நீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்?

‘‘மலர் சாகுபடி செய்து வருகிறோம். நூற்புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழிசொல்லுங்கள்?’’
எம்.குமார், திருச்சி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர்.ப.செந்தில்குமார் பதில் சொல்கிறார்.
‘‘பொதுவாக நூற்புழுக்கள் 10 முதல் 50 சதவிகிதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. நூற்புழுக்கள் மென்மையான வேர்ப்பகுதிகள் கொண்ட தாவரங்களை அதிகம் தாக்கும் திறன் கொண்டவை. பயிர்களின் நோய் எதிர்ப்புத் தன்மை, வேரின் கடினத்தன்மை, சூழ்நிலைகளைப் பொறுத்து இதன் தாக்கும் தன்மை வேறுபடுகின்றது. காய்கறிப் பயிர்களில் முக்கியமாக தக்காளி, வெண்டை, கத்திரி, மிளகாய், பெரும்பான்மையான மலர் பயிர்கள், வாழை போன்ற மென்மையான வேர்ப்பகுதிகளைக் கொண்ட பயிர்களில் எளிதில் சேதத்தை விளைவிக்கும். நூற்புழுக்கள் தனிப்பட்ட முறையில் சேதம் விளைவிப்பது மட்டுமின்றி பூஞ்சணங்களுடன் இணைந்து கூட்டு நோய்களை உண்டாக்கி, அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.
நூற்புழுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது சற்று கடினமான செயலாகும். அதனால் சேத நிலையை அறிந்து எளிய முறையில் செலவில்லாமல் மேலாண்மை செய்யலாம். ரசாயன முறையைக் காட்டிலும், குறைந்த செலவில், எளிய முறையில் இயற்கை முறையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். நூற்புழுக்கள் பயிர்களின் வேர் பகுதியில் சுரக்கும் வேதிப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து ஈர்க்கப்படுகின்றன. தக்காளியின் வேரில் சுரக்கும் வேதிப்பொருட்கள், வேர்முடிச்சு நூற்புழுக்களை அதிகம் கவர்வதால், இதன் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.

சில தாவரங்கள் சுரக்கும் வேதிப்பொருட்கள், நூற்புழு விரட்டிகளாகச் செயல்படுகின்றன. நூற்புழு விரட்டிகளில் முக்கியமானது சாமந்தி. இதன் வேரில் சுரக்கும் வேதிப்பொருட்கள், நூற்புழுக்களுக்கு எதிரிகளாகச் செயல்படுகின்றன. தக்காளி பயிர் செய்யும் விவசாயிகள், இரண்டு வரிசை தக்காளி, இடையில் ஊடுபயிராக ஒரு வரிசை சாமந்தி என பயிரிடும்போது நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
வாழை பயிர் செய்யும்போது, வாழைப்பயிரைச் சுற்றி சாமந்தியைப் பயிரிடும்போது வாழையைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழுக்களின் தாக்கம் குறையும். வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்கு, புங்கம் பிண்ணாக்கு போன்ற வகைகளை ஹெக்டேருக்கு 500 கிலோ என்ற அளவில் இடும்பொழுது நூற்புழுத் தாக்குதல் குறையும். மேற்கண்ட பிண்ணாக்கு வகைகள் நூற்புழு விரட்டிகளாகச் செயல்பட்டு சேதத்தைக் குறைக்கின்றன. இதுமட்டும் இன்றி பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கின்றன. சாமந்தியை ஊடுபயிர் செய்யும்போது நூற்புழுக்களின் சேதம் குறைக்கப்படுவது மட்டுமின்றி உபரிவருமானமும் பெறலாம். புங்கம்பிண்ணாக்கில் தழைச்சத்து 4.29 சதவிகிதம் இருப்பதாகவும், வேப்பம் பிண்ணாக்கில் கால்சியம் 0.96, பாஸ்பரஸ் 0.44, சோடியம் 0.40, பொட்டாசியம், 0.98 சதவிகிதம் இருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது. ஆக, பிண்ணாக்கு இடுவதால், நூற்புழுக்களும் கட்டுப்படும். பயிர்களுக்குச் சத்துக்களும் கிடைக்கும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 94424-07460

