பாலைப் பெருக்கும் வேலிக்கருவை !
புறா பாண்டி
''மாடு வளர்ப்பவர்கள், தீவனங்களுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, எங்கு பார்த்தாலும், தானாகவே வளர்ந்து கிடக்கும் வேலிக்கருவை மரத்தின் காய்களை, மாடுகளுக்குக் கொடுக்கலாமா?''
கே. குணசேகரன், துறையூர்.
தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தின் மனையியல் துறை வல்லுநர்
எஸ். சுமதி பதில் சொல்கிறார்.
''வேலிக்காத்தான், வேலிக்கருவை, ஆபீஸ் முள்... என்று பல பெயர்களில் இம்மரத்தை அழைப்பார்கள். பொதுவாக, இந்த மரங்கள் தரிசாகக் கிடக்கும் நிலங்களில்தான் முளைத்துக் கிடக்கின்றன. கடுமையான வறட்சியைத் தாங்குவதோடு வேகமாகவும் வளரும் தன்மையுடையவை இவை. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் வேலிக்கருவை அதிகமாக உள்ளன. பெரும்பாலும், எரிபொருள் உபயோகத்துக்குத்தான் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதனால், இவற்றைத் தனிப்பயிராகவும் சிலர் சாகுபடி செய்வதுண்டு.

இந்தியாவைப் பொருத்தவரை இவற்றைக் களைகள் என்று ஒதுக்குகிறோம். ஆனால், பெரு, மெக்ஸிகோ... போன்ற நாடுகளில் இதை கற்பக விருட்சமாகப் பார்க்கிறார்கள்.
இம்மரம் இருபது ஆண்டுகளில் நன்கு வைரம் பாய்ந்து விடுவதால், அதைக் கொண்டு மரச்சாமான்கள் தயாரிக்கிறார்கள். இதில் தயாரிக்கப்படும் சாமான்கள் வலிமையாக இருப்பதோடு, ரோஸ்வுட், தேக்கு... போன்றவற்றைக் காட்டிலும் நீண்ட காலம் உழைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.
வெளிநாடுகளில் இந்த மரத்தின் காய்களைத் தூள் செய்து காபி போல பானம் தயாரித்துக் குடிக்கிறார்கள். இதில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. இந்தக் காயைக் காய வைத்துத் தயாரிக்கப்படும் மாவில் பூரி, சப்பாத்தி, ரொட்டி... போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம்.
அதனால் ஆடு, மாடுகளுக்கு இவற்றை தைரியமாகக் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு அதிக பால் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
வேலிக்கருவை நெற்றுக்களைத் தவிடுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். இந்த நெற்றுக்கள் மூலம் உணவு தயாரித்து சாப்பிடும் இளம் தாய்மார்களுக்கு அதிகளவில் தாய்ப்பால் சுரக்கும். எங்கள் மையம் முலமாக வேலிக்கருவையின் நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அதுகுறித்த பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.''
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் மையம், வாகைக்குளம், தூத்துக்குடி மாவட்டம். அலைபேசி: 99429-78526.
''பால் பண்ணை அமைக்கப் போகிறேன். கறந்த பால் எத்தனை மணி நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்?''
ஏ. சுப்பிரமணியன், கணக்கன்பட்டி.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், பால் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இளங்கோ பதில் சொல்கிறார்.
''கறந்த பால் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரைதான் நன்றாக இருக்கும். அதற்கு மேல் அந்தப் பாலில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கி விடும். இந்த பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லேக்டோஸ் என்ற பொருளை சாப்பிட்டுத்தான் பெருகுகின்றன. பாக்டீரியாக்கள் பெருகிய பிறகுதான் பால் கெட்டுப்போய் புளிப்புத் தன்மைக்கு மாறுகிறது. குளிர் சாதனப்பெட்டியில் வைக்கும்போது பாக்டீரியாக்களின் பெருக்கம் தடைபடும். குளிர் நிலையில் இருந்தாலும், 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்தி விடுவதுதான் நல்லது.

