Published:Updated:

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

‘இனி வேண்டும் இயந்திர நுரையீரல்!’

ர் இடத்தில் எப்படியெல்லாம் தொழிற்பேட்டை இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குவது, பெருந்துறை சிப்காட். ஒரு தொழிற்பேட்டையில் ஒன்றிரண்டு சிவப்புப் பட்டியல் தொழிற்சாலை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தொழிற்பேட்டை முழுவதுமே, சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகள் என்றால்... நெஞ்சு பதைக்கிறது.

‘‘ஆட்சியாளர்களின் ஆணவப்போக்கும் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம். நிறைய நிலம் எடுக்கப்பட்டு விட்டதே என்பதற்காக வருந்தி வருந்தி வரவழைக்கப்பட்டவைதான் இந்த சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகள்’’ என்கிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர் நந்தகுமார். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்ற ஆலைகளின் பட்டியலைப் பார்த்தால் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

“சில கம்பெனிகள் காற்றை நாசப்படுத்துகின்றன. சில கம்பெனிகள் சாயக் கழிவுநீரை பூமிக்குள் விட்டு நீரை மாசுபடுத்துகின்றன. சில கம்பெனிகள் காற்றில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆக்சிஜனையும் உறிஞ்சி எடுக்கின்றன. கண்ணாடி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை, 2 ஆயிரம் டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் உஷ்ணக் காற்றோடு... நுண்ணிய தூசு துகள்களை காற்றுக்குள் விடுகிறது. இதை, சுவாசித்தால் நுரையீரலால் சுத்திகரிக்க முடியுமா?

கவிஞர். வைரமுத்து சொல்வதுபோல ‘இனி, மூச்சுக்காற்றைச் சுத்திகரிக்க இயந்திர நுரையிரல்’தான் பொருத்த வேண்டும். அந்த அளவுக்கு காற்றும் மாசுபட்டுவிட்டது” என்று எரிமலையாக குமுறித் தீர்த்துவிட்டார், நந்தகுமார்.

பாம்புக்கு பால் ஊற்றினாலும், பாயசம் கொடுத்தாலும் அது கடிக்கத்தான் செய்யும், விஷத்தைக் கொட்டத்தான் செய்யும். அதன் குணம் அப்படி... நச்சு தொழிற்சாலைகளாகப் பார்த்து பெருந்துறை சிப்காட்டில் அனுமதித்த பிறகு... அங்கிருந்து ஜவ்வாதும், சந்தனமுமா வரும்? விஷ நீரும், நச்சுக்காற்றும்தானே வரும். ஆரம்பத்திலிருந்தே, பனியம்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், நச்சுத் தொழிற்சாலைக்கு எதிராக கடுமையாகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். விடிவுதான் இல்லை. அப்போதைய அரசு, இரும்புக்கரம் கொண்டு அவர்களை ஒடுக்கி நச்சுத் தொழிற்சாலைகளுக்கு அச்சாரம் போட்டது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் 2013-ம் ஆண்டு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்தில்... அரசு, தனியார் கூட்டாகச் சேர்ந்து நடத்தும் தொழில்களுக்கு நிலம் தேவைப்படும்போது; 70 சதவிகிதம் விவசாயிகள் ஒப்புதல் பெற வேண்டும். முழுக்க முழுக்க தனியாருக்கு என்றால் 80 சதவிகிதம் விவசாயிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டிருந்தது. இந்த சட்டப்படி, ஓரளவுக்குச் சுற்றுசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியும். தொழிலை முடிவு செய்தபிறகு, நிலம் எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கும். நிலத்தை எடுத்து வைத்துவிட்டு, ‘கடைவிரித்தேன் கொள்வார் இல்லை’ என்று நச்சுத் தொழிற்சாலைகளுக்குப் பட்டு கம்பளம் விரித்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

மோடி அரசு, இந்த நல்ல ஷரத்தையும் நீக்கிவிட்டது. மக்களை மறந்து, விவசாயிகளை நசுக்கிவிட்டு, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார், மோடி.

என்ன சாபமோ தெரியவில்லை... சிப்காட் வளாகத்துக்குள் நுழையும் போதெல்லாம் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரமாகவே அமைந்துவிடுகிறது. அன்றும் அப்படித்தான் மதியம் இரண்டு மணி. நல்ல பசி... முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிப்காட் அலுவலகம் முன்பு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி கொண்டு இருந்தனர். எட்டிப் பார்த்தேன். பனியம்பள்ளி பஞ்சாயத்துத் தலைவர் சிவகுமார் அங்கிருந்தார். சிறிதுநேரத்தில் பெருந்துறை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஒரு போலீஸ் படை அங்கு குவிந்தது.

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

பொதுவாக சிப்காட் வளாகத்துக்குள் போர் போடக் கூடாது என்பது விதி. முந்தைய நாள் இரவு, பிளாட் எண் ஜி6(G6) மினர்வா சாயப்பட்டறையில் ரிக் வண்டி போர் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த விவசாயி, ஊருக்குள் தகவல் சொல்ல... காட்டுத் தீ போல் தகவல் பரவி, பஞ்சாயத்துத் தலைவர் சிவகுமார் தலைமையில் திரண்ட விவசாயிகள்தான் அங்கு நின்றிருந்தனர்.

“நொய்யல் ஆறு செத்து, திருப்பூரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பல வருடங்களுக்கு முன்பு கூறிய அந்த உண்மை, மீண்டும் எனது நினைவுப் பையைத் திறந்து எட்டிப் பார்த்தது. நாமும் அந்தக் கூட்டத்தில் ஐக்கியமானோம்.

நடந்தது என்ன? அடுத்த இதழில்...

-தொடரும்

தூரன் நம்பி

படங்கள்: க.தனசேகரன்