Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 11

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

மண்ணைக் கெடுக்கும் உப்புகள்!

ரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர்.

மண்ணுக்கு மரியாதை! - 11

நாம் இதுவரை மண்ணின் பௌதிகத் தன்மையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பார்த்தோம். இனி, மண்ணில் வேதியியல் பண்புகள் மாறுபடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்ப்போம். மண்ணில் வேதியியல் பண்புகள் மாறுபடுவதால் களர், உவர், உப்பு, அமிலம் ஆகிய நான்கு வகையான தன்மைகள் உண்டாகின்றன. இவை, நிலத்தையும், விளைச்சலையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கின்றன. மண்ணின் குறைகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிந்து நிலத்தைச் சீர் செய்தால்தான், நல்ல விளைச்சல் எடுக்க முடியும்.

களர் மண்!

களர்மண்ணில் சோடியம் அதிகமாக இருக்கும். சோடியம் அயனிகள் மண்ணில் உள்ள களித்துகள்களால் ஈர்க்கப்பட்டு... மண்ணோடு நீர் சேரும்போது மண் கட்டிகள் சிறு துகள்களாக உடைந்து, களித்துகள்கள் தனித்தனியாகப் பிரிந்து விடுகின்றன. களித்துகள்கள் பிரிந்த மண், குழம்பாக மாறுகிறது. களர்மண் வயலில் மழை அல்லது நீர்ப்பாசனம் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்து, களித்துகள்கள் மண்ணில் உள்ள துவாரங்களை அடைக்கின்றன. இதனால் மண்ணின் நீர் கடத்தும் திறன் குறைந்து, தேக்கம் உண்டாகி, பயிர்களின் வேர் சுவாசம் தடைபடுகிறது. இதனால் பயிரின் வேர், வளர்ச்சி குன்றி விளைச்சல் குறையும். களர்மண் நிலங்கள் மழைக்காலத்தில் மண்ணரிப்பால் பாதிக்கப்படும். இதுதான் ‘களர்மண்’ எனப்படும் சோடியம் நிறைந்த மண்ணின் இயல்புகள்.

உப்பு மண்!

பாறைகள் சிதைந்து மண்ணாக மாறுகிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். பாறைகள் சிதைந்து மண்ணாகும் போதோ அல்லது உப்புநீர் பாசனத்தாலோ, மண்ணில் பல்வேறு உப்புகள் சேர்கின்றன. நிலப்பரப்பில் உப்பு சேரும்போது சாதாரண மண், உப்புமண்ணாக மாறுகிறது. அந்த மண்ணில் பாசனம் செய்யும்போது, உப்பு கரைந்து மண்ணின் அடித்தளத்துக்குச் சென்று விடும். வடிகால் சரியாக இருந்தால் உப்புநீர், நிலப்பரப்பில் இருந்து வெளியேறி மண்ணின் உப்புத்தன்மை குறையும். பொதுவாக, உப்புமண்ணில் சாப்பாட்டு உப்பு எனச் சொல்லப்படும் சோடியம்-குளோரைட் பரவலாக காணப்படும். இத்தகைய மண்ணில் இருந்து உப்பு வெளியேறினாலும், மண்ணின் களித்துகள்கள் உப்பின் பகுதியான சோடியம் அயனிகளை ஈர்த்துக்கொள்ளும்.

நிலத்தடி நீரும் உப்பாக இருந்தால், மண்ணில் உள்ள துவாரங்கள் வழியாக மேல்மட்டத்துக்கு நீர் உறிஞ்சப்படும். கீழே இருக்கும் நீர் மேல்மட்டத்துக்கு வரும்போது, மண்ணின் உப்பு அதிகரிக்கும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகிய நான்கு வகையான உப்புகளும் மண்ணில் காணப்படுகின்றன. உப்புக்கள் மண்ணில் இருக்கும் நீரில் கரைந்து உப்பு அயனிகளின் அளவு அதிகரிக்கும் போது, பயிர்களால் நீரை உறிஞ்ச முடியாமல் போய் விடும். அதனால், பயிர்கள் வாடி மடிகின்றன. இதுதான் உப்பு மண்ணின் இயல்புகள்.

அமில மண்!

மண்ணில் ஹைட்ரஜன் அயனி அதிகரிக்கும் போது மண் அமிலத்தன்மை அடைகிறது. இந்த அயனிகளின் அளவு மிகக் குறைவாக இருந்தால் மண் காரத்தன்மை அடையும். மண்ணும் நீரும் 1:2.5 என்ற (மண் 1%,  நீர் 2.5 %) விகிதத்தில் கலந்த கலவையில் கார அமிலத்தன்மை 5.5 என்ற அளவீட்டுக்குக் கீழே இருந்தால், அமிலமண் எனவும் 8.5 என்ற அளவீட்டுக்கு மேல் இருந்தால், ‘காரமண்’ எனவும் பிரித்துக் கொள்ளலாம். அதிகமாக மழை பொழியும் பகுதிகளில் மண் இயற்கையாகவே அமிலத்தன்மையுடன் இருக்கும்.

