Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

கழகங்களின் ஊட்டச்சத்து பானமா...

விவசாயிகளின் ரத்தம்?

தொழில் தேவைதான்...  அதற்காக, விவசாயிகளை ஓட்டாண்டியாக்கி, அநாதைகளாக அடித்து விரட்டி விட்டு, நச்சுத்தொழிலுக்கு அச்சாரம் போடுவது சரியா? பெருந்துறையில் அதுதானே நடந்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்புகளை மீறி மூன்றாவது முறையாக, நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் கொண்டு வருவது முறைதானா?

1894-ம் ஆண்டு அடிமை இந்தியாவில் உருவான சட்டம், ஆங்கிலேயர்களுக்கு அதாவது, ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் இருந்தது. இன்று, மோடி கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம், ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை விட மோசமாக சர்வாதிகாரத் தன்மையுடன் இருக்கிறது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், ‘அதிகாரிகள் தவறு செய்து இருந்தால், அவர்கள் மீது நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயி வழக்கு தொடுக்கலாம்’ என்ற ஷரத்து இருந்தது. அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பாகுபாடு காட்டி பணம் சுருட்டி இருக்கிறார்கள், என்பதற்கு பெருந்துறை சிப்காட் வளாகம் கண்முன் நிற்கும் அழியா சாட்சி.

விவசாயிகளை வஞ்சிக்கும் இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கொதித்து எழுந்தனர். அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. எல்லோரையும் போல முன்னாள் முதல்வர் கருணாநிதியும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று கூப்பாடு போடுகிறார். மனசாட்சியோடும் மன உறுதியோடும்தான் சொல்கிறாரா? என்பது சந்தேகம்தான்.

காசு பார்த்த கழகங்கள்!

காலச் சக்கரத்தை 25 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி உருட்டுங்கள், உண்மை முகம் தெரியும். நிலம், நீர், காற்று அனைத்தையும் மாசுபடுத்தும் கொடிய நச்சுத் தொழிற்சாலைகள் குடியேற காரணமான பெருந்துறை சிப்காட்டுக்கு 1989-ம் ஆண்டு அச்சாரம் போட்டவர், அன்றைய முதல்வர் கருணாநிதிதான். காலச்சூழலில், அரசியல் சூறாவளியில் கருணாநிதி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சித்தட்டில் ஏறினார்.

கருணாநிதி கட்டியது என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் வரிப்பணம் வீணாவதையும் பொருட்படுத்தாமல், புதிய தலைமைச் செயலகத்தைத் துறந்துவிட்டு மீண்டும் பழைய தலைமைச் செயலகத்திலேயே ஆட்சி செய்யும் ஜெயலலிதா... பெருந்துறையில் மட்டும் கருணாநிதி போட்ட பாதையில் அடியொற்றிப் போனது ஏன்? அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளின் போஷாக்கான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து பானமாக இருப்பது, விவசாயிகளின் ரத்தம்தானே!

‘‘ஒரே இடத்தில் 3,000 ஏக்கர் பரப்பில் தொழிற்பேட்டை வேண்டாம், மாவட்டத்துக்கு 300 அல்லது 500 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைந்தால் ஊரின் தொழில் வளர வாய்ப்பாக அமையும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்’’ என்று அன்றைய பிரதமர் வி.பி.சிங் கூறிய நல்ல யோசனையை நிராகரித்து விட்டு... பெருந்துறையே சுடுகாடாவதற்கு துணை போனவர், நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி இன்று பேசுவது கறிக்கடைக்காரர், ஜீவகாருண்யம் பேசுவது போன்றதுதான். இவர் இப்படியென்றால், அம்மையார் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து விட்டார். ஒருவேளை அதனால்தான் கருணாநிதி எதிர்க்கிறாரோ என்னவோ?

மொத்தத்தில் இவர்கள் யாருக்கும் விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லை, என்பதே உண்மை.

பெருந்துறை சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தியதில் பெரிய அளவு முறைகேடுகள், மோசடிகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள். ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால், நடந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள். ‘பெருந்துறை-கோயம்புத்தூர், பெருந்துறை-சென்னிமலை நெடுஞ்சாலைகளை எல்லைகளாகக் கொண்டு 3 ஆயிரம் ஏக்கர் பூமி கையகப்படுத்தப்படும் என்று தண்டோரா போட்டார்கள். சென்னிமலை சாலை, கோயம்புத்தூர் சாலைகளில் கொடி கட்டி இதற்கு இடைப்பட்ட நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்படும்’ என்று அதிகாரிகள் கூறினார்கள்.

