Published:Updated:

கார்ப்பரேட் கோடரி - 1

கார்ப்பரேட் கோடரி
News
கார்ப்பரேட் கோடரி ( கார்ப்பரேட் கோடரி )

மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!

10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கால வரலாற்றைக் கொண்டது வேளாண்மை. தவறுகள் நேர்ந்தாலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நிலத்தையும் நீரையும் உலகம் முழுக்கவே பாதுகாத்து வந்திருக்கிறது, மனித இனம். ஆனால், கடந்த இரு நூற்றாண்டுகளாக இதில் குறுக்கிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நவீன தொழில்நுட்பம், பண வெறி... மண்ணில் வன்முறையை விதைத்தது. இறுதியில் மண்ணிடம் தோற்றது, பணம்!

கார்ப்பரேட் கோடரி - 1

இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு முன்னரும்கூட உலகின் பல கண்டங்களில் உழவர்களின் பாரம்பர்ய அறிவின் முன் அது தோல்வியே கண்டிருக்கிறது. அவையனைத்தும் உலகின் பார்வையிலிருந்து சாமர்த்தியமாக மறைக்கப்பட்டன. பாரம்பர்ய அறிவையும், இயற்கை வேளாண்மையையும் வீழ்த்த முயன்ற கார்ப்பரேட்களின் கோடரி, பலகட்டங்களில் முனை மழுங்கிப் போன கதைகள் நிறையவே உண்டு. என்றபோதும், கார்ப்பரேட்களின் ஆதிக்கம் முடிந்தபாடில்லை. இன்றளவிலும், விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொள்ளும் அவர்களின் முயற்சி தொடரத்தான் செய்கிறது. இதற்கு அரசாங்கங்கள் துணைபோவதும் தொடர்கிறது. இந்தக் கார்ப்பரேட்களின் அட்டகாசத்தை, உலகளாவிய எடுத்துக்காட்டுக்களுடன் பேசப்போகிறது இத்தொடர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11. நியூயார்க் நகரிலுள்ள உலக வணிக மையத்தின் இரட்டைக் கோபுரக் கட்டடம் இடிந்து தரைமட்டமான நாள். உலகமே அதிர்ந்த அந்நிகழ்ச்சி உண்மையில் அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர், 1993 பிப்ரவரி 26-ம் தேதியே நடந்திருக்க வேண்டும்.

அன்றுதான் அக்கட்டடத்தின் மீது முதல் தாக்குதல் நடைபெற்றது. அதனை பெரும்பான்மையோர் இன்று மறந்திருக்கலாம் என்பதற்காக ஒரு சிறு நினைவூட்டல். 

அன்றைய தினம், ஒரு காரில் 590 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை ஏற்றி வந்து அக்கட்டடத்தின் அடியிலுள்ள கார் நிறுத்தும் தளத்தில் நிறுத்தி காரை வெடிக்கச் செய்தனர்.

குறிப்பிட்ட ஓரிடத்தில் அக்காரை நிறுத்தி வெடிக்கச் செய்யும் அந்தத் திட்டம் சரியாக நடந்திருந்தால், இரட்டைக் கோபுரத்தில் வடக்கு கோபுரம் சரிந்து... தெற்கு கோபுரத்தின் மீது சாய்ந்து, இரண்டு கோபுரமுமே கீழே சரிந்து விழுந்து, தரைமட்டமாகியிருக்கும். ஆனால், திட்டமிட்ட இடத்தில் காரை நிறுத்த முடியாமல், வேறொரு இடத்தில் நிறுத்தி வெடிக்கச் செய்ததில் 30 மீட்டர் அகலத்துக்கு கான்கிரீட் தளத்தில் ஓட்டை விழுந்ததோடு, அது எழுப்பிய புகை மண்டலம் 93-ம் மாடிவரை உயர்ந்தது. பெரிய அளவில் நிகழ வேண்டிய உயிரிழப்பு தடுக்கப்பட்டு 6 பேர் மரணம், 1,042 பேர் காயம் என்பதோடு முடிவுக்கு வந்தது, அந்த குண்டு வெடிப்பு.

