பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்
50 சென்ட் நிலம்... மாதம் ரூ.25 ஆயிரம்... சம்பளம் கொடுக்கும் சம்பங்கி!
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒருநாள் விவசாயிகளாக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள்... தலைமையாசிரியர் மூங்கான், கிரேசி நிர்மலா, பொதுப்பணித் துறை ஊழியர் ராஜா, தனியார் நிறுவன ஊழியர் ரவி, லாட்ஜ் உரிமையாளர் சங்கர், மருத்துவமனை ஊழியர் வினு பிரகாஷ், ஆசிரியர் ஜேம்ஸ் ராபர்ட், பொறியாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர். இவர்களை, விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே உள்ள பாலப்பாடி கிராமத்தில் இருக்கும் முன்னோடி இயற்கை விவசாயி செல்வராஜின் பண்ணைக்கு அழைத்துச் சென்றோம்.
காலை வெயில் சுட்டெரித்தது. நீளமான வைக்கோல்போருக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டு கறவைமாடுகள் அசை போட்டுக்கொண்டிருந்தன. மேய்ச்சலில் இருந்த சேவல்கள் ஒன்றோடு ஒன்று யுத்தம் நடத்திக் கொண்டிருக்க... பண்ணைக்குள் நுழைந்த அனைவரையும் வரவேற்று, தேநீர் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார், செல்வராஜ்.
நாட்டு மாடுகளே சிறந்தவை!
‘‘எனக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல இருக்கிற பயிரைப் பத்தி பார்க்கிறதுக்கு முன்ன, நாட்டுமாடுகளைப் பத்தித் தெரிஞ்சுக்குங்க. டிவிக்கு ஆண்டனா இருக்குற மாதிரி, ஒவ்வொரு மாட்டுக்கும் அதோட கொம்புதான் ஆண்டனா. இந்தக் கொம்பு மூலம்தான் மாடுகள் சூரிய ஒளியில இருந்து உடல்வளர்ச்சிக்குத் தேவையான சில சத்துகளை எடுத்துக்குது. அதனாலதான். பலரும் கொம்பு இருக்கிற மாடுகள்தான் சிறந்ததுனு சொல்றாங்க” என்று செல்வராஜ் சொல்ல...
“நாட்டுமாடு, கலப்பினமாடு ரெண்டுல எது சிறந்தது?” என்று கேள்வியை வீசினார், வினுபிரசாத்.
‘‘என்னோட அனுபவத்துல நாட்டுமாடுகள்தான் சிறந்தது. கலப்பினமாடுகளைக் கண்ணும், கருத்துமா பார்த்துக்கணும். ஆனா, நாட்டுமாடுகளைச் சாதாரணமா பார்த்துக்கிட்டாலே அதிகமான செலவு இல்லாம, நிறைவான வருமானத்தைக் கொடுக்கும். நானும் பத்து பால் மாடுகள் வெச்சிருக்கேன். சில மாதங்களுக்கு முன்னவரைக்கும் ஒரு லிட்டர் பால் 30 ரூபாய்க்கு விற்பனையாச்சு. இன்னைக்கு 18 ரூபாய், 19 ரூபாய்க்குதான் விற்பனையாகுது. அதே நேரத்துல நாட்டுமாட்டுப் பால் 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது” என்ற செல்வராஜ், நாட்டு மாடுகளைக் காட்டினார்.
‘‘நாட்டுமாடு வளர்த்தால் வருமானம் குறைவு என்கிறார்களே...” என்றார், கிரேசி நிர்மலா.
‘‘இயற்கை விவசாயம் செய்யுற எல்லோருக்கும், கலப்பினமாடுகளைவிட நாட்டுமாடுகள்தான் உதவியா இருக்கும். ‘நாட்டுமாடுகள் பால் குறைவா கொடுக்கும். அதனால வருமானம் குறைவு’னு சிலர் நினைக்கிறாங்க. ஆனா, நாட்டுமாட்டுல பால் ஒரு வருமானம். பாலைத் தயிராக்கினா அது கூடுதல் வருமானம். சாணத்தை விபூதியா மாற்றினா ஒரு வருமானம். சிறுநீரை ‘அர்க்‘கா மாற்றினா இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும்’’ என்று அடுக்கிக்கொண்டே போனார் செல்வராஜ்.