சில வகை தாவரங்களைத் தொடர்ந்து பயிரிடுவதால் மண் அமிலத்தன்மை அடையும். பயறு வகைப் பயிர்களைத் தொடர்ச்சியாகப் பயிரிடக் கூடாது. அதே போல் நைட்ரஜன் உள்ளடங்கிய உரங்களான அமோனியா-சல்பேட் போன்ற உரங்களைத் தொடர்ச்சியாக உபயோகிப்பதாலும் மண் அமிலத்தன்மை அடையும். மண்ணில் உள்ள நைட்ரேட் அயனிகள் வடிக்கப்பட்டு தரைமட்டத்தில் இருந்து நீங்கும்போது, மண்ணில் ஹைட்ரஜன் அயனி அதிகரிக்கிறது. இதனால், மண் அமிலத்தன்மை அடைகிறது. அமிலமண்ணில் அலுமினியம், மாங்கனீசு, இரும்பு போன்ற அயனிகள் அதிகமாவதால் சில நுண்ணுயிர்கள் நஞ்சாக மாறி பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

உவர் மண் அல்லது காரமண்!

மண்ணின் கார அமிலத்தன்மை 8.5 என்ற அளவீட்டுக்கு மேல் இருந்தால் கார மண் அல்லது உவர் மண் என்கிறோம். சுண்ணாம்பு மிகுந்த மண்களில் கார அமிலத்தன்மை 8 முதல் 8.5 என்ற அளவீடு வரை இருக்கும். இந்த அளவு வரைக்கும் பயிர் வளரும். ஆனால், 8.5 என்ற அளவீட்டைத் தாண்டிப் போகும்போது சோடியம்-கார்பனேட் (சலவைசோடா), சோடியம்-பை-கார்பனேட் (சோடா உப்பு) அதிகமாகி மண்ணின் காரத்தன்மை அதிகரித்து, விளைச்சல் குறையும். உவர்மண் நிலங்களில் சோடியம் அதிகமானால், மண் வேகமாக தன்னுடைய வளத்தை இழக்கும்.

மாசுபடுத்தப்பட்ட மண்!

காலங்காலமாக இந்த நான்கு வகை மண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், சமீபகாலமாக ஐந்தாவது வகையான ஒரு மண்ணும் பட்டியலில் இடம் பிடிக்கிறது. அதற்கு மாசுபடுத்தப்பட்ட மண் என்று பெயரிட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் அதிகளவில் இருக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள், அருகிலுள்ள நிலங்களில் கலப்பதால் கழிவுகளில் உள்ள ‘ஹெவி மெட்டல்ஸ்’ எனச் சொல்லப்படும் கடின உலோகங்கள் மண்ணில் கலந்து, வேதியியல் பண்பை மாற்றமடையச் செய்கின்றன. கழிவுகளில் ஈயம், நிக்கல், குரோமியம், காட்மியம் ஆகிய நான்கு வகையான உலோகங்கள் இருக்கும். இவை, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அழியச் செய்கின்றன. இப்படி பாதிக்கப்பட்ட மண்ணில் விளையும் பொருட்களை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

உங்கள் நிலத்து மண் இந்த ஐந்து வகைகளிலும் ஏதாவது ஒன்றில் அடங்கி விடும். நமது மண் என்ன வகை என்பதை தெரிந்து கொண்டால், அதிலுள்ள குறைபாடுகளைச் சுலபமாக சரி செய்து விடலாம்.

மண்ணின் குறைபாடுகளைச் சரிசெய்யும் முறைகள் அடுத்த இதழில்..

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

உங்கள் மண் நலம்... நீங்களே சோதிக்கலாம்!

நமது நிலத்து மண் நலமாக இருக்கிறதா... வளம் இழந்து வருகிறதா... அல்லது முற்றிலுமாக வளமிழந்து விட்டதா? என்பதை சிறு சோதனை மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். நிலத்து மேல் மண்ணில் உள்ள சிறுசிறு கட்டிகளை 100 கிராம் அளவில் எடுத்து... மேல் மூடியில்லாத ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு, 500 மில்லி மழைநீர் அல்லது காய்ச்சி வடிக்கப்பட்ட நல்ல தண்ணீரை ஊற்ற வேண்டும். ஊற்றும்போது, நேரடியாக மண்ணில் படுவது போல ஊற்றக் கூடாது. பாட்டிலின் பக்கவாட்டில் சரிந்து இறங்குவது போல ஊற்ற வேண்டும். பிறகு, பாட்டிலின் மேல் பகுதியில் நமது உள்ளங்கையை வைத்து பொத்தி, தலைகீழாக ஒரே ஒரு முறை கவிழ்த்து, நேராக்கி அப்படியே ஓரிடத்தில் வைத்து விட வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து, கட்டிகள் மண்ணில் கரைந்து கீழே சென்று சேர்ந்திருக்கும். மேலே இருக்கும் நீர் எந்தளவுக்குத் தெளிவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து மண்ணின் நிலையைத் தெரிந்துக் கொள்ளலாம். மிகத்தெளிவாக இருந்தால் அதை 0 என்றும்; சுமாரான தெளிவுடன் இருந்தால் 1 என்றும்; தெளிவே இல்லாமல் கலங்கி இருந்தால் 2 என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும். 0 என்றால் மண்ணில் பிரச்னையில்லை, 1 என்றால், பிரச்னை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, 2 என்றால் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

படங்கள்: வீ.சிவக்குமார்