாக கோமதிநாயகம் இல்லத்தில் ஒரு நாள் விவசாயிகளுக்கு பொங்கல் மற்றும் வரகுக் களி பரிமாறப்பட்டது.

அடுத்துஅந்தோணிசாமியின் தோட்டத்துக்கு அனைவரும் சென்றபோது... ‘‘வாங்க..வாங்க’’ என அன்புடன் வரவேற்றார், அந்தோணிசாமி. வீட்டு முன்பு 30 மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை ஆர்வத்துடன் கவனித்தனர் ஒரு நாள் விவசாயிகள்.

‘‘இந்த மாடுக பாக்கிறதுக்கே வித்தியாசமா இருக்கே... இது என்ன ரகம்?’’ என்று கேட்டார், தங்கராஜ்.

‘‘இதுதான் ஓங்கோல் மாடு. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தது. பால் குறைவாகத் தந்தாலும் நல்ல உழைப்பாளி மாடுகள். உடல் பருத்தும், உயரம் அதிகமாகவும் இருக்கும். உழவடிக்க ஏற்றது. பக்கத்துல யாரும் போக முடியாது. ரொம்ப சீறிப்பாயும்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு காளை சீற ஆரம்பித்தது.

‘‘வாங்க தள்ளிப் போயிடுவோம்’’ என்று மர நிழலுக்கு அழைத்துச் சென்ற அந்தோணிசாமி, ஒருநாள் விவசாயிகளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு, ‘‘எல்லாரும் களத்து மேட்டுல அறுவடை செஞ்சு காய வெச்சிருக்குற எள்ளுப் பயிரை தூத்துங்க. மாடுகளை மேய்ச்சலுக்குப் பத்தி விட்டுட்டு வந்துடறேன்’’ என்று கூறிச் சென்றார்.

‘‘சரி.. சரி.. ஆளுக்கு ஒரு சொலகை  (முறம் போன்றது) எடுத்து, எள்ளை அள்ளித் தூத்துங்க’’ என்று  கோமதிநாயகம் சொன்னதும்... அனைவரும் தூற்றத் தொடங்கினார்கள்.

’ஒரு நாள் விவசாயி!’

அரிசி புடைப்பது போல லதா புடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த, பண்ணை வேலைகளைச் செய்து கொண்டிருந்த பெண்கள், ‘‘எள்ளைப் புடைக்கக் கூடாது. சொலகையைத் தலை உயரத்துக்கு உயர்த்திப் பிடிச்சு ஒரு பக்கம் சரிவா வச்சு சாய்க்கணும். காத்துல தூசி பறந்துடும், எள்ளு கீழே விழுந்துடும். ஒரு தடவை தூத்தி எடுத்தால்லாம் தூசி போகாது. இப்படியே மூணு தடவை தூத்தி அள்ளுனாதான் சுத்தமான எள் கிடைக்கும்’’ என்று சொன்னதோடு, ஒரு முறை தூற்றியும் காண்பித்தனர். அதே முறையில் அனைவரும் தூற்றி, ஒரு வழியாக அரை மூட்டை அளவுக்கு எள்ளைப் பிரித்தெடுத்தனர்.

‘‘ஒரு தடவை அள்ளி தூத்துறதே இவ்வளவு கஷ்டமா இருக்கே. எப்படித்தான் நாள் முழுக்க தூத்தி அள்ளுறீங்களோ’’ வேலை பார்க்கும் பெண்களைப் பார்த்துக் கேட்டார், சண்முகப்பிரியா.

“இவ்வளவு பண்டுதம் பார்த்து அனுப்பினாத்தாதான் நீங்க சுலபமா சமைக்க முடியும்’’ என்றனர், அந்தப் பெண்கள்.

அப்போது வந்துசேர்ந்த அந்தோணிசாமி, ‘‘என்ன எள்ளைப் பிரிச்சு அள்ளி வச்சாச்சா... சரி வாங்க உச்சிவெயிலுக்குள்ள கரும்பு தோட்டத்துக்குப் போயிடுவோம்’’ என்று அழைத்துச் சென்றார். 

‘‘23 வருஷத்துக்கு முன்ன நடவு செஞ்சது இந்தக்கரும்பு. அப்படியே மறுதாம்பு வந்துக்கிட்டே இருக்கு. ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற கரும்பு மூணு மறுதாம்புக்கு மேல வராது. மூணாவது வருஷசத்துல மகசூல் பாதியா குறைய ஆரம்பிச்சுடும். நான் முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே போடுறதுனால கற்பகத்தரு மாதிரி தொடர்ந்து பலன் கொடுத்துக்கிட்டே இருக்குது. மண்ணை அள்ளி நுகர்ந்து பாருங்க’’ என்றதும், வாவா முகைதீன் ஒரு கை மண்ணை அள்ளி நுகர்ந்து பார்த்தார்.