வயது சொல்லும் பற்கள்!
‘‘மாட்டின் வயதை எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்ட மூங்கானுக்கு மாட்டின் பல் வரிசையைக் காட்டி விளக்க ஆரம்பித்தார், செல்வராஜ்.
‘‘தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பதம் பார்த்த கதையா இருக்கு’னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க. அதுக்குக் காரணம் மாட்டோட பல்லைப் பார்த்தா வயது தெரிஞ்சிடும் என்பதாலத்தான். மாட்டோட கீழ்த் தாடையில ரெண்டு ரெண்டு பல்லா மொத்தம் நாலு ஜோடி பல் (எட்டுப் பற்கள்) இருக்கும். ஒவ்வொரு ஜோடி பல்லுக்கும் மூணு வயசுனு கணக்குப் பார்த்துக்கலாம்.
கறவை மாடுகள் எத்தனை கன்று ஈன்றதுங்கிற கணக்கை மாட்டோட கொம்புல இருக்குற வளையங்களை வெச்சுக் கணக்குப் பார்க்கலாம். ஒரு வளையம் ஒரு வருஷம்” என்றார் செல்வராஜ்.
கைகொடுக்கும் கைவைத்தியம்!
‘‘மாடுகளுக்கு நோய் வந்தா என்ன செய்றது?” என்று அடுத்த கேள்வியைப் போட்டார், ஜேம்ஸ் ராபர்ட்.
‘‘மாடுகளுக்கு வர்ற பலவிதமான வியாதிகளுக்கு நாமே கைவைத்தியம் செய்யலாம். மாட்டின் கொம்பு உடைஞ்சிட்டா... ஒட்டடை (சிலந்தி வலை)-50 கிராம், சுண்ணாம்பு-10 கிராம், வெல்லம்-25 கிராம் எடுத்து ஒண்ணா சேர்த்து அரைச்சு, கட்டுத்துணி வைச்சுக் கொம்பைக் கட்டி விட்டா ஒட்டிக்கும்.
மாட்டுக்கு வர்ற நோய்கள்ல முக்கியமானது, மடிநோய். இந்த நோய் தாக்கினா காம்பு வீங்கிடும். காம்பு மேல ஐந்து தடவை வெறும் தண்ணீரை அடிச்சு நல்லா கழுவி... ரெண்டு ‘சாக்பீஸை’ எலுமிச்சைப் பழச்சாற்றுல குழைச்சுத் தடவி விட்டா சரியாகிடும். அப்படியும் சரியாகாத பட்சத்துல... அமுக்காரா கிழங்கு - 50 கிராம், சுக்கு - 10 கிராம் ரெண்டையும் பொடியாக்கி, சுடுதண்ணியில கலந்து இளம்சூட்டுல காம்புல பூசி விடணும். இதுமாதிரி ஒவ்வொரு நோய்க்கும் கைமருந்துகளே இருக்கு” என்ற செல்வராஜ், சாண எரிவாயுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.
‘‘மாடுகள் வெச்சிருக்கிறவங்க வீட்டுக்குத் தேவையான எரிவாயுவை சாணம் மூலம் தயாரிக்கலாம். முன்னாடி இரும்பு டிரம் போடுவாங்க. இப்போ பலூன் முறை வந்துடுச்சு. இந்தச் சாண எரிவாயுக் கலன் அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் செலவானது. இதுல இருந்து மாசம் மூணு சிலிண்டர் அளவுக்குக் கேஸ் கிடைக்குது” என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டினார்.

10 மாட்டுக்கு ஒரு ஏக்கரில் தீவனம்!
ஒரு நாள் விவசாயிகள் எல்லோருக்கும் கேழ்வரகு, தேங்காய்ப்பால் கலந்து செய்த கஞ்சி வழங்கப்பட்டது. அதைக் குடித்து முடித்தவுடன், தீவனப்பயிர்களைக் காட்டிப் பேச ஆரம்பித்தார், செல்வராஜ்.
