
மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!
நீர்ப்பாசனமும், மண் சீர்கேடும்...
ஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.
பயிர் விளைச்சலில் முக்கியப் பங்காற்றுவது, மண்ணில் உள்ள பௌதிகத் தன்மை. இதனால், மண்ணில் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

நீர் தேங்கிய விளைநிலங்களும்...
பராமரிப்பு முறைகளும்!
நிலத்தில் நீர் தேங்குவது இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்படக்கூடியது. தாழ்வான நிலப்பகுதியாக இருந்தால், சுற்றுப்புறத்தில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் தேங்கி நிற்கும். ஏரிப்பாசனப் பகுதிகளிலும், பள்ளக்கால் பகுதிகளிலும் ஏரியில் நீர் தேங்கி இருக்கும்போது, நிலத்திலும் நீர் தேங்கி இருக்கும். இந்த விளைநிலங்கள், எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதனால், மண்ணில் ஏற்படும் பௌதிக, ரசாயன, உயிரியல் மாற்றங்கள் தனித்தன்மை வாய்ந்து இருக்கும். உலகில் உள்ள நீர்ப்போக்கு நிலங்களில் 78 சதவிகிதம் களிமண், இரும்பொறை மண் வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது.
63 சதவிகித நிலங்களில் ஆண்டில் எப்போதாவது வறண்ட நிலை காணப்படுகிறது. மண்ணில் நீர் தேங்குவதால் ஏற்படும் மாற்றங்களின் தன்மை... நீர் தேங்கும் காலம் மற்றும் மண்ணின் பௌதிக, ரசாயன குணங்களைப் பொருத்தே இருக்கும். இந்த மாற்றங்களால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படும். நீர் தேங்கும் போது மண்ணில் பிராணவாயு குறைவதால், பெரும்பாலான பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நீரில் வாழும் தனித்தன்மை வாய்ந்த பயிர்கள் மட்டுமே சிறப்பாக வளரும். எடுத்துக்காட்டாக நெல்லைச் சொல்லலாம். இதன் தனித்தன்மை காரணமாக வேர்கள் பிராணவாயுவை செடியின் மேல்பகுதியில் இருந்து எடுத்துக்கொள்ளும்.
மண்ணின் கார அமில நிலை எப்படி இருந்தாலும், நீர் தேங்கிய பிறகு, கார அமில நிலை நடுநிலைக்கு (7 பி.ஹெச்) வந்துவிடும். அதிகமான ஈரத்தன்மையுள்ள மண்ணில் உள்ள சில அயனிகள் கரைந்து மின் கடத்தும் திறன் அதிகமாகும். அங்ககப் பொருட்கள் படிப்படியாக உருமாற்றம் அடைந்து அங்கக அமிலங்கள், மீத்தேன் வாயு, கரியமில வாயுவாக உருவாகிறது. இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால், உருவாகும் வாயுக்கள், பூமி சூடாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன.
மணிச்சத்து, சிலிக்கா, இரும்பு, மாங்கனீசு ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதால் அதிகமாக நீர் தேங்கும் நிலங்களில் இரும்பு அயனிகளால் நச்சுத்தன்மை உருவாக வாய்ப்பிருக்கிறது. அமிலத்தன்மையுள்ள மணற்பாங்கான மண்ணிலும், அங்ககச் சத்துக்கள் அதிகமுள்ள மண்ணிலும் நீர் தேங்குவது அதிகமாக இருக்கும். வயலில் சுண்ணாம்பு இடுவதன் மூலம் இந்தக்குறையை நிவர்த்தி செய்யலாம்.
‘களிமண் நிலத்தில் நீர் தேங்கினால் ஐந்தாண்டுக்கு ஒருமுறை 80 சென்டி மீட்டர் ஆழம் வரை உழுது, ஜிப்சத்தை உபயோகிக்கலாம்’ என பல்கேரியா நாட்டில் பரிந்துரைக்கபடுகிறது. ‘உளிக்கலப்பையில் உழுதால் சரியாகும்’ என ஆஸ்திரேலியா நாட்டில் பரிந்துரைக்கப்படுகிறது. நெல் பயிரிடும்போது மண்ணில் ஏற்படும் பௌதிக மாற்றம், அறுவடை முடிந்து மண் காயும் போது, பழைய நிலைக்குத் திரும்புவது இல்லை. அதனால் வேறு பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்ய முடிவதில்லை.
நீர்ப்பாசன முறைகளும் மண் சீர்கேடுகளும்!