‘‘அறுவடை செய்த கரும்புகளை அரைச்சு சாறெடுத்து காய்ச்சி வெல்லப்பொடி தயாரிச்சு விற்பனை செய்யுறோம். விவசாயி தன் விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுற வியாபாரியாவும் மாறணும். அப்போதான் விளைவிக்கும் விளைபொருளுக்கு அங்கீகாரமும், சரியான விலையும் கிடைக்கும்’’ என்றபடி, எலுமிச்சம் தோப்புக்கு அழைத்துச் சென்றார், அந்தோணிசாமி.

’ஒரு நாள் விவசாயி!’

‘‘புளியங்குடிக்கு ’லெமன் சிட்டி’னு ஏன் பெயர் வெச்சாங்க?’’ என்றார், சக்திராஜன்.

‘‘தமிழ்நாட்டுலயே எலுமிச்சைக்குனு தனி மார்க்கெட் புளியங்குடியிலதான் இருக்குது. நெல், வாழையை விட எலுமிச்சை விவசாயிகள்தான் ரொம்ப அதிகம். இந்த பகுதியோட மண், தட்பவெட்ப நிலை ரெண்டும் எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றதா இருக்கு. தமிழ்நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் இங்க இருந்து எலுமிச்சை போகுது. கேரளாவுல இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதியாகிறதுனால இந்த ஊருக்கு ‘லெமன்சிட்டி’னு பேரு வந்துச்சு’’ என்ற அந்தோணிசாமி,

‘‘சரி... ஆளுக்கு ஒரு சாக்குப்பையையும், தொரட்டியையும் (பழம் பறிக்க உதவும் நீளமான கம்பு) எடுத்துக்கிட்டு என் கூட வாங்க’’ என்று பழம் பறிக்க அழைத்துச் சென்றார்.

‘‘கொய்யாப்பழம் பறிக்கிற மாதிரி எடுத்த உடனேயெல்லாம் பறிச்சுட முடியாது. நாம போட்டுருக்குற உடை மேல, முழுக்கைச் சட்டை போட்டுக்கணும். ஏன்னா, எலுமிச்சை மரத்துல முள்ளு இருக்கும். பழம் பறிக்கும்போதும், கிளை இடுக்குல சிக்கி இருக்குற பழங்களை கை நீட்டி எடுக்கும் போதும் கைகள்ல முள்ளு குத்தாம இருக்கத்தான் இந்த ஏற்பாடு. சின்ன மரங்களா இருந்தா பாத்ததுமே பழங்கள் கண்ணுல தென்படும். ஆனா, பெரிய மரங்கள்ல நிலத்தைத் தொட்ட மாதிரி இருக்கற கிளைகளைத் தொரட்டிக் கம்பால் தூக்கிப் பார்த்தாத்தான் பழங்கள் இருக்கிறது தெரியும். ஒருத்தர் கிளையைத் தூக்கிப் பிடிச்சாலும் இன்னொருத்தர் மரத்துக்குள்ளே போயி பழங்களை எடுத்திடலாம். ஒரு ஆளு கண்ணுல தப்புனாலும் பழம், அடுத்த ஆளு கண்ணுல மாட்டிடும். அதனால, ஒரு மரத்துல ரெண்டு பேரு பறிப்பாங்க. பழுப்பு நிறமா இருந்தாலும், லேசான பழுப்பு நிறமா இருந்தாலும் பறிக்கலாம். புரிஞ்சுதா’’ என வகுப்பெடுத்த அந்தோணிசாமி,

‘‘பழங்களைப் பறிச்சு முடிங்க... யார் கூடுதலா பறிக்கிறாங்கனு பார்ப்போம்’’ என்று அனைவரையும் களத்தில் இறக்கி விட்டார்.

ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பழங்களைப் பறித்த பிறகு, ‘‘ஐயா... நான்தான் அதிகமா பறிச்சிருக்கேன்’’ என்று சாக்குப்பையைத் தூக்கிக் காண்பித்தார், சக்திராஜன்.

‘‘சும்மா பழத்தைப் பறிங்கனு சொன்னா, மெதுவா பறிப்பீங்க, யாரு அதிகமா பறிக்கிறானு சொன்னா வேகமா வேலை நடக்கும்ணுதான் அப்படிச் சொன்னேன். அந்த பம்பு செட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ரூம்ல பறிச்ச பழங்களைத் கொட்டி வைங்க’ என்ற கோமதிநாயகம்,

‘‘பழத்தைக் கொட்டுனா போதுமா? அவங்களை மாதிரி பழங்களைத் தரம் பிரிச்சு வையுங்க’’ என்று வேலையாட்கள் தரம் பிரிப்பதைக் காட்டிச் சொன்னார்.

’ஒரு நாள் விவசாயி!’