பால் கறக்கும் போதும் கவனமாக இருந்தால்தான், கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். பால் கறப்பவர்கள் கைகளில் நகங்கள் இருக்கக் கூடாது. பால் கறப்பதற்கு முன்னர் சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். பால் பாத்திரத்தை நல்ல தண்ணீரில் கழுவி, சூரிய ஒளியில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் பாத்திரங்களில் ஒட்டிக் கொண்டுள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முடியும். பாலில் ஈ போன்ற பூச்சிகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
மறுசுழற்சி செய்யத்தக்க தரமான பாலிதீன் பைகளில் அடைத்துதான் விற்பனை செய்ய வேண்டும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் கையுறை அணிய வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், கறந்து 8 மணி நேரம் வரை பாலைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்.''
''வேளாண் விளைபொருட்களின் விலை நிலவரங்களை எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி) மூலம் பெறுவது எப்படி?''
வே. துரைராஜ், ஈரோடு.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கணினி வழி வேளாண் விரிவாக்கப் பிரிவின், திட்ட அலுவலர் முனைவர்.
இ. வடிவேல் பதில் சொல்கிறார்.
''கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயத் தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு, விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வழிகாட்டி வருகிறது. கணினி வழி வேளாண் விரிவாக்கப் பிரிவு, தமிழ்நாட்டில் உள்ள 13 சந்தைகளை தினமும் ஆய்வு செய்து, காய்கறி, பழங்கள் உட்பட சுமார்
160 விளைபொருட்களின் விலை விவரங்களை சேகரித்து வருகிறது. இந்த விவரங்களை தினமும் மதியம் 12 மணிக்குள் விவசாயிகளுக்கு, குறுஞ்செய்திகளாக அனுப்பி வருகிறோம்.

இந்த சேவை தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. விவசாயிகள்... தங்களின் பெயர், சாகுபடி பயிரின் பெயர், அலைபேசி எண் போன்ற விவரங்களை எங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்தால் போதுமானது. ஒரு அலைபேசி எண்ணுக்கு ஒரு பயிரின் விலை மட்டும்தான் அனுப்பப்படும். அவருக்கே வேறு பயிரின் விலை நிலவரம் தேவைப்படும்பட்சத்தில் இன்னொரு அலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் குழுவாக இணைந்து, ஆளுக்கொரு பயிரைப் பதிவு செய்து அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம்.
பதிவு செய்திருக்கும் விவசாயியின் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சந்தை மற்றும் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு சந்தை என இரண்டு சந்தைகளின் நிலவரங்களை அனுப்புகிறோம். பதிவு செய்யப்பட்ட பயிரின் அறுவடை முடிந்த பிறகு, அடுத்த சாகுபடி பயிரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422-6611383.
www.agritech.tnau.ac.in என்ற எங்கள் இணையதளத்தின் மூலமாகவும் சந்தை விலை விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த இரண்டரை ஆண்டுகளில் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்கள் போன்ற விவரங்களும் இதில் கிடைக்கும்.''
''தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி? இது எதற்குப் பயன்படுகிறது?''
ஆர். குணசீலன், கோயம்புத்தூர்.
முன்னோடி இயற்கை விவசாயி தஞ்சாவூர் கோ. சித்தர் பதில் சொல்கிறார்.
''தேமோர் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாகத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது வைரஸ் கிருமிகளால் வருகின்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது, என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

அதன் தயாரிப்பு முறை பற்றி பார்ப்போம்.
5 லிட்டர் புளித்த மோர், 5 லிட்டர் தேங்காய் பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் பத்து லிட்டர் தண்ணீரில் 500 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.''
தொடர்புக்கு: அலைபேசி: 94431-39788.
''காயர் போர்டு முகவரி வேண்டும்?''
எஸ். செந்தில்குமார், தென்தாமரைகுளம்.
''கேரள மாநிலம் கொச்சியில் காயர் போர்டு உள்ளது. தென்னை நார் மூலம் கயிறு, படுக்கை, கால்மிதி, மெத்தை, அழகுசாதனப் பொருட்கள்... போன்றவற்றை உற்பத்தி செய்ய இந்த வாரியம் உதவி வருகிறது.''
தொடர்புக்கு: COIR BOARD
‘Coir House’ M.G. Road, Ernakulam,
Kochi - 682 016. Kerala, India.
Tel : 91-484-2351807, 2351788, 2351954,
Fax: 91-484-2370034 , 2354397
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை'
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு தபால் மூலமும்
pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.
படங்கள்: உ. பாண்டி