‘மண்ணைப் பற்றி பேசுவதற்கும், இரட்டைக் கோபுர வெடிகுண்டு சதிக்கும் என்ன தொடர்பு?’ என்ற கேள்வி எழலாம். விளைமண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கும், இந்த வெடிகுண்டு வன்முறைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழில் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பார்களே... அதுதான் இங்கும் நிகழ்ந்தது. உலக வணிக மையக் கட்டடம் என்பது கார்ப்பரேட் வணிகத்துக்கான ஒரு பெருமிதக் குறியீடு.

பணம் பண்ணும் பேராசையில் மண்ணை அழித்த, இன்னமும் அழித்துக்கொண்டிருக்கும் அந்தக் குறியீட்டை அழிக்க அந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் என்ன தெரியுமா? ‘ஏ.என்.எஃப். ஓ’ (ANFO)! அம்மோனியம் நைட்ரேட்+ ஃப்யூல் ஆயில் (Ammonium Nitrate+ Fuel Oil) என்பதன் சுருக்கம்தான் இது. அம்மோனியம் நைட்ரேட் என்பது நம் வயலில் கொட்டும் யூரியா, ஃப்யூல் ஆயில் என்பது பெட்ரோலிய துணை வினைபொருள். வெறும் 12 மூட்டை யூரியாவைக் கொண்டு உலகின் உயர்ந்த இரு கட்டடங்களையே தகர்க்க முடியுமெனில், நம் மண்ணின் கதியை நினைத்துப் பாருங்கள். இது எவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வயலுக்கு யூரியா வேண்டும் என்று கேட்டால் அரசாங்கமே சட்டப்பூர்வமாக வழங்கக்கூடிய ஒரு பொருள்.

கார்ப்பரேட் கோடரி - 1

நிலத்தின் மீதான வன்முறையின் வரலாறு, யூரியா கண்டுபிடித்த பிறகு தொடங்கியதல்ல. அதற்கும் வெகுகாலம் முன்னரே தொடங்கி விட்டது. அது, இங்கிலாந்திலிருந்து தொடங்குகிறது.

அந்நாடு தொழிற்புரட்சியில் முன்னேறத் தொடங்கிய காலம். மக்கள் நகரங்களில் குவியக் குவிய உணவுத் தேவை அதிகரித்தது. நாட்டுப்புற விளைபொருட்கள் நகரத்துக்கு இடம் பெயர்ந்தன. தொடக்கத்தில் இது வழக்கமானதாகத் தோன்றினாலும், பாதிப்பு விரைவில் தெரியத் தொடங்கியது.

நாட்டுப்புறங்களின் விளைமண், அதன் சத்துக்களை இழக்கத் தொடங்கியது. அதுவரை அந்த மண்ணிலிருந்த சத்துக்கள் பாரம்பர்ய வேளாண் முறையில் மீண்டும் அந்த மண்ணுக்கே மறுசுழற்சி செய்யப்பட்டன. அந்நிலையை நகரமயமாக்கல் தடுத்தது. எதிர்காலத் தேவைக்கான தழைச்சத்து, மணிச்சத்து போன்றவை அந்த மண்ணிலிருந்து காணாமல் போயின. நகரத்துக்கு இடம் பெயர்ந்த அவை, நகரத்து மண்ணுக்கும் பலன் கொடுக்கவில்லை. ஆம், அன்றைய லண்டன் மாநகரில் வாழ்ந்த 45 லட்சம் மக்களின் மனிதக்கழிவுகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வெறுமனே கழிவுப்பொருளாக மாறி, தேம்ஸ் ஆற்றில் கலந்து அதை சாக்கடையாக மாற்றி நகரத்தையும் மாசுப்படுத்தின.

இந்நிலையை இன்றைய தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியும். உலகமயமாக்கல் தமிழ்நாட்டை விரைவான நகரமயமாக்கலுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியாவிலேயே தமிழகம்தான் நகரமயமாக்கலில் முன்னணியில் இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் சென்னை போன்ற நகரங்களை நோக்கி குவிகின்றனர். விளைவு, அன்று இங்கிலாந்தில் நிகழ்ந்தது போலவே இங்கும் நாட்டுப்புற மண்ணின் சத்துக்கள் நகரத்தின் கழிவுப்பொருளாகிக் கொண்டிருக்கிறது. லண்டன் என்ற பெயரை, சென்னை என்றும்... தேம்ஸ் என்ற பெயரை கூவம் என்றும் மாற்றிப் போட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது சென்னையின் மக்கள் தொகை. இவர்களின் மனிதக்கழிவுகள், இன்று வரை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை கவனத்தில் வைத்து, இப்போது லண்டனுக்கு திரும்புவோம்.