‘‘நேரடி நெல் விதைக்கும் கருவியின் பயன்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?’’
பொ.குணசீலன், திருவள்ளூர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர்.பெ.முருகன் பதில் சொல்கிறார்.
‘‘பருவமழை தவறும் போதும், உடனடியாக நெல் சாகுபடி தொடங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் போதும் கைக்கொடுக்கக் கூடியது நேரடி நெல் விதைப்புக் கருவி. தமிழ்நாட்டில் நேரடி நெல் விதைப்புக்குக் கருவியைப் பயன்படுத்தி, நெல் விதைப்பு செய்யும் முறை பரவலாக நடக்கிறது. இந்த முறையில் சாகுபடி செய்ய நாற்றங்கால் தேவையில்லை.
இதனால், பணமும், நேரமும் மிச்சமாகும். இந்தக் கருவியின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் விதைப்பு செய்யமுடியும். வழக்கமாக நாற்று நடவு செய்வதற்கு நிலத்தைத் தயாரிப்பதுபோல இதற்கும் தயாரித்துக் கொண்டு, இக்கருவியின் மூலம் நேரடியாக நடவு செய்யலாம். நாற்றங்கால் விட்டு நடவு செய்ய 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஆனால், இக்கருவி மூலம் விதைத்தால் 8 முதல் 10 கிலோ விதைகளே போதுமானது. இம்முறையில் பயிர் நன்றாக தூர் வெடித்து வளரும். ஒரு குத்தில் 25 கிளைகள் கூட இருக்கும். விளைச்சலும் 25% அளவுக்கு அதிகம் கிடைக்கும். இந்த முறையில் விதைக்கும் போது, களைச்செடிகள் அதிகம் முளைக்கும். ஆகையால், களையெடுப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வழக்கமான நாற்று நடவு செய்ய ஏக்கருக்கு 2,500 ரூபாய் வரை செலவு பிடிக்கும். இக்கருவியைப் பயன்படுத்தினால், இந்தச் செலவு பலமடங்கு குறைந்துவிடும். எளிய முறையில் இயக்கக் கூடிய இக்கருவியின் விலை சுமார் 4,800 ரூபாய். சொந்தமாகவே வாங்கி வைத்துக்கொள்ளலாம். நம்முடைய தேவைக்குப் பயன்படுத்திய நேரம் போக மற்ற நேரங்களில் வாடகைக்கு விடலாம். ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய் வரை வாடகைக்கு விடும் விவசாயிகள் இருக்கிறார்கள். காட்டுப்பாக்கத்தில் உள்ள எங்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்தக் கருவி விலைக்குக் கிடைக்கும்.’’
தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர் (அஞ்சல்), காஞ்சிபுரம் மாவட்டம்-603203.
தொலைபேசி-044-27452371.

‘‘அயிரை மீன் வளர்க்க விரும்புகிறோம். இதன் சிறப்புகள் என்ன? தற்போது, கிலோ ரூ 1,000 விற்பனையாகிறது என்கிறார்கள். இது உண்மையா?’’
ரா.தியாகராஜன், ராஜபாளையம்.
பொன்னேரி, மீன் வளத்தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானி முனைவர்.ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.
‘‘அயிரை மீன் மிகவும், சிறிய உருவ அமைப்பைக் கொண்டது. அதிகபட்சம் 2-3 கிராம் அளவுக்குத்தான் எடையிருக்கும். பெரும்பாலும், இதை யாரும் தனியாக வளர்ப்பதில்லை. கெண்டை மீனுடன், கூட்டாகத்தான் வளர்ப்பார்கள். காரணம், அயிரை மீன் குளத்தின் அடியில்தான் இருக்கும். அதுவும், மண்ணுக்குள் புதைந்துகொள்ளும். இதனால், மேல் மட்ட நீரில் வளரும் கெண்டை மீன் ரகத்தைச் சேர்த்து வளர்ப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும். அயிரை மீனின் வயது 4 மாதம். இதற்கு மேல் வளர்த்தாலும், எடை கூடாது, வளர்ச்சியும் இருக்காது. எனவே, நான்கு மாதத்துக்குள், இதை அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

அயிரை மீன்கள் நேரடியாக உணவுப் பொருட்களை உட்கொள்ளாது. மட்கிய உணவுப் பொருட்களை மட்டும்தான் உண்ணும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அயிரை மீன் உண்பதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். இதனால், அயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது, கிலோ 1,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. எனவே, தாராளமாக அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபடலாம். எங்கள் ஆராய்ச்சி மையத்தில் விரைவில், அயிரை மீன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். கட்டண அடிப்படையிலான, இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியம்.’’
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27991566 செல்போன்: 94446-94845.
புறா பாண்டி
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.