நீர்ப்பாசனத்துக்கும், மண் சீர்கேட்டுக்கும் என்ன தொடர்பு என ஒரு கேள்வி எழலாம். மண்ணில் பௌதிக, ரசாயன, உயிரியல் மாற்றங்கள் ஏற்பட இயற்கையை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. மழையின் தலையீடும் பெரும்பங்கு வகிக்கிறது. தட்ப வெப்பநிலையில் முக்கியத்துவம் வாய்ந்தது, மழையளவு. ஒரு பகுதியின் மழைப் பொழிவைப் பொருத்தே மண்ணின் வளம் அமைகிறது. மலைப்பாங்கான மற்றும் சரிவு நிலங்களில் அதிகப்படியான மழை பொழியும் போது, மண் அரிமானம் ஏற்பட்டு, ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. அதேபோல வளம் மிகுந்த மேல்மண், காற்றினால் அடித்துச் செல்லப்படுவதினாலும் மண்வளம் குறைகிறது.
அதிக மழை மற்றும் குறைவான மழை இரண்டுமே மண்ணுக்குக் கெடுதல். மண்ணின் பண்புகளைப் பாதுகாப்பதில் மரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஆண்டுதோறும் மண்ணில் அங்ககப் பொருட்களையும், வளத்தையும் மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன, மரங்கள். ஆனால், மரங்களை வெட்டி விளைநிலங்களாக மாற்றும்போது மண்ணின் குணங்கள் மாறுபடுகின்றன.
மலைப்பகுதிகளிலும், சரிவுகளிலும் மரங்களை வெட்டினால், வளமான மேல்மண் அரித்துச் செல்லப்பட்டு விடும். மழைநீர் உப்புசத்துள்ள மண்ணில் விழும்போது... மண்ணில் உள்ள உப்பைக் கரைத்துக்கொண்டு நிலத்தடி நீரை அடைகிறது. அதனால், நிலத்தடி நீரும் உப்பாகி விடுகிறது. அந்த நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும்போது, உப்பின் தன்மைக்கு ஏற்ப மண்ணில் பௌதிக, ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஏரி மற்றும் ஆற்றுப் பாசன நீரில் குறு வண்டல் அல்லது வண்டல் துகள்கள் இருப்பதைக் காணலாம். இதனால், நன்மைகள் இருப்பதுபோல தீமைகளும் உண்டு. மணற்பாங்கான நிலங்களில் இந்த வண்டல் மண், வளத்தை அதிகரிக்கும். சத்துக்கள் சேமிக்கும், திறனை அதிகரிக்கும். ஆனால், களிமண் பூமியில் நீர் உறிஞ்சும் தன்மையைக் குறைத்து விடும்.

சரி செய்வது எப்படி?
மணற்பாங்கான நிலங்களில் நீர் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால், அதிக தண்ணீர் பாய்ச்சும்போது, நீர் விரயமாவதுடன், விலை உயர்ந்த உரம், பயிரின் வேர் பகுதியைத் தாண்டி அடித்துச் செல்லப்படுகிறது. அதனால்தான் மணற்பாங்கான நிலங்களில் பொதுவாக மண்வளம் குறைந்தே காணப்படும். அதேபோல பயிருக்கு இடும் உரத்தின் முழுப்பலனையும் பெற முடிவதில்லை. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகப்படுத்தலாம். பாத்திகளை ஏற்படுத்தி மழைநீரைச் சேமிப்பது மூலமாக மண் அரிப்பைத் தடுக்கலாம். மட்கிய எரு, தென்னைநார்க்கழிவு ஆகியவற்றை தேவையான அளவு இடுவதன் மூலம் மண்ணின் நீர் தேக்கும் தன்மையை அதிகப்படுத்தலாம்.
-வாசம் வீசும்
தொகுப்பு: ஆர்.குமரேசன்
தமிழ்நாட்டில் பௌதிக குணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பரப்பு!
குறைந்த நீர் உறிஞ்சும் திறனால் 7 லட்சத்து 54 ஆயிரத்து 611 ஹெக்டேர் அளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பில் 7.5 சதவிகிதம். அதிக நீர் உறிஞ்சும் திறனால் 24 லட்சத்து 12 ஆயிரத்து 56 ஹெக்டேரும், (மொத்த பரப்பில் 23.97%). அடிமண் இறுக்கத்தால் 10 லட்சத்து 54 ஆயிரத்து 661 ஹெக்டேரும் (மொத்தப் பரப்பில் 10.48%), மேல்மண் இறுக்கத்தால் 4 லட்சத்து 51 ஆயிரத்து 584 ஹெக்டேரும் (மொத்தப் பரப்பில் 4.49 %), 25 ஆயிரத்து 919 ஹெக்டேர் (மொத்தப் பரப்பில் 0.2%) நிலங்கள், நீர் தேங்கியும் பாதிப்புக்குள்ளாகின்றன.
நீ.செல்வம், ஆ.பாலமுருகன்