Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - 12

மண்ணுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணுக்கு மரியாதை! ( மண்ணுக்கு மரியாதை! )

மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்!

வேதியியல் விளைவுகளை சீர்படுத்தும் முறைகள்!

ரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், ‘காலுக்குக் கீழுள்ள தூசு’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சரியங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இத்தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என உங்கள் விழிகளை விரிய வைக்கும் இந்தத் தொடர்.

மண்ணில் வேதியியல் பண்புகள் மாறுபடுவதால், மண்ணில் ஏற்படும் விளைவுகள் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அதை சரிசெய்யும் முறைகளைப் பார்ப்போம்.

மண்ணுக்கு மரியாதை! - 12

அமில மண்!

உங்கள் நிலத்தின் மண், அதிக அமிலத் தன்மையுடன் இருந்தால், மண்ணின் காரத்தன்மையை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. நிலத்தில் சுண்ணாம்பைப் போட்டால் கார நிலை அதிகரிக்கும். சுண்ணாம்பை மேல்மண்ணில் நிலம் முழுவதும் தூவ வேண்டும். சாகுபடி செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக சுண்ணாம்பைத் தூவி உழவு செய்து மண்ணைக் கிளறி விடவேண்டும்.

உங்கள் நிலத்தின் மண்ணின் தன்மை மணல் கலந்ததாக இருந்தால், ஒரு ஹெக்டேருக்கு 1 முதல் 2 டன் வரை சுண்ணாம்பு இட வேண்டும். வண்டல் மண்ணாக இருந்தால், 2 முதல் 3 டன் வரை இட வேண்டும். களிமண்ணாக இருந்தால், 3 முதல் 4 டன் வரை இட வேண்டும்.

பழத்தோட்டங்களில், அடிமண் அமில மண்ணாக இருந்தால், பத்து டன் வரை கூட சுண்ணாம்பு சேர்க்கலாம்.

களர் மற்றும் உவர் மண்!

சோடியம் நிறைந்த களர், உவர் மண் நிலங்களுக்கு ஜிப்சம்தான் சரியான தீர்வு. ஹெக்டேருக்கு இரண்டரை டன் வரை ஜிப்சம் இடவேண்டும். அதிகமாக சோடியம் உள்ள மண்ணுக்கு 5 டன் வரையும் ஜிப்சம் இடலாம். இதன் மூலமாக களர், உவர் மண்ணைச் சீர்படுத்தலாம்.

உப்பு மண்!

உப்பு அதிகமான மண்ணில் சுண்ணாம்பு அல்லது ஜிப்சம் இடுவதால் பலனில்லை. முறையாக நீர்ப்பாசனம் செய்து, வடிகால்களைச் சரியாக அமைத்தால், மண்ணின் உப்புத்தன்மை குறையும். ‘சாப்பாட்டு உப்பு’ எனச் சொல்லப்படும் சோடியம்-குளோரைடு அதிகமாக உள்ள மண்ணில் உப்புத்தன்மையைக் குறைத்தவுடன், சில நேரங்களில் களர்தன்மை அதிகமாகலாம். அதனால், மண் பரிசோதனை செய்து, களர்தன்மை அதிகமாக இருந்தால், ஜிப்சம் இட்டு களர்தன்மையைக் குறைக்க வேண்டும்.

இப்போது சொன்ன வழிமுறைகள் அனைத்தும் நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களுக்குத்தான். தண்ணீர் வசதியே இல்லாத மானாவாரி நிலங்களில் எப்படி உப்பைக் குறைப்பது... வழுக்கைத் தலையில் முடி முளைக்க வைக்கும் கதைதான். என்றாலும், மனம் தளர வேண்டியதில்லை. அப்படிப்பட்ட நிலங்களில் உப்பைத் தாங்கி வளரக்கூடிய தாவரங்களை வளர்ப்பதுதான் சிறந்த வழி. நிலத்தில் இருக்கும் உப்புத்தன்மைக்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்யலாம்.