‘‘நான் முன்னாடி பட்டுப்புழு வளர்த்தேன். அது சரிப்பட்டு வரலை. அதனால, பட்டுப்புழுவுக்காக வளர்த்த இந்த மல்பெரிச் செடிகளை அப்படியே மாடுகளுக்குப் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். பத்து மாடுகள் வெச்சிருந்தா ஒரு ஏக்கர் நிலத்துல தீவனம் இருக்கணும். கோ-4, கோ.எஃப்.எஸ்-29, சூபாபுல் (சவுண்டல்), கிளரிசீடியா மாதிரியான செடிகளை வளர்த்தா போதும’’ என்ற செல்வராஜ் நெல் வயலுக்கு அழைத்துச் சென்றார்.
1,500 ரூபாயில் களை எடுக்கக் கருவி!
அங்குத் தயாராக இருந்த கோனோவீடரை ஒவ்வொருவரும் நெல் வயலில் உருட்டிப் பார்த்தனர். ‘‘நீங்க உருட்டுனது ரெண்டு வீல் இருக்குற கோனோவீடர். இதை வெச்சு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் அளவுக்குக் களை எடுக்கலாம். இதை நாமே 1,500 ரூபாய்ல செய்துக்க முடியும்” என செல்வராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நிலத்தில் படர்ந்திருந்த அசோலாவை அள்ளிப் பார்த்த ஸ்ரீனிவாசன், ‘‘இதை எதுக்காக நெல் வயல்ல போட்டிருக்கிறீங்க?” என்று கேட்டார்.
‘‘இது அசோலா... இதை நெல் வயல்ல போட்டா களைச்செடிகள் வளராது. தண்ணீர் ஆவியாகாது. அதில்லாம மண்ணுக்குத் தழைச்சத்து கிடைச்சுடும். அதோட, அசோலாவை ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவனத்தோட கலந்தும் கொடுக்கலாம். நாமளும் சாப்பிடலாம். இதுல அதிக அளவு புரதச்சத்து இருக்கு” என்று விளக்கிய செல்வராஜ், தொடர்ந்து நெல் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
“வயல்ல பலதானிய விதைப்புச் செய்து, 45 நாள்ல பூவெடுத்ததும் மடக்கி உழவு செய்து, 20 நாள் வரைக்கும் போட்டு வெக்கணும். அப்பதான் அந்தச் சத்துகள் மண்ணுல பரவி நெல்லுக்குக் கிடைக்கும். ஏக்கருக்கு 25 கிலோ விதைநெல் தேவைப்படும். அஞ்சு சென்ட் நிலத்துல நாற்றங்கால் அமைச்சு விதையைத் தூவி விடணும். அதை 13 நாள்ல இருந்து 22 நாட்களுக்குள்ள எடுத்து நடவு செய்துடணும்.
சம்பா, கார், தாளடினு ஒவ்வொரு பட்டத்திலும் விதைக்கிறதுக்குச் சீரகச் சம்பா, ஆற்காடு கிச்சலி, வெள்ளைப் பொன்னி, கிச்சலி, குள்ளங்கார்னு பலவிதமான ரகங்கள் இருக்கு. அடியுரமா ஆமணக்குப் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்குப் போடலாம். இடையில ஊட்டம் கொடுக்க, பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம் பயன்படுத்தலாம். பூச்சி, நோய்த் தாக்குதல் இருந்தால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்“ என்று சுருக்கமாகச் சொன்னார்.
‘‘இயற்கை முறையில விளைவித்த அரிசி எவ்வளவு நாளுக்குத் தாங்கும்?” என்ற கேள்வி, ஜேம்ஸ் ராபர்ட்டிடம் இருந்து வர...
‘‘அறுவடையான நெல்லைக் காய வைத்து, அப்படியே வெச்சிருந்தால் ஒரு வருஷம் வரைக்கும் இருக்கும். அவிச்சு அரிசியா மாத்தினா மூணு மாசம் வரைக்கும் வண்டு பிடிக்காம இருக்கும். வேப்பிலை, வசம்பு போட்டு வெச்சா கூடுதலா ஒரு மாசம் தாங்கும்” என்றார், செல்வராஜ்.