மண்ணின் சத்துக்குறைபாடு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால், லண்டன் நகர மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இச்சத்துக்களில் மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக தழைச்சத்தான நைட்ரஜன் இருந்தது. காலங்காலமாக பின்பற்றிய பாரம்பர்ய முறையின் மூலம் அந்தச் சத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றி யோசிக்கத் தவறிய இங்கிலாந்து அரசு, வேறொரு அதிரடி வழியில் இறங்கியது. கல்லறைகளில் இருக்கும் எலும்புகளைக் கொள்ளையடித்து அதிலிருந்து நைட்ரஜன் உரத்தைத் தயாரித்து வயல்களில் இடுவதே அந்த வழி.

இதற்காக மற்ற ஐரோப்பிய நாடுகளின் மேல் அது தன் கவனத்தைத் திருப்பியது. நெப்போலியனுடன் நடந்த வாட்டர்லூ, ஆஸ்டர்லிட்ஸ் போன்ற போர்க்களங்களிலும், லிப்சிக், கிரிமியா போர்க்களங்களிலும் இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைச் சூறையாடத் தொடங்கியது. மேலும் சிசிலியின் பாதாளக் கல்லறைகளில் பல தலைமுறைகளாய் குவிந்துக் கிடந்த எலும்புகளையும் கொள்ளையடித்தது. இப்படி இங்கிலாந்துக்கு இறக்குமதியான எலும்புகளின் மதிப்பு 1837-ம் ஆண்டில் மட்டும் அப்போதைய மதிப்பில் 2,54,600 பவுண்ட்கள். இந்த எலும்புகள் அனைத்தும் அந்தந்த மண்ணிலேயே தங்கி மட்கி உரமாகியிருந்தால், அது எதிர்கால தலைமுறையினருக்கான உணவை 35 லட்சம் பேருக்கு அளித்திருக்கக் கூடியது. இதிலிருந்தே சூறையாடப்பட்ட வளம் எத்தகையது என்பதை நாம் கணக்கிட முடியும்.

எவ்வளவு நாட்களுக்குதான் தொடர்ந்து எலும்புகள் கிடைக்கும்? அவை தீரும் நிலை வந்ததும் நைட்ரஜன் சத்தைத் தொடர்ந்து பெறுவதற்காக வேறொரு வழியைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் ஃப்ரெஞ்ச் அறிவியலாளர் அலெக்சாண்டர் கோஹெட் என்பவர் கடற்பறவைகளின் எச்சம் மூலம் அச்சத்துக்களைப் பெற்று நிலங்களுக்கு இடலாம் என்பதைக் கண்டறிந்தார். உடனே, உலகெங்கும் பறவைகளின் எச்சத்தைத் தேடி புறப்பட்டன, வணிகக் கப்பல்கள். பறவைகளின் எச்சத்தில் தொடங்கிய இத்தேடல் ஒரு போர் வரை இட்டுச் சென்றது இன்னொரு தனி வரலாறு!

-தடுப்போம்

‘சூழலியலாளர்’ நக்கீரன்

படம்: க.சதீஷ்குமார்

நக்கீரன்!

கார்ப்பரேட் கோடரி - 1

கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர் என பன்முகங்களைக் கொண்டவர். போர்னியோ காட்டில், மரம் வெட்டும் நிறுவனத்தில் பணியாற்றும்போது, நிகழ்ந்த காடழிப்பை நேரடியாகக் கண்டு, சூழல் குறித்த விழிப்பு உணர்வைப் பெற்றவர். 2007-ம் ஆண்டு வெளிநாட்டுப் பணியை முழுமையாகக் கைவிட்டு நாடு திரும்பி, சூழல் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பணியை தனது எழுத்தின் மூலம் செய்து வருகிறார்.

வளர்ந்த நாடுகள், மூன்றாம் உலக நாடுகளிடம் நிகழ்த்தும் தண்ணீர்க் கொள்ளை குறித்த ‘மறைநீர்’ என்ற கருத்தாக்கத்தை தமிழகம் முழுக்கப் பரவலாக்கியவர். இதுவரை எட்டு நூல்களை எழுதியுள்ளார். ‘காடோடி’ இவரது நூல்களில் குறிப்பிடத்தக்கது. தற்போது திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் வசித்து வருகிறார்.