அடுத்து மாசுபடுத்தப்பட்ட மண். இந்த வகை மண்ணைச் சீர்படுத்தும் முறைகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. சில தாவரங்கள், அந்த மண்ணில் உள்ள கடின உலோகங்களை எடுத்துக்கொண்டு வளர்வதாகக் கண்டறிந்துள்ளனர். யூகலிப்டஸ், முருங்கை, ஆமணக்கு, செண்டுமல்லி ஆகியவை லெட் உலோகத்தைக் கிரகித்து வளரும் தன்மை வாய்ந்தவை. சவுக்கு, ஈட்டி, அவரை, சிறுகீரை, வெங்காயத்தாமரை ஆகியவை நிக்கல் உலோகத்தைக் கிரகிக்கும் தன்மை வாய்ந்தவை. சவுக்கு, கம்பு நேப்பியர் புல், அவரை வகைகள், சிறுகீரை, வெங்காயத்தாமரை ஆகியவை குரோமியம் உலோகத்தை கிரகிக்க வல்லவை. சவுக்கு, இலுப்பை, அவரை வகைகள், ஆமணக்கு ஆகியவை காட்மியம் உலோகத்தைக் கிரகிக்கும் தன்மை உள்ளவை. பொதுவாக, சவுக்கு, அவரை வகைகள், சிறுகீரை, ஆமணக்கு ஆகியவை நான்கு கடின உலோக எச்சங்களை கிரகிக்கும் தாவரங்களாக இருக்கின்றன. 

-வாசம் வீசும்

தொகுப்பு: ஆர்.குமரேசன்

துணியும் மண்ணும்... ஓர் ஒப்பீடு!

உவர் நிலம் என்பது லேசான அழுக்குத்துணியைப் போன்றது. அதில் லேசாக, உப்பு இருக்கும். ஆனால், நீரில் கரையும் தன்மையுடன் மண் துகள்களில் தொட்டும் தொடாமலும் இருக்கும். இந்த மண்ணில் நல்ல தண்ணீரைப் பாய்ச்சி வடித்தாலோ, மழைக் காலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்தாலோ உப்பு தானாகவே சரியாகி விடும். அழுக்கில்லாத துணி சீக்கிரம் நனையும், காற்றில் காயும். அதுபோல உப்பு இல்லாத நிலம் சீக்கிரம் நனையும், காற்றில் காயும்.

களர்நிலம் என்பது அழுக்குப் பிடித்த பிசுபிசுப்பான துணியைப் போன்றது. துணி இழைகளிடையே அழுக்குகள் அடைத்துக் கொண்டிருக்கும். அதேபோல, மண் துகள்களுக்கு இடையே உப்பு அடைத்துக் கொண்டிருக்கும். அழுக்குத் துணிக்கு சோப்பு போடுவது போல களர் நிலத்துக்கு ஜிப்சம் போட வேண்டும். அழுக்கு, இல்லாத துணிக்கு நீலம் போட்டால்தான் வெண்மை நிறம் கிடைக்கும். அதுபோல உப்பு இல்லாத நிலத்துக்கு சத்தான உரம் போட்டால் அதிக மகசூல் கிடைக்கும்.

உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

பருத்தி, கேழ்வரகு, பார்லி, குதிரைமசால் ஆகியவை அதிக அளவு உப்பைத் தாங்கி வளர்பவை. தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மக்காசோளம், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள். முள்ளங்கி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குறைந்த அளவு உப்பை தாங்கி வளரக் கூடிய பயிர்கள்.

களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்!

கோ-43 மற்றும் பையூர் ரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு ரகங்கள் அதிக அளவு களர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ-24, கோ-25 ரக சோளம், பழைய பருத்தி ரகங்கள் (எம்.சி.யூ), கோ-5, கோ-6 ரக கம்பு, கோ-சி, 671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை. இவை தவிர, சூரியகாந்தி, சவுண்டல் (சூபாபுல்), வேலிமசால், குதிரைமசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையை தாங்கி வளர்கின்றன. பீன்ஸ், நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர்நிலங்களில் பயிரிடக்கூடாது.

மண்ணுக்கு மரியாதை! - 12

கூட்டுச் சேரும் விஷமிகள்!

கால்சியம் அயனி நிறைந்திருந்தால், அது நல்ல நிலம். ஹைட்ரஜன் அயனி அதிகம் இருந்தால் அது அமில நிலம். சோடியம் அயனி அதிகம் இருந்தால், கார நிலம். கால்சியம் இருக்க வேண்டிய இடத்தில் சோடியம் போய் அமர்ந்துக் கொள்வதால், நிலம் உவர் தன்மை அடைகிறது.

சோடியத்தை ‘விஷமி’ என்கிறார்கள், மண்ணியல் ஆய்வாளர்கள். எப்போதும் கெட்டது செய்பவன், சில கூட்டாளிகளை வைத்துக் கொள்வது போல, இந்த சோடியத்துடன், கார்பனேட், பை கார்பனேட் ஆகியவை கூட்டு சேர்ந்து கொள்ளும். சோடியம் மட்டும் இருந்தால், அதற்குப் பெயர் உவர் நிலம். அதோடு இந்த கூட்டாளிகளும் இணைவதால் அது, களர்நிலமாக மாறுகிறது.

நீ.செல்வம், ஆ.பாலமுருகன்

படங்கள்: வீ.சிவக்குமார்