பஞ்சகவ்யா பாட்டு!
ஒருநாள் விவசாயிகள் வருகையைத் தெரிந்து, அருகில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து விவசாயப் பாடகரும், இயற்கை விவசாயியுமான துரை.பச்சையப்பன் வந்திருந்தார். அவர், ‘‘இயற்கை விவசாயம் செய்யுற ஒவ்வொருத்தரும் பஞ்சகவ்யா தயாரிச்சுப் பயன்படுத்தணும். இது வந்த நோயைப் போக்கும், வரவிருக்கிற நோயைத் தடுக்கும்னு சொல்லி இருக்கிறாங்க. பஞ்சகவ்யாவை பயிர்களுக்குப் பயன்படுத்துறதோட, மனித வியாதிகளுக்கும், விலங்குகளோட வியாதிகளுக்கும் மருந்தா பயன்படுத்தலாம். இதை மக்கள்கிட்ட பிரபலப்படுத்த தயாரிப்பு முறைகளைப் பாடலா பல இடங்கள்ல பாடி இருக்கேன்” என்றவர், பஞ்சகவ்யா தயாரிப்பு முறைகளைப் பாடலாகப் பாடினார்.
தொடர்ந்து, செல்வராஜ் மனைவி சுகந்தி தயாரித்த வடை, பாயசத்துடன் கூடிய உணவு, தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது.
முதலாளி சம்பங்கி!
உண்ட மயக்கம் தீர சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினர், ஒருநாள் விவசாயிகள்.
‘‘இந்த சம்பங்கிப் பூக்கள்தான் என்னோட முதலாளி. மாசம் 25 ஆயிரத்துக்குக் குறையாம வருமானம் கொடுக்குது. நான் 50 சென்ட் நிலத்துல சாகுபடி செய்திருக்கேன். தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற மாதிரி தண்ணீர் கொடுக்கணும். இதுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம்தான் நல்லது.
நடவு செய்த 90 நாள்ல இருந்து பூவெடுக்கலாம். ஆரம்பத்துல 4 கிலோ, 5 கிலோ பூ கிடைக்கும். போகப்போக அளவு அதிகமாகி 35 கிலோ வரைக்கும் கிடைக்கும்” என்றபடியே கருணைக்கிழங்கு சாகுபடிக்காகத் தயார் நிலையில் இருந்த நிலத்துக்கு அழைத்துச் சென்றார் செல்வராஜ்.
சிறிய அன்னக்கூடையில் இருந்த கிழங்குகளில், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து விதைநேர்த்திச் செய்துவிட்டு, ‘வீட்டுத் தேவைக்காக அஞ்சு சென்ட் நிலத்துல கருணைக்கிழங்கு, 2 சென்ட் நிலத்துல மிளகாய், ஒரு சென்ட் நிலத்துல கத்திரிக்காய்னு சாகுபடி செய்றோம்’’ என்ற செல்வராஜ், அனைவரையும் கிழங்கு நடவில் ஈடுபடுத்தினார்.
உடனே, துரை.பச்சையப்பன் ஒரு நாள் விவசாயிகள் குறித்து ஒரு பாடலைப் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
நிறைவாகப் பேசிய செல்வராஜ், ‘‘பணத்துக்காகப் பெரிய அளவுல மெனக்கெட வேண்டியதில்லை. இயற்கை விவசாயம் செய்தால் கண்டிப்பா போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்கும். இயற்கை விளைபொருள் தரமானதா இருந்தா அதற்கு ஏற்ற விலையைக் கொடுத்து வாங்கத் தயாரா இருக்கிறாங்க. அதனால, நம்பிக்கையோட களத்துல இறங்கலாம்”என்று நம்பிக்கை ஊட்ட... அனைவரும் நன்றி சொல்லி விடை பெற்றனர்.
காசி.வேம்பையன்
படங்கள்: கா.முரளி
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.