‘நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களே போகும்போது உள்ளே இருக்கும் நமது நிலங்களையா விட்டுவைக்கப் போகிறார்கள்... அரசை எதிர்த்து நின்று தடுக்க முடியுமா? அரண்மனைக்கு எதிர்மனை உண்டா’ என அவர்களாகவே வாதி, பிரதிவாதிகளாக மாறி பேச, கடைசியில் சகுனம் சொன்ன பல்லி, தவிட்டுத் தாழியில் விழுந்து இறந்து போனது கணக்காக, ஓய்ந்து போன விவசாயிகள் நிலம் எடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

பணம் தின்னி களவாணிகள்!

இங்குதான் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டுச்சதி அரங்கேறியது. சென்னிமலை, கோயம்புத்தூர் பிரதான சாலையிலிருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என்று கூறிய அதிகாரிகள் மாறாக, பின்புறமாக, எதிர் திசையில் ஈங்கூர் பகுதியிலிருந்து நிலங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்தார்கள். ‘அரசு மிகவும் குறைவாகத்தான் பூமிக்கு விலை நிர்ணயம் செய்து உள்ளது. நாங்கள் அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பணம் கிடைக்க வழி செய்கிறோம். அதற்காக நீங்கள் கொஞ்சம் கமிஷன் கொடுக்க வேண்டி வரும்’ என புற்றீசல் போல் புறப்பட்டார்கள், திடீர் புரோக்கர்கள்.

‘அரசு மதிப்பீட்டின்ப்படி உங்கள் நிலத்துக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். நாங்கள் பேசி மானாவாரி நிலத்துக்கு 60 ஆயிரம் ரூபாயும்; தென்னை மரங்கள், கிணற்றுப் பாசனம் உள்ள நிலங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வாங்கித் தருகிறோம். அதற்காக மானாவாரி நிலத்துக்கு 10 ஆயிரம் ரூபாயும், கிணற்றுப் பாசன நிலத்துக்கு 20 ஆயிரம் ரூபாயும் கமிஷன் கொடுக்க வேண்டும்’ என்று அச்சுறுத்திப் பணம் பறித்ததாகக் குமுறுகிறார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சகுனி வேலை பார்த்த சாத்தான்கள்!

மிகப்பெரும் மோசடி என்னவென்றால், கை கூலிகள், புரோக்கர்களாக செயல்பட்டவர்களின் நிலங்களைத் தவிர்த்துவிட்டு, அப்பாவி விவசாயிகளின் நிலங்களை மட்டும் அடிமாட்டு விலைக்குப் பிடுங்கியுள்ளார்கள் அதிகாரிகள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பெருந்துறை-கோயம்புத்தூர் பாதையிலும், பெருந்துறை-சென்னிமலைப் பாதையிலும், ஒரு கிலோ மீட்டர் அகலத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தாமல் விட்டுவிட்டனர். அதாவது அரசியல்வாதிகள், அவர்களுக்கு வேண்டியவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிலம் பறிப்பிலிருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். அந்த நிலங்களின் இன்றைய மதிப்பு, ஒரு ஏக்கர் 2 கோடியிலிருந்து 4 கோடி வரை.

அதே அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள்... அப்பாவி விவசாயிகளின் நிலங்களை 50 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மனசாட்சி இல்லாமல் பிடுங்கி இருக்கிறார்கள். சிப்காட்டில், இன்றைக்கு புதிதாக தொழில் செய்ய வருபவர்களுக்கு ஏக்கருக்கு
25 லட்சம் என குத்தகை நிர்ணயம் செய்து இருக்கிறது, சிப்காட் நிர்வாகம். 50 ஆயிரத்துக்கு நிலத்தை இழந்துவிட்டு, அநாதையாகிவிட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும், நீதியும் கிடைக்கவில்லை.

ஆள்பவர்களின் அக்கறை!

பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று பிரிவுகளில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகிறார்கள். பச்சைப் பட்டியலில் உள்ள தொழிற்சாலைகள் சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாதவை. ஆரஞ்சுப் பட்டியல் தொழிற்சாலைகளால் பாதிப்பு இருக்கும். அதே நேரத்தில் அனுமதிக்கும் அளவுக்குள் இருக்கும். ஆனால், சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகள் சூழலை முற்றிலும் சிதைக்கக் கூடியவை. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இந்த தொழிற்சாலைகளை இயக்கக்கூடாது என்பது விதி. உலகின் பலநாடுகள் சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகளை தங்கள் நாடுகளில் அனுமதிப்பது இல்லை. ஆனால், பெருந்துறை சிப்காட்டில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் சிவப்புப் பட்டியலில் இருப்பவை.

இப்போது தெரிகிறதா நம்மை ஆள்பவர்களுக்கு சூழல் மீதும் மக்கள் மீதும் உள்ள அக்கறை. நினைக்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாதபடி பெருந்துறை சிப்காட்டில் சிவப்புப் பட்டியல் கம்பெனிகள் குவிய காரணம் என்ன?

-தொடரும்

தூரன் நம்பி

படங்கள்: சு.குமரேசன், த.ஸ்ரீநிவாசன்