‘‘இதுல ஒண்ணு ரெண்டு கண்ணுல பச்சைக்காய் தென்படுதே அதை மட்டும் தனியா பிரிச்சு வைக்கணுமா?” லதாவும், சண்முகப்பிரியாவும் கேட்டதும்,

‘‘முதல் தரம், இரண்டாம் தரம், லாட்டு’னு மொத்தம் மூணு வகையில பழங்களைப் பிரிச்சு மார்க்கெட்டுக்கு அனுப்புறோம். பளிச் மஞ்சள் நிறம், அதிகப் பருமன் உள்ள பழங்கள் முதல் தரம். நடுத்தர பருமன்ல உள்ள பழங்கள் இரண்டாம் தரம். வெயில்ல வெம்புனது, கறுப்பு புள்ளி இருக்கற பழங்களை ‘லாட்டு’னும் தரம் பிரிக்கணும்’’ என்று விளக்கிச் சொன்னார்.

மதிய உணவுக்குப் பின் மரப்பயிர்த் தோட்டம்!

மதிய உணவாக அனைவருக்கும் மூன்று வகை காய்கறி மற்றும் கீரைக் கூட்டுடன் மண்பானைச் சமையல் சாப்பாடு பரிமாறப்பட்டது. அதன்பிறகு, அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சேம்பூத்துநாதர் கோயில் மலையடிவாரத்தில் இருக்கும் 40 ஏக்கர் மரப்பயிர்கள் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் அந்தோணிசாமி. ஆங்காங்கே முளைத்துள்ள இலந்தைப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார், தங்கராஜ். 

‘‘தொட்டிக்குள்ள என்னய்யா சாக்குமுட்டைகள் மிதக்குது”. தொட்டிக்குள் எட்டிப்பார்த்தவாறே கேட்டார், சிவசுப்பிரமணியன்.

‘‘தொட்டியில அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கருக்கு டிரம்மில் கரைசலைத் தயாரிக்கலாம். அதிக பரப்புக்கு இதுமாதிரி தொட்டிகள்ல செய்றதுதான் சுலபமாக இருக்கும்” என்ற அந்தோணிசாமி அரை ஏக்கர் பழத்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். தோட்டத்தில் இயற்கையில் விளைந்த கொய்யா, கிர்ணி, நெல்லி, மாதுளை ஆகியவற்றைப் பறித்து ருசி பார்த்தனர், அனைவரும்.

தோளில் போட்டிருந்த பச்சை நிறத்துண்டை உதறி தலைப்பாகையாக கட்டிய அந்தோணிசாமி, ‘‘இந்த இடம் மொத்தம் 40 ஏக்கர். கொஞ்ச வருஷத்துக்கு முன்ன இந்தப்பக்கம் வரவே முடியாது. கல்லு முள்ளோட, கரடு முரடான பாறையா இருந்துச்சு. ஒரு சொட்டு தண்ணிகூடக் கிடையாது. முதல்ல 80 அடி ஆழத்துல 45 அடி சுற்றளவுள்ள வட்டக்கிணறு தோண்டுனேன். அதுல கொஞ்சம் தண்ணீர் வந்துச்சு. மலைச்சரிவுங்கிறதால மழை நேரத்துல வர்ற தண்ணி சின்ன ஓடை  வழியா ஓடும். அந்த தண்ணியைச் சேமிக்கிற மாதிரி 80 சென்ட் பரப்புல மூணு கசிவு நீர்க்குட்டைகளை அமைச்சேன். கழிவுநீர்க் குட்டைக்குள்ள விழுற தண்ணி, குட்டைக்குள் உள்ள கிணத்துக்குள்ள போயிடும். கிணத்துல இருக்குற தண்ணி, நேரடியாவும், குழாய் மூலமாவும் 80 அடி ஆழம், 45 அடி சுற்றவுள்ள வட்டக்கிணத்துக்கு வந்து சேரும். இதை பம்ப் பண்ற மாதிரியும் அமைச்சிருக்கேன். இந்தத் தண்ணீரைத்தான் சொட்டுநீர் மூலமா மரப்பயிர்களுக்குக் கொடுக்கிறேன். இது என்னோட 40 ஏக்கருக்கு மட்டுமில்லாம சுத்துபட்டுல உள்ள 300 ஏக்கர் நிலத்துக்கும் நீராதாரமா இருக்குது” என்று விளக்கினார், அந்தோணிசாமி.

‘‘தண்ணீர் இல்லாத மலைப்பகுதியிலயும் கூட மழைநீரைச் சேகரிச்சு விவசாயம் செய்றது, சாதாரண விஷயமில்லை ஐயா’’ என வியந்தபடியே அந்தோணிசாமி மற்றும் கோமதிநாயகத்துக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர், ஒரு நாள் விவசாயிகள்.

-பயணம் தொடரும்

இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ராம்குமார்

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.